09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 11

"பருவமே! புதிய பாடல் பாடு"

 

இதுவரை சிறு குழந்தையில் இருந்து 12 வயது வரையான குழந்தைகளின் நிலைகளில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்று பார்த்தோம்.

 

இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!

 

எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் போகப்போவதில்லை நான்!

 

 

இதுவரை படித்ததே அதிகம் என நீங்கள் நினைத்தால்...... இனிமேல்தான் முக்கியமான சவாலே வருகிறது என்பதை உணர்ந்தால் என்ன செய்வீர்களோ?

 

ஆம்!

 

இதுவரை நம் பேச்சைக் கேட்டு, நமக்கு ஆசையான குழந்தையாய், நம் கனவுகளின் அஸ்திவாரமாய் இருந்த உங்கள் குழந்தை இப்போது தான் யார், தன்னால் என்ன செய்ய முடியும் என்று தானே உணரும் அந்த இனிய நிகழ்வு நடைபெறப்போகும் நல்ல நேரம் வருவதை உணரும், ஒரு மானுடமாய் மாறப்போகும் அதிசயத் தருணம் இப்போது நடக்கப் போகிறது!

 

மனித வளர்ச்சி என்பது படிப்படியாய் நிகழ்வதல்ல.அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.

 

ஆனால், அதிலும் ஒரு மூன்று நிலைகளை பொதுவாகப் பிரிக்கலாம்.

 

குழந்தை, 

வளர் சிதைப் பருவம், 

வயது வந்தவர் என.

 

இதுவரை நாம் முதல் இரண்டு நிலைகளைப் பார்த்தோம்.

 

இப்போதுதான் அந்த முக்கியமான தருணம், ........ நம் வாழ்வை நிர்ணயிக்கப் போகும், நமக்கு ஏற்படப்போகிற அத்துணை மாற்றங்களுக்கும் அடித்தளமாய் அமையப் போகிற அந்த 'பருவம் அடைதல்' என்னும் மாற்றம் இக்குழந்தைகளுக்கு நிகழ்கிறது.

 

இந்நிலைக்குப் பிறகு இவர்களுக்கு இரண்டே இரண்டு வழிகள்தான் இனிமேல்.

 

தன்னை உணர்ந்து, தன் நிலை அறிந்து, தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மதித்து தரணியில் ஒரு நல்ல இடத்தை அடைவது ஒன்று.

 

தனக்கு நேர்ந்த இம்மாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்டு, தறுதலையாகி, தான், தன் சுகம் என தனக்கு ஒரு வழியமைத்து, அதற்கென தன்னையே பறிகொடுத்து, தறி கெட்டுப் போவது இன்னொன்று.

 

அதனால்தான் நம் முன்னோர்கள் மிக அழகாக, இதை'வயதுக்கு வருதல்' என்று சொல்லி வைத்தனர்.

 

இதுவரை வாழ்ந்த வருடங்கள் ஒரு வயதல்ல. 

இனிமேல் வாழப்போகும் வருடங்களும் ஒரு வயதல்ல.

இன்று, இது நிகழ்வதுதான் ஒரு திருப்புமுனை எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்போது என்ன நிகழ்கிறது?

 

உடல் ரீதியாகவும், பழகுமுறை ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இப்பருவத்தில்.

 

இவையெல்லாம் விரித்துக் கூறுதல் இப்பதிவின் நோக்கமில்லையெனினும், பாலியல் வழியில் இவை ஒவ்வொன்றும் எப்படி இவர்களை பாதிக்கின்றது அதற்கு பெற்றோர்கள் எந்த வகையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். 

 

இதுவரை பார்த்த உங்கள் மகனோ அல்லது மகளோ வேறு, இனிமேல் பார்க்கப்போகும் பிள்ளை வேறு என்பதை உணர முடியாத பெற்றோர்களே அதிக அள்வில் இந்நேரம் தொடங்கி அவதிப்படுகிறார்கள்.

 

"நான் பாத்து வளந்த புள்ளை; எனக்குத் தெரியாதா அதை பத்தி?" என்னும் மனோநிலையையே பெரும்பாலான பெற்றோர்கள் கைக்கொள்ளுகின்றனர்..... நடப்பதை அறியாமல்.

 

அப்படி என்னதான் ஆகிறது இந்தக் குழந்தைகளுக்கு?

 

உடல் ரீதியாக,

குழந்தைப் பருவம் கழிந்து மனித நிலையை அடைவதும்,

இதுவரை காணாத உடல் வளர்ச்சியைக் காணுவதும்,

 

வளர்ச்சி ரீதியாக,

தனித்து முடிவெடுக்கும், நல்லது, கெட்டது எனத் தானே ஒரு முடிவு எடுக்கும் திறமை தனக்கு வந்து விட்டதாக நினைக்கும் மன நிலையும்,

இதற்கு உதவி புரிய இதுவரை நம்பியிருந்த பெற்றோரைப் புறந்தள்ளி, நண்பரை நாடும் மன நிலையும்,

இதுகாறும் பெற்றோரை எதிர்பார்த்து செய்து வந்த சில செயல்களை, [உணவில் தொடங்கி உடை அலங்காரம் வரை,] தானே செய்து கொள்ள முடியும் என்ற மனத்திடமும்,

தன்னிச்சைப் போக்கும், நாட்டமும்,

 

உணர்வு பூர்வமாக,

நீடித்து நிற்கக்கூடிய நட்பு, உறவு இவைகளை தானே அமைத்துக் கொள்ளும் திறனும்,

தன் உணர்வை எந்த வகையிலேனும் தனித்து காட்டக் கூடிய மன உறுதியும்,

எப்படி தன்னை யார் எனக் காட்டிக் கொள்ள முடியும் என்ற வீராப்பும்,

 

ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிப்பதன் மூலம் தன்னை அறியாமலேயே இவர்களை வந்தடைகின்றன!

 

இவை அனைத்தும் வெளிப்படும் ஒரே நிலை பாலியல் மூலம் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்; 

ஆனால் இதுதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்!

 

தனது அத்தனை மாற்றங்களையும் பாலியல் வழியாகவே நிலை நிறுத்தி, தன் தனித்துவத்தை பறை சாற்றிக் கொள்ளுகின்றனர் இவர்கள்.

 

இது புரிந்த பெற்றோர்கள் குறைவு!புரியாமல் குழம்பி, தன்னையும் வருத்தி, பிள்ளையையும் வருத்தி சங்கடப்படுபவர்களே மிக அதிகம்!

 

"அப்படி என்னதான் பாலியல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம்" என நீங்கள் சவால் விடுவது எனக்குக் கேட்கிறது.

 

மனதை திடப் படுத்திக் கொண்டு படியுங்கள். 

நான் சொல்லுவது அனைத்தும் உண்மை; உண்மையைத்தவிர வேறில்லை எனச் சொல்லி தொடங்குகிறேன்!

அடைப்புக் குறிகளில் பெரும்பாலான, [இதுவரை குழந்தைகளை சரியாக வளர்க்காத] பெற்றோர்களின் மன நிலையைச் சொல்லியிருக்கிறேன். 

இது பொதுவான ஒரு கருத்து தான்!

என் பிள்ளை அப்படி இல்லை என்பவர்களுக்கு என் வந்தனம்!

 

இவர்களுக்கு தன்னுடைய பாலியல் மாற்றத்தால், பருவ மறுதலால் தன்னுள் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது நன்றாகத் தெரியும்!

 

[அது சின்னப் புள்ளைங்க! அதுக்கு ஒண்ணும் தெரியாது. பச்சைப் புள்ளைங்க அது!]

 

உடல் உறவு தவிர்த்து என்னென்ன வகையில் தன் பாலியல் மாற்றத்தை வெளிப்படுத்த முடியும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

[வெகுளியா சிரிச்சுத்தாங்க அது பேசும். விகல்பம் இல்லாம எல்லோரோடேயும் சகஜமாப் பழகும்]

 

நல்ல உறவு எது, தீய உறவு எது என்பது தெரியும். 

தனக்குப் பிடித்த அம்சங்கள் இருப்பின் எந்த உறவும் அசைக்க முடியாத நல்ல உறவே!

 

[ஒண்ணும் தெரியாத புள்ளைங்க அது! வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடும்.]

 

கர்ப்பம் அடைய தன்னால் முடியும் எனத் தெரியும். அதைத் தடுக்க வழிகள் உண்டெனவும் தெரியும்.

 

[கள்ளம் கபடு இல்லாத பொண்ணுங்க அது. இப்படியெல்லாம் நடக்குமின்னு அதுக்கு தெரியாதுங்க. எந்த பாவி மகனோ கெடுத்துட்டான்]

 

[என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னு தான் இருப்பான். அவன் இப்ப்டி பண்ணினதுக்கு எந்த சிறுக்கி மகளோதான் காரணம். வலை விரிச்சு வசியம் பண்ணிட்டா!]

 

தனது பாலியல் கவர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியும்.

 

[அந்த மேனாமினுக்கி அசைஞ்சு, ஒடிஞ்சு நடந்து வரும் போதே தெரியும். இப்படி ஏதாவது எம் புள்ளை மேல அபாண்டமா பழி போடுவான்னு!]

 

[கண்ணாடி முன்னாடி என்னடி அவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கே! எவனுக்காக இந்த சிங்காரம்?]

 

"அவ/அவன் இல்லேன்னா நான் உயிரோட இருப்பேன்னு கனவு கூட காணாதே" என்று வீர வசனம் பேசத் தெரியும்.

 

[ஐயோ, ஐயோ எவளோ எம் புள்ளைக்கு மை வெச்சுட்டாளே! நான் என்ன பண்ணுவேன்!]

 

[ஏண்டி! நீ இப்படில்லாம் பேசறவ இல்லையேடி. யார்றீ சொல்லிக் கொடுத்தா இதெல்லாம்?]

 

என்ன? நினைவுலதான் இருக்கீங்கல்ல! இல்லை மயங்கி விழுந்துட்டீங்களா? 

 

நான் சொன்னது எதுலியாவது தப்பு இருந்தா சொல்லுங்க.

 

சரி, இது நிகழாமல் இருக்கணும்னா பெற்றோர்களாகிய நாம் என்ன பண்ணனும்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html