Language Selection

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

அதிகாரத்தின் மொழியை நிர்வாணமாக்குவது என்றால், அதை வைத்து போராடுவதே மக்களின் மொழி. தன் சக மனிதனுக்கு நடக்கும் அவலத்தைக் கண்டு கொதிக்காத மனிதம், மனிதமல்ல. சிங்கள  பேரினவாத இராணுவம் தமிழ் பெண் என்பதாலும், தனக்கு எதிராக போராடியது என்பதாலும், ஒரு பெண் என்பதாலும், பெண்களையே நிர்வாணப்படுத்தி நடத்துகின்ற இழிவான மலிவான பாலியல் வக்கிரத்தையும் அது வெளிப்படுத்தும் அதிகார மொழியையும், மக்களுக்கு தெரியாத வகையில் மூடிமறைக்க முடியுமா!? இந்தக் கேடுகெட்ட நடத்தையை மக்கள் பார்க்காமல், யார் தான் பார்க்க முடியும்? அதையாவது சொல்லுங்கள்! சரி, ஏன் மக்கள் பார்க்கக் கூடாது! அதையாவது சொல்லுங்கள்.   

 

நிர்வாணமான உடல் என்றால், அது ஆபாசமா!? எம் உடல் எமக்கு ஆபாசமானதா? அதை ஆபாசமாக்கி ரசிப்பவனும், மக்களும் ஒன்றா? ஆபாசமாக காண்பதும், காட்டுவதும், இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் சிந்தனை முறையாகும். இப்படி உடலைப் பார்ப்பவன் சிந்திப்பவன்தான், ஒரு பெண்ணுக்கு நடந்த காட்சியை ஆபாசமாக காண்கின்றான், காட்ட முனைகின்றான். நடந்த கொடுமையை விட, இது அவனுக்கு துருத்திக்கொண்டு நிற்கின்றது. 

 

பெரியாரையே எடுத்துக்கொள்ளலாம்;. பெரியார் தன் வரலாற்றில் நிர்வாண சங்கத்துடன் சேர்ந்து முற்றாக நிர்வாணமாக நிற்பதைக் கூட, நாம் இன்று படமாக பார்க்க முடியும். இதில் எந்த ஆபாசமும் இருப்பதில்லை. போலி பெரியாரியம் பேசி, போலி தேசியத்தைக் கூச்சலிடும் நேர்மை எதுவுமற்ற கும்பல், இன்று நிர்வாண உடல் ஆபாசமானதாக கூறி நடந்த குற்றத்தை மூடிமறைத்தபடி கீச்சிடுகின்றனர்

2ம் உலக யுத்தத்தின் பின் நாசிகள் கட்டமைத்த பாசிசம், யூத ஆண்களையும் - பெண்களையும் நிர்வாணமாக்கி வரிசையில் நிறுத்திக் கொன்றது. இவை இன்று வீடியோ ஆவணமாக உள்ளது. இதையெல்லாம் ஆபாச கண்ணோட்டத்தில் தான் மக்கள் பார்க்கின்றனரா!? சொல்லுங்கள். ஈராக்கில் பெண்களை ஆண்களையும் நிர்வாணமாக்கி வதைத்த காட்சிகள் உட்பட அவர்கள் புணர்ந்தவை அனைத்தும், இன்று ஆவணமாக உள்ளது. இதைப் பார்த்தவர்கள், இதற்கு எதிராக போராடியவர்கள் ஆபாசமாகவா பார்த்தார்கள். சொல்லுங்கள். இப்படி மனித வரலாற்றில் பல. இதை யாரும் மூடிமறைக்கவில்லை. இயற்கையான பாலியல் உறுப்புக்கு, யாரும் வண்ணம் பூசி மறைக்கவில்லை.

 

ஆனால் எம்மவர் இதை மறைக்கக் கோருவதன் மூலம், இந்த செய்தியை மூடிமறைக்கின்றனர். என்ன புனிதம். இதை மறைக்க உப்புச்சப்பற்ற காரணங்கள். உற்றார் உறவினர் பெயரில் கூட மூன்றாம் தரப்பு வாதங்கள்.

 

தமிழ் சினிமாவும், தமிழ் ஊடகவியலும் பெண்ணை நிர்வாணமாக்காமலே பெண் அங்கங்களை ஆபாசமாக்கி காட்டும் காட்சிகள் செய்திகளை ரசிக்கும் பக்தகோடிகள் அதை எதிர்த்துப் போராடுவதில்லை. இவர்கள் பேரினவாத இராணுவம் பெண்ணை நிர்வாணமாக்கி குதறுவதை ஆபாசமாக்க காட்டி, அதை மூடிமறைக்கக் கோருவதுதான் வேடிக்கையாகின்றது. இப்படி கூறுபவன் இதை தன் கண்கொண்டு ஆபாசமாக பார்ப்பது, இதில் இருந்து வெளிப்படுகின்றது. இப்படித்தான் மக்களும் பார்ப்பார்கள் என்பது, அவர்களின் மக்கள் விரோத பாசிச கண்ணோட்டமாகும். 

 

பேரினவாத இராணுவம் கிழக்கில் கோணேஸ்;வரியை கற்பழித்த பின் அதை மறைக்க பெண் உறுப்பில் கிரனைட்டை வைத்து வெடிக்க வைத்தபோது, சந்திரிக்கா அம்மையார் அது வெளியில் இருந்து புலிகள் வீசிய செல் என்றார். கிருசாந்தியை கற்பழித்த பின் கொன்று புதைத்தது இந்த மண்ணில் தான் நிகழ்ந்தது. மணியம் தோட்டத்தில் இயக்கத்தால் புதைக்கப்பட்ட பல பெண்களுக்கும் இது நடந்தது. கதிர்காமத்து அழகியை ஜே.வி.பி என்று குற்றம் சாட்டிய இராணுவம், நிர்வாணமாக்கி வீதிவீதியாக இழுத்துச்சென்று கற்பழித்து கொன்றதும் இலங்கையில் நிகழ்ந்தது. ஜே.வி.பி பெயரில் கொன்ற இளம் பெண்களின் உடல்கள் ஆற்றில் நிர்வாணமாகத்தான் மிதந்து வந்தது. இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள். இவை அனைத்தும் வெளியிட எம்முன் ஆவணமாகவில்லை. அவை அனைத்தும், இந்த கொடூரத்தை செய்தவர்கள் இல்லாமல் ஆக்கினர்.

 

விடுதலையில் பெயரில் இயக்கங்கள் நடத்தியவையோ பற்பல. கருணா பிரிந்தபோது, கருணாவுடன் நின்ற பெண்களை கிழக்கில் நிர்வாணமாக்கி சுடு மணலில் உருளவிட்டு கொன்றதாக தகவல். (ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை) இதை செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல, எந்தத் தார்மீக அரசியல் பண்பும் புலிகளிடம் கிடையாது.

 

என்னைக் கைது செய்த போது, அரசும்; புலியும் முதலில் செய்தது நிர்வாணப்படுத்தல் தான். விடுதலைப் புலிகள் கட்டாய பயிற்சிக்கு கடத்திசென்ற ஆணையும் பெண்ணையும் தப்பி போகாத வண்ணம், அனைவரையும் நிர்வாணமாக வைத்து புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. புலிகளின் வதைமுகாங்களில் இருந்த அனைவரும் நிர்வாணமாக வைக்கப்பட்டனர்.

 

எங்கும் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தல், அதிகாரத்தின் மொழியாக இருந்துள்ளது. வீதிகளில் அனாதரவாக கொல்லப்படும் உடல்கள் நிர்வாணமாகத்தான் கிடைக்கின்றது. அன்று முதல் இன்று வரை, இராணுவமும் அவர்கள் சார்பான புலியெதிர்ப்பு குழுக்கள் முதல் புலிகள் வரை செய்தவை தான் இவை. வேறு யாருமேயல்ல.

 

இந்த எல்லையில் தான் நாம் வெளியிட்ட காட்சி, அதன் தாக்கம், அது ஏற்படுத்தும் பாதிப்போ எல்லையற்றது. இந்தப் பாசிச கோழைகளின் கோமாளிகளின் கூத்தை நிர்வாணமாக்கியது.

 

எம்மை நோக்கி வந்த விமர்சனத்தில் 'இது உங்கள் சகோதரியின் உடல் என்றால் அதை அப்படியே வெளியிட்டு இருப்பீர்களா?  இது உங்களின் மாபெரும் தவறு. பொறுப்புவாய்ந்த எந்த ஊடகமும் இதைச் செய்யாது. இதை எந்த மனிதனாலும் மன்னிக்க முடியாது."

 

எனது சகோதரியின் உடல் என்றால், இதைவிட அதிக உரிமையுடன் இதைச் செய்வோம். அன்று புலிகள் என்னை நிர்வாணமாக்கிய காட்சி என் கையில் இருப்பின், அதையும் வெளியிட்டே இருப்பேன்;. அவர்கள் என்னை நிர்வாணமாக்கி எடுத்த போட்டோ, அவர்களிடம் உண்டு. அது கிடைத்தால், அதையும் வெளியிடுவோம். 
 
இதில் உடலை ஒளிப்பதற்கு மறைப்பதற்கு என்ன தான் இருக்கின்றது. அவர்கள் செய்தது போல் தான், மக்கள் செய்வார்கள் பார்ப்பார்கள் என்று நாம் கருதவில்லை. இதன் பின்னுள்ள மனிதவிரோத குற்றத்தை மூடிமறைக்க நாம் தயாராகவில்லை. 'பொறுப்புவாய்ந்த எந்த ஊடகமும் இதைச் செய்யாது." என்ற மூடிமறைப்புக்கு முரணான, பொறுப்பு வாய்ந்த எந்த ஊடகமும் இதை அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இதை அவர்கள் செய்யாமல் யார் தான் செய்வது. இதை வெளியிட்டு அம்பலப்படுத்துவதுதான் பொறுப்பு வாய்ந்த ஊடகத்தின் கடமை. தமிழ் மக்களுக்கு நடக்கின்ற கொடுமைகளை எந்த ஊடகவியலும் பேச மறுப்பது போல், நாம் எதையும் மூடிமறைக்க முடியாது.  

 

நாங்கள் மக்களைச் சார்ந்து, இதற்கு நியாயம் கேட்டு நிற்கின்றோம். இது போன்ற செயலுக்கு எதிரான மனித உணர்வை சார்ந்து, இதை அம்பலப்படுத்தி போராட விரும்புகின்றோம். எனவே அனைத்தையும் மக்கள் முன் வைக்கின்றோம்.

 

இதை நாம் வெளியிட்டதற்கு எதிராக 'அடுத்து, உங்களது இணையம் என்பது புலிகளை விமர்சிக்கும் புலிகளுக்கு எதிரான ஒரு இணையம். இதில் முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான கருத்துக்களே வருகின்றது. இந்நிலையில் ஏதோ ஒரு விசயம் அவர்களுக்கு சாதகமாக வரும்போது அதை மீள்பிரசுரம் செய்து உங்களுக்கு ஒரு விளம்பரம் செய்வார்கள் என்றோ செய்யவேண்டும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். இது உங்களின் விளம்பர யுக்தியாகக கூட இருக்கலாம்"

புலிகளை விமர்சிக்கும் புலிகளுக்கு எதிரான ஒரு இணையம் என்பது மட்டுமல்ல எம் இணையம். மாறாக அரசை விமர்சிக்கும் அரசுக்கு எதிரான இணையமும் கூட. இதனால் தான், நாம் மக்கள் விரோத யுத்தத்தை நடத்தும், அனைவருக்கும் எதிரான இணையமாக உள்ளோம். நாங்கள் புலியுடனுமில்லை, அரசுடனுமில்லை. எம் இணையம் மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்தி, மக்களின் நலனை உயர்த்தும் இணையம்.

 

இதனடிப்படையில் புலிகள் இந்த விடையத்தை மூடிமறைக்க முனைந்ததும், முனைகின்றது என்பதையும் நாம் அவர்களின் மக்கள் விரோத நிலையூடாக சுட்டிக்காட்டினோம். அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்ததும், அதற்கு காரணங்களை கண்டுபிடித்ததும் மக்கள் விரோத நிலையில் நின்றுதான். இந்த புலிகள் பேரினவாதத்தின் முரண்பட்ட செய்தியை பிரசுரித்து, மக்களை ஏமாற்றக் கதை சொல்வதற்கு கூட அவர்கள் தயங்கவில்லை. ஆனால் தமிழ் மக்களைச் சார்ந்து நிற்கும் இணையத்தில் வந்ததை பிரசுரிக்கமறுப்பது, அவர்களின் மக்கள் விரோத நிலை தான்.   'ஒரு விசயம் அவர்களுக்கு சாதகமாக வரும்போது அதை மீள்பிரசுரம் செய்து உங்களுக்கு ஒரு விளம்பரம் செய்வார்கள் என்றோ செய்யவேண்டும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்" என நீங்கள் சொல்வது சரி. இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மக்களுக்கு எந்த துன்பம் நடந்தாலும், மக்கள் விரோத புலியின் நலன்களில் நின்றுதான் அவர்கள் சிந்திப்பார்கள். இன்று புலிகள் அழிவதும் இதனால் தான். இந்த அடிப்படையில் தான் நாம் புலிகள் மேலான விமர்சனத்தை தொடர்ச்சியாக செய்கின்றோம். 

 

'இது உங்களின் விளம்பர யுக்தியாகக் கூட இருக்கலாம்" என்ற வாதம், எவ்வளவு பொய்யானது என்பதை வரலாறு உங்களுக்கு காட்டும். விளம்பரம் தேவை என்றால், புலியை நக்கினால் போதும், தலையில் வைத்தே ஆடுவார்கள். நாம் தனித்து போராடுவதும், அதை மக்கள் முன் கொண்டு செல்வதையும் விளம்பரம் என்பது, எப்படி விளம்பரமாகும். அத்துடன் இது நடந்த ஒரு கொடுமையை மூடிமறைக்கும் செயலாகும். 

-----

'புலிகள் மீதான விமர்சனம் சரியா? விமர்சனம் தான் ஒருவனை சரியான வழியில் கொண்டுசெல்லும் இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் தற்போதைய நிலையில் புலிகள் மீது விமர்சனம் தேவையா? மனிதனாகப் பிறந்த எவனும் பிழை விடுவான், இதற்கு புலிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல, அவர்கள் கடவுளும் இல்லை. தமிழரின் இப்போராட்டம் முக்கியகட்டத்தில் இருக்கும் போது இப்படியான விமர்சனம் தேவையா?"

 

இப்படி புலியை விமர்சிக்க வேண்டாம் என்கின்றனர். இந்த வீடியோ காட்சியை நாம் வெளியிட்டதற்கு எதிராக புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகள் இதை இப்ப வெளியிடக் கூடாது என்கின்றனர்.

 

புலிகள் தாம் பிழைவிட்டதாகவும், தவறு செய்துள்ளதாக சொன்னார்களா? எப்போது எங்கே? எதை தவறு என்று சொல்லி, அவர்கள் சுயவிமர்சனம் செய்துள்ளனர்? தவறுகளே போராட்டமாகி, அதை நியாயப்படுத்துவதே தேசியமாகிவிட்ட நிலையில், இன்று அது மக்களால்; வெறுக்கப்பட்ட நிலையில் தான், புலிகள் தானாக அழிகின்றது. மக்களை எப்படி புலிகள் நடத்துகின்றனரோ, அதை விமர்சித்து போராடுவதுதான், எதிரிக்கு எதிராகவும் தமிழ் மக்களை பாதுகாக்கும் ஒரெயொரு போராட்டமாகவும் எம்முன் உள்ளது.

 

ஏன் புலிகள் தமிழ் மக்களைச் சார்ந்து போராட முடிவதில்லை. மக்கள் உரிமைகளை மறுத்தால், யாருக்கு எதற்கு போராட்டம்;? எம் விமர்சனம் மக்கள் நலனை உயர்த்தி, அதனடிப்படையில் புலிகளை விமர்சிக்கின்றோம். மக்கள் என்ன நினைக்கின்றனரோ, அதை செறிவாக்கி விமர்சனமாக்குகின்றோம். இது தான் தமிழ் மக்களின் நலன். இதற்கு வெளியில் தமிழர் நலன் எதுவும் கிடையாது.

 

'தமிழரின் இப்போராட்டம் முக்கிய கட்டத்தில் இருக்கும் போது இப்படியான விமர்சனம் தேவையா?" நாம் இதை திருப்பிக் கேட்கின்றோம். இந்த நெருக்கடியான நிலையில் தொடர்ந்தும் மக்கள் விரோத நிலையை புலிகள் செய்யவேண்டுமா!?

 

மக்களை ஜக்கியப்படுத்தி போராடும் வேலைத்திட்டம் எதுவும் கிடையாது.  மாற்றுக் கருத்தை அங்கீகரிக்கும் அரசியல் நடைமுறை எதுவும் கிடையாது. இதனால் இதற்கு எதிரான விமர்சனம் தான், தமிழ் மக்களைப் பாதுகாக்கும் மாற்றுப்பாதையாகி வருகின்றது. 

 

'தமிழரின் போராட்டம் இவ்வளவு இழுபடுவதற்கு காரணமே எமது ஒற்றுமையீனமே!" இதை சொல்;லும் நீங்கள், இதை புலியிடம் கேட்க வேண்டும்;. எம்மிடமல்ல. ஒற்றுமையீனத்தையும் நாமா உருவாக்கினோம்! புலிகள் வீதிவீதியாக நடத்திய படுகொலைகள், உயிருடன் கொழுத்திய  சம்வங்கள், கடத்தல்கள், காணாமல் போதல் என்று மனித உயிரை அழித்து, தமிழினத்தின் ஒற்றுமையைச் சிதைத்தவர்கள் புலிகள்தான். அத்துடன் சமூக முரண்பாடுகளை தீர்க்கத் தவறி, அதை கொண்டே சமூகங்களை பல கூறாக பிளந்து போராட்டத்தை சிதைத்தவர்கள் புலிகள்.   போராட்டத்தை தவறாக நடத்தி, எதிரிக்கு சார்பாக ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை  ஆயுதமேந்த வைத்தவர்கள் புலிகள். 

 

சமூகத்தை ஒடுக்கி தனிமனித சர்வாதிகார அமைப்பாக தம்மை நிறுவிக்கொண்ட புலிகள், பாசிச வழிகளில் முரண்பாடுகளை தீர்க்க மக்களை கொன்று குவித்த போது, தப்பிப் பிழைத்தவர்கள் வேறு வழியின்றி ஆயிரம் ஆயிரமாக எதிரியிடம் சரண் அடைந்தனர். இன்றுவரை புலிப் பாசிசம் தமிழ் மக்களின் எதிரியை பலப்படுத்தும் திசைவழியில் தான், மனிதத்தை ஏறி மிதிக்கின்றது. இப்படி தமிழரின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு தடையாக, அதன் ஒற்றுமைக்கு பங்கமாக புலிகளின் செயல்;கள் அமைகின்றன. இதற்கு எதிரான எமது போராட்டம், சரியான திசைவழிக்கு போராட்டத்தை எடுத்துச் செல்லக்கோருகின்றது. இதனடிப்படையில் சிந்திக்கக் கோருகின்றது. 


 
"தமிழருக்கு இப்போது தேவையானது விடுதலையே ஒழிய புதிய ஜனநாயகமோ, மக்கள் அரசியலோ அல்ல." உங்கள் இந்த தர்க்கம் வேடிக்கையானது முரணானது. 'மக்கள் அரசியலோ அல்ல" என்றால் விடுதலை யாருக்கு? மக்களின் விடுதலைக்கல்லாத போராட்டம், மக்களை ஒடுக்குவதுதான். இதனால் இதை நாம் எதிர்க்கின்றோம். மக்களுக்கு விடுதலை தராத எதையும் நாமோ, விடுதலை பற்றிய அறிவுள்ள எந்த மனிதனும் ஆதரிக்கமாட்டான். இதைத்தான் புலிகளின் வரலாற்றில், அவர்களுக்கு மக்கள் கூறிவரும் பதில். இன்று இதனால் தான் புலிகள் தோற்பதும், அவர்கள் தம் இறுதிக் காலத்தை நோக்கி பயணிப்பதும் தொடங்கியுள்ளது. மக்களுக்கு வெளியில் வரலாறு கிடையாது. மக்கள் எப்படி  புலிகளை தோற்கடித்தனர் என்பது தான் புலியின் வரலாறாகும். மக்கள் தோற்கடிக்காமல், பேரினவாதம் புலியை, ஒரு நாளும் தோற்கடிக்கவே முடியாது. இன்று அந்தத் தோல்வி வரலாறாகின்றது.  

 

பி.;இரயாகரன்
05.01.2009