01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

மதவாதி மனிவுரிமைவாதியாக இருக்கமுடியாது.

தலித் மாநாட்டில் பசிர் என்ற முஸ்லிம் மதவாதி, முஸ்லீம் இடையே சாதி இல்லையென்றார். ஒரு பகுத்தறிவாளனாக அல்லாது, முஸ்லீம் என்ற மத அடையாளத்துடன் சாதிய அவலத்தையே மூடிமறைக்க முனைந்தார். இவர்கள் மனித உரிமைவாதிகளாம். ஒரு மதவாதி எப்படி மனித உரிமைவாதியாக இருக்கமுடியும். பக்தன் இருக்க முடியும், மதவாதியோ தத்துவஞானியோ (புலியெதிரிப்பு ஆய்வாளர்) அல்ல.


தமிழ் மணத்தில், எமது தமிழ் அரங்கம் தளத்தில் வாசகர் ஒருவர், ஆதாரத்துடன் முஸ்லீம் மதத்தில் சாதியம் பற்றி கூறுவதை பாருங்கள்.

பி.இரயாகரன்
22.10.2007

நீங்கள் பதிந்துள்ள விஷயம் வெகுவாக உண்மையென்று நினைக்கின்றேன். இது உண்மை தான். குர்-ஆனும், முகம்மது நபியின் இறுதி சொற்பொழிவும் சாதி, நிற, மொழி வேற்றுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கிறது. ஆனால் நடைமுறையில் உலக முஸ்லீம்களிடையே குறிப்பாக உர்தூ பேசும் முஸ்லீம்களிடையே நீங்கள் கூறியுள்ள சாதி வேறுபாடு இருப்பது உண்மைதான். சமீபத்தில் "India Untouched" எனும் திரைப்படம் கண்டேன்.

அதனை இயக்கியவர் ஸ்டாலின் எனும் ஒரு மலையாளி ஆவார். அந்த திரைப்படம் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்களால் திரையிடப்பட்டது. இயக்குனரும் அங்கே இருந்தார். அத்திரைப் படம் அனைத்து மதங்களிலும் சாதியிருப்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது. இஸ்லாத்தில் உள்ள சாதி பழக்கங்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். ஏனெனில் நான் அறிந்த இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை. நடைமுறையிலும் ( நான் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்) நான் காணவில்லை. படம் முடிந்ததும் சேக்குகளும் செய்யத்களும் செய்யும் சாதி வேறுபாடுகளைப் பற்றி, உர்தூவினை தாய் மொழியாகக் கொண்ட நண்பனிடம் கேட்ட போது அவன் அதை அமோதித்தான்.

நடைமுறையில் உள்ள இஸ்லாத்தில் தமிழகத்தில் கூட முஸ்லீம்களிடையே இராவுத்தர், மரைகாயர் என்று பல்வீனமான பிரிவுகள் உள்ளன. ஆனால் திருமணம் போன்றவற்றில் இப்பிரிவுகள் பெரிய தடையாக இருப்பதில்லை. ஆனால் உர்தூ மக்களிடையே, செய்யத் - ஷேக் பிரிவு ஒருவருகொருவர் ஆகாத பிரிவுகள். இவர்கள் இருவரும் தங்களை அரபு நாட்டின் வாரிசுகள் எனக் கருதுகின்றனவாம். அந்த படத்திலும் அதைத்தான் கூறினார்கள். எனது நண்பனும் அதைத்தான் கூறினான்.

ஒரு காஷ்மீரத்து நண்பரிடம் இது பற்றிக் கேட்ட போது அவரும் அது உண்மை யென்றார். அதன் பிறகுதான் நான் பாக்கிஸ்தானில் நிகழும் கெளரவ கொலைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த திரைப் படத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன். அதிர்ச்சித் தகவல்கள் அதில் உள்ளன. இந்த சாதி சண்டைகளால் தனியே கட்டப்பட்ட பள்ளிவாசலையும் பற்றி கூட காணலாம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதை போல இது பீகாரில் அதிகம் எனக் கருதுகிறேன். அப்படத்திலும் அப்படித் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. (ஆனால் ஷேக் - செய்யது சண்டை இந்தியா முழுவதும் உள்ளது என நினைக்கிறேன்)(அந்த படம் இந்திய கிறிஸ்தவத்தில் உள்ள சாதியையும், சீக்கியர்கள் மத்தியில் உள்ள சாதியையும் பற்றிக் கூட பல அதிர்ச்சித் தரும் ஆனால் நடை முறையில் உள்ள உண்மைகளைக் கூறுகிறது.)உங்கள் பதிவிற்கு நன்றி. அப்படத்தினைப் பார்த்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட நினைத்தேன். ஆனால் அப்போது இணையப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை.

மு மாலிக்

http://vilambi.blogspot.com/