சாதாரணமாக எகிப்து என்றதும் நம் நினைவுக்கு ´பிரமிடு´ ஏனோ தானோ என்று வந்துவிட்டு போகும். படங்களிலும், ஒவியங்களிலும் ´பிரமிடு´ பற்றிய உருவகம் நம்மை ஒரு எல்லைக்குள் சிந்திக்க வைத்துவிடுகின்றது. அதனால் கொஞ்சம் பிரமிட் பற்றிய வர்ணனைகளுடனே எகிப்திய புராதன கலைகளை பார்ப்போம்.
´கிஸா´ (Gizeh) என்ற யெருடைய பிரமிட் கட்டுவதற்கு இரண்டு இலட்சத்து முப்பதினாயிரம் பாறைச் சதுரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரங்கப் பாறைகளின் எடை இரண்டரை டன் எடையுள்ளவை என்றால் அதன் பிரமாண்டத்தை என்னவென்பது? ´கிஸா´ பிரமிடின் உயரமோ 481- அடி. அடிப்படைச் சதுரங்கத்தின் பக்கம் 755- அடி. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வைத்து ´கிஸா பிரமிட்´ கட்டி முடிப்பதற்கு 20- ஆண்டுகள் ஆனது. பிரமிட் கலை என்பது மக்கள் வாழ்வோடு இணைந்தது இல்லை. மன்னர்களுக்காக மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டும் தங்கள் தரத்தை பிரமிடுகள் கட்டி நிர்ணயிப்பதிலும் இருந்த விசித்திரமான வேத்தியல் கலையைச் சேர்ந்தது பிரமிட். 
பன்டைக்கால தொடக்கத்தில் எகிப்தியர்களிடம் செப்பு உலோகம் மட்டுமே பழக்கத்தில் இருந்திருக்கின்றது. இரும்போ மற்றும் வேறு உலோகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காத நிலையில், பிரமாண்டமான பிரமிட்டுகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. பிரமிட்டுகளின் உச்சத்தில் இருக்கும் பாறைகளை செப்புக் கடப்பாரைகளாலும், கத்திகளாலும் உடைத்து செதுக்கி இருக்கின்றனர்.
பிரமிடுகளின் உட்புறங்களில் சுவர்களிலும் அன்றை எகிப்தியர்களின் வாழ்க்கைகளை காட்சிகளான ஒவியத்தில் வரைந்து வைத்திருக்கின்றனர். இந்த ஓவியங்களே பிற்காலத்தில் சமூக ஆய்வாளர்களின் எகிப்திய பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. ஐந்தாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒவியங்கள் அவை. ஆனால், பிரமிட் உருவாக்கிய கலைஞர்களின் பெயர்களை பொறித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. அரிதாக தெய்வ சிற்பங்களில் சில கலைஞர்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 
அதேப்போல், சிற்பங்களிலும் அரசர்களும், அரசிகளும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முறையை கவனித்தால் எல்லாப் பிரமிடுகளிலும் ஒரே தோற்றத்தில் சிற்பங்கள் இருப்பது போன்ற உணர்வை உருவாக்கி விடுவதால் பல பிரமிடுகளைப் பார்க்கும் போது பார்வையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. 
பிரமிடுகளுக்கு அருகில் இருக்கும் ஸ்பிங்க்ஸ் (Sphinx) எகிப்திய சிற்பக்கலையின் அபார சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரமிடுகளுக்கு காவல் தெய்வமாக இவை கருதப்படுகின்றது. ஓர் பெண்ணின் தலை, உடல் சிங்கத்தின் கால்களை உள்ள உருவம் போன்று அமைக்கப்பட்டு கால்களை மடக்கி படுத்திருப்பது போல் உள்ள தோற்றங்களைக் கொண்டது ஸ்பிங்க்ஸ். தலையில் மன்னர்களுக்குரிய க்ரீடம் வைக்கப்பட்டிருக்கின்றது. பெரிய ஸ்பிங்ஸின் நீளம் 240- அடி. உலகப் புகழ்பெற்ற இப்பெரிய ஸ்பிங்ஸின் பாதங்களை பாலைவனத்தின் மணல்கள் மூடிவிடுவதும், அப்போதைக்கு அப்போது மலையாக குவியும் மணல்களை அகற்றும் வேலைகளில் இன்றும் எகிப்திய அரசு செய்துக் கொண்டிருக்கின்றது.
எகிப்திய கலைகளில் மக்களிடம் வழக்கத்தில் இருந்தவைகளை சொல்ல வேண்டுமானால் தொடக்க காலத்தில் அவர்களின் சித்திர எழுத்துமுறைகள் (Hieroglyph) சொல்லலாம். பிற்காலத்தில் 24- எழுத்துக்கள் கொண்ட நெடுங்கணக்கு வழக்கத்தில் இருந்திருக்கின்றது. எழுதுவதற்கு பேப்பர் சுருள்களை பயன்படுத்தினர். ´பெப்பைரஸ்´ செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேப்பரில் கணக்குகள், இலக்கியங்கள், அரசு நிர்வாக ஆணைகள், புராண வரலாறுகளையும் எழுதி பாதுகாப்பாக வைத்திருந்திருக்கின்றனர். 
எகிப்திய ஓவியக் கலையில் இயற்கையாக இருக்கின்றன. பிரமிடுகளில் காணப்படும் ´உர்´ரென்ற முகஜாடையும், முறைத்துக் கொண்டு பார்க்கும் கடின பார்வைகளும், விரைப்பான மிடுக்கும் ஓவியங்களில் இல்லை. பறவைகள், போர் காலச்சூழல்கள், மிருகங்கள் அதிகமாக ஒவியங்களில் இருக்கிறது. மனிதர்களை மிருக உருவங்களோடு உள்ள உறுப்புக்களுடனும் அதிகளவில் ஒவியங்களில் இருக்கின்றன. 
எகிப்தியர்களிடம் அக்காலத்தில் தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தட்டை தட்டையான மாடல்களில் சிற்பவேளைகள் செய்யப்பட்டும் அல்லது அபூர்வமான வேலைப்பாடுகளுடன் செதுக்கியும், வைத்திருந்தனர். நவரத்தினக் கற்களை தங்க நகைகளுடன் பொருத்தியும் வைத்திருந்தனர். ´துர்க்குவாஸ்´ என்ற நீலநிறக் கல்லும், பச்சை நிறக்கல்லும் அதிர்ஷ்ட கற்களையாக வழக்கத்தில் இருந்தது. சில நவரத்தின கற்றகளில் எழுத்துக்களையும் செதுக்கி வைத்தனர். பொற்கொல்லர் பணிக்கு தேவையான எல்லாத் தொழில் நுட்பங்களும் அக்காலத்திலேயே எகிப்தியர்களுக்கு தெரிந்திருந்தது. முத்து மாலைகளை எகிப்திய பெண்கள் விரும்பி அணிந்தனர். மோதிரம், வளையல்கள், காதில் மாட்டும் அணிகலன்கல், தலைக்கு, இடுப்புக்கு என அனைத்து இடங்களுக்கும் நகைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கின்றது. 
கட்டடக் கலையை பார்த்தோமனால், பெரிய பெரிய பாறைத்துண்டங்களாலும், சுட்ட செங்கல்களிலும் பயன்படுத்தி இருக்கின்றனர். எகிப்தியர்களில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை மிகுந்த ஆர்வத்துடனும், பல ஆண்டுகளாக எல்லையற்ற பொறுமையுடனும் இருந்து சாதிக்கும் திறனை பெற்றிருந்திருக்கின்றனர். ஒரு சமூகத்திற்கு தேவையான கட்டட கலை நிபுணர்கள் சிற்பிகள் பொற்கொல்லர் ஓவியர்கள் தச்சர்கள் என எகிப்திய சமூகத்தில் இருந்திருப்பது ஆச்சரியமான எகிப்திய நாகரீகம் தான்.
தமிழச்சி
23/12/2008