"காஸா" என்ற கூண்டுக்குள் அகப்பட்ட, ஒன்றரை மில்லியன் மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவிக்கின்றன. ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறிய போதும்; முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் எல்லோரையும் இஸ்ரேலிய ஆயுதங்கள் பலி எடுக்கின்றன.

 

கடைசியாக கூட ஐ.நா. சபை நடத்தி வந்த பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகள் மீது இஸ்ரேலிய படைகள் குண்டு வீசியதில் நாற்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இத்துடன் இரண்டாவது தடவையாக பாடசாலைகளை குறிவைத்து தாக்கி உள்ளது. போர் நடக்கும் வேளை பாதுகாக்கப்பட வேண்டியவை என்று "அப்பாவித்தனமாக" எதிர்பார்க்கப்படும்,வழிபாட்டு ஸ்தலங்கள், பல்கலைக்கழகம், மருத்துவ மனை, அம்புலன்ஸ் வண்டிகள், இவை எல்லாம் தாக்கப்பட்டுள்ளன.

இதுவரை அறுநூறு பேர் அளவில் கொல்லப்பட்டாலும், "சர்வதேச சமூகம்" முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கின்றது. "போரில் தர்மம் கிடையாது. எல்லாமே ஹமாஸ் இலக்குகள் தாம். ஹமாஸ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதால், பொது மக்களும் மரணிக்கின்றனர்." என்று நியாயவாதம் பேசுகின்றது இஸ்ரேலிய அரசு. "அது சரி தான். இஸ்ரேல் தனது தேசிய நலன்களை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கை அவசியம். ஹமாஸ் தான் சண்டையை தொடக்கி வைத்தது." இவ்வாறு பக்கப் பாட்டு பாடுகின்றன, அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும். இஸ்ரேலின் போர்க்கால குற்றங்களை யாரும் கண்டு கொள்ளாததால், தானே ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் போவதாக ஈரான் கூறுகின்றது.



அரபு நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மக்கள் எதிர்த்து வருகின்றனர். தமது அரசாங்கங்களின் கையாலாகாத தனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கி சில நாட்களில், உணவு, மருந்து போன்ற நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு உதவிக் கப்பல் ஒன்று சைப்ரசில் இருந்து காஸா நோக்கி புறப்பட்டது. சர்வதேச தொண்டர்களுடன், சில சைப்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கப்பலில் சென்றனர். நிவாரணக் கப்பலின் வருகை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இஸ்ரேலிய கடல் எல்லைக்கு சிறிது தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து, இஸ்ரேலிய கடற்படைகள் சுற்றிவளைத்தன. இருட்டில் எந்த அறிவிப்பும் இன்றி வேகமாக வந்த கடற்படைக் கப்பல் மோதியதால், நிவாரணக் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. கப்பல் மூழ்கும் தருவாயில் இருந்த போதும், ஒருவாறு சமாளித்து லெபனான் கரையை போய் சேர்ந்தது. கிப்ரால்டரில் பதிவு செய்யப்பட்ட "டிக்னிட்டி" என்ற நிவாரணக் கப்பலை தகர்த்த இஸ்ரேலின் பயங்கரவாத செயலை, எந்தவொரு உலகத் தலைவரும் கண்டிக்கவில்லை.

இதற்கிடையே இம்முறை இஸ்ரேல் நடத்தும் "அதி உயர் தொழில்நுட்ப" யுத்தத்தில், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக பல சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. "வெள்ளை பொஸ்பரஸ்" என்ற தூள் விமான மூலம் தூவப்படுவதாகவும், இது எலும்பு மச்சையை தாக்கி புற்று நோயை உண்டாக்க வல்லது என்றும் கருதப்படுகின்றது. இதுவரை சில ஆங்கில மொழி பதிவர்கள் மட்டுமே வெளியிட்ட இந்த தகவலை,பத்திரிகையும் உறுதிப் படுத்தியுள்ளது.