Language Selection

ஏகலைவா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாடுந்தாதேவி கோவிலில் நவராத்திரி தினத்தன்று 150 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இப்படியான கோவில் உயிரிழப்புக்கள் அங்கு இது தான் முதல்
தடவையல்ல. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் பாறைச் சரிவு என்ற வதந்தி ஏற்பட்டு நெரிசலில் 162 பேர் பலியாகினர். 2005 ஆண்டு ஜனவரி மாதத்தில் மகாராஷ்ராட்டிரத்தின் மந்திராதேவி கோவிலில் 340 பேர் பலியாகினர். இவை நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகிய சம்பவங்களாகும். ஆனால் அடிக்கடி பல பத்துப் பேர் வரை முக்கிய கோவில்களில் உயிரிழந்த வண்ணமே உள்ளனர்.

பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால்
அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.


இவ் உயிர் இழப்புகளை எந்தத் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பது?
மத மூட நம்பிக்கைத் தீவிரவாதம் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளப்படுமா? இவ்வாறு உயிரிழப்போர் சாதாரண உழைக்கும் மக்களாவர். ஏனெனில் இந்தியக் கோவில்களில் வசதி வாய்ப்புப் பெற்ற பெரும் பணக்காரர்கள் முதலாளிகள் பெரும் அரசியல் புள்ளிகள் கடவுளின் இருப்பிடத்திற்கு அண்மையாகச் சென்று அருள் வாங்கிச் செல்ல உரிய ஏற்பாடுகள் தாராளமாக உண்டு. அதற்குரிய தொகைகளும் பெரியனவாக இருக்கும்.

ஆனால் சாதாரண பக்தர்கள் சிறிய தொகை செலுத்திப் பெரிய அளவில் அருள் வாங்க முண்டியடித்து நெரிசல் பட்டு உயிர் இழக்கின்றனர். இவை எதனைக் காட்டுகின்றன? கோவில்களும் கடவுளர்களும் வர்க்கம் சாதி பதவி அந்தஸ்துப் பார்த்தே 'அருள் புரிகிறார்கள்" என்பது தான்.

இந்தியா சாதிகளின் நாடு மட்டுமன்றி மதங்களினதும் மூடநம்பிக்கைகளினதும் நாடுமாகும். பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால் அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தமது வறுமை, வேலையின்மை, நோய்கள், அன்றாடப் வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் மீண்டும் மீண்டும் கோவில்கள் நோக்கியே தள்ளப்படுகிறார்கள்.

மூட நம்பிக்கைக்குள் மேன்மேலும் அமிழ்த்தப்படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் கடவுள்களின் புதிய அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணமே உள்ளனர்.

பிராமணியக் கோவில்களுக்கு அப்பால், ஒவ்வொரு சாதியிலும் நவீன அவதாரங்கள் ஆச்சிரமங்களும் கோவில்களும் அமைத்து அவற்றை வணிக மையங்களாக்கிக் கொள்கின்றன. இந்த அவதாரங்கள், தொடுகை செய்தும், கட்டிப்பிடித்தும், கைகள் உயர்த்திப் பொருட்களை வரவழைத்தும் பிள்ளைவரம், அற்புதங்கள் என்ற பெயரில் மக்களை மயக்கி வருகின்றனர்.

இதன் மூலம் சமூக நெருக்கடிகள் அரசியல் பிரச்சனைகள் அவற்றுக்கான காரணங்கள் பற்றி அறியவோ அணிதிரளவோ தமக்குரிய போராட்டங்களைத் தாமே நடத்தவோ முன்வராதவர்களாக மக்கள் ஆக்கப்படுகின்றனர்.

இந் நிலை இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையில் இன்றைய யுத்த நெருக்கடியின் மத்தியிலும் இந்த வகை ஏமாற்றுக்குள் தொடர்கின்றன.

தமது வாழ்க்கைப் பிரச்சினைகட்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் கோவில்கள் நோக்கித் தள்ளப் படுகிறார்கள். மூட நம்பிக்கைக்குள் அமிழ்த்தப் படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணம் உள்ளன.

புதிய புதிய கோவில்கள் பெரியளவில் கட்டியெழுப்பப்பட்டு அவற்றுக்குப் தங்கம் வெண்கலம் வெள்ளி போன்றவற்றால் அலங்கரிப்புகள் செய்து 'புனிதங்கள்" ஏற்றப்படுகின்றன. அண்மையில் ஆடி மாதப் பாற்குடப் பவனி கொழும்பில் பல கோவில்களில் நடாத்தப்பட்டது. வெள்ளவத்தையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து இரண்டாயிரம் பெண்கள் பாற் குடம் தலையில் வைத்து ஒரே நிறச் சேலைகள் பாவாடைகள் அணிந்தவாறு பிரதான வீதிகளில் பக்தியைக் காட்டி ஊர்வலம் வந்தனர். ஒரு குடத்திற்குக் கோவில் நிர்வாகம் ஐயாயிரம் ரூபா வசூலித்ததாகவும் அறிய முடிகிறது. ஒரு குடத்தில் இரண்டு லீற்றர் பால் இருந்தது. அவ்வாறு சுமார் நாலாயிரம் லீற்றர் பால் ஊர்வல முடிவில் அம்மனுக்கு ஊற்றப்பட்டு கழிவு நீர் வாய்க்காலில் ஓட விடப்பட்டதாம்.

இதனைப் பக்தி என்பதா காசு மிஞ்சிய கொழுப்புத்தனம் என்பதா மூட நம்பிக்கை கொண்ட பக்தி என்பதா எனப் புரியவில்லை.

இது போன்ற கொழும்பின் பெரிய கோவில்களின் நிகழ்வுகள் ஆடம்பரமாகவும் அசத்தல்களாகவும் இடம் பெறுவது இன்றைய யுத்த சூழலில் வழமையாகி விட்டது.

வன்னியில் குழந்தைகளுக்குப் பால் மா கிடைக்கவில்லை. நோயாளர்களுக்கு மருந்து இல்லை. மக்களுக்கு உணவு பெற முடியவில்லை. ஆனால் தலைநகரில் திருவிழாக்களும் வீதிவலங்களும் பெருவிழாக்களும் ஆடம்பரமாக நடாத்தப்படுகின்றன. விலை உயர்ந்த பட்டாடைகள் கழுத்துக் கைகால்களில் தங்க நகைகள் தத்தமது அந்தஸ்தை வெளிக்காட்டி நிற்கின்றவாறு பெண்களும் ஆண்களும் நடந்து கொள்கின்றனர்.

இவர்களையும் இந் நிகழ்வுகளையும் பார்க்கும் பேரினவாதிகள் 'தமிழர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை இருக்கிறது? சுதந்திரமாகவும் செழிப்பாகவும் தானே இருக்கிறார்கள்" எனக் கூறிச் சோற்றுப்பதம் காட்ட நிற்கிறார்கள். இவற்றை ஒரு கணம் இன்றைய வடக்கு கிழக்கின் அவல வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும் போது தான் பிரச்சினைகளின் உள்ளார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலுமாகிறது.