முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் "இடது முன்னணி' யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், "எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி'' போன்ற ஆங்கில
ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் அசோக்மித்ரா, நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் குண்டர்படையும் போலீசும் நடத்திய கொடூரத் தாக்குதலையடுத்து "ஆனந்தபசார்' பத்திரிக்கையில் (கடந்த 2008 ஏப்ரலில்) எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தைக் கீழே தருகிறோம். நந்திகிராமம் பற்றி காழ்ப்புணர்வோடு நாம் எழுதுவதாக சி.பி.எம். அணியினர் கருதி வரும் வேளையில், அவர்களின் முகாமில் இருந்தே மனசாட்சி உள்ள ஒருவரின் உள்ளக் குமுறல் இது!
கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்தவை பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன் என்றால், அது நான் சாகும் வரை எனது மனதைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கும்; வேதனையால் துடித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒரு காலத்தில் எனது தோழர்களாக இருந்தவர்களுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கட்சியும் அதன் தலைமையும்தான் கடந்த 60 ஆண்டுகளாக எனது ஆதர்சமாகவும் இலட்சியக் கனவின் மையமாகவும் இருந்தன.
ஆளுநர் விவகாரத்தில் இருந்து இக்கட்டுரையைத் தொடங்குவோம். ஆனந்த் பிரசாத் சர்மாவையோ, ராஜேஷ் வரையோ (அப்போது பிற மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்தவர்கள்) ஒப்பிட்டுப் பார்க்கும் எவருமே, எளிமையும் நேர்மையும் அறிவும்மிக்க கோபாலகிருஷ்ண காந்தியை ஆளுநராகப் பெற்றிருக்கும் மேற்கு வங்கம், கொடுத்துவைத்த மாநிலம்தான் என்பதை நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள்.
ஆளும் கட்சியின், அதன் மையத்தலைமையின் அனுமதியின்பேரில்தான் கோபால கிருஷ்ண காந்தி அப்பதவிக்கு வந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால், கட்சியால் எதிரி என வரையறுக்கப்படும் அளவிற்கு அவர் செய்த மிகப் பெரிய தவறு என்ன?
நந்திகிராமத்தில் இருந்து கட்டாயமாகத் துரத்தப்பட்டு கெஜூரி முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடுகளுக்குத் திரும்பி வந்ததை சட்டவிரோதம் என்றும், மன்னிக்க முடியாததென்றும் ஆளுநர் கண்டித்த தாகச் சொன்னார்கள். ஆனால், அவர் அவ்வாறு சொல்லவில்லை. உண்மையில், அம்மக்கள் திரும்ப வரவழைக்கப்பட்ட விதத்தைத்தான் அவர் கண்டித்தார். அதனையும் கண்டன வார்த்தைகளால் குறிப்பட்டு அவர் கண்டிக்கவில்லை. இப்போதோ, அம்மக்கள் திரும்ப அழைக்கப்பட்டதன் பின்னணி அனைத்தும் ஊருலகுக் கெல்லாம் தெரியும்.
துரத்தப்பட்ட மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமர்த்தி அமைதிப்படுத்துவதற்கு கடந்த 11 மாதங்களில் அரசியல் தூதுசமரசம், நிர்வாக ஏற்பாடு போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் அரசுக்கு இருக்கத்தான் செய்தன. ஆனால், அவற்றை எல்லாம் விட்டுவிட்டுத் தொடர் மிரட்டல்கள், போலீசு நடவடிக்கை, துப்பாக்கிச் சூடு போன்றவற்றைச் செய்ததால் பரிதாபகரமான முடிவுதான் ஏற்பட்டது.
இருந்தபோதும், முயற்சித்துப் பார்க்க அரசுக்கு வேறுவழிகளும் இருந்தன. மூர்க்கத்தனமான துப்பாக்கிச் சூடு நடந்ததும், இறந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் அரசு நிவா ரணத் தொகையை உடனேவழங்கியிருக்க முடியும். வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்ட போலீசு துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியாவது கொடுத்திருக்க முடியும். நாட்கள் பல கடந்தும் அரசு எதையுமே செய்ய வில்லை.
ஆனால், அரசின் அறிவிப்புகளோ, "உஷ்! விசாரணை நடந்து கொண்டிருக்கிறது!'' (மராத்தி நாடகக் கலைஞர் விஜய் டெண்டுல்கரின் நாடகத் தலைப்பு) எனும் பாணியில்தான் இருந்தது. மம்தா பானர்ஜியை அழைத்து இந்தப் பிரச்சினையில் அவர் முன்வைக்கும் நிபந்தனைகளை விவாதிக்க, மிகவும் மூத்த அரசியல் தலைவர்தான் (ஜோதிபாசு) முன்முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின் பேரில் மேற்கொண்டு அரசு எதையும் செய்யவில்லை.
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கோஷ் முயற்சியால் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. ஆளும் கட்சியின் மறைமுக நிர்ப்பந்தங்கள் மிரட்டல்களால் அதுவும் முடக்கப்பட்டது. இதற்கிடையில், நந்திகிராமத்தில் நிலவிய நிச்சயமற்ற சூழலை எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தன. பல்வேறு வர்க்கங்களும், அமைப்புகளும் பலவண்ணக் கூட்டணி கட்டி அங்கே இயங்கி, பதற்றத் தீயைக் கொழுந்துவிட்டு எரிய வைத்துக்கொண்டிருந்தன. பதினோரு மாதங்களாக வீடிழந்த மக்களின், சொல்லொணா சோகத்துக்கெல்லாம் அரசுதான் நேரடிப் பொறுப்பாளி.
நாம் சற்றுப் பின்நோக்கிப் பார்ப் போம். மே.வங்கத்தில் நந்திகிராமம் சம்பவத்துக்கு முன்பே சிங்கூரில் ரத்தவெள்ளம் ஓடியது. இடது கூட்டணி அரசு நாட்டுடைமையாக்கப்பட்ட தொழில்துறையை விரும்புவது கிடை யாது. அவர்கள் இம்மாநிலத்தில் தனி யார் தொழிற்துறையை நிறுவ மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவேதான் தேசிய, சர்வதேசிய முதலாளிகளுக்காக நிலம் பறித்துத் தர உறுதிமொழிகள் தந்துள்ளனர்.
அவர்களின் தேர்தல் அறிக்கையி லேயே இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், தேர்தலில் 235 தொகுதிகளை வென்றி ருப்பதாலும், இதற்கெனத் தனியாக தயாரிப்புகள் எதனையும் செய்ய வேண்டி இருக்கவில்லை. திடீரென விவசாயிகளிடம், ""நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; எஜமானர்கள் அங்கே தொழிற்சாலைகளை நிறுவப் போகிறார்கள்'' என்று சொல்லப்பட்டது. சிங்கூரில் எழுந்த எதிர்ப்பு, மோதல்கள், அதன் விளைவாகச் சிந்திய இரத்தம் ஆகியவற்றில் இருந்து குறைந்தபட்சப் பாடம் கற்றிருந்தால்கூட, அரசால் நந்திகிராமத்தில் கவனமாகச் செயல் பட்டிருக்க முடியும். ஆனால் அதுதான் கிடையாதே! எப்போதும் போல அரசு திமிராகத்தான் நடந்து கொண்டது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள்கூட நந்திகிராமத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சியினர் அப்பகுதியில் வளர்வதற்கு அரசே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆளும் கட்சியின் மீது விசுவாசமாக இருந்த தொண்டர்கள், அரசின் முடிவை எதிர்த்துக் குரல் கொடுத்தவுடன் கட்சியை விட்டுத் துரத்தப்பட்டனர்.
பதினோரு மாதங்களாக அரசியல், நிர்வாகரீதியான மாற்றுக்களைப் பற்றி ஆராயாமலும் செயல்படாமலும் வாயை மூடிக் கொண்டது அரசு. சதித்திட்டம் ஒன்று புதிதாய்த் தீட்டப்பட்டது. போலீசு துறை அப்பகுதியில் செயல்படாமல் இருக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் மீண்டும் மீண்டும் கூறிவந்தார். ஆனால், மாநிலம் முழுவதி லுமிருந்து கூலிப்படை திரட்டப்பட்டது. எல்லாத் திசைகளிலி ருந்தும் ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் நந்திகிராமத்தை முற்றுகையிட்டனர். பறவைகள், ஈ காக்கைகள் உள்ளிட்டு, பத்திரிக்கையாளர்கள் எவரும் அம்முற்றுகையைத் தாண்டி அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து, ஆளும்கட்சியின் ஆயுதப் படை பொறுப்பேற்றுக் கொண்டு நந்திகிராமம் பகுதியில் நுழைந்து அப்பகுதிக்குத் திரும்ப வந்து குடியேறி யவர்களை எல்லாம் அடித்து நொறுக் கியது. வீடுகளைக் கொளுத்தியது. ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கும் வெறியில் நந்திகிராமத்திற்குள் இருந்த வர்களை எல்லாம் வெட்டித் தள்ளியது. அகதிகளாக மீண்டும் வெளியேறுபவர்களின் ஓலம் நந்திகிராமைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் எதிரொ லித்தது.
அரசுத்துறை செயலாளர்கள் மூலமாக ஆளுநருக்கு நடந்தவை எல்லாம் சொல்லப்பட்டிருக்கக் கூடும். அவரும் அமைச்சரவையைக் கட்டுப் படுத்தும் நாயகரிடம் அமைதியை நிலைநாட்டக் கோரியிருக்கக்கூடும். ஆனாலும் பயன் ஏதும் இல்லை. தொடரும் வன்செயல்களால் இரத்த ஆறு இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர், இச்சம்பவத்தைக் கண்டித்துப் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். அவர் அதில் என்ன சொல்லியிருந்தார் என்பதோ, அவ்வாறு அறிக்கை விடுவது அரசியல் சாசனத்தின் வரையறைக்கு உட்பட்டதா என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால், மனிதத் தன்மையின் வரையறையை ஏற்றுக் கொண்ட எவருக்கும், இவ்வாறு அறிக்கை வெளியிட்டதில் வேறு கருத்து ஏதும் இருக்க முடியாது.
உள்ளபடியே இப்போதைய பிரச்சினை சிங்கூரும் நந்திகிராமும் மட்டுமல்ல. அது இன்னும் ஆழமானது. மிகவும் அபாயகரமானதும் கூட. தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் படுகின்றன. ஒரு கணம் எண்ணிப்பாருங் கள். பெரும்பான்மை பலத்துடன் இடது முன்னணி வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இக்குறு கிய கால இடைவெளியில்தான் எத்தனை மூர்க்கமான, முட்டாள்தனமான நடவடிக்கைகள்!
மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் நம்மிடம் இருக்கலாம். கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்கூட நமது கட்ட ளைக்கேற்பத் தேர்ந்தெடுக்கப்படலாம். நமது வேட்பாளர் தோல்வியடையும் போதெல்லாம், "தீய சக்தியின் வெற்றி'' என்றும் "தீய சக்தியை விரட்டி அடிப்போம்'' என்றும் சொல்வோம்.
ஆனால், சாதாரண மக்கள் மட்டுமல்ல; பொருளாதார சிந்தனையாளர்கள் கூட நந்திகிராமம், சிங்கூர் நிலப்பறி குறித்து வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ""அவ்வாறு கருத்துரைப்பவர்களுக் கெல்லாம் அரசை நடத்துவது பற்றி என்ன தெரியும்? வெறும் புத்தகப் புழுக்கள்!'' குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணரும், கட்சித் தோழருமான பிரபாத் பட்நாயக்கின் ஆளுமையையும் இதே மாதிரிதான் அவமானப்படுத்தினர். நாம்தான் எல்லாம் தெரிந்த அரசாங்கம் ஆயிற்றே! கிரிக்கெட், கவிதை, நாடகம், சினிமா, நிலப்பறி மாயாஜாலம் என அனைத்தும் தெரிந்த அரசாங்கம், நம்முடையது! 235 சீட்டுகள் வென்ற நமக்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளைப் பற்றி எவரும் விளக்கவுரை நடத்த வேண்டுமா, என்ன? 1987இல் ஜோதிபாசு தற்போதைய சட்டமன்ற வெற்றியைவிட அதிக இடங்களுடன் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் அவரிடமிருந்து இவ்வளவு திமிர் வெளிப்பட்டதில்லை.
இப்போது, திமிரோடு அரைவேக்காட்டுத்தனமும் சேர்ந்துள்ளது. பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் மே.வங்கம் கல்வியில் பல மாநிலங்களைவிடப் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. மைய அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கான நிதி தடையின்றி வருகிறது. ஆனால், இங்கு நிர்வாக ரீதியான முன்முயற்சி ஏதுமில்லாததால் வேலையில்லாத் திண்டாட்டமும், பட்டினியும் அப்படியே இருக்கின்றன. மைய அரசு கோதுமையும் அரிசியும் வழங்கிட ஏற்பாடுகள் செய்திருந்தும், மாநில அரசு அவற்றைப் பெற்றுக் கொள்ளாததால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ரேசனில் இவற்றை விநியோகிக்க முடியவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்போரின் பட்டியலில் கூட ஏகப்பட்ட குளறுபடிகளும் விடுபடல்களும் மலிந்துள்ளன. சிறுபான்மையினரின் முன்னேற் றத்திற்காக இம்மாநில அரசு எதையும் செய்யாமல் இருப்பதனை சச்சார் கமிட்டி அறிக்கையே பட்டியலிட்டுள்ளது.
மர்மமான முறையில் மாண்டு போன ரிஸ்வானூர் ரகுமான் விவகாரத் தையே எடுத்துக் கொள்வோம். போலீசு துறைத் தலைவரும் அவரது கூட்டாளி களும் உடனடியாக (பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த அன்றே) நீக்கப்பட்டிருந் தாலோ, அல்லது சி.பி.ஐ.க்கு விசாரணை மாற்றப்பட்டிருந்தாலோ மக்களின் கடுங்கோபத்தை ஓரளவிற்குத் தவிர்த் திருக்கலாம். ஆனால், நாம் காண்பதோ வேறு. இப்படி பல உதாரணங்களை அடுக்க முடியும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் இடது முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில், அது வெற்று அரட்டை அடிப்பதற்காக எழுத்தாளர் கட்டிடத்தில் (மே.வங்கத்தின் தலைமைச் செயலகம்) போய் உட்காரவில்லை. மாறாக, மக்களுடன் இருந்து கொண்டு, அவர் களின் அறிவுரைகளைக் கேட்டு, அதற் கேற்ப அரசின் திட்டங்களைத் தீட்டுவ தாகத்தான் அதன் நோக்கம் இருந்தது. இதனை முன்வைத்தே பஞ்சாயத்து முறை மேம்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது அது செயலிழந்து விட்டது. பஞ்சாயத்துகள் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவை பரிதாபகரமான நிலையில்தான் இன்று உள்ளன. அவற்றுக்கு வந்து சேரும் கொஞ்ச நஞ்ச நிதியும் கூட முறையாகச் செலவிடப் படுவதில்லை.
வேதனைமிக்க உண்மைகளை இனிமேலும் தவிர்க்க முடியாது. ""நீங்கள் முன்பு எப்படி இருந்தீர்களோ, அப்படி இன்று இல்லை'' என்ற எஸ்.டி.பர்மனின் பிரபல சினிமா பாடல் வரிகளைப் போலத்தான், இன்றைய சி.பி.எம். கட்சியின் நிலைமை உள்ளது.
கட்சியில் இப்போது இருக்கும் உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் 1977க்குப் பின்னர் சேர்ந்தவர்கள். 70 சதவீதம் பேர் 1991க்குப் பிறகு சேர்ந்தவர்கள். இவர்கள் எவருக்கும் கட்சியின் தியாக வரலாறு எதுவுமே தெரியாது. இவர்களைப் பொறுத்த அளவில் புரட்சிக்கான அர்ப்பணிப்பும் சோசலிசமும் வெறுமனே கதை யாடல்கள் மட்டுமே. மேம்பாடுதான் புதிய கொள்கையாகிப்போனதால், சுய மேம்பாட்டுக்காக மட்டுமே இவர்கள் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். பெறுவதற்காகத்தான் வருகிறார்களே ஒழிய, இழப்பதற்காக அல்ல. இவர்கள் பல்வேறு தந்திரங் களைக் கற்றுக் கொண்டு அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவிக்க ஆளும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தலைவர்களை வானளாவப் புகழ்ந்து தள்ளுவதுதான், சலுகைகளைப் பெறுவதற்கு இவர்கள் கையாளும் தந்திரங்களில் முதன்மையானது.
கட்சி முழுக்க துதிபாடிகளும் அரசவை விகடகவிகளும் நிரம்பியி ருக்கின்றனர். அதை விட சமூக விரோதிகளின் ஆதிக்கமும் கட்சிக்குள் பெருகி இருக்கிறது. பல்வேறு காரணங் களுக்காக ஏனைய கட்சிகள் சமூக விரோதிகளை வைத்துக் கொள்ளுவது வாடிக்கைதான். இருப்பினும், அங்கெல் லாம் அவர்கள் பின்னணியில்தான் இயங்குவர். தேவை ஏற்படும்போது மட்டும் அவர்கள் பயன்படுத்தப்படுவர். எழுபதுகளில் இத்தகைய சமூகவிரோதி களின் கூடாரமாக காங்கிரசுக் கட்சி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே கதிதான் ஏற்படப் போகிறது என அஞ்சுகிறேன்.
நெடுங்காலமாக கட்சியில் இருந்துவரும், பல்வேறு தியாகங்களைப் புரிந்த வயதான பல தோழர்கள் நம் பிக்கை இழந்து விரக்தியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு வேளை கட்சிக்கு எதிராக ஒருங்கி ணைந்த போராட்டம் ஒன்றை நடத்தி, அதனால் கட்சி அவர்களைத் தூக்கி எறிந்தால், கட்சியை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்தும் அவர்களின் கதி என்ன ஆகும்?
திரு.ஜோதிபாசுவுக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவருடன் சேர்ந்து 1977, ஜூன் 21இல் பதவி ஏற்றுக் கொண்ட இடது முன்னணி அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பது நான் மட்டுமே. அவுரங்கசீப்பால் சிறைவைக்கப்பட்ட ஷாஜஹான் போன்ற அவருடைய தற்போதைய நிலை என் இதயத்தையே கசிய வைக்கிறது. அவ்வப்போது அவர் சொல்லும் சின்னச்சின்ன அறிவுரைகளைக் கூட கட்சி மேலிடம் கேட்பதில்லை. அவரு டைய பேச்சு கட்சிக்கு உவப்பில்லாத போது கட்சிப் பத்திரிக்கைகளில் கூட அது வெளியாவதில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கட்சி செயலாளர்களைச் சந்தித்து விட்டுப் படியிறங்கி வரும்போதெல்லாம், அவர் சம்பந்தமேயில்லாத ஒன்றைப் பேச வேண்டி இருக்கிறது. இன்று அவர் சொல்வது கூட, போனமுறை அவர் சொன்னதை மறுதலிக்கும் விதமாகத்தான் உள்ளது.
என்னுடைய அக்கறை எங்கும் விரவியதாக உள்ளது. மம்தா பானர்ஜி ஒருவர்தான் தற்போதைய ஆளும் கட்சிக்கு, பாதுகாப்பான இன்சூரன்சு. இடது முன்னணி அரசின் மீது எவ்வளவு தூரம் அதிருப்தி இருப்பினும், மம்தா பானர்ஜி பதவிக்கு வந்துவிடும் பயங்கரத்தைக் கற்பனை செய்யும் மக்கள், அப்பயங்கரத்தில் இருந்து தப்பிக்க இடது முன்னணியை ஆதரித்தாக வேண்டியிருக்கிறது. இருந்தபோதும், இடதுசாரித் தலைவர்களின் திமிர்த்தனமும் அரை வேக்காட்டுத்தனமும் எல்லை கடக்கும் போது, இரண்டு தரப்புக்குமிடையே எந்த வேறுபாட்டையும் மக்கள் காணமுடியாத நிலை ஏற்படும். அது இன்னமும் கூடுதலான பயங்கரத்தை — மம்தாவின் பாசிசத்தைக் கொண்டு வரும். மம்தாவின் பேச்சு, செயல்படும் முறை, திட்டம் அனைத்துமே பாசிசத்தின் கூறுகள்தான்.
இன்னமும் என்னுடைய கட்சிதான் என நான் மனதார நம்பிக் கொண்டிருக்கும் கட்சியின் மத்தியத் தலைமைக்கு விடுக்கும் தாழ்மையான முறையீடு இதுதான்: மாவோயிசத்தின் பயங்கரத்தைக் கண்டு நீங்கள் அஞ்சி நடுங்குகிறீர்கள். அந்த நடுக்கம், பாசிசத்தின் கழிவறைக்குள் மே.வங்கத்தைத் தூக்கியெறிய உங்களை நிர்ப்பந்தித்து விடும் என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.