அசையாமல் 
அமைதியாக இருப்பதை 
எளிதில் பிடிக்கலாம்
துவக்கப்படாத நிலையில் 
திட்டமிடுதல் சுலபம்
ஈயத்தகடுகளை 
எளிதாக உருக்கலாம்.
பொடியான பொருளைக் 
கரைப்பது சுலபம்.

பெரிதாக வெடிக்குமுன் 
காரியங்களைக் கவனி. 
குழப்பம் வருமுன் 
ஒழுங்கு செய்துவிடு.

கையால் அணைக்க 
முடியாத மரம் 
சிறிய குருத்தாகத்தான் 
வளர்கிறது.

ஒன்பது மாடிக் கட்டடம்
கைப்பிடி மண்ணிலிருந்துதான் 
உருவாகிறது.

ஆயிரம் மைல் பயணம்
உங்கள் பாதங்களிலிருந்துதான் 
துவங்குகிறது.

ஆக்கிரமிக்கும் காரியம் 
கெட்டுவிடுகிறது.
எட்டிப்பிடிக்கும் காரியம் 
நம்மைவிட்டு நழுவுகிறது.
வளர்ந்தவர்கள் செயல்படுவதில்லை.
எதையும் கெடுப்பதில்லை.

ஆனால் பலர் வெற்றி 
கைக்கு வரும் நிலையில் 
காரியத்தைக் 
கோட்டை விடுகிறார்கள்.

வளர்ந்தவர்களின் ஆசை,
ஆசைகளற்று இருப்பதுதான்
கிடைத்ததற்கரிய பொருளில் 
நாட்டம் வைப்பதில்லை
படிக்காமலே கற்றுக்கொள்கிறார்கள்.
எதிலும் அடிப்படையைத் 
தேடுகிறார்கள்.
இயல்பான ஓட்டத்துக்கு 
உதவுகிறார்கள்
எதிலும் குறுக்கிடாமல்.


* சீன தத்துவஞானி லாட்சு