06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தலித் மாநாடும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும்

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஒரு மாநாட்டை ஒட்டிய எதிர்பார்ப்பு என்பது இயல்பானது. அந்த மக்களின் விடுதலைக்கான பாதையை கொள்கையளவிலாவது அது தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பானது. அந்த உணர்வை, ஏன் அந்த வழியையும், இந்த மாநாடு வழங்கவில்லை.

 எல்லாம் வழமையான பாணியில், அவர் அவர் அரிப்புகளைக் கொட்டும் இடமாகிப் போனது. வழமையான இலக்கிய சந்திப்புக்குரிய கொசிப்பாகி, தலித் மாநாட்டை சிதைத்துவிட்டனர். இதைக் கண்டு யாருக்குத் தான் கோபம் வராது.

 

தலித்திய மக்களின் பிரச்சனை என்பது, இலக்கிய கும்பலிலினதும் புலியெதிர்ப்பு கும்பலினதும் கொசிப்புக்கான தளங்களல்ல. ஆனால் அவர்கள் அந்த மக்களின் பிரச்சனையையே, கேலிசெய்து விடுகின்றனர். அந்த மக்களின் சமூகப் பிரச்சனையை பொறுப்புணர்வுடன் அணுகவும், அதை முன்னெடுத்துச் செல்லவும் உறுதியும் நேர்மையும் அவசியமானது. இந்த வகையில் அவை திட்டமிடப்படவில்லை.

 

இந்திய இலங்கை அரசினது கூலிக்குழுவாக இயங்குபவனுக்கு, தலித்தியம் பற்றி என்ன தான் அக்கறை இருக்கமுடியும். இந்திய இலங்கை அரசின் நலன்களைப் பேணும் கூலிக்குழுவாக, அவர்களின் பணத்தில் அவர்களின் ஆயதங்களைக் கொண்டு இயங்கும் இயக்கங்களும், இலக்கியம் என்றால் தண்ணியடிப்பிலும் கொசிப்பிலும் மூழ்கிவிடுகின்றவர்களால், தலித் பிரச்சனையை ஒருநாளும் நேர்மையாக அணுகமுடியாது.

 

தலித் பிரச்சனையைப் பற்றி கதைக்க கலந்த கொண்டவர்களில் கணிசமானவர்கள் இவர்கள். இவர்கள் ஒப்புப்பாடவும், ஒப்பாரி வைப்பதுமாகி தலித்மாநாட்டைக் கேலிசெய்தனர். கூலிக் குழுக்களாக மாறிவிட்ட இயக்கத்தில் இன்றும் இயக்க உறுப்பினராக இருப்பவர்கள், அதை மூடிமறைத்துக் கொண்டு தம்மை தலித் மாநாட்டின் ஆதரவாளராக அடையாளப்படுத்துவர்கள், எப்படி தலித் மக்களின் பிரச்சனைக்காக உண்மையாக இருப்பார்கள்? இப்படித்தான் இலக்கியவாதியாக கூறிக்கொண்டவர்கள், ஒரு இலக்கியத்தைக் கூட மக்களுக்காக படைத்தது கிடையாது. இவர்கள் எப்படி தலித் விடுதலைக்கு வழிகாட்ட முடியும். அதற்காக உண்மையாக போராடுபவர்கள் என்று, யாரால் எப்படி கூறமுடியும்?

 

இப்படிப்பட்ட போலிகளையே திருப்தி செய்த மாநாடு, அதனடிப்படையிலேயே தன்னை சோரம் போக வைத்தது. இதை தோலுரித்துச் சொல்லும் தலித்திய உரிமை, எங்களுக்கு உண்டல்லவா?

 

தலித்தியம் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள், தலித் மக்களின் உண்மையான விடுதலையை விரும்புபவர்கள், எதைச்செய்ய வேண்டுமோ அதை செய்வது கிடையாது. இலக்கிய மலடுகளையும், புலியெதிர்ப்பு அரசியலை அடிப்படையாக கொண்ட கும்பலையும், இயக்கவாதிகளையும் அல்லவா நிராகரிக்க வேண்டும். இவர்கள் தான், தலித்தியம் கோட்பாட்டு ரீதியாக கூட, தன்னை அடையாளம் காண்பதற்கு எதிரான முதலாவது எதிரிகள். இதை தலித் மாநாடு தெளிவுபடுத்தாது, அவர்களுடன் கூடி சோரம் போனது. உண்மையில் இது தலித் மக்களுக்கு எதிரானது. மக்கள் இலக்கியம், பாசிச ஒழிப்பில் மக்களை சார்ந்து நிற்றல் மூலம் தான், உண்மையான தலித் விடுதலையை பற்றி குறைந்தபட்சம் பேசும் நிலைக்கு முன்னேற முடியும்.

 

தலித்துக்கு ஒரேயொரு வேலைத்திட்டம் தான் இருக்கமுடியும். பாசிச ஒழிப்புக்கு என்று வேறு வேலைத் திட்டம் இருக்க முடியாது. தலித் மக்களை சார்ந்து நிற்றல் மூலம், தனது எதிரியாக உள்ள பாசிசத்தையும், பேரினவாதத்தையும் எதிர்த்துப் போராட முடியும். இப்படித்தான் சாதி ஒழிப்பை நடத்த முடியும். ஒரேயொரு வேலைத் திட்டம் தான் தலித் விடுதலைக்கும் சரி, எந்த விடுதலைக்கும் சரி அடிப்படையாக அமையமுடியும்.

 

தலித்தியம் பெயரில் குறித்த தலைப்புகளின் பேசியவர்கள்

ஒரு இருவரைத் தவிர, மற்றவர்கள் எந்தவிதமான சமூகப் பொறுப்புணர்வுடனும் அதைச் செய்யவில்லை. அவர்கள் தமது தலைப்புக்குள் கூட பேச முடியவில்லை. அரைக்கின்ற வழமையான மாவை, வழமை போல் மீள அரைத்தனர். அதை மற்றவன் நெற்றில் வழமையாக பூசுகின்றதையே, இங்கும் மீளச் செய்தனர்.

 

ஆய்வுத்திறன், அறிவு, தொடர்ச்சியாக கற்றல், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் எல்லாம் மலடாகிப் போனவர்களின் சொந்த ஒப்பாரிதான், தலித் மாநாட்டின் பெயரில் மீண்டும் அரங்கேறியது. இப்படி அவர்களுக்கு, முன்னால் இருப்பவர்களை கேலிசெய்துவிடுகின்றனர். எந்த சமூக பொறுப்புணர்வுமற்ற, மற்றவனைக் கேலிசெய்கின்ற, சொந்த சமூக அறியாமையை, அறிவாகவும் அறிவாளியாகவும் காட்டி வண்டில் விடுகின்ற நக்கல் தனம் தான், கருத்துரைகளாக அவர்களிடம் இருந்து வெளிப்பட்டது.

 

உண்மையில் தமக்கு தெரிந்ததை வழமை போல் கொட்டிவிட்டு செல்லுகின்ற வழமையான பாணியை, புலம்பெயர் மாற்றுத் தளமாக சித்தரிப்பது அலுக்கோசுத்தனமாகும். ஆய்வுக்குரிய சமூகத் தகுதி இங்கு கேள்விக்கு உள்ளாகின்றது.

 

ஒரு சமூகம் சந்திக்கின்ற முழுமையான பிரச்சனையை. அதை சம்பவ ரீதியாக சொல்வதா அறிவு? எல்லோருக்கும் தெரிந்ததைப் போல், தனக்கு தெரிந்ததை சொல்வதும் அறிவுமல்ல, ஆய்வுமல்ல. ஒரு இலக்கியம் போல், ஆய்வும் அறிவும் என்பது, விடையங்களில் பொதிந்துள்ள சூக்குமத்தை உடைத்தெறிவது தான். ஒரு ஒடுக்குமுறை வெளிப்படையாக இயங்குவது ஒருவிதம். ஆனால் அது சூக்குமமாக, ஒடுக்குமுறை சமூக இணக்கத்துடன், சமூகம் ஏற்றுக்கொள்ளும் வடிவில் இயங்குகின்றது. அறிவு என்பதும், ஆய்வு என்பதும் இதை உடைத்துப் போட்டுத் தெளிவுபடுத்துவது தான். இதை விடுத்து ஒப்பாரி வைப்பது ஆய்வுமல்ல அறிவுமல்ல. சம்பவங்கள் இந்த சாதிய சமூகத்தின் உள் வாழ்கின்ற அனைவருக்கும் தெரிந்தவை தான். அவை சமூகத்தில் உள்ளவை தான். இதைச் சொல்வதா அறிவு, ஆய்வு. இது சமூகத்தின் உட்பதிந்துள்ள, அறிவை கேலிசெய்வதாகும்.

 

இதன் விளைவு வெளிப்படையானது. ஆய்வு, அறிவு என்ற பெயரில் அங்கு பேசியவர்கள், தமது குறுகிய எல்லைக்குள் அதற்குட்பட்ட நோக்கத்துக்குள் சாதியத்தை இட்டுச் சென்றனர். இப்படி சாதியத்துக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டத்தை சிதைத்தனர். உண்மையில் அறியாமை, மலட்டுத் தனம், உள்நோக்கம் கொண்ட சதியை அடிப்படையாக கொண்ட ஆய்வு முறை, பொறுப்பற்ற சமூக விரோதத்தன்மை என்பனவற்றின் வெளிப்பாடாகவே தலித் மாநாடு அமைந்தது.

 

உதாரணமாக இடைக்காலத் தீர்வுத் திட்டத்தில் சாதிய தீர்வை புகுத்தல் என்ற பெயரில், இரண்டு சட்ட நிபுணர்கள் உரையாற்றினர். வேடிக்கை என்னவென்றால், சாதியைப் பற்றி இலங்கை சட்ட அமைப்பில் இருப்பதைக் கூட, அவர்களால் அடையாளப்படுத்த முடியாதவர்களாகவே இருந்ததுடன், ஏதோ கதைத்தனர். 1950 களினான சட்டமும், 1970 களிலும் திருத்தப்பட்ட சட்டமும், சாதியொடுக்கு முறைக்கு எதிராக உண்டு. இப்படி இதைக் கூட ஆராயாது, அதைக் கூட முன்வைக்க முடியாதவர்கள், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த சட்டதிட்டத்தைத்தான் கோரமுடியும். இலங்கையின் சட்ட அமைப்பே அதை தெளிவாக கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தில் எதைக் கோருவது என்பதற்கு, இது அவசியமானது. இப்படி ஆய்வுகள் அறிக்கைகள் எதையும் முன்வைக்க முடியாதபோது, தலித்மாநாட்டின் தோல்வி என்பது, கலந்து கொண்டவர்களின் உள்நோக்கம் சார்ந்து வெளிப்படையானது.

 

சாதிய அமைப்பில் சட்டங்கள் மூலம், எதையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. சட்ட ஏற்பாடுகள், சாதிச் சமூக அமைப்பில் அமுலுக்கு வராது. தனிப்பட்ட சில நபருக்கு உதவலாம். அது போல் தனிபட்ட நபர்களின் நலனுக்கு இவை உதவலாம். சமூகத்துக்கல்ல.

 

இந்தியாவில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக இருக்கின்ற சட்டங்கள் இயங்கினாலே, சாதியம் கிடுகிடுக்கும். ஆனால் அது இயங்குவதில்லை. அச்சட்டங்கள் என்ன? அது ஏன் இயங்குவதில்லை.? பார்க்க

 

1.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

2.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

3.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

4.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

 

கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கானதா? கருத்துக்கானதா?

கருத்து இருந்தால் தானே, கருத்துச் சுதந்திரம் இயங்க முடியும். கருத்து என்பது முரண்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிப்பது. சமூக முரண்பாடுகளில் இருந்து பிரதிபலிப்பது. சமூகத்தினையிட்டு அக்கறையற்றவர்கள், குறுகிய நலன்களுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்ற ஒரு கூட்டத்திடம், கருத்துகள் இருப்பதில்லை. தனிமனித பொறுக்கித்தனமே கருத்தாக வெளிப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு கருத்தாக அல்லாது, அதற்கு எதிரான ஒன்றாகவே அது மாறுகின்றது.

 

இதன் விளைவு கருத்துச் சுதந்திரம் என்பது கருத்துக்கு அல்ல, நபருக்கானதாக மாறுகின்றது. இப்படியான ஒரு புரிதல், சமூகத்தின் ஆற்றலற்ற மலட்டுத்தனத்தில் இருந்து வித்திடப்படுகின்றது. இப்படி கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கானதா? கருத்துக்கானதா? என்ற எல்லைக்குள், சமூகத்தின் அறிவு மட்டும் நபருக்கானதாகி தரம் தாழ்ந்து போகின்றது. கருத்துக்களே இல்லாத போது, நபருக்கே கருத்துச்சுதந்திரம் என்ற நிலைக்கு சமூகத்தின் பொதுப்புத்திமட்டம் தாழ்ந்து விட்டது. நபர்களின் எண்ணிக்கை, அவர்கள் பேசுவதே கருத்துச் சுதந்திரமாகிவிட்டது.

 

இதன் மூலம் கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கே ஒழிய, கருத்துக்கு அல்ல என்ற வகையில், இன்று கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இன்று மக்கள் போராhட்டம் என்றாலே அதை புலி மற்றும் புலியல்லாத தரப்பு கேலி செய்வது போல், அது என்னவென்று கேட்கின்ற நிலைக்கு சமூகத்தின் நிலை தாழ்ந்துவிட்டதைப் போன்ற, ஒன்று கருத்துச் சுதந்திரம் பற்றி நிலைப்பாடும் உள்ளது.

 

500 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரம் நபருக்கு என்றால், அதுவும் ஒரு நிமிடம் தான் என்றால் 500 நிமிடங்கள் தேவை. இப்படி கருத்துகள் மறுக்கப்படுகின்ற அவலம். ஆனால் இப்படித்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி புரியப்பட்டு இருக்கின்றது. இப்படித் தான் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, அமுல்படுத்தப்படுகின்றது.

 

இப்படி கருத்து மறுப்பு பொதுத்தன்மையாகிவிட்டது. மாறுபட்ட கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்பது, நினைத்துக் கூட பார்க்க முடியாத விடையமாகிவிடுகின்றது. ஒத்த கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்பது, நபர் சார்ந்து ஒப்பாரியாகிவிடுகின்றது. ஒரே கருத்தை ஒரேவிதமாக ஒப்புவிக்கின்ற நபர்களின் புலம்பல், கருத்துச் சுதந்திரமல்ல. கருத்து மறுப்பாகும். மாற்றுக் கருத்து வருவதை நேரத்தைக்கொண்டு தடை செய்கின்றது. கேட்பவரை சிந்திக்க விடாது தடுக்கின்றது. இப்படி மாறுபட்ட கருத்துக்கு கருத்துச் சுதந்திரத்தை கோரிப் போராட வேண்டிய நிலை.

 

நபருக்கான கருத்துச் சுதந்திரம் பிற்போக்கான கூறாகி விடுகின்றது. தலித் மாநாட்டில் தலித்திய பிரச்சனை இல்லை என்று சொல்பவருக்கும் கருத்துச்சுதந்திரம். பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட தலித்மாநாட்டில், மதவாதிக்கும் கருத்துச் சுதந்திரம் என்ற நிலைக்கு கருத்துச் சுதந்திரம் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

 

கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், மதவாதியாகவே புலம்பிய பசிர்

இவர் புலியெதிர்ப்புக் கும்பலின் தந்தைகளில் ஒருவர். ரீ.பீ.சி புலியெதிர்ப்பு மூலம் பெத்துப் போட்ட, மதவாதி. மதவாதிக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? புலியெதிர்ப்பு ஊடாக பாய்விரித்து, பகுத்தறிவை விபச்சாரம் செய்கின்றனர். பாவம் தலித் மக்கள். இவர் சட்டத் துறையில் உண்மையை பொய்யாக நிறுவுகின்ற வழக்குசார் நுட்பம், அது சார்ந்த பேச்சாற்றல், ரீ.பீ.சீயில் புலியெதிர்ப்பு மேதையானார்.

 

இந்த மதவாதி தனது மதம் சார்ந்து, முஸ்லிம் மக்களை தேசியம் இனம் என்பவர். இதே நபர் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இது தான் இதில் முரணே. இப்படி புலியெதிர்ப்பு கூச்சல் பேர்வழி. இவர் தமிழ் தேசியத்தை எதிர்கின்ற அரசியலும், முஸ்லீம் தேசியத்தை ஆதரிக்கின்ற வக்கிரமும், முஸ்லீம் என்ற மத அடிப்படைவாதத்தில் இருந்து தான் வருகின்றது.

 

தலித் மாநாட்டின் சட்டமேதையாக, புலியெதிர்ப்பு சார்ந்து கலந்துகொள்ள முடிந்தது. தலித் மக்களை பாதுகாக்க சட்டம் பற்றி கதைக்க வந்தவர், இலங்கை சட்டமைப்பில் இது எப்படி உள்ளது என்று கூறத் தெரியாத அளவுக்கு அக்கறையற்றவர். புலியெதிர்ப்பு தலித்தியத்தை நிறுவ வந்த கோஸ்டிகளில் ஒருவர் என்பது தான் உண்மை. முஸ்லீம் மதவாதத்தை பாதுகாப்பதில் உள்ள கருசனை, தலித்திய பகுத்தறிவை எட்டி உதைக்கின்றது.

 

தலித்மாநாட்டில் இந்த மதவாதியின் வேஷம் கலைந்தது. அவர் ஒரு பகுத்தறிவாளன் அல்ல என்பது உண்மையாகியது. ஒரு முஸ்லிம் மதவாதியாகி, மதவெறி பிடித்த கும்பலுடன் தன்னை அடையாளம் காட்டினார். இந்தியாவில் முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள சாதியத்தை பாதுகாக்க, அதை இல்லை என்று ஒரு மதவாதியாக குலைத்தார். எப்படிப்பட்ட ஒரு தலித் விரோதி. தலித்தியம் என்பதை இந்துத்துவமாக மட்டும் காட்டுகின்ற மத வக்கிரம்.

 

இந்த மதவாதம் ஊடாகவே புலியையும் அணுகுகின்றது. புலியை இந்து புலியாக காட்ட முனைகின்றார். வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றியதை பற்றி குறிப்பிடும் போது, புலிகள் மதவாதத்தை அடிப்படையாக கொண்டு வெளியேற்றியதாக தனது சொந்த மதவெறியைக் கக்கினார். பார்க்க இதை மறுக்கும் எனது கருத்துகளை.

 

முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும்இ அதற்கு எதிரான போராட்டமும்

 

இப்படி மதவாதியின் நோக்கம் சார்ந்த அப்பட்டமான திரிபு. வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் என்பது, அவர்கள் முஸ்லீம் மதத்தை பின்பற்றியதால் அல்ல. அவர்களை இந்து மதத்துக்கு மாறக் கோரியதால் அல்ல. மூஸ்லீம் மதத்தை பின்பற்றுகின்றீர்கள் என்பதால் அல்ல. அவர்கள் தேசிய சிறுபான்மை இனமாக இருந்ததால் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் தான் அவர்களை தேசிய இனங்களில் ஒன்றாக வரையறுக்கின்றோம். முஸ்லீம் மதத்தை பின்பற்றுவதால், அவர்கள் தேசிய இனமாகிவிடமாட்டர்கள்.

 

பகுத்தறிவுக்கு மாறாக, மதத்தின் ஊடாக தனது அறிவை, மூளையை உடைத்து அங்கு வீற்று இருந்த பெரியாரின் மூஞ்சையில் காறித் துப்பினார். இவர் இந்திய முஸ்லீம் மக்கள் மத்தியில் சாதியம் உண்டு என்ற புதியமாதவி ஆதாரபூர்வமாக கூறிய போது, இந்த மதவாதியால் அங்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. மதவாதியாக இந்திய முஸ்லீம் மதத்தை பாதுகாக்க, அதை பொய் என்றார். அப்படிக் கிடையாது என்றார். அது இதுவாக இருக்கும், இது அதுவாக இருக்கும் என்று, தனது தொழில் சார்ந்து செய்கின்ற புரட்டுத்தனத்தை இங்கும் செய்தார்.

 

நான் மதவாதியாகவா கதைக்கின்றீர்கள் என்று குறுக்கிட்ட போது, அது தனது கருத்துச் சுதந்திரம் என்றார். கருத்துச் சுதந்திரம் என்பது, தலித் மாநாடு முன்னிறுத்திய பெரியாரின் பகுத்தறிவுக்கு எதிராகவே அங்கும் அரங்கேறியது.

 

தன்னை ஒழுக்கவாதியாக காட்டமுனைந்த ஜெகநாதன்

ரீ.பீ.சியின் மற்றொரு புலியெதிர்ப்பு பிதாமகன். நான் ஆனந்தசங்கரி பற்றி எழுதிய கட்டுரையில், ஜெகநாதனுடன் அவர் கொண்டிருந்த தொழில் கூட்டு பற்றி எழுதியிருந்தேன். பார்க்க தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி

 

அதை மறுத்த அவர், தான் ஒருவருக்கு மட்டும் தான் ஆனந்தசங்கரியின் கடிதத் தலைப்பை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். இப்படி தனது அரசியல் ஒழுக்கம் பற்றி பேசி, என்னை தூற்றினார்.

 

ஜெகநாதனும் வேறு சிலரும் கூட்டாக ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து, ஆனந்தசங்கரிக்கு வெளியில் இலங்கை தூதுவராலயம் வரை எப்படி தொழில் செய்து சம்பாதித்தீர்கள் என்பது ஊர் உலகம் அறிந்தது. சரி, நீங்கள் சொல்வது போல் நீங்கள் அதைச் செய்யாத ஒழுக்கவாதிகள், நேர்மையானவர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 

உங்கள் ஒழுக்கவியலையும், நேர்மையையும் வேறு ஒரு தளத்தில் உடைத்துப் பார்ப்போம். இன்று வரை புளாட் என்ற கொலைகார சதிக் குழுவின் உறுப்பினர். அதை மூடிமறைத்து, ஊர் உலகத்தின் முன்னால் ஜனநாயகவாதியாக அறிமுகம் செய்து, வேஷம் போடுவது அழகோ. தலித் மாநாட்டில் கூட சொந்த இயக்க அடையாளத்தை மறைத்தபடி நாய் வேஷம். இப்படி எல்லா நாய்களைப் போல வாலாட்டி மக்கள் முன் வேஷம் போடுவது அரசியல் சூழ்ச்சி.

 

புளாட் இயக்கம் செய்த ஒவ்வாரு கொலையையும், இன்றும் செய்கின்ற ஒவ்வொரு கொலையையும் ஆதரித்த படி, அந்த இயக்கத்தில் இருப்பது அரசியல் யோக்கியதையோ! ஆனந்தசங்கரி என்ற பொறுக்கியுடன் கூடி அரசியல் செய்வது யோக்கியமோ. இந்த ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் பிரச்சனையை பேசி பெற்ற பணத்தை, அவன் தனதாக்கி வைத்திருப்பதற்கு துணைபோவது யோக்கியதையோ? தமிழ் மக்களைச் சொல்லி அதில் வாழும் அந்த போக்கிரியுடன் கூடி வம்பளப்பதா, உங்கள் அரசியல் யோக்கியதை! இதை கண்டிக்க, விமர்சிக்க கூட அரசியல் யோக்கியதை உங்களிடம் கிடையாது. அப்படிப்பட்டவர்கள் போக்கிரிகள் தான்.

 

தம்மை மூடிமறைத்துக் கொண்டு இயங்கும், இயக்கவாதிகளின் நோக்கம் என்ன?

ஏன் எதற்காக தம்மைத்தாம் மூடிமறைக்கின்றனர். எதனால் வெளிப்படையாக மக்கள் முன் வரமுடிவதில்லை. தாம் ஜனநாயகவாதிகளாக, வன்முறைக்கு எதிரானவர்களாக, கொலைகளை கண்டிப்பவர்களாக காட்டிக்கொண்ட, காட்டிக்கொள்கின்றவர்கள், எத்தனை எத்தனையோ கவர்ச்சிகரமான வேஷங்கள். இயக்கத்தின் உறுப்பினராக, அவர்களுடன் தொடர்புடையவராக வலம் வரும் இந்த வேஷதாரிகளின் வேஷம் படுபிற்போக்கானது. ஒருவன் தன்னை புலி என்று கூறி வேலை செய்வதில் ஒரு நேர்மையும், அதில் ஒரு ஒழுக்கமும் உண்டு. அதைக் கூட செய்யமுடியாதவர்கள் தான் ஜனநாயகவாதிகள். இப்படிப்பட்டவர்கள் படுபிற்போக்குவாதிகள். உண்மையில் தம்மையும், தமது மனித விரோத நடைமுறைகளையும் மக்கள் முன் மூடிமறைப்பது தான், தம்மை முடிமறைப்பதன் நோக்கம்.

 

இப்படிப்பட்டவர்கள் மக்களின் முன்னும், தமது கருத்துக்களை வைக்கும் இடங்களிலும், தமது இயக்க அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. இதேபோல் தம்மை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும், அராஜகவாத லும்பன் உதிரிகள் இந்த இயக்கவாத கும்பலுடன் அடிக்கும் கூத்துகள் சொல்லிமாளாது. இவர்களின் இழிவு கெட்ட அரசியலோ, அரசியல் சதியாகின்றது. தலித் மாநாட்டிலும் கலந்து கொண்ட இந்த இயக்கப் பேர்வழிகள், தம்மை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிராகவே சதி செய்தனர்.

 

இப்படி பல புனைபெயர் பேர்வழிகள் எழுத்தில் உலவுகின்றனர். சொந்தப் பெயரில் அதை சொல்லும் அரசியல் நேர்மையற்று, சதிகளை மூலமாகிக்கொண்டு இயங்குகின்றனர். அண்மையில் ஞானம் தொடர்பாக தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் கூட, இங்கு இப்படிப்பட்டதுதான். ஞானம் பற்றிய குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வதல்ல, இந்த சதி வழிமுறை பற்றியதே எம்முன்னுள்ள விடையம்.

 

ஞானம் தனது அரசியல் செயல்பாட்டையும், கருணா என்ற பாசிச புலிக் கும்பல் பற்றிய, அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக இதுவரை முன்வைக்கவில்லை. யாழ்மேலாதிக்கத்தின் பெயரால், கிழக்கு வாதங்கள் மூலம், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்து விடமுடியாது. இதையொட்டி தேனீயில் அவர் எழுதிய கட்டுரை, எதையும் அரசியல் ரீதியாக தெளிவாக்காத வகையில், சூக்குமமாக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சதிகாரர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு, அதுவே மேலும் பக்கபலமாக உள்ளது.

 

இந்த விடையத்தை அரசியல் சதியாகவே முன்னெடுத்த பின்னணியோ, அதைவிட சூக்குமானது. ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் தான், இந்த சதி திட்டமிட்டு வெளிவருகின்றது. இதில் அரசியல் நேர்மை பற்றிய விடையமும், சதி பற்றிய சூக்குமமும் அம்பலமாகின்றது. ஈ.என்.டி.எல்.எப் என்ற கொலைகார கும்பலினதும், இந்திய சதிக் கும்பலினதும் இணையம் தான் தீப்பொறி. இதில் ஒரு புனைபெயர் வழியாக, வருகின்ற சதிக்குரிய நபரை, அனைவரும் அறிவர்.

 

வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொம்மும் அதனுடன் இணங்கி செயல்படுகின்றது. சுவிஸ் ஜெயிலில் ராம்ராஜ்சை புலிகள் சந்தித்ததும், ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போன பின்னணியுடன், இந்த தேன் நிலவு இவர்களுக்கு இடையில் நடப்பது வெளிப்படையானது. இப்படி இந்த இரண்டு இணையமும், ஒன்றுடன் ஓன்று சார்ந்து செயல்படுகின்றது.

 

இப்படி இயக்க சதிகள், ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. இதில் ஈ.என்.டி.எல்.எப் யை, கருணா கும்பல் ஜனநாயக விரோதமாக கிழக்கில் விழுங்கி ஏப்பமிட்டதை பழி தீர்க்கும் அரசியல், ஞானம் விவகாரம் ஊடாக பூதமாகி வீங்குகின்றது.

 

ஞானத்துடன் தீரா பகை கொண்டு திரியும் 'அனைத்து வன்முறைக்கும் எதிரானவர்" நடத்தும் நாடகம் தான், ஞானம் பற்றிய தொடர்ச்சியான செய்திகள். 'யன்னiலைத் திற" என்ற அசோக்கின் வெளியீடு இதைத்தான் அப்படியே முன்பு செய்ய முனைந்தது. இப்ப எழுத்தில் புனைபெயர்கள். இப்படி புனைபெயர் கட்டுரைகள் பல. கருணைதாசன் என்ற புனைபெயரில் தீப்பொறியில் வந்ததும் சரி, ஈழமுரசில் கருணைதாசன் என்ற பெயரில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் பற்றி எழுதியவரும் ஓருவரே. அண்மையில் தேனீயில் மலைதாசன் (பெயர்?) என்ற பெயரில் சோபாசக்தியை தாக்கிய, புனைபெயர் அனைத்திலும் ஒருவரே. இப்படி அரசியல் சதியை சூதாட்டமாக நடத்துகின்றனர். ஞானத்தின் அன்றைய துரோகத்தை பட்டியல் இடுபவர்கள், அந்த வீட்டில் பல வருடக்கணக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டு சாப்பிட்ட அந்த துரோகத்தை மட்டும், எதிலும் யாரும் குறிப்பிடுவதில்லை. அப்போது ஞானம் துரோகியல்ல, இப்ப துரோகி.

 

இது போன்ற குற்றச்சாட்டுகளின் சரிபிழைக்கு அப்பால், சொந்தப் பெயரில் செய்ய முடியாது கேடுகெட்ட கேவலமே போதுமானது, இந்த சதியை ஆராய. இவர்களின் அரசியல் நேர்மை பற்றி பேசுவதற்கு. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் என்ற அனைத்து வன்முறையும் செய்த செய்யும் ஒரு இணையத்தில் இது அரங்கேறுகின்றது. இந்தக் கேவலமும், அனைத்து வன்முறையையும் எதிர்ப்பதாக கூறுவதன் அர்த்தமும் வெட்கக்கேடானது.

 

கிழக்கு பிரதேசவாதத்தை வைப்பது என்பது அவரின் அரசியல். அதை அரசியல் ரீதியாக எதிர்கொன்ள முடியாமல் போவது ஏன். இதை மறுக்கும் நீங்கள் வைக்கும் மாற்று அரசியல் தான் என்ன? அதைவிட உயர்வாக என்னத்தை வைக்கின்றீர்கள். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் படுத்துக்கிடப்பது, ஞானத்தின் மீதான குற்றச்சாட்டை விட எந்தவகையில் உயர்ந்தது. புலியெதிர்ப்பின் பின் நடத்துகின்ற அரசியல் வக்கிரம், ஞானத்தின் அரசியலை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததல்ல.

 

இயக்கங்களுடன் நடத்துகின்ற இரகசிய உறவுகள், தொலைபேசி உரையாடல்கள், கூட்டுச் சதிகள், இயக்கத் தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு, என்று மொத்தத்திலேயே கேவலமானது. யார் வன்முறை செய்கின்றனரோ, அவர்களுடன் அரசியல் விபச்சாரம். வன்முறை மறுப்பதாக கூறிக்கொண்டு, கேடுகெட்ட அரசியல் விபச்சாரமல்லவா இவை. புலிகள் மட்டுமே வன்முறை செய்வதாக கூறிக்கொண்டும், கருணாவும் அப்படி செய்வதாக காட்டிக் கொண்டும், ஈ.என்.டி.எல்.எப் வுடன் குலாவுவது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம். நீங்கள் டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் கூடி (அவர்கள் கோடிக்கணக்கில் துரோகத்துக்கு பணம் வாங்குகின்றனர்.) அரசியல் கோஸ்டி கானம் பாடும் போது, ஞானம் தனியாக பாடினால் தான் என்ன? நீங்கள் செய்வது புரட்சியோ?

 

இப்படி டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் ஆலவட்டம் பிடித்து திரிகின்றவர்கள், தங்களை மூடி மறைத்துக் கொண்டு, புனைபெயரில் பம்முகின்ற அரசியல் யோக்கியதை தான் என்ன? ஞானம் தனது அரசியல் நிலையை வைக்க மறுப்பது என்பது, எமக்கு முன்னுள்ள தெளிவான விமர்சனம். கருணா பற்றிய அவரின் நிலைப்பாட்டை கோருகின்றோம். ஆனால் அதை நீங்கள் வைப்பதற்கு, உங்களுக்கு எந்த அரசியல் அடிப்படையுமே கிடையாது. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் இணையத்தில்! சொந்த அரசியல் நிலையைக் கூட வைக்க முடியாதவர்கள், ஞானத்தைப் பற்றி பேசுவது மிகமிக மலிவானது. உங்கள் அரசியல் என்பது, இழிவான மலிவான பிரச்சாரங்கள் தான். அதே புளட்டின் சதித் தனங்கள் தவிர, வேறு எதுவும் அங்கு அரங்கேறுவதில்லை.

 

பி.இரயாகரன்
31.10.2007


பி.இரயாகரன் - சமர்