"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8

இந்த 12- 14 வயசு பிள்ளைங்களுக்கு என்னெல்லாம் தெரியும், தெரிஞ்சுக்க ஆசைன்னு இதுவரை பார்த்தோம்.

 

மேலும் சில அதிகத் தகவல்களை நம்ம மங்கையம்மா பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

அதையும் பார்க்கவும்.

 

பாலியலைப் பத்தி தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், கேள்வி கேக்கறது கேவலம்னும் ஒரு நினைப்பு இருக்கும் இவங்க மனசுல.

 

அதனால கேக்கவே மாட்டாங்களான்னு கேக்காதீங்க!!

 

கேட்பாங்க!

 

உங்க கிட்ட இல்லை!

 

அவங்க நண்பர்கள்கிட்ட!

 

இப்ப நாமளே ஊக்குவிக்கறோமே, அந்த இணையதளத்துகிட்ட!

 

பெரும்பாலும் தவறான, அல்லது வயதுக்கு மீறிய தகவல்களே இதனால் கிடைக்கும்.

 

இதுல பெற்றோரின் பங்கு என்ன?

 

எப்படி அவர்களுக்கு இதைப் புரியவைப்பது?

 

இது ஒரு பெரிய சாலேஞ்சுன்னுதான்[Challenge]] சொல்லணும்.

 

போன பதிவில் என்னிடம் வந்த அந்த தாய்க்கு நான் சொன்ன பதில் இதுதான்.[அந்தப் பையனை வெளியில் உட்காரச் சொல்லிவிட்டு!],

 

[இதைப் பற்றி யாராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்!:(]

 

"நீங்க சொல்றீங்கன்னு நான் இப்ப அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இங்கே அவனைக் கூப்பிட்டுக்கொண்டு நீங்க வந்ததே தப்பு! எவ்வளவு பெரிய தாழ்வு மனப்பன்மையை அவனிடம் உண்டுபண்ணி இருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியலை! இப்ப அவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு நீங்க மட்டும் அவன் ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் வாங்க! நான் உங்ககிட்ட சிலது சொல்லணும்."

 

மறுநாள் அந்த தாய் வந்தார்.

 

"அடுத்தவங்க பார்வையில இது தப்புதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனா, கொஞ்சம் அவன் நிலைமையில் இருந்து இதைக் கொஞ்சம் யோசியுங்கள். அவன்கிட்ட சில பருவ மாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதை அவனால புரிஞ்சுக்கவும் முடியல. இல்லேன்னு தள்ளவும் முடியலை. அவன் உடம்புல சில ஹார்மோன்கள் இப்ப சுரக்க ஆரம்பிக்குது. அதுதான் இவனை அப்படியெல்லாம் செய்யத் தூண்டுது. இதோ, இந்த பாம்ஃப்லெட்டை[pamphlet] எடுத்துகிட்டு போங்க. மொதல்ல, நீங்களும், மோகனும்[அவர் கணவர்] படியுங்க. அப்பறமா, ராஜுவை கூப்பிட்டு, அவ்ன்கிட்ட இதப்பத்தி பேசுங்க.

 

ஆம்பளைக்கு இந்த இந்த உறுப்புகள், பொம்பளைங்களுக்கு இதுன்னு தெளிவா சொல்லுங்க. இதுவரைக்கும் நீங்க சொல்லாததே, அவனோட இதைப் பத்தி பேசாததுதான் இதுக்கெல்லாம் காரணம்.

 

தன்மையா வளர்த்தேன்னு சொன்னா மட்டும் போறாது. சொல்ல வேண்டியதை சொல்லவும் வேணும். உங்களை விட்டா வேற யாரு இருக்கா அவனுக்கு? வேற யார்கிட்ட போயி அவன் இதை கேக்க முடியும்? ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தான்னா, அது அவன் ஃப்ரெண்ட்ஸுங்க கிட்டதான் இருக்க முடியும். அவங்களுக்கும் இது தெரியாது. "போடா! போய் பக்கத்து வீட்டு மாமி குளிக்கும்போது பாரு; அப்ப தெரியும் ஒனக்கு!"ன்னு சொல்லியிருப்பாங்க! அந்த சின்னப்பசங்க அப்படி சொன்னதிலியும் தப்பு இல்லை!அதான், அடுத்த வீட்டு மாமி குளிக்கும் போது பார்த்திருக்கான்"

 

என்று சொன்னவுடன்,

 

அந்த அம்மா, நிஜமாவே கண்கலங்கி, "இதெல்லாம் சொல்லணும்னு எங்களுக்கு தெரியவே இல்லை டாக்டர்!" என்று கண் கலங்கினார்.

 

ஸோ,[So] இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?

 

சிறில் துடிக்கிறது எனக்குப் புரியுது!

வாய்யா! விஷயத்துக்கு வாய்யா! எனத் திட்டுவது கேட்கிறது!

எனவே, அதிக பீடிகை இல்லாமல், செய்திக்கு வரலாம்!

 

பருவகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை, நன்கு அறிந்த நீங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது?

 

"இன்னும் கொஞ்ச நாள்ல நீ பெரிய மனுஷி ஆகப் போறே! அப்படீன்னா, இதுவரைக்கும் சின்னப் புள்ளையா இருந்த நீ, சில மாற்றங்களை பார்ப்பே, உன் உடம்பில! உன் மார்பு என்னுது மாதிரி பெருசாகப் போவுது. தீட்டுன்னு நான் ஒரு 3 நாளு சொல்லுவேனே, அது உனக்கும் வரப் போகுது. இதுவரைக்கும் முளைக்காத இடத்துல எல்லாம் முடி வளரும்.

திடீர்னு ஒரு நாளைக்கு ஒனக்கு கீழேர்ந்து ரத்தப்போக்கு வரலாம். அப்ப நீ உடனே செய்ய வேண்டியது, என்கிட்டயோ, இல்லாட்டி, டீச்சர்கிட்டயோ போய், சொல்லணும். இது ரொம்ப முக்கியம்.

 

இதே ஒரு ஆண் பையனிடம்,.....

 

"இந்த வயசுல உனக்கு விதவிதமா ஆசை வரும். தப்பில்லை. அது சகஜம்தான். எல்லாருக்கும் இந்த வயசுல வர்றதுதான். ஆனா, நீ அதுக்காக, முறை தவறி நடந்துக்கக் கூடாது. உன் ஆசை உனக்கு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி அடுத்தவங்களொட ப்ரைவசியும்[Privacy] அவங்களுக்கு முக்கியம்! உனக்கு எதுனாச்சும் சந்தேகம்னா எங்களை நீ தாராளமாக் கேக்கலாம். தப்பாவே நினைச்சுக்க மாட்டோம்.

இதுக்காக, நீ கண்ட கண்ட புஸ்தகமோ, இல்லை, வேற எதையோ தேட வேண்டாம். ராத்திரியில, உனக்கு உன்னோட விந்து வெளியாகும். அல்லது நீயே வெளியாக்கணும்னு உனக்கு ஒரு பரபரப்பு வரலாம். அதுல ஒண்ணும் தப்பே இல்லை. இது இந்த வயசுல எல்லாருக்கும் நடக்கறதுதான். அதிகமா பண்ணாதே. கண்ட்ரோல்[Control] பண்ணக் கத்துக்கோ!"

 

எதுவானாலும் அம்மா அப்பாகிட்ட பேசலாம்னு ஒரு தைரியத்தை பசங்க மனசுல வளர்க்கறது ரொம்ப முக்கியம் இந்த வயசுல.

 

இப்ப விட்டீங்கன்னா, அப்புறம், நீங்க அவங்களை எப்பவுமே பிடிக்க முடியாது!

 

'சேகர் மாதிரி நான் வளரலியே?',' லதா ஏன் இன்னும் என்னை மாதிரி ஆகல?, அவளுக்கும் என் வயசுதானே?', இது போன்ற கேள்விகள் எழும்.

 

ஒவ்வொருவர் வளர்ச்சியும் தனித்தனியானது, ஒருவர் போல் இன்னொருவர் வளர்ச்சி இருக்காது என்பதும் புரியவைக்க வேண்டும் நீங்கள்.

 

"இன்னும் கொஞ்ச நாள்ல, நீ பெரிய மனுஷி ஆகப் போறே! உன்னாலேயும் ஒரு குழந்தை பெத்துக்க முடியும் அப்போ. ஆனா, உனக்கு இன்னும் அதுக்கான முழு வளர்ச்சியோ, பக்குவமோ, பொருளாதார வசதியோ, வரவில்லை, இப்ப வராது, இது ஒரு வழக்கமான மாற்றம்தான், இதைப் பெருசு படுத்த வேண்டாம் என்பதை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பது உங்கள் தலையாய பொறுப்பு!"

 

 

உணர்வு வேறு, பாலியல் உணர்வு வேறு, இரண்டும் தனித்தனியானது என்பதுதான் இவர்களுக்கு நீங்கள் இப்போது சொல்லி, புரிய வைக்க வேண்டிய ஒன்று!

 

[விளக்கம் வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும். விவரமாகச் சொல்கிறேன்.]

 

கர்ப்பத்தடை சாதனங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய நேரமும் இதுவே!

 

.

மொத்தத்தில், இந்த நேரத்தில்தான் நாம் அவர்களுக்கு "ஒரு நண்பன்", நம்மிடம் வெளிப்படையாகப் பேசலாம் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் நாம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

 

திருமதி. மங்கை சொன்ன இந்தக் கருத்து பதிவுக்கு வலு சேர்ப்பதால், அவர்கள் அனுமதியுடன் இதனையும் சேர்க்கிறேன்! நன்றி.

 

"உங்க அனுமதியுடன் இரண்டொரு வார்த்தை சேர்துக்கலாமா?.

 

.உடம்புல ஏற்படுகிற மாற்றங்கள போல உடம்பின் உள்ளிலும் ஏற்பட்ற மாற்றங்கள் பத்தி பெறோர்கள் தெரிஞ்சிட்டாங்கன்னா, குழந்தைகளின் இந்த வயசில அவங்க நினைவில கொள்ளவேண்டிய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில உணவு வகைகளை குடுப்பது மட்டும் இல்லாம, சில மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும் மாற்ற அவங்க முற்படுவாங்க. 

பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய விளிப்புணர்வையும் சேர்ந்து குடுத்தா, நம்ம நோக்கம் முழுசா முடிவடையும்னு நினைக்கிறேன்.. 

இந்த விஷயங்கள் நாங்க நேரடியா குழந்தைகளிடம் சொன்னாலும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு இருந்தா,குழந்தைகளின் ஆரோக்கியம் எல்லாவிதத்திலேயும் பாதுகாக்கப்படும்."

 

-----------------------------------------------------

 

ரொம்ப பயமுறுத்திட்டேனா!

 

இதுக்கே இப்படீன்னா, அடுத்த பதிவை என்னன்னு சொல்லுவீங்க!