தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இது தன்னகத்தே சமூக விரோதத்தை தன் உணர்வுகளாக்கி, அதை ஆதிக்கம் பெற்ற ஒன்றாக்கியதன் மூலம் மக்களின் உரிமைகளையே பறித்தது. மக்கள் தம் உரிமைக்காக ஆதரித்த போராட்டம், அவர்களுக்கு எதிராக மாறியது. இது மக்களின் உரிமைகளையே பறித்தது.   

 

தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்டவர்கள் உள் இயக்கப் படுகொலை, இயக்க அழிப்பு என்று தொடங்கி மொத்த இனத்தையும் தனக்கு எதிராக மாற்றினர். இதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை அர்த்தமற்றதாக்கினர்.

 

இந்த தமிழீழக் கோரிக்கை, வெறும் லேபலாக மாறியது. இதன் பின்னணியில் புலிப் பாசிசக் கும்பலாகவும், அதற்கு எதிரான அரச கூலிக் கும்பலாகவும், தமிழீழக் கோரிக்கையுடன் புறப்பட்ட குழுக்களை சிதைவடைய வைத்தது.

 

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர், உரிமைகள் எதுவுமற்ற வெறும் கோசமாகியது.  'தேசியம்" புலியின் துப்பாக்கி முனையில், அவர்களின் இருப்பு சார்ந்தாக எஞ்சியது. இது மக்களை அவர்களின் அரசியல் சுயவுரிமைக்காக அணிதிரட்டவில்லை. மாறாக துப்பாக்கி முனையில் தாம் பெற்ற பாசிச அதிகாரத்தைக் கொண்டு, படுகொலை அரசியல் மூலம் 'தேசியத்தை" தக்கவைக்க முனைந்தனர்.

 

மக்கள் வெறுப்புக்கும், அவர்களை துயரத்துக்கும் உள்ளாக்கிய 'தமிழீழக்" கோசம், அவர்களுக்கு சமாதிகட்டடியது. மக்கள் விட்ட கண்ணீர் வெள்ளத்தில், 'தமிழீழம்" புதைத்ததுடன், அது செத்துப் போனது. விளைவு புலிகள் தம் சொந்த இருப்புக்கு ஏற்ப, தமிழ் மக்களையே பணயமாய் வைத்தனர். இப்படி மக்கள் தம்மைவிட்டு தப்பி போக முடியாத வண்ணம், புலிகள் துப்பாக்கி முனையில் தம் இருப்புசார் 'தமிழீழக்" கோசத்தை மக்கள் மேல் திணித்தனர்.    

 

தமிழீழம் என்ற கோசம் அரசியல் ரீதியாக எழுந்த போது, இது சுயநிர்ணய உரிமைகளை அடிப்படையாக கொண்ட சமூகக் கூறுகளைக் கொண்டிருந்தது. இந்த சுயநிர்ணய உரிமையிலான சமூகக் கூறுகளை, இந்தியா முதல் அன்னிய சக்திகளுடன் சேர்ந்து அழித்தவர்கள், இறுதியில் அதை வெறும் வெற்றுடலாகவே தக்கவைத்தனர். அன்றைய அதே இந்தியாவும் அன்னிய சக்திகளும், இன்று இலங்கை அரசின் ஊடாக வெற்றுடலை அழித்து வருகின்றனர்.

 

இந்தியா இன்று மட்டும் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. அன்று இயக்கங்களை ஆதரித்து, சுயநிர்ணய உரிமையை அழிக்கத் தொடங்கியது முதலே தமிழ் இனத்துக்கு எதிராக யுத்தம் செய்யத் தொடங்கியிருந்தது. அன்று இயக்கத்தைக் கொண்டு தமிழ் இனத்தை அழித்தவர்கள், இன்று பேரினவாதத்தைக் கொண்டு அதை நிறைவு செய்கின்றனர்.   

 

இந்த நிலையில் புலிகளின் இருப்பு என்பது எதிர்காலத்தில் சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. இதன் நாட்கள் எண்ணப்படுகின்து. தமிழீழக் என்ற கோரிக்கையுடன் புலிகள் முதல் எந்தப் புதிய குழுவும் கூட அரசியல் ரீதியாக, தமிழ்மக்கள் முன்வைத்து அரசியல் செய்யமுடியாது.

 

இந்த தமிழீழம் தமிழினத்தின் அழித்தொழிப்பாக மாறி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிவிட்டது. இதை தவிர வேறு எதையும், தமிழீழம் மக்களுக்கு பரிசளிக்கவில்லை. போராட்டம் மாபியாத்தனத்துடன், ரவுடிசமாகி, மக்கள் மேல் ஏறி அமர்ந்து கொண்டது. இதைத் தவிர, மக்கள் அனுபவித்தது எல்லையற்ற துயரங்களைத்தான்.

 

எதிர்காலத்தில் தமிழீழம் என்ற கோசம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. புலம்பெயர் நாட்டில் பிழைக்க முனையும் புலிப் புல்லுருவிகள் இதை தூக்கி தலையில் வைத்து ஆடினாலும், மக்களிடம் இதை எடுத்துச் செல்லமுடியாது. அத்துடன் இந்த கோசத்தின் பின் உள்ள சமூக அடிப்படைகளை, இந்த கோசம் விளக்காது. இதற்கு மறுவிளக்கம் அளிக்கமுடியாது.

 

இந்த நிலையில் தமிழ் மக்களுக்குரிய மாற்று என்ன? என்ன செய்ய முடியும்;? பேரினவாதத்தின் பின்னாலும், கைக்கூலிக் குழுக்களின் பின்னாலும் செல்வதல்ல. இதற்கு மாறாக எப்படி என்று சிந்திப்பதும், அதை நோக்கி செயல்படுவதும் தான் மாற்றுக்கான முதற்படி.

 

பி.இரயாகரன்
21.01.2009