Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":

விஎஸ்கே ஐயா,
வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர் எந்தவித சோதனையும் செய்யவில்லை..மேலும் 2 மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன்.. அவர்களும் ஹெர்பிஸாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த சோதனையும் செய்யவில்லை)

ஆனால், நான் இதுவரை எந்தவிதத்திலும் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை..வேறு வகையில் வர வாய்ப்பு இருக்கிறதா?

இதை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
நான் இன்னும் 2 வருடங்களுக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. அதற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாமா?

இதனால் கொஞ்சம் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது.. இது மிகவும் கவலைப்படவேண்டிய விசயமா?
முடிந்தவரை விரைவில் பதிலளிக்கவும்...
நன்றி...

கேள்விக்கு நன்றி.

அன்புள்ள அனானியாரே!,

இன்னும் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், பதிலளிக்க வசதியாய் இருந்திருக்கும். 

1.எப்போது இது வந்தது?
2.எத்தனை நாட்களாக இருக்கிறது?
3.சிகிச்சை ஏதும் தரப்பட்டதா?
4. நீங்கள் பார்த்த மருத்துவர்களில் யாராவது தோல் சம்பந்தப்பட்ட துறை நிபுணரா?
5. உங்களுக்கு இப்போது என்ன வயது?
6. அந்த இடத்தில் அரிப்பு ஏதாவது இருக்கிறதா?

என்றெல்லாமும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை வைத்துப் பார்த்தால்,....

உடலுறவு கொள்ளவில்லை என நிச்சயமாகச் சொல்லுவதால், இது ஹெர்பிஸ் வகையைச் சேர்ந்தது இல்லை என நினைக்கிறேன். பெரும்பாலும் [99%] ஜெனிடல் ஹெர்பிஸ் [Genital Herpes] என்பது உடலுறவால் மட்டுமே பரவுவது.

மேலும், இது தென்பட்ட இடம் "Testis" எனச் சொல்லுவதிலிருந்து, விரைப்பையின் மேல்தோலின் மீது [Scrotal sac] எனக் கொள்கிறேன். ஹெர்பிஸ் நோய் அநேகமாக குறியின் [Penis]மீதோ, அதன் தண்டின் [shaft] மீதோதான் பெரும்பாலும் வரும்.

முதலில் கரும்புள்ளிகளாக வந்து, பின் நிறம் மாறியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது "Scrotal Angioma" எனப்படும் ஒரு ரத்தக்குழாய் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். விரைப்பைத் தோல் மீது, சிறு சிறு ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இவைகள் புடைப்பினால் சிறிய அளவில் ரத்தம் கசிந்து இது போல நிகழக்கூடும். இவை நீங்கள் சொன்னது போலவே நிறமும் மாறும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு [25 - 35] இது அதிகமாக நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சருமநோய் மருத்துவரிடம் [Skin Specialist, Dermatologist] இதைக் காட்டி, உறுதிப்படுத்திக் கொண்டு, ஒரு சில களிம்புகளின் [Cream] மூலம் இதைச் சரிப்படுத்த முடியும்.

உடலுறவு கொள்ளவில்லை என்றால் அதிகம் பயப்படத் தேவையில்லை.