06272022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புதிய குற்ற பரம்பரைகள்!!!

வெள்ளைக்காரன் காலத்தில் குற்ற பரம்பரை சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தினமும் இரவு காவல் நிலையத்தில் தங்கியிருந்து தான் அந்த இரவில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று நீருபிக்க வேண்டும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள். 

இந்த சட்டம் தற்போது இல்லை. ஆனால் குற்ற பரம்பரைகள் புதிய வடிவில், புதிய தேவைகளுக்காக தற்போது உருவாகி வருகின்றன. சமூகத்தை பாசிச மயமாக்கும் போது சட்டங்களின் தேவை என்பது இல்லாமல் போய் விடுகிறது என்பது ஒன்று மட்டும்தான் குற்ற பரம்பரை சட்டம் என்ற ஒன்றின் தேவையில்லாமல் போனதின் அடிப்படை. ஆனால் அப்படியொன்று வெகு நுட்பமாக நடைமுறையில் உள்ளது.

இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் வன்முறையும், ஆளும் கும்பல்களுக்கு எதிரான சமூக/தனிபட்ட வன்முறைகளும் மேலும், மேலும் அதிகமாகி வருகின்ற சூழலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஏதுவாக ஒட்டு மொத்த சமூகத்தையே இன்று குற்ற பரம்பரையாக்கி உள்ளது இந்த அரசு. குண்டு வெடிப்புகள் முதல், மக்களின் போர்குணமிக்க போராட்டங்கள், விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவுகள், வேலையிழப்பு வரை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான காரணங்களை மறைத்து அரசியல் செய்யும் ஆளும் கும்பல் தன்னை புன்னியாத்மாவாக காட்டிக் கொண்டு மக்களை குற்றவாளியாக்கும் மதி கெட்ட சூழல் நிலவுகிறது.


இது குற்ற பரம்பரைகளின் காலம்:

இணையத்தில் உலாவ இணையக் கடைக்கு செல்கிறாயா, அங்கு உனது அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். செல்பேசி சிம் கார்டு வாங்குகிறீர்களா உங்களது அனைத்து விவரங்களும் வேண்டும். உங்களது தகவல் தொடர்புகள் அனைத்தும் ஒட்டு கேட்க்கபடும் என்பதை அறிவிக்கும் தேவை கூட இன்றி வெளிப்படையாகவே நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நமது படுக்கையறையுள் நுழைவது போல நடைமுறைப்படுத்தும் சூழல் நிலவுகிறது. வாடகை வீடு தேடுகிறீர்களா, உங்களது அடையாள அட்டை, வேலை பார்க்கும் அடையாள அட்டை, வீட்டு முகவரி இத்யாதி விசாரணைகளை ஒரு குற்றவாளியை விசாரிப்பது போலவே விசாரித்து பிற்பாடே கொடுக்கப்படும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் சோதனையிடப்படலாம், உள்ளாடையணியாமல் வெளியே செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை கெடவில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான்.ஹோட்டலில் ரூம் எடுக்கிறீர்களா, உங்களுடன் ஒரு பை இருந்தால்தான் ரூம் கொடுப்போம் ஏனேனில் பை இருந்தால்தான் நீங்கள் வெளியூர்க்காரர் என்று நம்ப முடியும்(இப்படியும் சிலருக்கு அனுபவங்கள்), அப்புறம் வழக்கம் போல பிற விசாரணைகளும். பத்து இளைஞர்கள் கூடி நின்று பேச முடியாது. அப்படி பேசி களைந்த காலங்கள் எல்லாம் தொன்னெடுங்காலத்தைச் சேர்ந்த கதையாக மாறிவிட்டன. RSS ஆட்சி செய்யும் இடங்களிலோ காதலிப்பதும், பார்க்குகளில் தம்பதியர் உலாவுவதும் குற்றம். ஒவ்வொரு முக்குச் சந்திலும் ஒருவன் நின்று கொண்டு அடையாள அட்டை கோரும் காஸ்மீரத்து பாசிச சூழல் ஒன்று நாடு முழுவதும் விரைவில் உருவாகும் என்பதைத்தான் இவையெல்லாம் சொல்லுகின்றன. இப்படி தனிமனிதன் சமூகத்துடன் உறவாட இருக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் அவனை முதலில் குற்றவாளியாக்கி, நிரபராதி என்று நீரூபிக்க நிர்பந்திப்பதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் காயடிக்கப்பட்ட மலட்டு எருமையாக சோரனையின்றி ஆக்கப்படுகிறான். ஏரியா விட்டு ஏரியா போகும் ஒரு நாயை அங்குள்ள நாய்கள் மூத்திர மற்றும் பீத்திரக் குழாயை மோந்து பார்த்து அடையாளப்படுத்துவதை ஒத்த அருவெறுக்கத்தக்க சூழலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக, உளவாளியாக மாற்றப்படுகிறான். ஜனநாயகமின்மைக்கும், பாசிசத்திற்க்கும் பழக்கப்படுத்தப்படுகிறான். புத்தகங்கள் படிப்பதே தீவிரவாதமாகவும், உண்மைகளை பேசுவதே பயங்கரவாதமாகவும் பீதியுடன் பார்க்கப்படும் உள்நாட்டு யுத்தங்களின் காலத்திற்க்கான நுழைவாயிலின் வெகு அருகே நெருங்கி விட்டோம் என்பதைப் போன்ற உணர்வையே இவை நமக்கு கொடுக்கின்றன. இந்தியாவே அறிவிக்கப்படாத அவசர காலநிலையை நெருங்கிவிட்டது போல உள்ளது.
டெல்லி பல்கலைகழகத்தில் பேசிய கிலானி மீது எச்சில் துப்புகிறார்கள் RSS குண்டர்கள், புஷ் மீது செருப்பு எறிந்தத விமரிசையாக புகழ்ந்து சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவரந்த (அல்லது புண்படுத்திய) குற்றத்திற்காகவும், முஸ்லீமாக பிறந்த குற்றத்திற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுகிறார். போலீசிடம் அவரை போட்டுக் கொடுத்தது அவருடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல இந்தியன் அல்லது 'இந்து'யன். கர்நாடகாவில் RSS சமூகத்தையே குற்றபரம்பரையாக்கியுள்ளதன், பாசிசமயமாக்கியுள்ளதன் அடையாளம் இது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினால் அடுத்த நிமிடமே போலீசுக்கும், ஊடகங்களுக்கும்(வீட்டுக்குள் இருக்கும் போலீசு இது) தகவல் கொடுக்கும் சேவையை இலவசமாக செய்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்களுக்கும், போலீசுக்குமான இந்த வர்க்க பாச??!!! நட்புக்கு, பிணைப்புக்கு CPM கட்சி சாட்சி. இது சமூகத்தை கண்காணியாக, உளாவாளியாக இந்த அரசும், அவர்களது ஏஜெண்டுகளும்(எ-கா:CPM) மாற்றியுள்ளதற்கு அடையாளம்.
சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை சந்தேகத்துடன் கண்காணிக்கும் ஒரு பேரபாயகரமான சூழலைத்தான் இன்று நாம் காண்கிறோம். சாதி, இனம், மதம், நாடு, தோல், மொழி, ஆடை, வர்க்கம், பாலினம், பிராந்தியம் என்று பார்க்கும் மனிதரையெல்லாம் பிரித்து சுருக்கி சந்தேகத்துடனும், பீதியுடனும், முன் முடிவுடனும் அனுகுவதையே இன்று நாம் பெரு நகரங்களில் பார்க்கிறோம். ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி, அதே சமூகமே தனது ஒவ்வொரு உறுப்பினரையும் தானே கண்காணிக்கும் சூழலைத்தான் ஆளும் வர்க்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்தில் இந்த குழப்பம் அனைத்திற்க்கும் காரணமான தனது தவறுகளையெல்லாம் மறைத்துக் கொள்கின்றன ஆளும் வர்க்கங்கள். நாமோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும், நான் குற்றவாளியில்லை என்று நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கும் வெட்கம் கெட்ட, சுயமாரியதையற்ற இழிநிலையில் உழல்கிறோம். இதுதான் குற்ற பரம்பரை என்று ஒன்று இருப்பதாக உணர்வதின் அடிப்படை. இதுதான் சமூகம் தன் மீது தானே பாசிசத்தை திணிக்கும் விதம்.

ஒரு சமூகமே குற்ற பரம்பரையாக, ஒரு நாடே குற்ற பரம்பரையாக காட்டப்பட்டு அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சூழலுக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சமூகம் தன் மீதே பாசிசத்தையும், சுய கண்காணிப்பையும் செலுத்திக் கொள்கிறது. சமீபத்திய மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பரவலாக உலாவும் கருத்துக்களை கவனித்தால் இது புரிபடும். இதனை இன்னும் வீரியமாக்க சட்டங்களும் இயற்றப்படுகின்றன. அதாவது விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம். இந்த குற்ற பரம்பரை சூழல் இந்த சமூகம் ஒன்றிணைந்து இயங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் உறுதியாகி உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அப்படியொரு சூழல் பரவலாகவில்லை என்பதுதான் நேர்மையான பதில். சரியாகச் சொன்னால் குற்ற பரம்பரைச் சூழல் கண்ணையும், கருத்தையும், சுயமரியாதையும் உறுத்தும் அளவுக்கு பரவி இருக்கிறது என்பது மட்டும்தான் தற்போது உண்மை. ஆனால் இந்த குற்ற பரம்பரை சூழல் தனது விசக் கரங்களை மேலும் மேலும் விரிவாக்கி ஜனநாயகமாக மனிதர்கள் இந்த சமூகத்தில் உறவாடிக் கொள்ளும் ஒவ்வொரு புள்ளியையும், ஒவ்வொரு இடைவெளியையும் மிக வேகமாக தன்னுள் விழுங்கி வருகிறது என்பதுதான் நாம் இங்கு மிக கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு சூழல் பரவலாக வலுப்பட வலுப்பட ஆளும் வர்க்கங்களின் வெட்கங்கெட்ட ஏகாதிபத்திய அடிவருடித்தனமும், பாசிச அடக்குமுறையும், இந்துத்துவ கொடுங்கோன்மையும் அதன் உடன் - எதிர் வினைகளும் இன்னும் பருண்மையான, நுட்பமான, ஆழமான வடிவங்களை எடுக்கும் என்பதுதான் நாம் இங்கு கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம். இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதும் இவற்றைத்தான்.

சமூகத்தை குற்றபரம்பரையாக்கும் இந்த போக்கை, ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்கங்களும் தமது உலகளாவிய சுரண்டலினாலும், உள்ளூர் அயோக்கியத்தனங்களினாலும் உருவாக்கியுள்ள இந்த சூழலை நாம் மாற்றியமைக்க முடியும். உண்மையான குற்றபரம்பரை யாரோ அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தாம் குற்றவாளி இல்லை என்று நீருபிக்க கோரும் ஒரு சூழலை நாம் உருவாக்கினால் அது முடியும். யார் உண்மையில் இந்த படுபயங்கர சூழலுக்கு காரணமோ, அதாவது பெரும் பணக்காரர்கள், ஊரை அடித்து சாப்பிடும் டாடா, அம்பானி போன்ற கொழுத்த தரகு முதலாளிகள், பார்ப்பன கொழுப்பெடுத்த பெரும் ஊடகங்கள், RSS இந்துத்துவ பயங்கரவாதிகள், அவர்களின் ஏஜெண்டுகளான IAS, IPS உள்ளிட்ட பெரும் அதிகாரிகள், வோட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள், சாதி சங்கங்கள் இவர்களின் அடியாள் படையான கிரிமினல் தாதாக்கள், மபியாக்கள், போலீசு, நீதிபதி போன்றவர்கள், பிற மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களை நாம் குற்ற பரம்பரையாக மாற்றினால்தான் உழைக்கும் மக்களாகிய நாம் குற்ற பரம்பரையாக கருதப்படுவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
அதற்கு முதலில், குற்றபரம்பரையாக நாம் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும். பிள்ளை பெற்று வளர்க்கும் பன்றிகளாக அல்ல மாறாக சுயமரியாதையுள்ள மனிதர்களாக உணர வேண்டும். விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயகத்திற்க்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் உறுதிப்படுத்த போராட வேண்டும். தீர்வு தனிமனிதர்களிடம் இல்லை, ஒரு சமூகமாக நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

அப்படியொரு சூழலில் மக்களை குற்றவாளிகளாக்கி கண்காணித்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் களிவெறியாட்டம் போட்ட ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் உண்மையான குற்றவாளிகள் குற்ற பரம்பரையாக நடத்தப்படும் அந்த சூழலில் 'குற்ற பரம்பரை' 'குற்ற பரம்பரை' என்று கதறி கூச்சலிடுவார்கள். அப்படித்தான் ரஸ்யா, சீனாவில் நடந்த பொழுது உலகெங்கும் ஆளும் ஏகாதிபத்திய கும்பல்களும் அவர்களின் ஆசன வாய்களாக செயல்பட்ட ஊடகங்களும் கூச்சலிட்டன. அப்படியொரு முடை நாற்றமெடுக்கும் கூச்சலே நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதற்கான அளவுகோல். அதுவே மக்களுக்கான புதிய ஜனநாயகம் உறுதிப்பட்டுள்ளதிற்கான அடையாளம்.

அசுரன் 

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்