07022022
Last updateபு, 02 மார் 2022 7pm

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

மீபத்துல அதாவது 2008 ஆரம்பத்துல ஏகாதிபத்திய பொருளாதாரம் டவுசர் கிட்டத்தட்ட கழன்று தொங்கிய நிலையில் இருக்கும் போது தனது டவுசரை காப்பாற்றும் கடைசி நிமிட போராட்டத்தின் ஒரு பகுதியாக கையில் கிடைத்த இடத்திலெல்லாம் தனது மூலதனத்தை போட்டு வைத்து சும்மா சுற்றி சுற்றி சூதாடியது(பங்கு சந்தை, முன்பேர வர்த்தகம்). குறிப்பாக முன்பேர வர்த்தகத்தில் சூதாடி அன்றாட பொருட்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பெட்ரோல் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பிறகு தங்கம், பிறகு வெள்ளி இப்படி கடைசியில் மொத்த பன்னாட்டு-தரகு முதலாளிகளின் டவுசரும் கிழிந்து அம்மணக்கட்டையாக ஆகின்ற வரைக்கும் அவர்களின் சூதாட்டம் தொடர்ந்தது.

 

இந்த சூதாட்ட ஸ்ட்ரிப்டீஸ் டான்ஸ் காலம் முழுவதும் இது குறித்து நாமும் பலமுறை எழுதி எச்சரித்தே வந்தோம். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றத்தின் போது இது அப்பட்டமான சூதாட்டத்தின் விளைவு என்பதை ஆதாரப் பூர்வமாகவே பல தோழர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த காலகட்டம் முழுவதும் ஏகாதிபத்திய டவுசரின் பட்டன்களாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்த அல்லக்கை அடிவருடிகள் இந்த உண்மைகளை மூடி மறைக்க எல்லா மாய்மாலங்களையும் கையாண்டனர். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் குறித்த பிரச்சினையின் போது அதனை பீக் ஆயில் என்ற அரதப் பழசான செத்து சுண்ணாம்பான சித்தாந்தத்தை அதன் கல்லறையிலிருந்து தோண்டி வெளியே எடுத்து விளம்பரப்படுத்தினர்.
பீக் ஆயில் என்பது வேறு ஒன்றும் இல்லை எண்ணைய் இருப்புக்கும், அதன் தேவைக்கும், அது குறைந்த பட்ச எதிர்கால எண்ணைய் பயன்பாடு வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து எண்ணையின் சந்தை விலையை உயர்த்துவதை குறிக்கும் ஒரு சொல். அதாவது இன்னும் சுலபமாக டிமாண்டு சப்ளை பிரச்சினை. அதாவது தீடீரென்று உலகம் முழுவதும் டிமாண்டு அதிகமாகி சப்ளை கம்மியாக இருந்ததால் பீக் ஆயில் பிரச்சினை முன்னுக்கு வந்து விட்டது என்று குன்சாக ஒரு கதையை ஆதாரமின்றி அளந்து விட்டார்கள் அடிவருடிகள். அப்பொழுது தோழர்கள் பலர் முன் வைத்த வாதங்களுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.
இதோ இன்று அவர்களின் எஜமான் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளன. முற்றிலும் டவுசர் கழண்டு, கிழிந்து நார் நாராக, மண்ணோடு மண்ணாக மக்கிய பிற்பாடு அடுத்த டவுசருக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ஏகாதிபத்தியங்களும், அவர்களுக்கு புது டவுசர் எடுத்து கொடுத்து அடுத்த ரவுண்டு சூதாட்ட ஸ்டிரிப்டீஸ்க்கு அனுப்பி வைக்க உழைக்கும் மக்களிடம் பணம் பிடுங்க களம் இறங்கியுள்ள அரசுகளும் என்று விசயம் அப்பட்டமாக தலைகீழாக இருக்கும் இன்றைய நிலையில், உலகமகா பாகாசுர பன்னாட்டு அஸ்கா புஸ்கா கும்தலக்க கம்பேனிகள் எல்லாம் ஆப்டர் ஆல் சதாரண ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் பிச்சை வாங்க எச்சில் ஒழுக நிற்க்கும் இந்த நேரத்தில், நாங்கெல்லாம் வெரி பிரில்லியண்டு, டேலண்டட், ப்ளடி மக்கள் என்னைக்கு என் வேகத்துக்கு வந்து நான் எப்போ முன்னேற அதனால் என்னை Freeயா விடு என்று பிலிம் காட்டி இன்று மூக்கில் ரத்தம் ஒழுக உடைப்பட்டுள்ள ஏகாதிபத்தியமும், எந்த ஜனங்கள் திறைமையற்ற அடி முட்டாள்களோ, அவர்கள் அதி திறைமையான, வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும், உலகின் ரட்சகனான பன்னாட்டு கம்பேனிகளுக்கு படியளக்கும் இன்றைய வெட்கம் கெட்ட சூழலில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.
ஏகாதிபத்திய ஆண்டவனே அம்மணமாக அலையும் போது அவனது அல்லக்கை முண்டங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் இன்னும் கேவலமான நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அவர்களது கல்லறை மவுனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு சுரனை இருக்குமோ என்று. அதுதான் இந்த பதிவை எழுதத் தூண்டியது. அல்லக்கைகளை கல்லறையிலிருந்து துயிலெழுப்பும் ஒரு உசாகால பாடலாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.
மக்களிடம் பிச்சையெடுத்துதான் தனது லாபத்தை பராமரிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஏகாதிபத்தியங்கள் தமது சூதாட்ட வெறியை குறைத்துக் கொண்டவுடன், விலைவாசி உயர்வு குறைந்தது, பெட்ரோல் விலை குறைந்தது. அதாவது அடிவருடிகள் சொன்னது போல உலகின் பயன்பாட்டு அளவு குறைந்ததால் பெட்ரோல் விலை குறையவில்லை. அல்லது உலகில் உற்பத்தி பொருட்களின், விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால் விலைவாசி குறையவில்லை. மாறாக சூதாட்ட கும்பலின் டவுசர் கழண்டு கிழிந்ததாலேயே அதாவது ஏகாதிபத்திய மூலதனம் சூதாடுவதை நிறுத்தி கொண்டதாலேயே விலை குறைந்தது. இந்த உண்மையை வலுப்படுத்தும் முகமாக தற்போது ஒபேக் அமைப்பு தனது பெட்ரோல் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தும் திட்டத்திலேயே இதனை செய்துள்ளது(தி ஹிந்து முதல் பக்கம், 18 டிசம்பர், 2008). அதாவது டிமாண்டு சப்ளையும் கிடையாது பீக் ஆயில் புண்ணாக்கும் கிடையாது என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு சொல்லுகின்றன.
ஏகாதிபத்திய மூலதனம் சூதாடியதால் பெட்ரோல் விலை ஏறியது, சூதாட்டம் நின்றவுடன் பெட்ரோல் விலை அதளபாதாளத்திற்கு சென்றது. விலையை ஏற்ற போலியாக டிமாண்டு உருவாக்கும் முயற்சியாக பெட்ரோல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. நமது பயன்பாடு அதிகரித்து அந்த தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை என்கிற காரணத்தினால் விலையேற்றம் நடக்கவில்லை. விசயம் இப்படியிருக்க விலைவாசி உயர்வுக்கு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் நுகர்வு அபரி மிதமாக அதிகரித்து விட்டது என்று இந்த அல்லக்கைகள் குற்றம்சாட்டினர். பெட்ரோல் விலை உயர்வுக்கும் நாமதான் கிடைத்தோம் இந்த அடிவருடிகளுக்கு. அடேய் அல்லக்கைகளா இப்போ நடந்துள்ளதே இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க. உங்களோட உண்மையான முதலாளித்துவம் பதுங்கியிருக்கிற இடத்துல இருந்து தோண்டி எடுத்து காட்டுங்கடா.
மக்கள் பணத்தில் சூதாடிவிட்டு மக்களையே இகழ்ந்து நோக்கும் இந்த இழிந்த முதலாளித்துவ பொருளாதாரம் இனிமேலும் இந்த உலகில் நீடித்திருப்பதற்க்கு எந்த நியாயமும் இல்லை. மக்களிடம் பிச்சை வாங்கித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த திமிர்பிடித்த கிழட்டு ஏகாதிபத்தியத்தை கருணை கொலை செய்துவிடுவதே நல்லது. இந்த நிலைமை இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களின், அதன் உள்நாட்டு பிரதிநிதிகளான ஆளும் பிற்போக்கு அரசுகளின், தரகு பன்னாட்டு முதலாளிகளின் டவுசர்கள் நிரந்தரமாக கழட்டப்பட்டு அவை அம்மணமாக, அரை அம்மணமாக அலையும் உழைக்கும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் நாமும் எத்தனை முறைதான் தரகு பன்னாட்டு முதலாளிகள் கிழிக்கின்ற டவுசர்களுக்கு மாற்றாக புது டவுசர் தயாரித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்