இன்றைய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி தனித்த ஒரு நிகழ்வல்ல. அதன் பாதிப்பு எல்லா நாடுகளின் மீதும் உள்ளது. வலிய முதலாளியப் பொருளாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அதிலிருந்து மீளுவதற்காக அமெரிக்காவும்

 பிரித்தானியாவும் எடுக்கவுள்ள தீவிர நடவடிக்கைகள் இருபது ஆண்டுகட்கு முன் அவை நிராகரித்த பொருளியற் கொள்கைகளின் அடிப்படையிலானவை. அரசாங்கங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற் குறுக்கிடலாகாது என்றும் சந்தைச் சக்திகளே உலகப் பொருளாதாரம் முழுவதையும் நெறிப்படுத்தி வழிநடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்த அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் எழுநூறு பில்லியன் (எழுபதாயிரம் கோடி) டொலர் வழங்கி ஏறத்தாழ வங்கரோத்து நிலைக்கு வந்துள்ள அமெரிக்காவின் வங்கிகளை மீட்டும் அதன் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த முற்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி பிரித்தானிய அரசைப் பின்பற்றி வங்கிகளதும் நிதி நிறுவனங்களதும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் முடிவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி இன்னுந் தீர்த்துவிடவில்லை. பங்குச் சந்தை மீதிருந்த நம்பிக்கை இன்னமும் மீளவில்லை. இந்த நெருக்கடியிலிருந்து அமெரிக்க பொருளாதாரம் மீளாது என்று நினைப்பதும் இந்த நெருக்கடிக்கு முன்னிருந்த வடிவிலேயே அதனால் தொடர இயலும் என்பதும் ஒரே அளவுக்குத் தவறானவை.


எவ்வாறாயினும் முக்கியமான விடயம் என்னவென்றால், உலகமயமாதல் மூலம் உலகின் பொருளாதாரம் நிலையான வளமான ஒரு புதிய அமைப்பாக அமையும் என்றும் அதுவே முழு உலகினதும் பொருளியற் பிரச்சனைகட்கான இறுதித் தீர்வென்றும் சொல்லி வந்தது பொய்யாகி விட்டது. உலகமயமாதல் என்பது தீர்வல்ல. அது ஒரு முதலாளிய நோய் என்பது இன்று உறுதியாகி விட்டது. உலகமயமாதலால் மூன்றாமுலக நாடுகட்கு வழிகாட்ட இயலாது என்பதை விட, அதை வழிநடத்துகிற வலிய முதலாளிய நாடுகளையே அதனாற் காப்பாற்ற இயலாது என்பது இன்று நிரூபணமாகி விட்டது.


உலகமயமாதல் என்பது தற்செயலாகத் தவறாகிப் போன கொள்கை என்றோ முதலாளிய நடைமுறையில் இருந்து கொண்டே அதைச் சரிப்படுத்தி மீட்க முடியுமொன்றோ வாதிப்போர் அது எவ்வாறு நடைமுறைக்கு வந்தது என்பதை விளங்கிக் கொள்ளாதவர்களாவர். முதலாளியத்தின் வரலாற்றை நோக்கினால் உலகமயமாதல் என்பது முதலாளிய வளர்ச்சிப் போக்கில் ஓரளவுக்குத் தவிர்க்க இயலாத நிர்ப்பந்தங்களின் விளைவாக உருவான ஒரு கொள்கையும் நடைமுறையுமாகும்.


முதலாளியத்தின் வருகை மனித வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு, முதலாளியம் அதற்கு முன்பிருந்த அனைத்துச் சமூக அமைப்புகளையும் விட வலிய ஒரு சமூக அமைப்பாகும். அது மனித சமூகத்தின் உழைப்பாற்றலை முன்னைய சமூகங்களின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்தது. அதன் மூலம் சமூகத்தின் உற்பத்திறனைப் பன்மடங்கு அதிகரிக்க இயலுமாக்கியது. இந்த உற்பத்திப் பெருக்கத்தை இயலுமாக்கப் பெருமளவான கூலி உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர். அதன் விளைவாக ஐரோப்பிய நிலவுடைமை முறையும் அமெரிக்காவின் அடிமை முறையும் முடிவுக்கு வந்தன. அதே வேளை தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உற்பத்தித் திறனைப் பெருக்க உதவியது. இயந்திரங்களினதும் பெருமளவிற் பெறக் கூடியனவாக இருந்த இயற்கை எரிபொருட்களான நிலக்கரி எண்ணெய் போன்றவற்றால் இயங்கும் எஞ்சின்களினதும் வருகையும் முதலாளிய உற்பத்தித்திறனை மேலும் முடுக்கி விட்டன.


முதலாளியம் ஆலை உற்பத்திகளை மட்டுமன்றிப் பயிற் செய்கை கடற் தொழில் போன்ற பல துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்கியது. மனிதத் தேவைகட்கும் அதிகமான பண்டங்களின் உற்பத்தியை இயலுமாக்கியது. எனினும் இந்த உற்பத்தி வலிமை புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்தது. உற்பத்திகட்குத் தேவையான மூலப் பொருட்களுக்கான தேடல் ஒரு புறமும் மிகையாக உற்பத்தியான பொருட்களை விற்பதற்கான சந்தைகட்கான தேடல் இன்னொரு புறமுகமாக முதலாளியம் தனது தேச எல்லைகளைக் கடந்து செயற்பட வேண்டி வந்தது. இதன் விளைவாக முதலாளித்துவத்தின் செயற்பாடு மாறத் தொடங்கியது. சுதந்திரமான பல முதலாளிகளின் போட்டியின் இடத்தில் பெரிய முதலாளிய நிறுவனங்களின் ஏகபோகமான ஆதிக்கம் வந்து சேர்ந்தது. அது தேச எல்லை கடந்து பிறநாடுகளின் சந்தைகள் மீதும் மூலப்பொருட்கள் மீதும் மலிவான உழைப்பின் மீதுமான ஆதிக்கமாக ஏகாதிபத்தியமாக விருத்தி கண்டது.


முதலாளியம் எந்த வடிவிற் செயற்பட்ட போதும் அதன் உயிர் மந்திரம் 'லாபம், அதிக லாபம், மேலும் அதிக லாபம்" என்பது தான். எனவே வளருவதை விட அதற்கு வேறு வழியில்லை. வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டால் அது கடுமையான நோய்க்குள்ளாகிறது. முதலாளியம் ஏகாதிபத்தியமான பின்பு பெரு முதலாளிகளிடையிலான போட்டி நாடுகளிடையிலான போட்டியாகவும் போராகவும் வடிவெடுத்து இரண்டு உலகப் போர்கள் ஏற்பட்டன. போர்கள் முதலாளியத்தின் நெருக்கடிக்கு முடிவுகட்டவில்லை நெருக்கடிகள் முதலாளியம் செயற்படுகிற முறையை மேலும் அபாயகரமான திசைகளில் நகரச் செய்தன.


முதலாம் உலகப் போர் அமெரிக்காவை ஒரு பொருளாதார வல்லரசாக்கியது. அது தீர்கத் தவறிய பொருளாதாரப் பிரச்சனைகள் புதிய அரசியற் பூதமான ஃபாஸிஸத்தின் எழுச்சிக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் கொண்டு சென்றன. இந்தக் காலத்தில் கொலனிய ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. பழைய கொலனியத்தின் இடத்தில் நவகொலனியம் ஆட்சிக்கு வந்தது. ஐரோப்பிய முதலாளிய நாடுகளில் போர் ஏற்படுத்திய சீரழிவும் பொருளாதார அவலமும் தொழிலாளர் புரட்சி ஒன்றுக்கு இட்டுச் செல்லும் சூழல் தான்றியது. இதைச் சமாளிக்கப் பல சமூகச் சீர்திருத்தங்களும் சமூக நலனுக்கும் நிவராணங்கட்கான திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டன. இவை முதலாளிய அரசுகள் முதலாளிய முறையைப் பாதுகாப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள். பெரு முதலாளியத்தின் லாபவேட்கைக்கு இவை உடன்பாடானவை யல்ல. எனினும் தமது சுரண்டலின் சுமையை மூன்றாம் உலக நாடுகளின் மீது சுமத்திப் பெருமுதலாளியம் தன் லாபத்தைப் பேணிக் கொண்டது.


முதலாளிய வளர்ச்சியின் தேவைக்காகப் பெருமளவிலான நிதி தேவைப்பட்ட போது அந்தளவு நிதி தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கவில்லை. எனவே கம்பனிகள் பிறருடைய நிதியைத் திரட்ட நிதிவசதி உடையோரைக் கம்பனிப் பங்காளிகளாகவோ சந்தையில் வாங்கக் கூடிய பங்குகளை வாங்கும் பங்குதாரர்களாகவோ உள்வாங்கின. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து மூலதனம் பலவேறு விதங்களில் குறுகிய கால நீண்டகாலக் கடன்களாகப் பெறப்பட்டது. இவ்வாறான நிதி நிறுவனங்கள் சமூகத்திலிருந்து திரட்டிய சிறு சேமிப்புக்கள் வங்கி வைப்புக்கள் சிறு முதலீடுகள் போன்றவற்றை உள்வாங்கியதன் மூலம் கம்பனிகளின் லாப நட்டங்கள் சமூகத்திற் பெருந் தொகையானோரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கத் தொடங்கின.


இந்த நிலையிற் கூட நிதி நிறுவனங்களின் நடைமுறைகள் பற்றிய அரசாங்கக் கட்டுப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வந்தது. எனினும் பங்குச் சந்தை வணிகம் என்பது கம்பனிகளது பங்குகளின் விலைகள் ஏறி இறங்குவதை வைத்து நடந்த சூதாட்டமாகவே இருந்தது.


முன்னேறிய முதலாளிய நாடுகளின் தொழில் உற்பத்தி வலிமையின் அடிப்படையில் இருந்த மூலதனம் மூலதனத்தின் ஏற்றுமதியிலும் கனரகத் தொழில்களையும் மலிவான கூலி உழைப்புத் தேவையான தொழில்கள் போன்றவற்றையும் மூன்றாமுலக நாடுகட்கு நகர்த்திக் கூலி உழைப்பை மலிவான விலையிற் பெற்றுத் தன் லாபத்தைப் பெருக்கிக் கொண்டது. இதன் விளைவாக முன்னேறிய முதலாளிய நாடுகளின் பொருளாதாரத்தில் உற்பத்தியை விட முக்கியமான பங்கு சேவைத் தொழில்களின் பக்கத்திற்குச் சென்றது. அதே வேளை பெருகிவந்த முதலாளிய உற்பத்தி வலிமையின் விளைவாக மனிதத் தேவைக்கான உற்பத்தி என்ற நிலை தலை கீழாகி முதலாளிய உற்பத்திக்கும் உற்பத்தியை நுகர்வதற்குமாக மனிதர் என்ற நிலை உருவாக்கப்பட்டது.


உலகப் பொருளாதாரத்தின் மீதான பெருமுதலாளிய நாடுகளின் அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கம் எப்போதுமே வௌ;வேறு முனைகளிலிருந்து சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளது. அந்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி முழுமையாக்கும் நோக்கிலேயே திறந்த பொருளாதாரம், தாராளமயம், பொருளாதார மறுசீரமைப்பு என்கிற வடிவங்களில் உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் அறிமுகப்படுத்தப் பட்டது.


அரச கட்டுப்பாட்டை மீறித் தனது லாபத்தைப் பெருக்கும் நோக்கில் பெருமுதலாளியம் ஒரு கடும் போக்கைக் கடைப் பிடித்தது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் 1970களில் மந்தமடைந்து அவற்றின் ஆட்சியாளர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு நெகிழ்வடையத் தொடங்கிய நிலையில் பிரித்தானியாவிலும் அடுத்து அமெரிக்காவிலும் தொழிலாளி வர்க்கம் பல பின்னிடைவுகளைச் சந்தித்தது. 1940களின் பின் வென்றெடுக்கப்பட்ட பல உரிமைகள் இழக்கப்பட்டன. சமூக நலன் சார்ந்த அரசாங்கச் செலவுகளும் குறைக்கப்பட்டன. அரசாங்க ஓய்வூதியத்தின் இடத்தையும் இலவச மருத்துவ சேவையையும் புதிய காப்புறுதி நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன.


பொருள் வசதியற்றோர் வீடுகளை வாங்குவதற்காகக் கூட்டுறவு முறையில் நடத்தப்பட்ட அமைப்புக்களின் மூலம் வாங்கிய வீட்டை ஈடாக வைத்துக் கடன் வழங்கும் முறை சில தசாப்தங்களாக நடைமுறையிலிருந்தது. அதைப் பின்பற்றி நீண்டகாலக் கடனுக்குப் பொருட்களை விற்கும் முறையும் கடன் அட்டைகள் (கிறெடிற் காட்) முறையும் புகுத்தப் பட்டன. இவற்றின் மூலம் மக்கள் தங்கள் கையில் இல்லாத பணத்தைக் கொண்டு நுகர்வுப் பொருட்களை வாங்கும் நிரந்தரக் கடனாளிகளாக மாற்றப்பட்டனர்.அதே வேளை, அரசாங்கம் பங்குச் சந்தை வணிகத்தின் மீது தன் பிடியை நெகிழ்த்தியதன் விளைவாகவும் நவீன தகவற் தொழில்நுட்பத்தின் வருகையாலும் துரித வளர்ச்சியாலும் பங்குச் சந்தை வணிகம் மட்டுமன்றி மூலதனத்தின் இடமாற்றமும் துரிதமாக நடைபெறக் கூடியதாயிற்று. திறந்த பொருளாதாரமும் தாராளமயமும் அரசாங்கக் கட்டுப்பாடுகளின் தளர்த்தலும் எந்த நாட்டினதும் பொருளாதாரத்தைப் பங்குச் சந்தைச் சூதாடிகளின் கைகளில் உருளும் பகடைக் காய்களாக்க வல்லனவாயின. பங்குகள் மட்டுமன்றி நாடுகளின் நாணயங்களின் பெறுமதியையும் தமக்கேற்றபடி ஏற்றி இறக்கக் கூடிய விதமாக நாடுகளின் நாணய மாற்று வீதமும் நாணயத்தை வாங்கி விற்கும் பங்குச் சந்தைச் சூதாடிகளின் விளையாட்டுப் பொருளாயிற்று. இதன் விளைவுகள் 1990களின் நடுப்பகுதியில் ஐரோப்பாவிலும் அதை விடப் பாரதூரமாக கிழக்காசியாவில் அதிவேக வளர்ச்சி பெற்ற நாடுகளிலும் உணரப்பட்டது.


பெருமுதலாளிய நிதி திரட்டலில் பங்குச் சந்தைச் சூதாட்டம் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. பங்குகள் மட்டுமன்றி எண்ணெய், உலோகங்கள், போன்ற மூலப் பொருட்களும் நாடுகளின் நாணயங்களும் சூதாட்டத்திற்கு உரியனவாகி விட்டன. ஃபியூச்சேர்ஸ் (எதிர்காலக் கொள்வனவு) சந்தையில் எதனுடையதும் கொள்விலையில் பணப் பெறுமதிக்கு அப் பொருளை வாங்கலாம். அப் பொருளின் விலை ஏறும் போது அதை 'விற்றுக்" கொள்ளை லாபம் சேர்க்கலாம். விலை சிறிது இறங்கினால் முதலுக்கே மோசமாகலாம். அல்லது மேலும் மேலும் பணத்தை இறைத்து விலைகள் மறுபடி ஏறும் வரை காத்திருக்கலாம். பணத்தை மீட்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை.


இவ்வாறு கடனின் அடிப்படையிலும் பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் அடிப்படையிலும் கையில் இல்லாத மூலதனத்தின் மீது தங்கியுள்ள வணிக நிறுவனங்களும் பலவேறு கம்பனிகளும் பங்குச் சந்தை சீராக இயங்குவதிலும் அதன் உறுதியான வளர்ச்சியிலும் தங்கி இருக்கின்றன. பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு வேலையின்மை போன்ற வடிவங்களிலும் கம்பனிகள் நட்டப்பட்டு மூடப்பட வேண்டி வருகிற போதும் கடன்களை வாங்கியோர் அவற்றை மீளச் செலுத்த இயலாமற் போடும் போது நிதி முதலீட்டு நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.


ஏகாபோக முதலாளியத்தின் விளைவாக உருவான நிதி மூலதனம் இன்று கடன் வழங்கலின் அடிப்படையில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் செயற்படுகிறதும் பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் அடிப்படையில் இயங்குவதுமான ஒரு தடுமாற்றமான நிதி மூலதனமாகி விட்டது.


அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி கட்டுப்பாடற்றதும் பேராசை மிக்கதும் கண்மூடித்தனமான நுகர்வின் அடிப்படையில் அமைந்ததுமான ஒரு பொருளாதார முறையின் நெருக்கடியே. அதற்கான காரணங்களாக ஊழல்களையும் ஒழுங்கீனங்களையும் யாரும் சுட்டிக் காட்டலாம். உண்மை அதுவல்ல. அமெரிக்காவின் நிதி மூலதனம் செயற்படுகிற விதமே கோளாறானது. ஊழல் ஒழுங்கீனங்கள் அதன் விலக்க இயலாத பகுதிகள்.


அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி கட்டுப்பாடற்றதும் பேராசை மிக்கதும் கண்மூடித்தனமான நுகர்வின் அடிப்படையில் அமைந்ததுமான ஒரு பொருளாதார முறையின் நெருக்கடியே. அதற்கான காரணங்களாக ஊழல்களையும் ஒழுங்கீனங்களையும் யாரும் சுட்டிக் காட்டலாம். உண்மை அதுவல்ல. அமெரிக்காவின் நிதி மூலதனம் செயற்படுகிற விதமே கோளாறானது. ஊழல் ஒழுங்கீனங்கள் அதன் விலக்க இயலாத பகுதிகள்.


அதன் தொடர்விளைவாக உலகின் பல பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவு அதனுடன் நெருக்கமாக உறவு கொண்ட பொருளாதாரங்கள் பலவற்றையும் பாதிக்கும். அப் பாதிப்பின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது ஒவ்வொரு நாட்டிலும் இடதுசாரி இயக்கம் என்ன நிலையில் உள்ளது என்பதிலும் தங்கியுள்ளது.


இந்த நெருக்கடி முதலாளியத்தின் முடிவுக்கான இறுதி அறிவித்தல்ல. ஆனாலும் அதை அமெரிக்காவின் பொருளாதார முதன்மை நிலையின் முடிவின் திட்டவட்டமான அறிவித்தலாகக் கொள்ள நியாயமுண்டு.


இது தான் மூலதனம் சந்தித்த முதலாவது பெரிய நெருக்கடியல்ல. அது ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் மீளும் போதும் அதற்கான ஒரு பெரிய விலையை மனித சமுதாயம் கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது. ஒவ்வொரு மீட்சியும் மூன்றாமுலகின் மீது பெரிய சுமைகளை ஏற்றியுள்ளது. அதுவே மீண்டும் நிகழலாம். எனினும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள முக்கியமான சில மாற்றங்களை நோக்கும் போது இதுவே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இறுதிப் போராட்டமாக அமையலாம் என்ற நம்பிக்கைக்கும் இடமுள்ளது.