வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த

சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான உசாத்துனையாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

 


இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், துருக்கிக்கும், கிரீசிற்கும் இடையிலான அதிகாகரப் போட்டியில் சிக்கி, இனரீதியாக இரண்டாக பிரிந்திருக்கும் தேசம் சைப்பிரஸ். பெரும்பான்மை கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும், தீவின் 60% நிலப்பரப்பை கொண்ட, தெற்கு பகுதியே " சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கே சிறுபான்மை துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும், 40 % நிலப்பரப்பை கொண்ட " வடக்கு சைப்ரஸ் துருக்கி குடியரசு" (சுருக்கமாக TRNC) தன்னை சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தாலும், இதுவரை துருக்கியை தவிர வேறு எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.


"பெர்லின் மதில்" வீழ்ந்ததை, குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வாக எல்லோரும் அன்று கொண்டாடினார்கள். பெர்லின் மதில், இரண்டு அரசியல் கோட்பாடுகளை கொண்ட தேசங்களை பிரித்ததால், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். சைப்பிரஸ் தீவை பிரிப்பது, இருநாடுகளுக்கிடயிலான சர்வதேச எல்லையாக, எவராலும் (வடக்கு சைப்ரஸ் தவிர) கருதப்படவில்லை. அதனால் அதனை "பச்சைக் கோடு" (Green Line) என்ற பெயரில், ஐ.நா. சமாதானப்படை பாதுகாக்கின்றது. எல்லையில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால், குறிக்கப்பட்ட எல்லைக்காவல் நிலையங்களூடாகத்தான் பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியும்.

தலைநகரம் நிகோசியா, பெர்லின் நகரம் போல இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரபல கடைத்தெருவான "லேட்ரா தெரு" முடிவில் எல்லைக்காவல் நிலையம் உள்ளது. கிரேக்க சைப்ரசில் இருந்து செல்பவர்களுக்கு, துருக்கி பொலிஸ் ஒரு சிறிய துண்டில், நுழைவு விசா குத்தி தருகின்றது. முன்பு பாஸ்போர்ட்டில் இந்த விசா இருந்தால், கிரேக்க சைப்பிரசினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துருக்கி சைப்பிரசின் எந்தவொரு அரசாங்க பத்திரத்தையும், கிரேக்க சைப்ரஸ் சட்டவிரோதமாக பார்க்கின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் தான், இரண்டு பகுதிகளுக்குமிடையில் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. "வடக்கு சைப்ரஸ் அரச வர்த்தக ஆணையகம்" வழங்கும் பத்திரங்களை, தெற்கு சைப்ரஸ் ஏற்க மறுத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இரு தரப்புக்குமிடையில், அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றது. தெற்கு சைப்ரஸ் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான பின்னர் தான், இது சாத்தியமாகியது. வடக்கு சைப்ரஸ் பகுதிகளுக்கும் சேர்த்து, (கிரேக்க) சைப்ரஸ் குடியரசு உரிமை கொண்டாடுவதை, சர்வதேசம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் வடக்கு சைப்ரஸ், தனி நாடாக செய்யற்பட்டு வருவது கண்கூடாக தெரியும் யதார்த்தம் என்பதால், அங்கே கிரேக்க சைப்ரஸ் குடியரசின் அதிகாரம் செல்லாது என்பதாலும் தான், ஐரோப்பிய ஒன்றிய அனுசரணை கோரப்பட்டது.

சைப்ரசை இரண்டு துண்டுகளாக்கிய 1974 ம் ஆண்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. போருக்கு முன்னர், வடக்கு பகுதியில் கிரேக்க மக்களும், தெற்கு பகுதியில் துருக்கி மக்களும், கணிசமான தொகையினராக ஒன்று கலந்து வாழ்ந்து வந்தனர். இனப்பிரச்சினை முற்றி இனக்கலவரமாகி, அதனால் சிறுபான்மை துருக்கி இனத்தவர்கள், தமக்கென தனி நாடு கோரி வந்தார்கள். கடல் கடந்து வாழும் தனது சகோதர இனத்தவர்கள் கொல்லப்படுவதாக காரணம் காட்டி, துருக்கி இராணுவம் படையெடுத்தது. இப்போதிருக்கும் பச்சைக் கோடு வரை முன்னேறிய துருக்கி இராணுவத்தை, எதிர்க்க முடியாத கிரேக்க சைப்ரஸ் இராணுவம் பின்வாங்கி, போர்நிறுத்தம் வந்தது.

அத்தோடு பிரச்சினை தீரவில்லை. வடக்கில் வாழ்ந்த கிரேக்க இனத்தவர்கள் பலர், (துருக்கி தேசியவாதிகளாலும், ஆக்கிரமிப்பு படைகளாலும்) படுகொலை செய்யப்பட்டதால், கிரேக்க மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அதேபோல தெற்கில் வாழ்ந்த துருக்கி இனத்தவர்கள் பலர், (கிரேக்க பேரினவாதிகளால்) படுகொலை செய்யப்பட்டதால், துருக்கி மொழி பேசும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். பிற்காலத்தில் பொஸ்னியாவில் நடந்த இனச்சுத்திகரிப்பு நாடகம், அப்போதே சைப்ரசில் அரங்கேறியது. இந்த கடந்தகால இனப்படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை எதிரொலிக்கின்றது. தேசத்தை ஒன்றிணைப்பதற்கு, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தடையாக உள்ளனர். இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இருக்கும் கடும்போக்காளர்கள், கடந்த கால இழப்புகளை வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், நிலங்கள், உடமைகள் யாவும் அகதிகளாக வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இது இரண்டு பக்கமும் நிகழ்ந்தது. கிரேக்க மக்கள் பெரும்பான்மையினர் என்பதால், அவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கு சைபிரசில் அவர்கள் அதிகளவு நிலங்களை இழந்தனர். மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவான துருக்கி மக்கள், தற்போது 40% சைப்ரசிற்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று வரை வடக்கு சைப்ரசில் நிலை கொண்டுள்ளது. அதனால் கிரேக்க மக்கள் இன்றும் கூட வடக்கு சைப்ரசை தனி நாடாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என கூறி வருகின்றனர். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

வடக்கு சைப்ரசில் துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம், தீவின் இனவிகிதாசாரத்தை மாற்றும் வகை, துருக்கி மொழி பேசும் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில், திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. துருக்கி குடியரசில் இருந்து பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள், வீடு, நிலம், பிற வசதிகளை செய்து தருவாதாக வாக்குறுதியளித்து, வடக்கு சைப்ரசில் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது தேசத்தை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, கிரேக்க சைப்ரஸ் இந்த குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும், என்று கோரி வருகின்றது. பேச்சுவார்த்தை முறிவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது.

நிலப்பிரச்சினை அண்மையில் இன்னொரு பரிமாணத்தை கண்டது. வடக்கு சைப்ரஸ் மொத்த தீவிலும், பல அழகான பகுதிகளை கொண்டது. இதனால் (முன்னாள் காலனித்துவ நாடான) பிரித்தானியாவை சேர்ந்த, ஓய்வூதியம் பெறும் வயோதிப ஆங்கிலேயர்கள், அங்கே வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். தெற்கு சைப்ரசை விட வீடுகளின் விலை வடக்கில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வீட்டுமனைகள் பல, குடிபெயர்ந்த கிரேக்க இனத்தவருக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக, சைப்ரஸ் குடியரசு ஆட்சேபித்து வருகின்றது. நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை, அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் போனது. இடம்பெயர்ந்து வாழும் கிரேக்க சைப்ரஸ் மனுதாரர் ஒருவர், வடக்கு சைப்ரசில் தனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வீடு கட்டி இருப்பதாக, ஆவணங்களை கொண்டு நிரூபித்ததால், அந்த வீட்டை இடிக்கும் படி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வடக்கு சைப்ரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரிட்டிஷ் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை இழக்கப்போவது ஒரு புறமிருக்க, தெற்கு சைப்ரசில் துருக்கி மக்களுக்கு சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை பன்முகப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரசை விட தெற்கு சைப்ரஸ் குடியரசு, பல வழிகளிலும் முன்னேறி உள்ளது. எப்படியோ சம்பள விகிதம் வடக்கை விட தெற்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகம். இதனால் அண்மைக்காலத்தில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தொடர்ந்து, பல துருக்கி இனத்தவர்கள் தெற்கு சைப்ரஸ் வந்து வேலை செய்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இணைவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது. பெரும்பாலான வடக்கத்திய துருக்கி மக்கள் இணைவுக்கு ஆதரவாகவும், அதேநேரம் தெற்கத்திய கிரேக்க மக்கள் இணைப்புக்கு எதிராகவும் உள்ளனர்.


கிரேக்க சைப்ரஸ்காரர்களின் பணபலம் அவர்களுக்கு திமிரையும் கொடுத்துள்ளது. பலர் இனப்பெருமை கொள்பவர்களாகவும், அதுவே சிலவேளை வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதமாக மாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தீவொன்றில் வாழும் காரணமாக இருக்கலாம் என்று, என்னோடு பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதம் சைப்ரசில் எந்தளவிற்கு உள்ளது என்பது பற்றியும், வளர்ந்த நாட்டில் எவ்வாறு ஊழலும் வளர்ந்துள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

- தொடரும்...........