சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு, கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்? உலகமயமாக்கலினால் தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம், ஐடி, பி.பீ.ஒ, ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள். முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான். தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கி எறிந்து விட்டான். பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.
குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு கம்பெனி தாவுகிறோம். நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை. முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.
ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்தப்படுவது இல்லையா? பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள் ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,
தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம். தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.
என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……
வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய மார்பகங்கள்
அரைக்க மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்குரல்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”, முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..
சரி பார்க்கலாம் உன் வாழ்க்கயை
காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?
நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”
நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..
தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……
இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.
————————————————————————————————————————————————————————————————-
———————————————————————————-
இம்மாநாடு போலிகளுக்கு சாவு மணிஅடிக்க வாழ்த்துகிறோம்
கலகம்