09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கோயபல்ஸ்சின் சீடன்தான், பேரினவாத அரசின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய

பேரினவாத பாசிசமோ புலிப் பாசிசத்தை உச்சிக் காட்டுகின்றது. தனது இனவெறி பாசிச குற்றங்களை எல்லாம் புலியின் மேல் போட்டுத் தப்பிக்க முனைகின்றது. புலிப் பாசிசம் இழைக்க கூடிய குற்றங்களை எல்லாம், தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாத பாசிசம் இயங்குகின்றது. தனது குற்றங்களை மூடிமறைத்தும், தமது குற்றங்களை புலியின் செயலாக திரித்தும் அல்லது ஒப்பீட்டளவில் தமது குற்றம் குற்றத்தன்மை குறைந்ததாக காட்டவும் முனைகின்றது.

இதைச் செய்ய கைதேர்ந்த பாசிச பேச்சாளர்களை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் அனைத்தையும் தமக்கு சாதகமாக திரித்து புரட்டுகின்ற, அரசியல் சகுனிகளைக்  கொண்டு பேரினவாதப் பிரச்சாரம் இயங்குகின்றது.

 

எங்கும் பாசிச பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. இனப்பிரச்சனையைத் தீர்க்க போவதாக காட்ட, ஒரு குழு. பத்திரிகைத்துறையை அடித்து நொருக்கியபடி, அதற்;கும் கண்டனம். இனத்தின் மேலான வெற்றியல்ல இது என்று கூறியபடி, வெடியை வாங்கிக் கொடுத்து வெற்றியைக் கொண்டாடும் போக்கிரித்தனம். கொலை, கப்பம், கடத்தல் இதை புலியெழிப்பாக நடத்தியபடி, அதற்கு கண்டனம். கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மக்களின் கையில் சிங்கக்கொடியைக் கொடுத்து ஊர்வலம் விடும் ஜனநாயகம். பாசிசத்தை மூடிமறைக்க, அரசியலே கோமாளித்தனமாகின்றது. இப்படி இந்தப் பேரினவாத பாசிசம் செயலூக்கமுள்ளதாக, அனைத்தையும் திரித்துப் புரட்டுவதாக உள்ளது. மக்களை அடக்கியொடுக்குவதில் கூட, அது தனித்திறன் பெறுகின்றது. இதன் முன் புலிகள் நிலைதடுமாறி வீழ்கின்றனர்.

 

உண்மையில் புலிகளின் தவறுகள் மேல் குந்தி இருந்து கொண்டு, அவர்களின் தலையிலேயே குட்டுகின்றது. புலிகள் யுத்தத்தை மட்டுல்ல, அதன் பிரச்சாரத்தையும் கூட எதிர்கொள்ளமுடியாது திணறுகின்றனர். அனைத்தையும் புலிகள் மேலான குற்றமாக புனைய முனைகின்றது.

 

அண்மையில் விடுதலைப் புலியைச் சேர்ந்த இறந்த பெண்களின் உடுப்பை உருவி, பேரினவாதம் ஆடிய வெறியாட்டத்தை நாம் வெளியிட்டு இருந்தோம். நாமே இதை முதலில் வெளியிட்டதால் இதை புலித்தேசியம் மூடிமறைக்க, அதை அரசல் புரசலாக இதன் கோரம் அரங்குக்கு வந்தது. இதையடுத்து, இது பற்றி அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஒரு பாசிச விளக்கத்தையளித்தார். இது பற்றிய விசாரணை நடத்தப்படும் என்றார். இதுவே ஒரு கண்துடைப்பு தான். மூதூர் படுகொலை மேலான விசாரணை முதல் 1977 இல் பேரினவாதம் நடத்திய இனக்கலவரம் வரையான விசாரணை எல்லாம், வெறும் கண்துடைப்புத்தான்.

 

இனங்களைப் பிளந்து இனவாதமாக்கி, இனவாத குற்றங்கள் ஒரு இனத்தின் ஜனநாயகமாகியது. இதுவே மக்களுக்கு எதிரான, இரண்டு பாசிச இராணுவங்களின் யுத்தமாகியது. தமிழ் மக்களோ சொல்லொணா துயரத்தை அனுபவிக்கின்றனர். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட குற்றங்கள், எதுவும் தண்டிக்கப்படுவது கிடையாது. சிங்கள பேரினவாதமே ஜனநாயகமாக உள்ள நாட்டில், இது சாத்தியமற்றதாகியது. மனிதவிரோத குற்றங்களை புலிகள் மட்டும் செய்வதாக கூறுகின்ற பேரினவாதம், தாம் இதைச் செய்ததில்லை என்கின்றது.

 

தமிழரின் உரிமைகளை மறுத்து நிற்பதுடன், செய்து கொண்ட ஒப்பந்தங்களைக் கூட கிழித்தெறிந்த ஒரு குற்றப் பரம்பரையினர் தான் இந்த சிங்களப் பேரினவாதிகள். இதற்காக அவர்கள் வருந்தியது கிடையாது. அந்த பெருமையைத் தான் சிங்கள இனத்தின் வெற்றியாக பறைசாற்றிக் கொண்டு, அதை நவீன பாசிசமாக்கிய பரம்பரையின் வாரிசு தான் இன்றைய மகிந்தா கும்பல்.

 

அது மனிதவுரிமைகளை வழங்குவதாக வாயளவில் பாசாங்கு காட்டிக்கொண்டு, அதை மறுப்பதையே நடைமுறையாக கொண்டு செயல்படுகின்றது. குற்றங்களை, விசாரணைகளையும் நீர்த்துப் போகும் வண்ணம், அதை சுற்றிச் சதி செய்கின்றது. பாசிசம் நாட்டின் சட்ட நெறியாகின்றது. இதில் இனவாதக் குற்றங்கள் சட்டத்தின் முன் வருவது கிடையாது.

 

இறந்த பெண்ணின் மேலான சிங்கள இனவெறியுடன் குதறிய குற்றத்தை, நவீன பாசிசம் குற்றமற்றதாக சுயவிளக்கமளிக்கின்றது. 'ஐந்து லட்சம் பேரைக் கொண்ட பாதுகாப்புத் தரப்பில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுகின்றமை வியக்கத்தக்கதொன்றல்ல" என்கின்றார் இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல. இனவாதத்தையே அரசியலாக கொண்டவர்கள் தான், இப்படி இதை கூற முடிகின்றது. இவை தனிமனித தவறாக சித்தரிக்க முனையும் சிங்கள பேரினவாதம், இதை ஐந்து லட்சத்தில் ஒன்று என்கின்றார்.

 

இலங்கையிலோ ஒரு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை யார் செய்தது? இந்த சிங்கள பேரினவாதம் தான். அது கட்டமைத்துள்ள ஐந்து லட்சம் சிங்கள படைகள் தான், ஒரு இலட்சம் தமிழரையும் கொன்று குவித்தது. கூட்டுப் படுகொலைகள் முதல் பெண்களை கற்பழித்து கொன்று புதைப்பது வரை, எம் மண்ணில் தொடர்ச்சியாக நடந்து வந்தவை, வருபவைதான். இதற்காக சிங்கள பேரினவாதம் சுயவிசாரணை செய்தது கிடையாது. இந்தக் குற்றங்கள், குற்றமாகவே சிங்கள பேரினவாத அமைப்பில், அங்கீகரிக்கப்படுவது கிடையாது. இவை சட்டபூர்வமான செயலாகவே, தமிழருக்கு எதிரான சிங்கள பாசிட்டுகளின் மனித செயலாகவே பேரினவாதம் கருதுகின்றது. இதில் ஏதாவது ஒன்று, ஏதோ ஒரு காரணத்தினால் விசாரணைக்கு வரும்போது, அவை குற்றமாக தண்டிக்கப்படுவது கிடையாது. மாறாக அவை நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றது. 

 

குறித்த பெண்களை நிர்வாணமாக்கி மகிழ்ச்சியில் திளைக்கும் இராணுவ நடவடிவக்கையும், மகிந்த கிளிநொச்சியைக் கற்பழித்ததை வெடிகொழுத்தி கொண்டாடியதுக்கு ஒப்பானது.

 

சிங்கள பேரினவாதம் கட்டமைத்துள்ள பாசிச இராணுவமோ, ஆணாதிக்க தன்மை வாய்ந்தது. பெண்களை அது பாலியல் ஊடாகத்தான் அணுகுகின்றது. அதில் ஒன்றுதான், அவர்கள் அம்பலமாகும் வண்ணம் எம்முன் ஆவணமாக கிடைத்தது. அதை நாம் அம்பலப்படுத்தினோம். 

 

இனவெறி உணர்வும், ஆணாதிக்க உணர்வும், மனித தன்மையுமற்ற காட்டுமிராண்டி உணர்வும், சமூகத்தின் எல்லா நோய்களையும் கொண்ட ஒரு பேரினவாத காட்டுமிராண்டி இராணுவம் தான், இலங்கை இராணுவம். இவற்றை அடிப்படையாக கொண்ட அதிகாரத்தை, அதிகாரமாக கொண்டு தூப்பாக்கி முனையில் எம் தேசத்தையே கற்பழிக்கின்றனர். இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூற்றுக்கு எதிர்மறையாக, ஐந்து லட்சத்தில் ஒன்று தான் இதற்கு எதிராக உள்ளது.

 

தமிழ் பெண்கள் என்றால் எதையும் பாலியல் கண்ணோட்டம் ஊடாகச் செய்யும் அதிகாரத்தையும், உரிமையையும் கொண்டது சிங்கள இராணுவம். இந்த பேரினவாத தமிழ் விரோத இராணுவத்தின் வக்கிரங்களை மூடிமறைக்கும் பேச்சாளர்தான், கெஹலிய ரம்புக்வெல்ல. சிங்கள இராணுவம் பெண்ணை உரிவது வெளிப்படையாக அம்பலமானதுடன், இது ஐந்து லட்சத்தில் ஒன்று என்கின்றார். இப்படி தம் தூய்மையான சிங்கள இனவெறி இராணுவத்தின், ஆணாதிக்கத்தை ஒழுக்கம் நிறைந்தாக பூசிமெழுகுகின்றார். 

 

இந்த பாசிட்டுகளுக்கு தலைமை தாங்கும் சிங்கள வெறியன் மகிந்த ராஜபக்சவோ, கடைந்தெடுத்த நடிகன்;. தமிழில் உரை நடத்திக் கொண்டே, தமிழனை கொத்தித் தின்னும் கழுகு. கிளிநொச்சியை வென்றதை இனத்தின் மேலான வெற்றியல்ல என்று இந்த கழுகு கீச்சலிட்டபடி, மறுபக்கத்தில் பேரினவாத வெற்றியை கொண்டாட வெடிகொழுத்தி கூத்தாடும் அலுக்கோசு.

 

இந்த பாசிச அலுக்கோசு தனக்கு எதிராக எழுதி வந்த சண்டே லீடர் லசந்த விக்கிரமதுங்கவை கொன்று போட்டு விட்டு, தனது நண்பர்க்கு அஞ்சலி என்று தனது பாசிச மொழியில் கதை சொல்ல முடிகின்றது. புலிகள் முதல் மகிந்த வரை கட்டமைத்துள்ள பாசிசம், இப்படித்தான் இயங்கியது, இயங்குகின்றது. ஈவிரக்கமற்ற மனித விரோதிகள், தம் அரக்கத்தமான கொடும்பாதகச் செயல்களை செய்துவிட்டு, தம் வாயில் இருந்து வழியும் இரத்தத்தைக்கொண்டே மறுப்பறிக்கைகள் எழுதுகின்றனர். கட்டுக்கதைகளையும், கற்பனைப் புனைவுகளையும் பிரச்சாரம் செய்யும் பாசிசம், தமது குற்றத்தை பாசிச தூய்மையின் ஊடாக சமூகத்தில் திணிக்க முனைகின்றனர். நடந்த குற்றத்தின் மேல், பரஸ்பரம் நானல்ல நீ என்று குற்றம் சாட்டுகின்றனர், இந்த கொலைகாரக் கும்பல்கள்.  

 

இந்த வகையில் தான் தமிழ் பெண்ணை இராணுவம் உரிந்த நிகழ்வை 'சில வேளைகளில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்டிருக்கக் கூடும் என்கின்றார்" இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல.

 

உண்மையில் எப்படித்தான், இதைக் கூறமுடிகின்றது!? புலிகளின் புனைவுகளும்,  சின்னத்தனமான இழிவான மலிவான பிரச்சார உத்தியையும், தனக்கு சாதகமாகக் கொள்கின்றது பேரினவாதப் பாசிசம். தன் பாசிச மொழியில், இதை அந்த எல்லைக்குள் சிதைத்துவிடவே முனைகின்றது. பொதுவான குற்றங்களினதும், பொதுவான பிரச்சார உத்திகளிலும், இந்த பாலியல் குற்றத்தை பொதுத்தன்மையாக்கிய பேரினவாதம் அதை தனக்கு சாதகமாக்கி கூவி விடுகின்றது. இதன் மூலம் பொது அறிவு மட்டத்தில் ஒரு நம்பகத்தன்மை விதைத்து, புலிகள் தம் பிரச்சாரத்துக்காக இதை செய்திருக்கக் கூடும் என்ற ஊகத்தின் மூலம், பேரினவாத குற்றங்களை எல்லாம் புலிகள் மேல் சுமத்திவிட முனைகின்றது. பேரினவாத பாசிசம் தனது குற்றங்களை புலிப் பாசிசத்தின் மேல் சுமத்திவிட முனைகின்றது.

 

உண்மையில் இதையே புலிகளும் செய்கின்றனர். இதில் அண்ணன் தம்பிகள் யார் என்பதில்தான், காலத்துக் காலம் சம்பவத்துக்கு சம்பவம் முரண்பாடு உண்டு. மற்றும்படி ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான். குற்றத்தை எதிர்தரப்பு மேல் சுமத்துவது, பாசிச குற்றவாளிகளின் பண்பாகிவிட்டது. மனிதம், அது சார்ந்த அறம் அனைத்தும், பொய்கள், புனைவுகளில், புளித்துப் போன கூச்சலாகின்றது.  

 

இப்படி சிங்கள பேரினவாதமும், அரச பயங்கரவாதமும் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத நடவடிக்கையை மூடிமறைத்த படி, புலிப் பயங்கரவாதம் பற்றி மட்டும் கூச்சலிடுவது பேரினவாத பாசிசத்தின் அரசியலாக உள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களை ஓடுக்கி, அவர்களை மேலும் பேரினவாத அரச பயங்கரவாத வன்முறைக்குள் அடக்கியொடுக்குகின்றனர். இதன் போது செய்கின்ற மனிதவிரோத குற்றங்களை, புலிப் பாசிசத்தின் செயலாக சித்தரிக்க முனைகின்றது. பேரினவாதம் நவீன பாசிச பிரச்சார உத்தியைக் கொண்டு, குற்றங்களை தொடர்ந்து செய்கின்றது. இது தமிழ் இனத்தின் மேல் மட்டுமல்ல, தனக்கு எதிரான அனைத்தின் மேலும் ஒரே குற்றத்தையே செய்கின்றது. சிங்கள ஊடகவியலாளர்கள் முதல் தமிழ் இனத்தின் மேலாக, தம் பாசிச சர்வாதிகார பயங்கரவாதத்தையே ஏவிவிட்டுள்ளது. இதன் மூலம் முழு மக்களையும் அடக்கியாள முனைகின்றது. இதைத்தான் மகிந்த சிந்தனை நடைமுறைப்படுத்துகின்றது.

 

பி.இரயாகரன்
09.01.2009

 


பி.இரயாகரன் - சமர்