ஒரு வாரம் முன்னிலிருந்தே
செல்பேசிகள்
சொல்லத்தொடங்கி
விட்டன ஹேப்பி நியூ இயர்……..
நடந்தவைகளை
மறப்போம் பத்திரிக்கைகளின்
காலச்சுவடுகள்
மெல்ல பதிந்து விட்டு
செல்கின்றன……
நடந்தவைகளை
மறக்கமுடியுமா என்னால்
நிம்மதியாய் உறங்கத்தான்
முடியுமா இனி
நடக்கப்போவதை நினைத்தால்……
கயர்லாஞ்சியின்
கொடுமைகள் எப்படி
மறையும்
அது மறையாத
வரை என் கனவுகளின்
நடுக்கங்களும் குறையப்போவதில்லை……..
என் காதுகள்
இசையை கேட்காமலே
மூடிக்கொள்கின்றன……
எப்படி என்
காதுகள் திறக்கும்
பறையை அடித்ததற்காக
பீயை வாயில் திணித்தவன்
மேல்சாதியாய் நீடிக்கும்
வரை
என் காதுகள்எப்படி கேட்கும்
ஹேப்பி நியூ இயரை……
என் வாய்
குழறிக்கொண்டிருக்கின்றது
வெட்டுப்பட்டு
சாகும் போது மேலவளவு
முருகேசனின் குரல்
குழறியதை விட இன்னும் அதிகமாக
நான் எப்படி சொல்வேன்
ஹேப்பி நியூ இயர்……..
என் பாதங்கள்
ஆட
மறுக்கின்றன பாதணிகள்
கக்கத்தில் ஏறுவது
நிற்காதவரை
என்னால் ஆட
முடியாது………
ரெட்டை டம்ளர்
பாலியல் வன்முறை
கொல்லப்படும் விவசாயிகள்
நெசவாளிக்கு
தூக்கு கயிறான கைத்தறி
இப்படி எதுவுமே
மாறவில்லை
ஹேப்பி நியூ இயரும் கூடத்தான்……
“மாற்றம்
ஒன்றே மாறாதது”
ஆம்
மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றத்தினை கொண்டுவருவோம்
மக்களோடு மக்களாக
சாவது தெரியாமல்
ஊளையிடுபவர்கள்
தொடரட்டும்
நாம் தொடங்குவோம்
நமக்காக
அங்கு
பலரின் முடிவுகள்
காத்திருக்கின்றன .