Language Selection

புதிய ஜனநாயகம் 2009

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில், நிலத்தடி நீரைக் கொள்ளையிட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "கால்ஸ்'' சாராய ஆலைக்கு எதிராக, இப்பகுதிவாழ் விவசாயிகள்

 தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர். ஆலை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தியும், ஆலை நிர்வாகத்திடம் பணப்பெட்டி வாங்கிக் கொண்டு போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்ற துரோகிகளை அடித்து விரட்டியும், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் பேராதரவோடும் கல்லாகோட்டை வட்டார விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடி வருகின்றனர். (பார்க்க: "புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008)


போலீசார் மற்றும் துரோகிகளைக் கொண்டு மக்களை அடக்க முயற்சித்து தோல்வியடைந்த சாராய ஆலை கும்பல், நீதிமன்றத்தின் துணையோடும் போலீசை ஏவல் நாயாக்கிக் கொண்டும், கடந்த டிசம்பர் மாதத்தில் புதிய சூழ்ச்சிகள் தாக்குதல்களுடன் இறங்கியுள்ளது. சாராய கும்பலிடம் பணப்பெட்டி வாங்கிக் கொண்டு, போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று உள்ளூர் மக்களிடம் உதைபட்ட துரோகிகளான காங்கிரசு பிரமுகர் குஞ்சைய்யா, தி.மு.க.வின் முத்துசாமி, ம.தி.மு.க.வின் ராஜப்பா ஆகியோர், தாங்கள் சாராய ஆலையில் வேலை செய்யும் ஊழியர்கள் என்றும், தங்களை உள்ளூர் மக்கள் தாக்கியதால் தங்களுக்கும் பிற ஊழியர்களின் உயிருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்று கோரி, "ஆலை ஊழியர்களின் உயிர் பாதுகாப்புக் குழு'' என்ற பெயரில் மோசடியாக மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு செய்து, தமக்குச் சாதகமாக நீதிமன்ற உத்தரவையும் பெற்றனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயசங்கரனைச் சரிகட்டி, "ஆலைக்குச் சொந்தமான இடத்தில் சாராய ஆலையை நிறுவும் பணிகளை மேற்கொள்ளலாம்'' என்ற உத்தரவையும் சாராய கும்பல் பெற்றுள்ளது.


இவ்விரு நீதிமன்ற ஆணையிலும், ஆலை கட்டுமானப் பணிகளுக்குப் பாதுகாப்பு தருமாறு போலீசுக்கு எவ்வித அறிவுறுத்தலும் இல்லை. இருப்பினும், இரண்டு வேன்களுடன் ஏறத்தாழ 30 போலீசார் ஆலை வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலைக்கு செங்கல், சிமெண்ட் ஏற்றிவரும் லாரிகளுக்கு முன்பு "சைரன்'' ஒலியுடன் போலீசு வாகனங்கள் அணிவகுத்து பாதுகாப்பு கொடுக்கின்றன. இதுவொருபுறமிருக்க கடந்த 14.12.08 அன்று சீமைச்சாராய ஆலை எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவரான திரு.கணேசனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த டி.எஸ்.பி. பழனிச்சாமி தலைமையிலான போலீசு கும்பல், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, பணம் மற்றும் சி.டி. பிளேயரைக் களவாடிச் சென்றது. முன்னணியாளர்களான 8 பெண்கள் உள்ளிட்டு 15 பேர் மீது ஆலைக்கு வந்த மினி லாரியை மறித்து எரிக்க முயன்றதாக போலீசு கும்பல் பொய் வழக்கு போட்டு, கைது செய்யப் போவதாக பீதியூட்டி வருகிறது.


நீதிமன்ற ஆணை, பொய் வழக்குகள், வீடு புகுந்து சூறையாடல், தேடுதல் வேட்டை முதலான போலீசின் அடக்குமுறைகளைத் துச்சமாக மதிக்கும் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்கள், அடுத்தகட்டமாக புரட்சிகரஜனநாயக சக்திகளின் துணையோடு கந்தர்வக் கோட்டையில் 19.12.08 அன்று சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து, இரவு பகல் பாராமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர்.

 

போராட்ட நாளன்று அதிநவீன துப்பாக்கிகள், குண்டாந்தடிகள், "வஜ்ரா'' வாகனங்களுடன் டி.எஸ்.பி.க்கள், எஸ்.பி.கள் அணிவகுக்க, பெருமளவில் போலீசு குவிக்கப்பட்டு, கந்தர்வக் கோட்டைக்கு வரும் சாலைகள் அனைத்தும் கயிறுகள் கட்டி தடுக்கப்பட்டன. இருப்பினும், வேறு பாதைகளில் 5 கி.மீ. தூரத்துக்கு நடைபயணமாக வந்த கல்லாக்கோட்டை மக்கள், போலீசு தடுப்புக் கயிறுகளை அறுத்தெறிந்து விட்டு காட்டாற்று வெள்ளம் போல் அணிதிரண்டு, சாலைமறியல் போரில் இறங்கினர். தடியை உயர்த்தி மிரட்டிய போலீசாரிடம், செருப்பை தூக்கிக் காட்டி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.


போலீசின் அடக்குமுறைக்கு எதிராகவும், சாராய கும்பலுக்கு எதிராகவும் இச்சாராய கும்பலின் பின்னணியுள்ள பெரும்புள்ளிகளை அம்பலப்படுத்தியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் எழுப்பிய முழக்கங்களால் கந்தர்வக்கோட் டையே அதிர்ந்தது. போர்க்களத்தில் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மறியலில் ஈடுபட்ட முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், "கால்ஸ் சாராய ஆலைக்குக் கல்லறை கட்டும்வரை எமது போராட்டம் ஓயாது'' என்று கல்லாக்கோட்டை மக்கள் சூளுரைத்துள்ளனர்.


பு.ஜ. செய்தியாளர்கள், தஞ்சை.