ஆளும் வர்க்கத்தினருக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த யுத்த காலம். ஐரோப்பா முழுவதுமே பதட்ட நிலையில் இருந்தன. எப்போது என்ன நடக்கும் என்று கூட யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் கடுமையான சட்டங்களையும், அடக்குமுறைகளையும், கண்காணிப்புகளையும் பொது

 மக்களிடம் திணித்திருந்தன. குறிப்பாக லண்டன், பாரீஸ், பெர்லின் போன்ற  தலைநகர் பகுதியில் மிகுந்த கண்காணிப்புக்குள் இருந்தன. நான்கு பேர்கள் ஒன்றாக தெருவில் நின்று பேசக்கூட அனுமதி இல்லை. பாட்டாளி வர்க்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதிகள் போல் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். 

பாரீசில் 1848- இல் பாட்டாளி வர்க்கத்தினர் வெற்றி அடைந்ததைக் கண்டு உலகம் முழுவதிலும் வியப்பும், சந்தோஷமும், ஆச்சரியத்தையும் பாட்டாளி வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருந்தது. ´நம்மால் முடியும், நம்மால் எதையும் செய்ய முடியும்´ என்ற உணர்வு அனைவருக்கும் உண்டாகி இருந்தது. பாரீசில் நடந்த புரட்சியின் வெற்றியின் எழுச்சி ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது. 

பெல்ஜியத்தின் தலைநகரமான ப்ரஸ்ஸல்ஸி, ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா, ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் ஹங்கேரி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறிப்பாக தலைநகரங்களில் தொழிலாள வர்க்கத்தினர் ஆயுதத்துடன் போராட கிளம்பிவிட்டனர்.

 
இத்தாலியிலோ அந்நாடு முழுவதும் கிளர்ச்சி கிளம்பிவிட்டது. போலந்திலும் கிளர்ச்சி, கலகம், போராட்டம் என அல்லோல்பட்டது. அவை அரசாங்கத்திற்கு பாட்டாளி வர்க்கத்தால் கொடுக்கப்பட்ட முதல் மரண அடியாக விழுந்தது. 

பெல்ஜிய தலைநகரான ப்ரஸ்ல்ஸில் நடந்த அரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டத்தில் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெர்மனிய தேச பக்தர்களே முன்னணியில் இருந்தனர். அரசாங்கத்தினர் பாட்டாளி வர்க்கத்தினரிடையே குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு நாட்டிலும் புரட்சியை கட்டுப்படுத்தவோ அல்லது போலிப் பாசங்கில் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தது.

பாரீசில் வசித்த ஜெர்மனியர்கள் இரகசிய திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர். அதாவது பாரீசில் இருக்கும் ஜெர்மனியர்கள் படையாக திரண்டு ஜெர்மனிக்குச் சென்று புரட்சியைக் கிளப்பி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். எல்லாம் பாரீஸ் வெற்றியில் தான் உற்சாகமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர். இவ் விஷயம் கார்ல் மார்க்ஸீக்கு எட்டியது. மார்க்ஸ் இத்திட்டத்திற்கு உடன்படவில்லை. போதிய முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் உற்சாகத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசாங்கத்தை எதிர்த்து போராடுவது என்பது சாத்தியமாகக் கூடியவையல்ல என்பது அவருடைய கருத்தாக இருந்தது. அதைவிட தொழிலாளர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் வேலையில் ஈடுபட வேண்டும் என்றார். பாரீசில் இருக்கும் ஜெர்மானியர்கள் தனித்தனியாக ஜெர்மனிக்குள் நுழைந்து ஒரு குறிப்பிட்ட திட்டப்படி பிரசாரம் செய்து மக்களை புரட்சிக்கு தயார் படுத்த வேண்டும் என்று கூறினார். மற்றவர்களுக்கு மார்க்ஸீன் கருத்தில் உடன்பாடில்லை. மார்க்ஸ் கோழை என்று கிண்டல் செய்தனர்.

1848- இல் ஏப்ரல் 1- ஆம் தேதி ஜெர்மனியப் புரட்சிப் பட்டாளம் ஜெர்மனிக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த இராணுவத்தினரால் அடித்து துரத்தப்பட்டனர். உற்சாகமாக கிளம்பிய புரட்சி பட்டாளம் நொந்து போய் பாரீஸ் திரும்பியது. மார்க்ஸ் அவர்களை உற்சாகப்படுத்தினார். 

"தோழர்களே! நடந்ததை நினைத்து சோர்ந்து விடாதீர்கள். காலம் கடந்து விடவில்லை. இன்னும் இருக்கின்றது நமக்கு போராட்டங்கள். நமக்கு மகிழ்ச்சி என்பது போராட்டம் தான்." நம் கட்சியில் அனைவரையும் ஒன்று திரட்டி மீண்டும் ஓர் திட்டம் வகுப்போம் என்று உற்சாகப்படுத்தினார். அந்த கூட்டத்தில் தான் 17- அம்சங்கள் கொண்ட வேலைத் திட்டம் வகுக்கப்பட்டது. இதில் மார்க்ஸீம் சேர்ந்துக் கொண்டார். ஜெர்மனிய எல்லை காவலர்களுக்கு சந்தேகம் வராதவாறு எல்லோரும் தனி நபர்களாக பிரிந்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 

மார்க்ஸ் தம்முடைய பழைய இருப்பிடமான கலோன் நகருக்கு செல்ல தீர்மானித்தார். கலோன் நகரம் முக்கிய தொழிற்சாலைகளைக் கொண்டது. அந்நகரில் பெரும்பான்மை மக்கள் அத்தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள். ஆகையாலே மார்க்ஸ் அந்நகரை தேர்ந்தெடுத்தார். அங்கே பொதுவுடமை கழகத்தின் கிளைக் காரியாலயம் ஒன்று கலோன் நகரில் இருந்தது மார்க்ஸீக்கு வசதியாக இருந்தது. வாரத்திற்கு ஒருமுறை கூட்டம் கூட்டி வம்பலப்பதும், பொழுதுபோக்கவும் கூடிய தொழிலாளர்களை கொண்டிருந்தது அந்த பொதுவுடமை காரியாலயம். சங்கத்தை நடத்திக் கொண்டிருந்த கோட்ஷாகிடம் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஆக்க வேலைக்கு உபயோகிக்கும் திறன் இல்லை. மார்க்ஸ் வந்த போது பொதுவுடமை காரியாயலம் மூடிக்கிடந்தது. சங்கத்திற்கு பதிலாக மார்க்ஸ் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. 

சில பொதுவுடமைத் தோழர்களின் உதவியுடன் 1848- ஜீன் 1- ஆம் தேதியில் ´ரைன்லாந்து கெஜட்´ பத்திரிக்கையை உருவாக்கினார். மார்க்ஸீன் கட்டுரைகள் ஏனோ, தானோ என்றிருக்காது. ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் உணர்ச்சிபூர்வமாக எழுதும் அவருடைய எழுத்துக்களில் மந்திர சக்தி இருந்தது. மக்களின் நலன்களை முன்னிருத்தியே மார்க்ஸீன் சிந்தனைகளும், எழுத்துக்களும் இருந்தன. யதேச்சாதிகாரத்தையும், ராணுவ ஆதிக்கத்தையும் மார்க்ஸீய எழுத்துக்கள் ஆவேசமாக தாக்கின.  இதர நாட்டு செய்திகளுக்கும் அப்பத்திரிக்கை முக்கியத்துவம் கொடுத்தது. 

"யதேச்சாதிகார நாடுகளான ரஷ்யாவும், ஜெர்மனியும் ஒன்றோடு ஒன்று கருத்து மாறுபாடு ஏற்படும் போது மக்கள் சக்தி அதிகரிக்கும்" என்று அன்றே துணிந்து எழுதி இருக்கிறார். 

பத்திரிக்கையோடு நின்றுவிடாமல், தொழிலாளர்கள் கூட்டங்களுக்கும் சென்று ஆவேசமாக உரையாற்றினார். தொழிலாளர்களின் உரிமைகளை விளக்கினார். தொழிலாளர்களுக்குள் மார்க்ஸீன் சிந்தனை விழிப்புணர்வைக் கொடுத்தது. மார்க்ஸீன் பத்திரிக்கைக்கு செல்வாக்கு கூடிக் கொண்டிருந்தது. அரசு விழித்துக் கொண்டது. பத்திரிக்கைக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. பத்திரிக்கை நடத்த உதவி செய்தவர்கள் பணம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். பணக்கஷ்டம் அதிகரித்தது. இருப்பினும் மார்க்ஸ் முடங்கி விடவில்லை. ஜெர்மன், ஆஸ்திரியா நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தம் பத்திரிக்கைக்கு நிதி திரட்டினார்.

மார்க்ஸிக்கு ஜெர்மனியில் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸ் சிந்தனைகள் பெறும் வரவேற்பை பெற்றன. உற்சாகமாக இருந்த தொழிலாளர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்ஸ் உட்பட 30- பேர் அடங்கிய கமிட்டி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. கலோன் நகரில் மாபெரும் மக்கள் கூட்டம் கூடினர். தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போயிற்று. தினமும் அடிதடி தாக்குதல், கைது செய்தல், பத்திரிக்கைகளை முடக்குதல், கூட்டங்களுக்கு தடை விதித்தல் என சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்கு அரசாங்கம் சென்றன. மார்க்ஸீன் ரைன்லாந்து பத்தரிக்கையும் தடை செய்யப்பட்டது. ஆங்காங்கே கலவரம் வன்முறைகள் அதிகரித்த போது அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே அதை கண்டிக்க ஆரம்பித்தனர். அதனால் மீண்டும் ரைன்லாந்து வெளிவர ஆரம்பித்தது. 

மார்க்ஸ் முடிந்தளவு மக்கள் தொடர்புள்ள எல்லாவற்றையும் உபயோகிக்க முற்பட்டார். எங்கும் புரட்சி கருத்துக்கள் குறித்த விவாதங்கள். தொழிலாளர்கள் உரிமைகள் என்ற பேச்சுக்களாக இருந்தன. தொழிற் சங்க தலைவராக அப்போது மார்க்ஸ் தேர்ந்தெடுக்க தீர்மானித்தனர். பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் தொழிற்சங்க தலைவராக ஆனார் மார்க்ஸ். 

அரசாங்கம் வேறு முகத்தை காட்ட ஆரம்பித்தது. தொழிலாளர் நலன்களையும், மக்களின் கோரிக்கைகளையும் கேட்பது போல் பாசாங்கு செய்துக் கொண்டு மக்களை மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தது. சட்டசபையை கலைத்தது. பெர்லின், கலோன் முதலிய நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிகார திமீரில் சொந்த நாட்டு மக்களையே கொடுமைப்படுத்த ஆரம்பித்தது. அதையெல்லாம் மார்க்ஸ் பயப்படாமல் தன்னுடைய பத்திரிக்கையில் எழுதினார். அதனால் இராணுவம் மார்க்ஸ் மீது மிகுந்த கோபத்தோடு பழிவாங்க காத்திருந்தது. அக்காலகட்டத்தில் மார்க்ஸ் உயிருக்கு ஆபத்திருந்ததால் பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கி வைத்திருந்தார். 

மார்க்ஸ் பத்திரிக்கை அலுவலகத்தில் கட்டுரை எழுதும் சிந்தனையில் இருந்தார். அவர் தனியாக இருப்பதை உளவு பார்த்து இராணுவம் அவரை கைது செய்துக் கொண்டு போய்விட்டது. கேள்விப்பட்ட மக்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சிறை முன்பு ஒன்று கூடினர். ´மார்க்ஸை விடுதலை செய்!´ மார்க்ஸை நாங்கள் உயிருடன் பார்க்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக கத்தினர். பயந்து போன இராணுவம் மார்க்ஸை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினர். 

மார்க்ஸ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பு சிறிய சொற்பொழிவு செய்தார். மக்களை அமைதியுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி மக்கள் சென்றனர். மார்க்ஸிக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கால் அவரை கொலை செய்யும் அளவுக்கு இராணுவத்தால் செல்ல முடியவில்லை. பொய் குற்றச்சாட்டு போட்டு சிறையில் அடைக்க முயற்சித்து கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனால் எநதக் குற்றச்சாட்டும் நிறுபிக்கப்படவில்லை. 

மார்க்ஸீன் பத்திரிக்கையையும் தடை செய்ய முடியவில்லை. மார்க்ஸையும் பொய் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க முடியாமல் போகவே, அரசாங்கம் ஜெர்மனியை விட்டு வெளியேறும்படி மார்க்ஸிக்கு உத்தரவு பிறப்பித்தது. 

1849- இல் மே 16- ஆம் தேதி, "ரைன்லாந்து கெஜட்டின்" கடைசி இதழ் வெளிவந்தது. முற்றிலும் மாறுபட்டு...

ஆம்! பத்திரிக்கை சிகப்பு மையால் அச்சடப்பட்டு வெளிவந்தது. 

"வாசகர்களே! 
விடைபெற்றுக் கொள்கிறோம். 
ஆனால், கடைசி முறையாக அல்ல".... 


என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட ரைன்லாந்து கெஜட்டின் பத்திரிக்கையை வாங்குவதற்காக மக்கள் பத்திரிக்கை அலுவலகத்தின் வெளியே குவிந்தனர். போட்டிப் போட்டுக் கொண்டு கடைசி இதழை வாங்கினர். இராணுவக்கட்டுப்பாடுள்ள இடத்தில் 20.000- பிரதிகள் விற்றன என்றால் சாதாரண விஷயமில்லை. அப்பத்திரிக்கையை பலர் கண்ணாடி சட்டம் போட்டு வைத்திருந்தனர் என்றால் அப்பத்திரிக்கையையும், மார்க்ஸீன் எழுத்துக்களையும் அவர்களை எந்தளவுக்கு ஈர்த்திருக்கின்றன என்பதை அறியலாம்.

மார்க்ஸ் பத்திரிக்கை அலுவலகத்தில் கடன்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன்களை அடைத்தார். நாடு கடத்தல் உத்தரவு வேறு. 
ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறுகிறார் மார்க்ஸ்...

தன்னுடன் பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு வந்த நண்பர்கள் யாரெனும் இன்னும் ஜெர்மனியில் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கலாம்..

மார்க்ஸ் என்ன நினைத்திருப்பார் அச்சூழலில்...

"மார்க்ஸ், உமக்கு மகிழ்ச்சி என்பது போராட்டமா?" 



தமிழச்சி
13/01/2009