தமிழ்ச்செல்வன் பற்றி சிறிரங்கன் எழுதிய கட்டுரையின், எதிர்நிலைத்தன்மை பற்றிய ஒரு (சுய) விமர்சனம். அதேநேரம் எம்மைப் பற்றிய ஒரு பொதுவான, பல கூறு கொண்ட (சுய) விமர்சனத்தை நாம் செய்யவேண்டியுள்ளது.

 

 

சிறிரங்கன் எழுதிய கட்டுரை இதுதான். http://srisagajan.blogspot.com/2007/11/blog-post.html வெறும் சரியான அரசியல் உணர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்ட கட்டுரை இது. சமூக உணர்ச்சியை கருத்தில் கொள்ளத் தவறியது. நேரடியான தொலைபேசி ஊடான எமது கலந்துரையாடலில், அவர் அதை ஏற்றுக்கொண்டார். குறித்த விடையத்தில் விமர்சனத்தின் நோக்கம், சமூக அக்கறை தான். ஆனால் அது முழு நிலைமையையும் பார்க்கத் தவறியது. வெறும் உணர்ச்சிக்கு உந்தப்பட்டு, ஒரு பகுதி மீதான குறிப்பாகியது. வெறும் தனிமனித உணர்ச்சிக்கு உட்பட்டு, பாட்டாளி வர்க்க போராட்டத்துக்கு உதவும் வகையில் அது கற்றுக் கொடுக்கவில்லை. மரணங்களை புலிக்குள் குறுக்கிப் பார்ப்பது, அதை புலிக்குள் மட்டும் பொதுமைப்படுத்துவது என்று பொதுக் கோட்பாட்டுத் தவறை அது செய்கின்றது. பிரதான எதிரியை காணத்தவறிவிட்டது.

 

சிறிரங்கன் தொடர்பாக இதை எழுத்தினாலும், எம்முடன் கருத்தியல் ரீதியாக நிற்கக் கூடிய பலரின் நிலையிது. மிக ஆச்சரியப்படத்தக்க வகையில், இவை அடிக்கடி வெளிப்படுகின்றது. இதனுடனான அரசியல் போராட்டம், என்பது, களைப்பூட்டும் வகையில் தொடருகின்றது. இந்த தவறுக்கான அரசியல் வேர் என்பது, நாம் பாட்டாளி வாக்கம் என்ற அடிப்படையில், எம்மை புடம் போடத் தவறியது தான். இதை பொதுத்தளத்தில் வழிநடத்திய எனது (சுய) விமர்சனமும் உள்ளடங்கியது.

 

பொதுவாக புலியல்லாத அனைத்து தரப்பையும் ஜனநாயகவாதியாக பார்க்கின்றதும், முற்போக்கானதாக பார்க்கின்றதுமான பலர், எம்முடன் எம் கருத்துடன் உள்ளனர். எம்முன்னுள்ள சோகமே இதுதான். இதனால் நாம் கடும் அரசியல் நெருக்கடியை சந்திக்கின்றோம்.

 

புலியல்லாத தளம் என்பது, புலிப் பாசிசத்தின் எதிர்வினையால் உருவாகின்றது. இதனடிப்படையில் தான் நாம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான போக்குகளை ஒரே தளத்தில் சந்திக்கின்றோம். எமது சோகம் உண்மையில், பாட்டாளி வர்க்க புரட்சியை விரும்புபவனும், ஏகாதிபத்தியத்துக்காக இயங்குபவனும் புலியல்லாத ஒரே தளத்தில், ஒன்றாக இயங்குவது தான், இது திரிபின் பிரதான அடிப்படையாகி விடுகின்றது. இதை கோடு பிரித்து இயங்குவது என்பது, பாட்டாளி வர்க்கமாக தன்னை அடையாளம் காண்கின்ற ஒவ்வொரு நிலையிலும் தான் சாத்தியமானது.

 

இது இல்லாத பட்சத்தில், புலியை எதிரியாக ஒரு தலைப்பட்சமாக மிகைப்படுத்தி பார்ப்பது என்ற அபாயம், இயல்பாகத் தோன்றுகின்றது. இலங்கையின் முதலாவது எதிரி அரசு என்பதை, எமது சிந்தனை முறையே மறுதலிக்கத் தொடங்குகின்றது. பிரதான எதிரியின் எடுபிடிகளும் புலியல்லாத தளத்தில் ஆதிக்கம் வகிப்பதை, வேறுபிரித்துப் பார்க்கத் தவறுகின்ற அரசியல் போக்கு எம்மத்தியில் இயல்பாக காணப்படுகின்றது. இதை புரிந்து கொள்ளும் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாடு என்பது, இல்லை என்பதே, அரசியல் சிதைவின் உட்கூறாகும். நாம் எம்மை (சுய) விமர்சனம் செய்தேயாக வேண்டும்.

 

புலியில் பெரும்பான்மையோர் சமூகத்தின் பால் ஏதோ அக்கறையுள்ளவர்கள். புலியல்லாத புலியெதிர்ப்பில் சிறுபகுதியே இப்படி உள்ளது. இது மிக நுட்பமானது, ஆனால் இதுவே உண்மை. ஆனால் பொதுவாக புலியல்லாத தளத்தில் எம்முடன் உள்ளோர் கூட, எதிர்மறையில் புரிந்துள்ளனர்.

 

இப்படி நாம் சந்திக்கின்ற எதிர்வினைகள், நெருக்கடிகளை உதாரணத்துடன் பார்ப்போம். நாம் ஒரு விமர்சனத்தை செய்யும் போது, அக்கட்டுரையின் இணைப்பைக் கொடுக்கின்றோம். இதை எம்மத்தியில் உள்ளவர்கள் தவறு என்கின்றனர். பிற்போக்குக் கருத்துத்தளத்தை பார்வையிட உதவுவதாக எதிர்க்கின்றனர். இதை மறுத்து நாம் போராட வேண்டியுள்ளது. விமர்சனம் முறையில் நாம் மட்டும் தான், இந்த ஜனநாயக வழிமுறையைக் கையாளுகின்றோம் என்பது உண்மைதான். மற்றவர்கள் செய்யாத விடையத்தை வைத்துக்கொண்டு, எம்மீது இது பற்றி குற்றச்சாட்டாக மாறுகின்றது. எதிரிவர்க்கத்தின் ஜனநாயக விரோதத்தை உள்வாங்கி, அதை செய்யக் கோருகின்ற கோட்பாடு இது. கருத்து விவாதத்தை நாம் மட்டும் தான் நடத்துகின்றோம், என்பதைக் காண்பதில்லை. கருத்துவிவாதத்தில் கருத்தைப் படிக்கும்போது, மறுகருத்தை முழுமையாக புரிந்து உள்வாங்கும் சுயவாற்றல் தான், சமூகத்துக்கு மிக முக்கியமானது. கருத்துத் திணிப்பை அல்ல, தெளிவு அவசியமானது. எதிர்தரப்பை அரசியல் ரீதியாக உள்வாங்கி, அதை புரிந்து கொண்டு, எதிர்வினையாற்றுவதும் தான் சரியானது.

 

இது போன்று சோபாசக்தியின் இணையத்துக்கான இணைப்பும், அவரின் இணைய கட்டுரைகள் சிலவற்றை மறுபிரசுரம் செய்வதும் கூட இரண்டு திரிபை உருவாக்குகின்றது.

 

1. அந்த இணையத்தை எம் கருத்து நிலைக்கு ஏற்புடையதாக பார்க்கின்ற வழிபாட்டுக் கண்ணோட்டம்.

 

2. பிழையான ஒன்றுடன் நாம் எம்மை அறிமுகப்படுத்துவதாக கருதுகின்ற போக்கு. சோபாசக்தியின் தனிமனித நடத்தைகள், கோட்பாடற்று எதிரியுடன் உள்ள அரசியல் உறவு முறைகள் பலவற்றை முன் வைக்கின்றனர்.

 

இந்த இரண்டுமே தவறான போக்கு. சோபாசக்தி எமது இணையத்துக்கு இணைப்பைக் கூட கொடுத்தது கிடையாது தான். எனக்கு கல்வெட்டு வெளியிட்டவர் தான். சமூகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூட, அவரின் இணையம் பிரசுரிக்கின்றது. இவ்வளவு இருந்தும் நாம் அவர்களுடன் இணங்கி நிற்பது, அவரிடம் காணப்படும் மக்கள் சார்பான குறைந்தபட்ச கருத்தை ஊக்குவிக்கும் எல்லைக்குள் தான். வேறு எந்த நோக்கமும், இதற்கு வெளியில் கிடையாது. சமூகம் பற்றிய அக்கறையுள்ள எந்த சிறு முயற்சியையும், நாம் எதிர் மனப்பாங்கில் அணுகமுடியாது. அவர்கள் எமக்கு எதிராக வேலை செய்தாலும், நாம் அதைச் செய்ய முடியாது. இந்த வகையில் தான், நாம் கூட்டங்களுக்கு செல்லுகின்றோம். அங்கு அதை உணர்த்த முனைகின்றோம். சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒவ்வொருவரையம் நெருங்க முனைகின்றோம்.

 

மற்றொரு உதாரணம். லண்டன் "தேசம் " பத:திரிகையை எடுக்கலாம். எமக்கு எதிராக அவதூறு கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. தனிமனித குற்றம் காணவிழைவது முனைப்பாகியுள்ளது. ஆனால் எமது இணையத்தில் ஒரேயொரு இணைய இணைப்பு அவர்களுடையதே. அவர்கள் புலி மற்றும் புலிnதிர்ப்பு அணியுடன் அரசியல் உறவுகளை கொண்ட நிலையிலும், நாம் அதில் காணப்பட்ட சரியான அம்சங்களின் அடிப்படையில் அணுகுகிறோம். அரசியலுக்கு வெளியில் திட்டமிட்ட தனிமனித தாக்குதலாக, அவதூறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நிலைக்குள் அவர்கள் இயங்கத் தொடங்கியுள்ளனர். தேசம் பற்றிய தனியான விவாதத்தின் தேவையை, அண்மைய அவதூறுகளின் நோக்கம் ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி எம்முடன் இல்லாத நபர்களின் கருத்துகள் மீதான அணுகுமுறை என்பது, அவர்கள் எந்த வகையில் மக்களுடன் நெருங்கி வருகின்றார்களா என்பதை அடிப்படையாக கொண்டது. அவர்கள் தோழர்களாகி விடுவதில்லை, தோழர்களாக்க முனைகின்றோம், முடியாவிட்டால் எதிரியின் பக்கம் செல்வதை தடுக்க முனைகின்றோம்.

 

எம் மத்தியில் உள்ள திரிபுகள், தவறான கண்ணோட்டங்கள் பல. எமது சிந்தனை முறையில் புலியல்லாத புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தர்க்கங்கள் வாதங்கள் எம்மை ஆக்கிரமித்துவிடுகின்றது. அதுவே எமது மாற்று சிந்தனை முறையாகி விடுகின்றது. எதிரியை இனம் காண மறுக்கின்றது. எதிரியை மிகையாக ஒரு தலைபட்சமாக்குகின்றது. இது எம் மத்தியில் உள்ள சிந்தனை முறையை, முழுமையாக ஆக்கிரமித்து நிற்கின்றது.

 

உதாரணமாக கரும்புலிகள் கொல்லப்பட்டதை, புலிகளின் பலிகொடுப்பாக பார்க்கின்ற சிந்தனை என்பது, எந்த வகையில் புலியெதிர்ப்பின் சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டது. வேறுவிதமாக இதை கேட்கலாம்? புலியெதிர்ப்பு சிந்தனை முறை, எந்த வகையில், அரசு மற்றும் ஏகாதிபத்திய முறையில் இருந்து வேறுபட்டது.

 

இந்த எல்லைக்குள் எத்தனை விதமான கருத்துகள். சொல்லுங்கள் தோழர்களே. நாங்கள் ஒரே தளத்தில், சிலவேளைகளில் எல்லோரும் ஒரே சிந்தனை முறையில் உள்ளோம். உண்மையில் நாங்கள் எமக்கான ஒரு சரியான சிந்தனை முறையை உருவாக்கவில்லை. புலி அல்லது புலியெதிர்ப்பு சிந்தனை முறைக்குள் நாம் நிற்கின்றோம். துயரமான உண்மை. நாம் எம் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் பகுத்தாய முடிவதில்லை. வெறும் இந்த இரண்டு தரப்பு உணாச்சிக்குள்ளும் பலியாகின்றோம.

 

புலியல்லாத தரப்பை ஜனநாயகவாதியாக பொதுமைப்படுத்துவது,. அத்துடன் அதை முற்போக்காக பார்க்கின்றோம். ஆனால் உண்மையில் அவர்களின் நடைமுறைகள் தான், எம்மை அவர்களில் இருந்து விலக வைக்கின்றது. அவர்களின் அரசியலல்ல. எனது போராட்டமே இதற்குள் தான் நடத்தப்படுகின்றது. உண்மையில் எ(ன)மது கருத்துப் பலம் என்பது கருத்தால் அல்ல, இந்த இடைவெளியில் தாங்கி நிற்பதை நாம் சுயவிமாசனத்துடன் நாம்(ன்) ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இலகுவாக இதை புரிய, இரயாகரனின் தனிப்பட்ட நேர்மை, இதில் இதைப் பாதுகாக்கின்றது. இது தவறான அரசியல். தனிமனித வழிபாட்டு அரசியல். இன்றைய நிலையில், எனது தனிப்பட்ட நேர்மை சிதைந்தால், இந்த கருத்துப் போக்கு வெற்றிடமாகிவிடும் அவலம். கருத்தால் மோத முடியாத எதிரிவர்க்கம், இதைச் செய்யத்தான் இரயாகரனை வலைபோட்டு தேடுகின்றனர். இப்படி உண்மையில் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையை உள்வாங்கிக கொள்ளாமை என்பதே, எம் மத்தியில் உள்ளது.

 

ஜனநாயகவாதி, முற்போக்குவாதி யார் என்றால், புலிக்கு எதிரானவராக இருந்தால் போதும் என்ற தவறான கண்ணோட்டம், எம்மத்தியிலும் ஆழமாகவுள்ளது. இதன் விளைவு எமக்கு எதிரானதாக மாறுகின்றது. புலியெதிர்ப்பு மீதான விமர்சனத்தை, அதன் ஏகாதிபத்திய அரசு சார்புப் போக்கை அம்பலப்படுத்தும் போது, அவதூறாக அவசியமற்றதாக காட்டுகின்ற அரசியல் போக்கை எம் மத்தியில் சந்திக்கின்றோம். ஏன் தனிமைப்படுவதாக காண்பது கூட நிகழ்கின்றது. இப்படி சமரசவாதமும், கடும் தீவிர எதிர்ப்புவாதமும் எம்மத்தியில் உள்ளது. கோட்பாட்டு ரீதியாக வலது திரிபும் இடது திரிபும் உள்ளது.

 

எமது அணியின் பொதுத்தளம் ஒன்றாக இருப்பதால், புலி பற்றிய ஒருதலைப்பட்சமான, மிகைப்படுத்திய கருத்துகளாக மாறுகின்றது. புலி தான் எதிரி, புலியல்லாதவர்கள் எதிரியல்ல என்ற நிலை கட்டமைக்கப்படுகின்றது. இது பொதுத்தளத்தில் நடுநிலைவாதிகளை உருவாக்குகின்றது. பாட்டாளி வர்க்கத்துடனும் புலியெதிர்ப்பு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் நடுநிலைக் கோட்பாட்டை உருவாக்குகின்றது. இன்னுமொரு தளத்தில் இதுவே பாட்டாளி வர்க்கத்துக்கும் புலிப்பாசிட்டுகளுக்கும் இடையில் நிற்கின்ற, சமநிலைக் கோட்பாடு உருவாகின்றது. எமது சமூக அமைப்பு எங்கும் இது புரையோடிக் காணப்படுகின்றது. எமது சிந்தனை முறையில் இதன் தாக்கம் பலமானது.

 

இப்படி உருவாகும் ஒரு தலைப்பட்சமான சிந்தனை, பாட்டாளி வர்க்கத்துக்கு சேவை செய்வதில்லை. புலியல்லாத தளத்தில் நின்று, நிகழ்ச்சிகளை ஆராய்கின்ற போது என்ன நடக்கின்றது. வெறும் புலிகள் என்ற நோக்கில் இருந்து மட்டும், அதன் ஊடாக எதிராக எதிர்வினையாற்றுகின்ற அரசியல் மிக மிகத் தவறானது. எம்மைச் சுற்றிப் புலிகள், புலியெதிர்ப்பு என்ற இரண்டு ஊடகவியல் தகவல்களும், தத்தம் பிரச்சாரத்தை எம்மீது திணிக்கின்றது.

 

இதை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது எதிர்வினை என்பது வெறும் உணர்ச்சிக்கு உட்பட்டதாக அமைந்து விடுகின்றது. இதைத்தான் சிறிரங்கனின் கட்டுரை செய்துள்ளது. எம்முடன் உள்ள சிலர், அந்தக் கட்டுரை படிக்காத நிலையில் கூட இதைப் பிரதிபலித்தனர். ஆச்சரியப்பபடத்தக்கதான ஒற்றுமை, தவறான அரசியலில். எதை முறியடிக்க நாம் போராடுகின்றோமோ, அதை நாம் பிரதிபலிக்கின்ற எழுதுகின்ற அவலம். புலியெதிர்ப்பில் இருந்து, நாம் எப்படி வேறுபடுகின்றோம். அவர்கள் கூறுவது போல், அப்படி ஒன்றும் இல்லையா? பாட்டாளி வர்க்க நிலைப்பாடு எதுவும் கிடையாதா?

 

சிறிரங்கனின் கட்டுரையின் உள்ளடகத்தின் சாரம் ஒற்றைப் பரிணாமத்தில் சரியாக இருந்த போதும் கூட, அது முழுமையானதல்ல. எதிரியை கணக்கில் எடுக்கத் தவறியது. புலியெதிர்ப்பைக் கணக்கில் எடுக்கத் தவறியது. இணையத்தில் ஈ அடித்து ஆத்திரமூட்டும் சிலரை குறியாக வைத்து எதிhவினையாற்றுவது, மொத்த சமூகத்துக்கும் பொருந்தாது. அதுவே மிகமிகக் குறுகிய வட்டம்.

 

இந்தக் கட்டுரை தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறானவர்கள் மத்தியில் வைக்கப்பட்டது. இந்த மரணத்தை அரசு எப்படி பார்க்கின்றது. புலியெதிர்ப்பு எப்படி பார்க்கின்றது. என்ற எந்த ஆய்வும், இதற்குள் உள்ளாக்கப்படாமை வெளிப்படையானது. ஒரு அரசியல் தொடர்ச்சியில் உள்ள இயல்பான பொறுப்பணர்வு கொண்ட கூட்டு செயல்பாட்டின் பொதுத்தளத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தனிமனித உணர்ச்சி முன்னிலைப்படுத்தப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் கூட்டு செயற்பாட்டுக்குரிய உணர்வு நிலை, அந்தக் கணம் மறக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துக்கு இதனால் என்ன நன்மை. இந்த வகையில் இந்த போக்குகள் மீதான (சுய) விமர்சனம் அவசியமானது. இதை பலர் பல தளத்தில் கையாளுகின்றனர்.

 

கரும்புலிகள் 21 பேர் கொல்லப்பட்ட நிகழ்வை, வெறும் பலிகொடுப்பாக காட்டுகின்ற வாதம் வடிவம் தவறானது. இதை புலியெதிர்ப்பு கூறுகின்றது. இதையே நாம் சொல்வதாக இருந்தால், எம்மால் எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. பாட்டாளி வர்க்க சிந்தனையை உணர்வுபூர்வமாக உள்வாங்காமையால், அதை இலகுவாக பலிகொடுப்பாக மறுக்கின்றது. அதில் ஒரு தியாகம் உண்டு எனபதை, ஏன் பார்க்க மறுக்கின்றது. நாங்கள் அந்த தியாகத்துக்கு தயாராக உணர்வுபூர்வமாக இல்லை எனபதனாலா, அதை வெறும் பலிகொடுப்பாக காட்டி மறுக்க முடிகின்றது.

 

இதன் பின் உள்ள புலிகளின் அரசியலை விமர்சிக்கலாம், தியாகத்தையோ அந்த உணர்வைவோ அல்ல. புலியெதிர்ப்பு போராட்டத்தை மறுத்து, பொறுக்கித் தின்பதை கற்றுக் கொடுக்கின்றது. தியாகத்தையோ அல்லது சமூக உணர்வையோ அல்ல. நாம், நாங்கள் எங்கே எப்படி நிற்கின்றோம்.

 

தாக்குதலை, தாக்குதலை ஒட்டிய வடிவத்தை எப்படி? நாம் விமர்சிக்க முடியும். பாட்டாளி வர்க்கம் இந்த இடத்தில் இருந்தால், எதிரிக்கு எதிராக இது போன்ற தாக்குதலை செய்யாதா? புலிகளின் அரசியலை விமர்சிக்க முடியும். புலிகள் இதன் மூலம் கொடுக்கும், மக்களுக்கு எதிரான இதன் விளைவுகளை, நாம் விமர்சிக்க முடியும். தாக்குதல் வடிவத்தை, தியாகத்தை எப்படி விமர்சிக்க முடியும். அரசு நடத்துகின்ற காட்டுமிராண்டித்தனமான விடையங்களை, ஏன் நாம் தவிர்த்துவிடுகின்றோம். அதை ஆதரிக்கின்ற ஒரு உள் உணர்வோட்டம், புலியெதிர்ப்பு கோட்பாடாக மாறிவிட்டதை அல்லவா எடுத்தியம்புகின்றது. ஆம் புலிகளின் நடத்தையாலும், புலியெதிர்ப்பின் வலைக்குள் நாம் விழுங்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.

 

தாக்குதல்கள் என்பது, எந்தப் போராட்டத்திலும் உள்ளவை தானே. சிங்களப் படையில் இறப்பவர்கள், பலி கொடுப்பில்லையா? யார் அழுகின்றனர்? புலியெதிர்ப்பு இதைப் பேசுவதில்லை: அவர்கள் உயிர் இல்லையா! புலிகள் மட்டுமா சுயநலம் கொண்டவர்கள்? சிங்கள அரசு இல்லையா? இதை நாம் ஏன் குறைந்தபட்சம், ஒரு தட்டில் கூட போடத் தவறுகின்Nறாம்.

 

ஒரு போராட்டத்தில் இழப்புகள் இயல்பானது தானே. அதை புலிகள் செய்தால் மட்டும் தவறு என்பது, அப்படிக் காட்டுவது புலியெதிர்ப்பு வாதத்தின் அடிப்படையிலானவை. இதே இடத்தில் பாட்டாளி வாக்கம் இருந்தால் இழப்பு இருக்காதா? இதை புரிந்து கொண்டு விமர்சனத்தை கட்டமைப்பது அவசியமானது. பாட்டாளி வர்க்கம் போராட்டம் நடைபெற்றால், இதுபோன்ற இழப்புகள் இருக்குமா? இருக்காதா? நிச்சயம் இருக்கும். இழப்புகள் எந்த வர்க்கத்துக்கு, எப்படி நன்மை பயக்கின்றது என்ற கேள்விகளில் இருந்து, இதை நாம் ஆராயக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

தமிழ்செல்வன் கொல்லப்பட்டதையும், அநுராதபுரத்தில் கொல்லப்பட்ட நிகழ்வையும் ஒரே தட்டில் ஒன்றாக வைத்துப் பார்ப்பது அரசியல் தவறாகும். அரசியல் ரீதியாக புலியெதிர்ப்பின் எல்லைக்குள் இது சரிந்து வீழ்வதாகும். உண்மையில் இதை புலியல்லாத பொதுத்தளத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். புலி என்ற எல்லைக்குள் வைத்து குறுக்கி மதிப்பிடுவது, புலியெதிர்ப்பின் உள்ளடக்கமாகும்.

 

இந்தச் சம்பவத்தை எடுத்தால் ஒன்று ஒரு தாக்குதலுக்கு சென்ற போது கொல்லப்பட்டவர்கள். மற்றது எதிர்தரப்பு தாக்குதலின் போது கொல்லப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல. இந்த மரணத்தை மதிப்பிடும் போது, இரண்டையும் ஒன்றாக்குவது தவறானது. ஒன்றில் மரணம் எதிர்பார்க்கப்படுவது. இரண்டாவது எதிர்பாராது நடப்பது. இதன் உணர்வலைகள் வேறுபட்டது. ஒன்றாக அதை சிறுமைப்படுத்துவதும் வரி, காட்ட முனைவது, உண்மையான அதன் பின்னுள்ள தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும். இங்கு விமர்சனம் உண்டு, ஆனால் தியாகத்தை சரியாக மதிப்பிட வேண்டும். மனித தியாகத்தைக் கொச்சைப்படுத்துகின்ற புலியெதிர்ப்புவாதத்தின் இழிநிலைக்கு நாங்கள சரிவது என்பது அனுமதிக்க முடியாது.

 

தியாகங்கள் தவறான அரசியல் சார்ந்து இருந்தாலும் கூட, அது மதிக்கப்பட வேணடும். தவறான தியாகத்தின் பின்னுள்ள அரசியல் அல்லவா விமர்சிக்கப்பட வேண்டும். தியாகத்துக்கு பதில் பொறுக்கித் தின்னுகின்ற நரிக் கூட்டத்தின் ஜனநாயகமும் அதன் முற்போக்கும் கேவலமானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாது. நாங்கள் கோட்பாட்டு ரீதியாக அந்த நிலைக்கு சரிந்து விடுகின்றோம் என்பதே அர்த்தம்.

 

தியாகங்கள் எந்த போராட்டத்திலும் நடப்பவை தான். இதை புலியெதிர்ப்பு போல் நாங்கள் மறுக்க முடியுமா? எங்கள் அரசியல் என்ன? தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு போன்று, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் போது நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை. இதை பெர்துமைப்படுத்த முடியுமா? முடியாது.

 

அடுத்து தலைமையையும் அணிகளையும் சமப்படுத்தி பார்க்கின்ற கோட்பாடு. மலிவான அரசியல் நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. எப்படியும் கொச்சைப்படுத்திவிட வேண்டும் என்ற புலியெதிர்ப்பு நிலை, இதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. ஒரு போராட்டத்தின் தலைமைக்கும் அணிகளுக்கும் வேறுபாடு உண்டு. இது எதிர்ப்புரட்சியில் சரி, புரட்சிகர போராட்டத்திலும் கூட உள்ளாhந்த அம்சம் உண்டு. எதிர்ப்புரட்சிகர அணியின் தலைமையையும், அணிகளையும் ஒன்றாக வைத்து அணுகுவது தவறானது. அவர்களைச் சரியான பாதைக்கு வென்று எடுத்தல் என்பதில், ஒரே அணுகுமுறை என்பது எவ்வளவு பாதகமானது. சமப்படுத்தல் என்பது, எந்த ஆய்வு முறையிலும் தவறானது. தலைமையின் முக்கியத்துவம், அதுவும் போராட்டத்தில் மிக முக்கியமானது.

 

அரசியலை முன்வைக்காத புலியெதிர்ப்பின் சாரம் எவ்வளவு தான் சரியானதாக இருந்தாலும் கூட, அது தவறானது தான். கோயிலின் முன் கூடி நிற்கும் மக்கள் முன், கடவுள் என்பது பொய், நீங்கள் முட்டாள்கள் என்று சொன்னால், என்ன நடக்கும். பைத்தியம் என்பார்கள். இதையா நாங்கள் செய்யப் போகின்றோம் ?

 

சமுதாயத்தின் அவலத்தை காண்கின்றோம். அதன் அடிமைத்தனத்தைக் காண்கின்றோம். இதனால் நாம் எப்படியும் செயல்பட்டு விட முடியுமா? முடியாது. உண்மையாக இதை மாற்ற விரும்புகின்றோமா? இங்கு அற்ப மனவுணாச்சிக்கு இடமில்லை. எதையும், சமூகத்தில் இருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மாற்றத்தை அடைய குறுக்கு வழி கிடையாது. தனமனித உணர்ச்சியால் அதை சாதிக்க முடியாது. இதற்குள் நின்றால், மொத்த போராட்டத்தையே நாசம் செய்கின்றோம் என்று அர்த்தம்.

 

நாங்கள் பாட்டாளி வர்க்கமா? இதை நாங்கள் உணருகின்றோமா? கருத்துக்களை, சிந்தனையை பாட்டாளி வர்க்க நிலையில் நின்று செய்கின்றோமா?

 

தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள், அவதூறுகள், இழிவாடல்கள் பல தளத்தில் நடக்கின்றது. இதையேவா நாம், கருப் பொருளாக கொள்ளப் போகின்றோம்? எமது போராட்டம் மக்களுக்கானது என்பதை மறக்கலாமா? ஆத்திரமூட்டலுக்குரிய உணர்ச்சிகளுக்கு பதிலளித்துக் கொண்டு இருக்கப் போகின்றோமா?.

 

நான் என்னை ஒரு வர்க்கமாக உணர முடியவில்லையே ஏன்? பாட்டாளி வர்க்க உணர்வில், நாம் நடைமுறையில் போராடுகின்றோம் என்றால், நிகழ்ச்சிகளை எப்படி எதிர் கொள்வோம்? உண்மையில் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருக்கவில்லை என்பது (சுய)விமர்சனத்துக்குரியது.

 

கற்றுக்கொடுத்தல் மட்டுமா இல்லை, நாம் முதலில் கற்றுக்கொள்வதும் அவசியம். சமூகத்தினை ஆழமாக நுட்பமாக புரிந்து கொள்வது அவசியம். நாங்கள் சரியான கருத்துள்ளவராக இருக்கலாம். அதானல் சமூகத்தை கற்றுவிட்டோம் என்பதல்ல.

 

பாருங்கள் தமிழ்ச்செல்வனின் மரணத்தை சமூகம் புரிந்து கொண்டது எப்படி? நாங்கள் புரிந்து கொண்ட வடிவிலா? இல்லை. நிச்சயமாக இல்லை. கட்டமைக்கும் பிரச்சாரங்கள் முதல் பொய்ப் பித்தலாட்டங்கள் என்று எப்படி எந்த பிம்பத்தை கட்டியிருந்தாலும், சமூகம் அதை எப்படி பார்க்கின்றது என்பது முக்கியமானது. இங்கு எமது அறிவு சார்ந்த உணர்ச்சிக்கும் இடமில்லை. பல விடையத்தில் பல தளத்தில் இதை நாம் உணருகின்றோம். இதை (சுய) விமர்சனம் செய்தேயாக வேண்டும்.

 

புலியிசத்தை தமிழ் தேசியமாக, தேசிய விடுதலைப் போராட்டமாக வரிந்து கொண்டு திணிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் நடக்கின்ற மரணத்தை, எழுந்தமானமாக காட்டமுடியாது. சம்பவங்கள் கூட ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. அப்படித் தான் பரட்சியும். இங்கு உணர்ச்சிக்கு, ஆவேசத்துக்கு இடமில்லை.

 

தமிழ்செல்வன் பற்றிய எமது மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் இருப்பது கூட அரசியல் தான். சொல்வது மட்டுமா அரசியல்? தமிழ்ச்செல்வனை அரசியல் தலைவராக அரசியல் ரீதியாக புலிகளால் எப்படி காட்ட முடியவில்லையோ, அதே போல் அரசியல் ரீதியாக நாம் காட்டத் தவறுவது, எமது சிந்தனை முறை அப்படி இல்லாமல் இருப்பது (சுய) விமர்சனத்தக்கு உட்பட்டது.

 

இது எமது கருத்து சார்பின் தோல்வி. எமது கருத்து சரி என்ற நம்புகின்ற ஒவ்வொருவரும், அதை கருத்தியல் ரீதியாக அணுகுவது என்பது ஒரு சிந்தனை முறையாக இருக்க வேண்டும். இதை நாம் வெல்லத் தவறினால், நாம் (பாட்டாளி வர்க்கம்) தோற்கடிக்கப்படுவோம்.

 

சமூகப் பொறுப்புணர்வு என்பது கூட்டுப் பொறுப்புணர்வு. இதை யாரும் மறக்க முடியாது. என்னிடம் கேட்பது, என்னை மையப்படுத்துவது தவறானது. பாட்டாளி வர்க்க சிந்தனையை அடிப்படையாக கொள்ள மறுப்பதன் விளைவு இது. இதை நாம் (சுய) விமர்சனத்துக்கு உள்ளாக்கியாக வேண்டும்.

 

நாம் சந்திக்கவுள்ள புதிய நெருக்கடிகளுக்கு இது அவசியம். எமது போராட்டத்தின் வீச்சு, தவிர்க்க முடியாது மார்க்சிய வேடத்தில் பலர் அணுகுவதை துரிதமாக்கியுள்ளது. புலி மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஒரு பகுதி, மார்க்சிய மற்றும் அரசியல் முகத்துடன் களத்தில் மோதுவதை துரிதமாகியுள்ளது. எமது போராட்டத்தின் போக்கில் இருந்து கோட்பாட்டு ரீதியாக தப்பிப்பிழைக்க, அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது. நுட்பமான இந்த மக்கள் விரோதப் போக்கை எதிர்கொள்ளும் நாம், எமது போராட்டத்தின் அடுத்தகட்டத்தை வெல்ல எம்மை (சுய) விமர்சனத்துக்குள்ளாக்கவேண்டும்.

 

பி.இரயாகரன்
04.11.2004