Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர்.

அதையே தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் தான், புதுவை இரத்தினதுரை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கும் பூ வைக்க முனையும் ஒரு மோசடி தான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டு, புலிக்கு இடதுசாரிச் சாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கை வகுப்பாளராக தன்னைத் தான் பாராட்டிக் கொண்டவர். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்கு புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை ஏமாற்ற முயன்றவர். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பாளரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலியின் நிலைக்கு ஏற்ப தாளம் போட்டு தனது பிழைப்புக்கு ஏற்ற நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.

 

இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்சியவாதியே" என்று கூறுவதன் மூலம், நக்கிப் பிழைக்கும் தனது நிலைப்பாடு சார்ந்து தான் இருக்கும் அமைப்பை மார்க்சிய இயக்கமாக சித்தரித்துக் காட்ட முனைகின்றார். பிழைப்புத் தனத்தின் கடைக் கோடியில் நின்று இப்படி புலம்புவது நிகழ்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்ட வரலாற்றில் அதற்கு ஆதரவாக இருந்த இவர், அதையே மார்க்சிய போராட்டமாக சித்தரிப்பது ஒரு விசித்திரமான விடையம். சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதிப் போராட்டமோ, ஒரு வர்க்கப் போராட்டம் அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அம்சம் மட்டும் தான். அடிப்படையில் ஒரு ஜனநாயக கோரிக்கை மட்டும் தான். சண் தலைமையில் நடந்த போராட்டம், வர்க்க அடிப்படையிலான கட்சியை கட்டுவதிலும் சரி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதிலும் சரி இதில் எதையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார போராட்டங்களை வர்க்கப் போராட்டமாக காட்டி, வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பிச் சீரழித்தனர்.

 

அன்றைய ஜனநாயக போராட்டத்தில் கலந்த கொண்ட புதுவை இரத்தினதுரை, ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். அதை மார்க்சியமாக நம்பியதும், அதையே மார்க்சியமாக விளக்குவதும், இதுவே அவரின் சித்தாந்தமான போது இயல்பில் புலிகளில் இணைவதை நியாயப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையில் நிற்கும் ஒருவன் நிலைமைக்கு ஏற்ப ஊசலாடுவது, புதுவை இரத்தினதுரைக்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் புதுவை இரத்தினதுரை, ஜனநாயகக் கோரிக்கையை கைவிட்டு வலதுசாரிகளான புலிகளில் இணைந்தார். வலதுசாரிக் கருத்துக்காக தன்னையும் தனது தோலின் நிறத்தையும் மாற்றிக் கொண்டதுடன், அவர்களின் கருத்துகளையும் அச்சடித்தது போல் பிரச்சாரம் செய்தவர். அன்றாட நிலைமை சார்ந்து வலதுசாரிய கருத்தின் அப்படையில் பல கவிதைகளை புனைந்தவர். இந்த கவிதைகளில் அவர் முன்னர் போராடிய சாதிய அம்சத்தை மருந்துக்கு கூட இணைக்கத் தவறியவர். பிழைப்புக்கும் அந்தஸ்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, மக்களின் தியாகங்களை கேவலப்படுத்திய ஒருவரே புதுவை இரத்தினதுரை.

 

பிழைப்புக்கு சோரம் போன புதுவை இரத்தினதுரை நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப கவிதை பாடியவர். புலிகளின் தளத்துக்கு ஏற்ப அதற்கு இசைந்து பாடியவர். சொந்த உணர்வில் இருந்து கவிதை படிக்கவில்லை. புலியின் உணர்வுக்கு ஏற்ப கவிதை படித்தவர். மக்களின் அடிப்படை உணர்வு சார்ந்த ஜனநாயகத்தை ஏறி மிதிப்பதில், தன்னைத் தான் இசைவாக்கியவர். புலம்பெயர் சமூகம் பற்றிப் பாடிய கவிதை ஒன்றை உதாரணத்துக்கு எடுப்போம்.

 

".. பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்
தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் .."

 

என்று அன்று பாடியவர். இன்று அதுபற்றி வழங்கிய பேட்டியில் என்ன சொல்லி நக்குகின்றார் எனப் பார்ப்போம். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்று இன்று நக்கிப் பிழைத்தபடி பினாற்றுகின்றார். இன்று வெளிநாட்டில் உழைத்து வாழும் மக்களின் பணத்தில் நக்கிப் பிழைக்கின்ற நிலைக்கு புலிகள் தங்கி இருப்பதால் தான், இந்த குத்துக் கரணம். பணம் தருவதைத் தான் கவிஞர் உணர்வு குன்றாதவர்கள் என்கின்றார். பணத்துக்காக தன் நிலைப்பாட்டையே மாற்றிவிடும் இந்தக் கவிஞர், பணத்தை பாயாக விரித்தால் அதையே புணரக் கூடியவர் தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது கவிஞரின் இன்றைய உணர்வு.

 

அன்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தான், இப்படி தூற்றியதாக ஒப்புக் கொள்ளும் இவர் அதை அன்றைய உணர்வு என்கின்றார். அந்த உணர்வு சார்ந்து வெளிநாடு சென்றவர்களை பயந்து பறந்தோடிய கோழைகள் என்று காரணத்தை கற்பிக்கின்றார். உண்மையை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு அதை துப்பாக்கி முனையில் பாதுகாத்தபடிதான் தூற்றமுடிகின்றது. நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் பயந்து ஒடும் கோழைகள் என்பதாலா, நாட்டை விட்டு வெளியேறினர். இல்லை ஒரு நாளும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலே, புலம் பெயர வைத்தது. பிரதானமானது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பானது. இரண்டாவது மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பானது. இந்த இரு பிரதான காரணத்தினாலும் தான் புலம் பெயர்வு ஒரு விதியாகியது. இன்று வன்னியை விட்டே வெளியேற முடியாத பாஸ் நடைமுறை மூலமே, வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர். சொந்த தேசிய அரசியலால் அல்ல.

 

வெளிநாட்டை நோக்கிய புலம் பெயர்வில் பொருளாதார ரீதியான தனிமனித முன்னேற்றம் சார்ந்த அன்னிய மோகம், தேசத்தின் தேசியத்தின் அடிப்படைப் பண்பாக கொள்கையாக இருக்கும் வரை, எதையும் தூற்ற புலிகளுக்கு எந்த தார்மிக பலமும் கிடையாது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட இளைஞர் குழுவாக, மக்களின் அடிப்படை வாழ்வியலுடன் ஒன்றிணையாத நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டபடி உருவான ஒரு இயக்கமே. இந்த இயக்கம் இராணுவ தாக்குதலை நடத்திவிட்டு கோழையைப் போல் ஒடி ஒழித்துவிடும் நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சிங்கள இராணுவத்தின் சூறையாடலுக்கு உள்ளாக்குவதே ஒரு போராட்டமாகியது. தாக்கியவன் கோழையைப் போல் பயந்து ஒடி ஒழித்துவிடும் போது, தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அங்கிருந்தும் அந்த மண்ணில் இருந்தும் தப்பியோடுவது ஒரு இயங்கியல் விதி.

 

இதில் பொருளாதார ரீதியாக ஒரு சாண் வயிற்றுக்கு வழி காட்ட முடியாத தேசிய பொருளாதார கொள்கையை பிரகடனம் செய்யும் (இன்று தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி நிற்கின்றனர்) புலிகளின் அதிகாரத்தில், சொந்த மண்ணை விட்டு சிங்கள தேசம் நோக்கிய புலம் பெயர்வும், அங்கிருந்தும் புலம் பெயர்வையும் புலிகள் தான் ஊக்குவித்தனர். இது மட்டுமா இல்லை. புலிகள் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுத்து அதன் தொடர்ச்சியில் அனைத்து அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடிய போது, ஈவிரக்கமற்ற படுகொலைகளே தேசிய அரசியலாகியது. இந்த நிலையில் மற்றைய அரசியல் பிரிவுகளும், இயக்க ஆதரவாளர்களும் அவர்கள் குடும்பத்தினர் முதல் கொண்டு அனைவரும் படுகொலைகளில் இருந்து தப்ப புலம் பெயர்வை ஒரு நிபந்தனையாக்கினர். எப்படி வாய் மூடி மக்கள் செம்மறிகளாக வாழ வேண்டும் என்பதை புலிகளின் உத்தியோகபூர்வமாக அன்று வெளியிட்ட கருத்தில் நாம் காணமுடியும். "40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டிவிட்டு உங்களுடைய வாய்களை முடி வைத்துக் கொள்ள வேண்டும்." என்று புலிகளின் மத்திய குழு உறுப்பினர் யோகி கூறியதில் இருந்தே புதுவை இரத்தினதுரை கவிதையின் கருவைத் தேடியவர். இதை அவர் தாண்டவில்லை. சாமி சரணம் போட்டபடி வாயை உண்பதற்கு மட்டும் திறக்க கோரியவர்களுக்கு, அவற்றை இசையாக்கியவர். மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர்கள் என்று தலைவரின் பெயரில் துண்டுப் பிரசுரம் போட்டு, அந்தத் தளத்துக்கு ஏற்ற மெட்டில் தான் இன்று புதுவை இரத்தினதுரையின் சொல் அலங்காரங்களும், அவரின் பிழைப்புச் சார்ந்த செழிப்பும் உயிர் வாழ்கின்றது. மக்கள் மக்கள் என்ற ஒப்பாரிகளும் தொடருகின்றது. எல்லாம் புலிமயமாகி அதுவே துப்பாக்கியின் ஒரேயொரு மொழியான நிலையில், வாய் மூடிய சமுதாயத்தில் பலவீனமான சமூக அறிவியலில் பின் தங்கிய பெண்கள், இளம் குழந்தைகள் புலிகளின் ஆதார சக்தியாகினர். இப்படித் தான் புலிகள் மீண்டும் ஆள் திரட்ட முடிந்தது. தற்போது கட்டாய இராணுவ சேவை மறைமுகமாக அமுலுக்கு வந்துள்ளது.

 

அன்றும் சரி இன்றும் சரி தேசிய முதலாளிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் சொத்துகளை பலாத்காரமாக அபகரித்தும், மிரட்டியும் கறக்கின்ற நிலையில், அவர்களும் கூட நாட்டைவிட்டே வெளியேறினர், வெளியேறுகின்றனர். இப்படி பற்பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டே புலம் பெயர்ந்தனர், புலம் பெயர்கின்றனர். 1983 க்கு பிந்திய இரண்டு வருட காலமே இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை மிக உச்சத்தில் இருந்த காலம். இந்த நிலையை பின்னால் ஒருக்காலும் அடையவில்லை. புதுவை இரத்தினதுரை காட்டும் காரணம் போலியானது. ஆயிரம் ஆயிரமாக 1983 - 1985 க்கும் இடையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயக்கங்களில் இணைந்தனர். ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் புதைகுழியில் புதைத்த போது இது தலைகீழானது. புலம் பெயாந்தவனை திட்டி தீர்ப்பதால் உண்மை பொய்யாகாது.

 

புலம் பெயர்ந்தவனின் உழைப்பைப் பற்றி கொச்சைப்படுத்தும் போது "தூசு தட்டியே காசு பிழைப்பவர்கள்" என்ற உழைப்பின் மீதான வெறுப்பைப் பாடத் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் வேர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள். ஆனால் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தூசு தட்டிய காசை இன்று பல்வேறு வழிகளில் வறுகுபவர்களாக மாறியுள்ளனர். அன்று கிண்டல் அடித்த அதே புலிகள் தான், இன்று அதில் தங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்காக, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களின் நியாயமான போராட்டம் எதையும் புலிகள் முன்னெடுப்பதில்லை. அதற்கு எதிராக இருந்தபடி மூலதனத்துக்கு சேவை செய்வதில், தம்மைத் தாம் தலைசிறந்தவராக காட்டிக் கொள்கின்றனர். புதுவை இரத்தினதுரை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பப் பாடிப் பிழைப்பவர் தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து பாடியவர் அல்ல.

 

தமது சொந்த நடத்தையை நியாயப்படுத்த மக்களுக்கு எதிராக பற்பல கதைகள் பல சொன்ன போதும், ஒன்றை மட்டும் தற்போதைக்கு எடுத்துக் கொள்வோம். இவர் வழங்கிய மற்றொரு பேட்டியில் "இனங்களுக்கிடையிலான சமத்துவம் எமது கனவுகளில் ஒன்றுதான். கணிசமான அளவு அது நனவாகி வருகின்றது. இனத்தின் அடையாளத்தின் மீதான அழிப்புக்கு எதிராக ஆரம்பித்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இப்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிச் சிங்கள சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறது. இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தினுள்ளே சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உறைந்து போகும் அடக்கு முறையை மீறியும் படுகொலையில் இருந்து தப்பியும் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகின்றார்.) நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" புலம்பி புலம்பி உள்ளடகத்தை மழுங்கடிக்க முனைகின்றார்.

 

பல்வேறு அடிப்படையான கருத்துகள் மீது உண்மையை குழி தோண்டி புதைக்கின்றார். இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி சிந்திப்பதாக கூறும் இவர், இந்த ஐக்கியத்துக்கு புலிகள் குண்டு வைக்கவில்லையா? ஏன், நீர் சிங்களவன் என்று ஒருமையில் அழைத்து கவிதை பல பாடி, ஐக்கியத்தை வேட்டு வைக்கவில்லையா? அப்பாவி சிங்கள மக்களையும், இனவாதிகளையும் பிரித்தறியும் அரசியலை புலிகள் எப்போது எங்கே எந்த விடையத்தில் கையாண்டார்கள். இதை உங்கள் கவிதையில் எங்கே எப்படி சொல்லியிருக்கின்றீர்கள். அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைளை ஏற்ற சிங்கள மக்களையும் கூட இனம் காண மறுத்த தமிழ் குறுந்தேசியவாதிகள் அல்லவா நீங்கள். எல்லைகளை கடந்து நரைவேட்டையாடியும் குண்டும் வைத்த போதே ஐக்கியம் தூளாகியது. அதை கூட்டி அள்ளி இன்றைக்கு சிங்களவனே என ஒருமையில் அழைத்தபடி, ஒட்டவைப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. இங்கு ஐக்கியத்தை புலிகள் நாடவில்லை. மாறாக ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்கு இசைவாக நடத்துவிக்கும் பேச்சுவார்த்தை மேடையை அலங்கரிக்கும் சொற்தொடர்கள் தான், சிங்கள் மக்களுடன் ஐக்கியம் பற்றி கூறும் வார்த்தை ஜாலங்கள். உண்மையான ஐக்கியத்தை தமிழ் தேசியப் போராட்டம் கையாண்டு இருந்திருந்தால், ஒடிப் போன 60000 சிங்களப் படை வீரர்கள் புலிகளுடன் எப்போதே இணைந்து இந்த இனவாத அரசையே தூக்கி எறிந்து இருப்பார்கள்.

 

"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை"

என்ன வக்கிரமான கூற்று. சாதியம் உறைந்தே காணப்படுகின்றது என்பதை மறுக்கும் இவர், அதற்காக போராடத் தேவையில்லை என்கின்றார். அதே நேரம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று கூறுகின்ற போது பிழைப்புவாதத்தின் முரண்பாடு தொங்கி நிற்பதையும், சாதியை பாதுகாக்கும் புலிகளின் அரசியல் நிலைக்கு வக்காலத்து வாங்குவது தொங்கி நிற்பதையும் மறைக்க முடியவில்லை. சாதி அமைப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, புலிகளின் மேல் சாதிய யாழ் ஆதிக்க நிலைக்காக வக்காலத்து வாங்குகின்றார். ஆனால் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று குசு விடும் போது, தன்னையும் மீறி மணத்து விடுகின்றது. ஆனால் இந்த பேட்டியை துணிச்சலாக முரண்பாட்டுடன் வழங்க பின்பலம் உண்டு. இதை புரிந்து கொள்ள சரிநிகருக்கு 1990 களில் வந்த ஒரு வாசகர் கடிதத்தில் நடைமுறை சார்ந்த எதார்த்த உண்மை இதை சுட்டிக் காட்டுகின்றது. "தயவு செய்து புலிகள் பற்றித் தப்பாக எழுதுவதை இன்றுடன் நிறுத்தும்படி மிக மன்னிப்பாக கேட்கிறேன். நீர் எங்கிருந்தாலும் உமது காதுச்சவ்வு விரைவில் துப்பாக்கிக்குண்டு பட்டு வெடித்து நீர் அமெரிக்காவை விட்டு உமது பிள்ளைகளையும் பிரிந்து மேலே போகும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள்" சரிநிகர் பத்திரிகைக்கு இந்துமதி எழுதிய வாசகர் கடிதத்தின் உள்ளடக்கமே, இன்றும் விமர்சனம் மீதான எதார்த்தமாகும். இந்தப் பலத்தில் இருந்தே அனைத்தையும் தலைகீழாக புரட்டி கருத்துரைக்கின்றனர். நாங்கள் விமர்சிக்கும் போதும் எமது காதுச் சவ்வுகளை நோக்கிய துப்பாக்கிகளின் சன்னங்களின் ஊடுருவல் முதல் இரைப்பையை நோக்கி நஞ்சூட்டல் வரையிலான எல்லாவிதமான எதார்த்தமான நிலைமைகளையும் கடந்து கருத்துரைக்கவில்லை. எமது மரணத்தை முகத்துக்கு முன்னால் எதார்த்தத்தில் நாள் தோறும் எதிர்கொண்டே, தமிழ் தேசியம் படைத்த ஜனநாயகத்தில் வாழ்கின்றோம். கருத்துரைக்க வேண்டிய உன்னதமான உணர்வுகளை மற்றவனுக்கு மறுத்தபடி தான், புதுவை இரத்தினதுரை சாதியைப் பற்றி பிதற்றுகின்றார். புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான். புதுவை இரத்தினதுரை தனது இயக்க அரசியல் சார்ந்த சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, சொந்த தனது ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் கூறி நியாயப்படுத்தவும் பின்நிற்கவில்லை. "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் (சாதி) சோந்தவர்" என்பதால் தலித்துகள் விரும்பின் குண்டியைக் கழுவி விடலாம். ஆனால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது, இந்து மதமும் அதனுடன் ஒட்டிப் பிறந்த சாதியமும் உள்ள வரை (மூளை ஒன்றாகவும் உடல் இரண்டாகவும், அதாவது மதமும் சாதியுமாக உள்ளது) தொடர்வதை, எந்தத் தலித்தும் எந்த இயக்கமும் தடுத்து விடமுடியாது.

 

சாதியம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த முற்பட்ட, நடத்திய சில நூறு பேர் புலிகளால் கொல்லப்பட்ட போது புதுவை இரத்தினதுரை அதற்கு வெண்சாமரை வீசி அரசனையும் சபையையும் வாழ்த்தி வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருந்த பெட்டைக் கோழியாவார். இதற்கு பரிசாக அவரை உயர்சாதி நிலைக்கு, கவிதையின் அந்தஸ்து சார்ந்து உயர்த்தப்பட்டார். இதனால் சாதியம் ஒழிந்து விட்டதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இவர், சாதிய வேர் இருந்த போதும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்ற கூவ முயலுகின்றார். இதை அவர் "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.

 

01.07.2003