தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.
தமிழ் மக்களை யார் எப்படி கொடுமைப்படுத்தினாலும், அதைப் பார்க்காது இருப்பதே தேச நலன் என்கின்றனர். எதையும் பக்கச்சார்பாக பேசவும், ஒன்றையொன்று மூடிமறைத்தும் பேசுவதே மனித சுதந்திரத்தின் அடிப்படைகள் என்கின்றனர்.
தேசியம் மற்றும் யுத்தம் என்ற பெயரில், தமிழ் மக்கள் மேல் திணித்துள்ள கொடுமைகளையும் கொடூரங்களையும் பேசுவது இன்று துரோகமாக உள்ளது. அந்த வகையில் நாம் தொடர்ந்தும் மக்களைப்பற்றி பேசுவதால், துரோகிகளாகவே உள்ளோம்.
எம்மை என்ன செய்யக் கோருகின்றனர். ஒன்றில் பேரினவாதத்தை ஆதரி அல்லது புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றனர். நாம் இவ் இரண்டையும் மறுப்பதால், இவர்கள் முன் துரோகியாக மாற்றப்பட்டுள்ளோம்.
எமக்கு வெளியில் பேரினவாத தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தை பலப்படுத்து என்பதும், புலிப் பாசிச தேசியத்தை பலப்படுத்து என்பதும், இன்று பொதுவான கோசமாகிவிட்டது. இதனால் மக்களைப் பற்றி கதைப்பதோ, தேசத் துரோகமாகிவிட்டது.
இதை இன்று, பேரினவாதம் மற்றும் புலிகள் மட்டும் கூறவில்லை. முற்போக்கு, இடதுசாரியம் மார்க்சியம் பேசித்திரிந்த, புலியல்லாத மாற்று கருத்துத்தளத்தில் இவையே இன்று ஓலிக்கத் தொடங்கியுள்ளது. இப்படி இவர்கள் ஒன்றில் அரச மயமாகின்றனர் அல்லது புலிமயமாகின்றனர்.
மக்களையிட்டு அக்கறையற்ற தேசியமும், யுத்தமும், மக்களையே துரோகியாகப் பார்க்கின்றது. மக்களை ஆடு மாடுகளைப் போல் நடத்துகின்ற சமூக விரோத இழி நடத்தைகளையே, மனிதத்தன்மை வாய்ந்ததாக இவர்கள் பீற்றுகின்றனர். மக்களுக்கு உணவைக் கொடுப்பதும், உணவை வாங்கித் தின்பதும், மக்கள் சார்பு நடவடிக்கையாக காட்டி அதை விளம்பரம் செய்கின்றனர்.
இதன் பின்னால் மக்கள் வற்றாத கண்ணீரும், கண்ணீர்க் கதைகளும் மனித வாழ்வாகின்றது. இவை எந்த ஊடகத்திலும் வெளிவருவதில்லை. சொல்லப்போனால் இவை யாருக்கும் அக்கறைக்குரிய ஒரு விடையமல்ல. இப்படி தமிழ் மனிதம், செத்துக் கிடக்கின்றது. அந்த பிணத்தின் மேல் ஏறி மிதிப்பதே, வெற்றியாகவும் போராட்டமாகவும் தலைமைத்துவத்தின் திறமையாகவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இந்த மக்களுக்காக குரல் கொடுப்பதை, பாசிட்டுகள் தமது திமிருடன் கிண்டல் செய்கின்றனர்.
நாம் நீண்ட காலமாக அரசுடன் கூடி நிற்கும் துரோகக் குழுக்களினதும், புலிகளினதும் மக்கள் விரோத நடத்தைகளையும், மக்களுக்கு எதிராக அவர்கள் இழைத்த துரோகத்தையும் பற்றி பேசிவந்தோம். மக்களின் சொந்த விடுதலைக்காக, அவர்களின் உள் உணர்வுகளை பேசிவந்தோம்.
இப்படிப் பேசி வந்த பலர், இன்று மக்களுக்கு துரோகம் இழைக்கத் தொடங்கிவிட்டனர். பேரினவாதம் யுத்தக் கெடுபிடி, அதன் அழித்தொழிப்பு மூலம், மக்களுக்காக குரல் கொடுத்தவர்களை எல்லாம் கூட்டி அள்ளிச்செல்லுகின்றது. ஒன்றில் தன் பின் அல்லது பாசிசத்தின் பின், மக்களின் மனித உணர்வுகளையே புதைக்கின்றனர்.
இதன் விளைவு மக்களுக்கான குரல்கள் எல்லாம், புலிப் பாசிசத்தை ஆதரித்து மக்களை மேலும் ஓடுக்க துணை போகின்றது. மக்கள் சந்திக்கின்ற கொடூரமான ஒடுக்குமுறைகளில், உணர்வுகள் எல்லாம் சிதைவடைந்து மடிந்து போகின்றது. யுத்தக் கெடுபிடி மக்களை உடலால் கொன்று குவிக்க, பாசிச கெடுபிடி உணர்வியல் ரீதியாக கொன்று குவிக்கின்றது. இதை மீறுபவர்கள் இனம் காணபட்டு தனித்தனியாக அழிக்கப்படுகின்றனர்.
இந்த மக்களின் அவலத்துக்கு எதிராக, யார் தான் குரல் கொடுக்கின்றனர். மக்களைப் பற்றி பேசுவது பைத்தியக்காரத்தனமாகவும், கேலிக்குரிய ஒன்றாகவும் உள்ளது.
மக்களைப் பற்றி பேசாது, புலியை ஆதரிப்பது தான் இன்றைய சமூக எதார்த்தம் என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான சமூக அடிப்படைகள் அனைத்தையும், ஓத்திப்போடக் கோருகின்றனர். பாசிசத்தை ஏற்றுக்கொண்டு, அதை பிரச்சாரம் செய்யக் கோருகின்றனர். இதன் மூலம்தான், தமிழ் மக்களை காப்பாற்ற முடியும் என்கின்றனர். உண்மையில் பேரினவாதத்தின் யுத்த வெறிக்கு இரையாகி, பாசிசத்துக்கு தாளம் போடத் தொடங்கிவிட்ட அவலம். தமிழ் மக்களையிட்ட அக்கறையற்ற பிதற்றல்.
மக்களை எந்த உரிமைகளுமற்ற நிலையில் தக்கவைத்தல் தான், தமிழ் மக்களின் விடுதலை என்கின்றனர். மக்கள் தாம் இழந்துபோன உரிமையைக் கோருவது, இவர்களின் விடுதலைக்கு எதிரானது. இதனால் இதுவே இன்று துரோகம். இந்த "துரோகத்"துக்காக குரல் கொடுப்போம். இந்த "துரோகத்"துக்காக போராடக் கோருகின்றோம். இதற்காகவே போராடி மரணிப்போம். இதற்கு வெளியில் மக்களுக்கான போராட்ட வரலாறு எதுவும் கிடையாது.
பி.இரயாகரன்
21.12.2008