Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஐரோப்பிய கண்டத்திலுள்ள கிரேக்க நாடு, இதுவரை கண்டிராத உழைக்கும் மக்களின் பேரெழுச்சியால் குலுங்குகிறது. தலைநகர் ஏதென்சில் போராட்டத் தீ பற்றி எரிகிறது. கடந்த டிசம்பர் 6ஆம் நாளில் தொடங்கிய இப்பேரெழுச்சி, இரு வாரங்களுக்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


ஏதென்சின் புறநகர் பகுதியான எக்சார்சியாவில், தெருவில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கிரிகோரோ பவுலோஸ் என்ற 15 வயது சிறுவன், ரோந்து சுற்றிய போலீசாரால் டிசம்பர் 6ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டான். அச்சிறுவன், போலீசு வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினான் என்பதால் சுடப்பட்டான் என்று நியாயவாதம் பேசியது போலீசு.


"இது அப்பட்டமான பொய்; கடந்த சில மாதங்களாகவே தொடரும் இளைஞர்கள் போலீசுக்கிடையேயான மோதலின் தொடர்ச்சியாக நடந்துள்ள தாக்குதல்தான் இது. கிரேக்க நாட்டில் இளைஞனாக இருப்பதுகூடக் குற்றமாகிவிட்டது; கொலைகார ஆட்சியாளர்கள் இளைஞர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தருகிறார்கள்'' என்று முழக்க அட்டைகளுடன் இப்பகுதிவாழ் இளைஞர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். போலீசு வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
அடுத்தநாள், ஏதென்ஸ் நகரெங்கும் மாணவர்இளைஞர்கள் வீதிகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர். போலீசின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக வெடித்தெழுந்த இப்போராட்டம், கிரீஸ் நாட்டின் வலதுசாரி பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக முன்னேறத் தொடங்கியது.


ஏதென்ஸ் மட்டுமின்றி, தெசல்லோனிகி, ஹனியா, கிரீட், கார்ஃபூ முதலான பெருநகரங்களில் மாணவர்இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களும் சாலை மறியல்களும் தொடர்ந்தன. நாடெங்கும் போலீசாருக்கு எதிராக இளைஞர்கள் தெருச்சண்டையில் இறங்கினர். ஏதென்ஸ் பல்கலைக் கழகம் அவர்களது போராட்டத் தலைமையகமாகியது. பாட்ராஸ், கோமுடினி, ஹெராக்ளியன், சானியா முதலான இதர பல்கலைக் கழக மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். போக்குவரத்து தொழிலாளர்கள் , மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் ஓரணி திரண்டு அரசுக்கெதிராக வேலை நிறுத்தங்களில் இறங்கினர். உள்ளூர் வானொலி நிலையங்கள் போராட்டக் காரர்களால் கைப்பற்றப்பட்டு, போராட்டச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. கிரேக்க நாடாளுமன்றம் நாள்தோறும் முற்றுகையிடப்பட்டது. "உலகமயமாக்கலுக்கு மக்களைப் பலிகிடாவாக்காதே! மக்களை வதைக்கும் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளைக் கைவிடாதவரை, போராட்டம் தொடரும்!'' என்ற எச்சரிக்கை முழக்கம் எங்கும் எதிரொலித்தது.


கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் நாடு தழுவிய பேரெழுச்சியாக பற்றிப் படரத் தொடங்கியதும், மக்களின் கோபம் பணக்கார கும்பலுக்கு எதிராகத் திரும்பியது. நாடெங்கும் ஆடம்பரநுகர்பொருள் பேரங்காடிகள் சூறையாடப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ஆடம்பரக் கார்கள் கல்லெறிந்து தாக்கப்பட்டன. உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகள் அடித்து நொறுக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்களின் அலுவலகங்கள் தீயிடப்பட்டன.


இது ஒரு உள்நாட்டுப் போர். பணக்கார வர்க்கத்தின் மீது ஏழைகள் தொடுக்கும் வர்க்கப்போர். ஓய்வூதிய வெட்டு, வேலை உத்தரவாதம் பறிப்பு, சமூக நலத் திட்டங்களுக்கான மானியக் குறைப்பு, தனியார்மயத்தால் கல்வி செலவு அதிகரிப்பு, வேலையின்மை முதலானவற்றால் கடந்த பல ஆண்டுகளாகக் குமுறிக் கொண்டிருந்த கிரேக்க மக்களின் கோபாவேசம்தான் இந்தப் போர். நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரச் சரிவினால் திவாலாகிவரும் கிரேக்க தனியார் முதலாளித்துவ வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக் கொடுத்து முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தும் கிரேக்க பிற்போக்கு அரசுக்கு எதிரான ஆத்திரம்தான் இந்தப் போர்.


"ஐயோ, அராஜகம்! வன்முறை!'' என்று செய்தி வெளியிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். ஆம்; அராஜகம்தான். இது, உலகமயமாக்கலும் அமெரிக்காவும் தோற்றுவித்த அராஜகம்! ஆம்; இது வன்முறைதான். இது உலகமயமாக்கலுக்கு ஏற்ப கிரேக்க பொருளாதாரத்தை மாற்றியமைத்த கிரேக்க பிற்போக்கு ஆளும் கும்பல் தோற்றுவித்த வன்முறை! இவற்றால் தாக்குண்டு குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள், தீப்பொறிக்காகக் காத்திருக்கும் சருகுகள் நிலையில் இருந்தார்கள். இளஞ்சிறுவன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம், போராட்டத் தீயைப் பற்ற வைத்து விட்டது.


கடந்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடான கிரீசில் வேலையின்மை 30% ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கம், விலையேற்றத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் மூச்சுத் திணறுகிறது. உலகமயத்தால் ஆதாயமடையும் முதலாளித்துவக் கும்பல்களின் செல்வமும் ஆதிக்கமும் ஒருபுறம் பெருகிக் கொண்டே போக, மறுபுறம் உழைக்கும் மக்களின் வாழ்நிலையோ அதலபாதாளத்துக்கு வீழ்ந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மயிரிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் கோஸ்டாஸ் கரமான்லிஸ் அரசு, வீட்டுமனை ஊழலில் சிக்கி சந்தி சிரிக்கிறது. கடந்த ஓராண்டில் மூன்று அமைச்சர்கள் ஊழலில் சிக்கி அம்பலப்பட்டு பதவி விலகியுள்ளனர். அதிகாரச் சண்டையில் அந்நாட்டு ஆளும் வர்க்கம் பிளவுபட்டுப் போயுள்ளது. நடுத்தர வர்க்கம், அடித்தட்டு உழைக்கும் மக்களுடன் இணைந்து தெருவில் இறங்கிப் போராடுகிறது. தொழிலாளி வர்க்கமும், வேலையற்ற இளைஞர்களும் கடந்த ஈராண்டுகளாகத் தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.


இதனால்தான், சிறுவனைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக இரண்டு போலீசு அதிகாரிகளைக் கைது செய்தும், போலீசாரின் அக்கிரமத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்டும் ஆட்சியாளர்கள், இப்போராட்டத்தைத் தணிக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. உலகமயமாக்கலையும் அதற்கேற்ற பொருளாரதாரக் கொள்கைகளையும் கைவிடாதவரை அரசுடன் எவ்வகையிலும் ஒத்துழைக்க மாட்டோம் என்று உழைக்கும் மக்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். பள்ளிகல்லூரிகள் மூடிக் கிடக்கின்றன. நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிலிருந்து அவசரமாக கண்ணீர் புகை குண்டுகளை இறக்குமதி செய்து ஆளும் கும்பல் எதிர்தாக்குதல் நடத்திய போதிலும், உழைக்கும் மக்களின் கலகம் ஓயவில்லை.


அமெரிக்கப் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து, அதனுடன் பிணைக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் நெருக்கடி முற்றி வருகிறது. கிரேக்க உழைக்கும் மக்களின் பேரெழுச்சியை ஆதரித்து பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், டென்மார்க் முதலான நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் கிரேக்க தூதரக முற்றுகைப் போராட்டங்களும் நடந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரேக்க தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. ஏதென்சில் பற்றிய தீ, பாரிசிலும் பரவும் என்று பிரெஞ்சு மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அந்நாட்டு ஆளும் கும்பல் அரண்டுபோய் நிற்கிறது. கல்விக்கான மானியத்தைக் குறைத்து கட்டணத்தை உயர்த்தும் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை பிரான்சின் சர்கோசி அரசு அவசரமாக நிறுத்தி வைத்துள்ளது.


உலகமயமாக்கலின் பெருந்தோல்வியும், அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை ஆட்டிப் படைக்கின்றன. கிரேக்கம் மட்டுமின்றி, இனி இதர ஐரோப்பிய நாடுகளிலும் உழைக்கும் மக்களின் எழுச்சியும் கலங்களும் வெடித்துப் பரவும் என்பது நிச்சயமாகிவிட்டது. கிரேக்க கம்யூனிஸ்டு கட்சி மட்டுமல்ல; இதர ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்கள் போராட்டங்களுக்குப் பின்னே வால்பிடித்துச் செல்கின்றனவே தவிர, இவற்றுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் ஆற்றல் கொண்டவையாக இல்லை. கிரேக்கமும் இதர ஐரோப்பிய நாடுகளும் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியொன்றின் தலைமைக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன.


· குமார்