08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும்

பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பிலான மகிந்த சிந்தனையோ, பெண்கள் என்றால் நிர்வாணப்படுத்தி குதறுவதையும் அடிப்படையாக கொண்டது. தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்த சிந்தனைக்கு, இப்படியும் பல அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து தான், பயங்கரவாத ஒழிப்பாகின்றது.

அமெரிக்கா முதல் இலங்கை வரை, பயங்கரவாத ஒழிப்பில் இவையின்றி மனிதம் அழிக்கப்படுவதில்லை. இப்படி அழிப்பில் ஈடுபட்டவர்கள், கொண்டாடி மகிழ்ந்ததை தான் அவர்கள் பதிவாக்கினர். இது தான் ஈராக்கில் நடந்தது. வக்கிரமான இந்தக் காட்சிகள் உள்ளடங்க இவை பயங்கரவாத ஒழிப்பின் ஒரு அம்சமாக, இதுவோ எமக்கு அதை அம்பலப்படுத்தும் ஆவணமாகியது.

 

இப்படி நாம் வெளியிட்ட வீடியோ ஆவணம், புலித்தேசியம் பேசியவர்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில், இதுவோ பேரினவாதத்துக்கு நிகராகவே மூடிமறைக்கப்படுகின்றது. அதேநேரம்  புலித்தேசியம் பேசுவோரிடமிருந்து ஈமெயில்களும், பதிவுகளும் எம்மை நோக்கி வந்தன.

 

இதில் அறிவுப+ர்வமற்ற குதர்க்கங்கள் முதல் எம்மைத் தூசணத்தால் குதறியவை என்று பல அடங்கும். இவை எமக்கு அன்றாடம் வருபவை தான், ஆனால் தற்போது சற்று அதிகம். இறந்த அந்த பெண்கள் மேல் பேரினவாத இராணுவம் எதைச் செய்ததோ, இதற்கு சற்று மேலாக எனது தாயைக் கூட தாம் புணர்வோம் என்று மிரட்டுகின்றார்கள். இப்படி வந்த பதிவுகள் அனைத்தும், வழமை போல் புலித் தேசியம் சார்பானது. இப்படித்தான் புலித் தேசியம் அழுகி நாறி, இன்று இறக்கத் தொடங்கியுள்ளது. 

 

இவைகளை நாம் ஒரு கருத்தாக கருதி அனுமதிக்கவும் முடியாது, பதிலளிக்கவும் முடியாது. இதற்கப்பால் இந்த வீடியோ ஆவணத்தை ஓட்டி புலிசார்பாக வந்த சில குதர்க்க வாதங்கள் மீதான விவாதம், இதன் மீதான தெளிவுக்கு அவசியமாகின்றது.

----

'சிங்கள இராணுவத்தின் இக்கொடூரத்தை வெளியிட முனைந்த உங்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். எனினும் பெண்களின் உறுப்புக்களை அப்படியே காட்டி வெளியிட்டது சரியா? மக்கள் அரசியலைக் கோரும் ஒரு பொறுப்பு வாய்ந்த உங்களால் ஏன் அதை மறைக்க முடியவில்லை? (மறைக்க விரும்பவில்லை?), இன்றைய கணனி உலகில் இது மிகவும் இலகுவானது. ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை"

 

மற்றவர்கள் இந்த விடையத்தையே முழுமையாக இன்று மறைத்தும் மறுத்தும் நிற்பது போல், நாம் காட்சிகளைக் கூட மறைக்கவோ திரிக்கவோ விரும்பவில்லை என்பதே உண்மை.

 

இந்த விடையத்தை அப்படியே நாம் ஆவணமாக வெளியிட்டோம். இன்று தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலித்தேசியம், இதை இன்று முற்றாக மூடி மறைத்துள்ளது. இப்படி மக்களுக்காக அவர்கள் போராட மாட்டார்கள் என்பதன் மூலம், நாம் மக்களுக்காக வெளியிட்டது மிகச் சரியாகவே உள்ளது. இதை நாம் ஆதாரமாக வெளியிடாவிட்டால், இதை மக்களுக்கு சொல்ல இன்று யாரும் இருப்பதில்லை என்பது உண்மையாகின்றது.  

 

மக்களுக்கு வெளியில் இதற்கு யாரும் தீர்ப்பளிக்க முடியாது. மக்களை மீறி புனிதர்கள் யாரும் கிடையாது. எனவே தான், அதை மக்கள் முன் வெளிப்படையாக வைக்கின்றோம். அந்த பெண்களுக்கும், பெண் சமூகத்துக்கும், தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்துக்கும்  இழைத்த கொடுமையை, மக்கள் பார்வையிடாமல் யார் தான் பார்க்க முடியும்;. புனிதம் பேசுபவர்கள் எல்லாம், உண்மையை மூடிமறைக்க விரும்பும் போலிகள்.

 

இந்த நிலையில் அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதன் மேல் ஒரு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கவும் இதுவே இன்று உதவியுள்ளது. இந்த விசாரணை நாடகம் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை, நாம் மக்களுக்கு மற்றொரு கட்;டுரையில் கூறவுள்ளோம். 

 

நிர்வாணமான உடல் என்பது, காட்சிப்படுத்தப்படக் கூடாத ஒரு பொருளல்ல. எந்த நோக்கில், எந்த அடிப்படையில் என்பதில் தான், அது தங்கியுள்ளது. இதை ஆயிரக்கணக்கில் பார்வையிட்டவர்கள், இதை வக்கிர உணர்வுடன் பார்ப்பதில்லை. அதை அப்படி அவர்கள்  பார்ப்பதாக நம்பும் நீங்கள் தான், அந்த உணர்வுடன் பார்ப்பது வெளிப்படுகின்றது. மக்கள் அப்படிப் பார்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்ற முனைகின்றீர்கள். மக்கள் பார்க்காவிட்டால், இந்த அநியாயத்தை யார் தான் பார்ப்பது. அதைச் சொல்லுங்கள். சில புனிதர்களா!? அதற்கு என்ன அடையாளம்!? நாம் மக்களை நம்பிப் போராடுபவர்கள். இதனால் மக்கள் முன் வைக்கின்றோம். இது எம் போராட்ட மரபில் கிடையாது என்பதால் தவறாகாது.

 

இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், எம்மை மீறி நடக்கும் எமக்கு எதிரான எதார்த்தத்தைக் கண்டு சினந்து வெடிக்கும் கோப உணர்வுடன் தான் பார்க்கின்றனர். புலித்தேசியத்தால் ஏற்பட்டுள்ள,  சொந்த கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கப்படுகின்றனர். ஏன் இந்த நிலைமை என்று, சொந்தமாகவும் சுயமாகவும் சிந்திக்கின்றனர். இதனால் இதை மூடிமறைக்க கோருவது, அருவருக்கத்தக்கது. 

 

எம் மண்ணில் எம்மீது அதிகாரத்தை செலுத்திய அனைவரும், உடலை நிர்வாணமாக்கி வதைப்பது, அவர்களின் அதிகாரத்தின் ஒரு கூறாக இருந்துள்ளது.  பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கூட நிர்வாணப்படுத்தினர். பேரினவாதம் முதல் புலிகள் வரை அன்றாடம் அவர்கள் செய்கின்ற நிகழ்ச்சி தான் இவை. ஆனால் அப்படி தாம் செய்வதில்லை என்று இவர்கள் வாதாடுவதும், தாம் கவுரமாகவே மனிதத்தை நடத்துவதாகத்தான்  எப்போதும் கூறுகின்றனர். இவை ஆவணமாக வெளிவரும் போது, ஐயோ ஆபாசம் என்று செய்தவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் புனித குரல் கொடுக்கின்றனர்.

 

எனக்கு நடந்த உதாரணத்தை இன்று யார் தான் ஏற்றுக்கொள்வார்கள். 1984ம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் என்னைக் கைது செய்தபோது, முதலில் செய்தது என்னை நிர்வாணமாகியது தான். சிலமணி நேரம் அப்படி இருக்க நேர்ந்தது. இந்த நிலையில் வைத்துத்தான் விசாரணையே தொடங்கியது. இதேபோல் 1987 இல் என்னை புலிகள் இனம் தெரியாதவர்கள் வேஷத்தில், இன்றைய புலிகளின் அனைத்து படைத்துறை தளபதி தீபன் என் காதில் துப்பாக்கியை வைத்து கடத்திச் சென்ற போது, அவர்கள் செய்த முதல் வேலையும் எண்ணை நிர்வாணமாக்கியது தான். இப்படி 80 நாட்களாக நான் தப்பி வரும்வரை, கடைசியில் ஒருசில நாட்களைத் தவிர அங்கு நிர்வாணமாகவே வாழ்ந்தேன்.    

 

இங்கு நிர்வாணம் என்பது, உடல் சித்திரவதை என்பது காட்சிக்கு வராத அதிகாரத்தின் மொழியில் வாழ்பவை தான். இந்த நிகழ்வைக் கண்டு நீங்கள் ஏன் அதிர வேண்டும். இப்படி நடப்பதில்லை என்று நம்பும் அப்பாவி மக்கள் தான், உண்மையில் அதிர வேண்டும்;.   அவர்கள் தான் இதை கண்டு அதிர்ந்து போகின்றார்கள். தம்மால் எதுவும் செய்ய முடியாத, தம் சொந்த நிலையையெண்;ணி வெட்கப்படுகின்றனர். இதை மூடிமறைப்பதன் மூலம், கலாச்சாரக் காவலர்கள் இதை தடுக்க முனைகின்றனர்.   

   
 
அன்றும் இன்றும் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களைக் கூட, இந்த இருதரப்பு எல்லைக்குள்  தாம் செய்யவில்லை என்று மறுக்கின்ற உலகில் நாம் வாழ்கின்றோம். இந்த தளத்தில்தான், இதுவும் மறுக்கப்படும். இந்த இடத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமானது. இது போன்ற நடத்தைகள் ஆவணமாக வெளியிடப்பாடத வரை, இவைகள் பற்றிய செய்திகள் பாரிய சமூகப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

 

உண்மையில் அவர்கள் எதை எப்படிச் செய்கின்றனரோ, அதை அப்படியே வெளிக்கொண்டு வருவது அவசியமானது. புஸ்சுக்கு செருப்பு எறியும் காட்சி வெளிவராவிட்டால், அது அர்த்தமற்றதாகவே அமைந்திருக்கும். அமெரிக்க இராணுவம் ஈராக்கில் பெண்களை நிர்வாணப்படுத்தி உடல் உறவு கொண்ட காட்சியும் கூட அப்படித்தான். அன்று அதை அப்படியே நாம் வெளியிட்டோம்.

 

இப்படி வெளிப்படையான காட்சிகள் இல்லையென்றால், இதுபோன்ற செயல்கள் மூலம் மனிதன் மேல் தம் அதிகாரத்தை திணிக்கும் உண்மைகள் அம்பலமாகாது. அமெரிக்கா ஈராக்கில் இது போன்றவற்றை செய்வது, இலகுவாக மறுக்கப்பட்டு இருக்கும். இன்றும் இது போன்று அங்கு தொடர்ந்த போதும், அவை காட்சிகள் இன்றி மூடிமறைக்கப்படுகின்றது.

 

அன்று எனக்கு நடந்தது, அவர்களின் கையில் சிக்கும் அனைவருக்கும் நடக்கின்றது.  புலிகள் முதல் இராணுவம் வரை கடத்திச் சென்ற பின், அவர்கள் இனம் தெரியாத நபர்களாக மாறி, வீதியில் அவர்களின் உடல்களை வீசி எறியும்போது பெரும்பான்மையான உடல்கள் நிர்வாணமாகத்தான் கிடைக்கின்றது. பாலியல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில், அதன் பின் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனத்தை அவை எடுத்துக் காட்டுகின்றது.  இங்கு ஆண் -  பெண் பேதம் கிடையாது. அவை நிர்வாணமாக போடப்படுகின்றது. இவை எல்லாம், சக மனிதர்களுள் எதிர்வினையின்றி எப்படியோ உறங்கிப் போய் விடுகின்றது. எந்தச் சூடுசுரணையுமற்ற ஒன்றாக, அதுவே மனித இயல்பாகிவிடுகின்றது. நாம் தணிக்கை செய்யாது வெளியிட்ட காட்சியோ, அவர்களை அதிரவைத்து அதை தகர்க்கின்றது.

 

பி.இரயாகரன்
03.01.2009

மற்றொரு தலைப்பில் தொடரும்

 


பி.இரயாகரன் - சமர்