ன்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை



கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவிலங்கையர்கள்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!

கடுமழையில் விழுதுடையும் ஆல்போல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து தமிழ்த்தேசிய அரசியல் விட்டு வைக்கா


பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண் புலி-சிங்கம் வடிவில்!

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்கொலிக்கும் தமிழ்த் தினாவெட்டு

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஊர்த்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் இலங்கைத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து யுத்தத்துக்கு உருவேற்றி...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய?தூ...

2009 ஆவது தேசத்தில்
யுத்தம் தொலைத்துத் தமிழரை
உயிரொடு உலாவவிடத் தமிழ்க் கூத்து ஒழிக
ஓங்குக இலங்கையர் ஒற்றுமை உறவு!


ப.வி.ஸ்ரீரங்கன்