எல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.
சமூகத்தை வழிகாட்ட வேண்டிய அறிவுத்தளத்தில், அழிவுக்கான சிந்தனை முறையே சமூக மீட்சிக்கான பாதையாகி அது சமூகத்தின் மேல் திணிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கத்தான் தாம் அரசை ஆதரிப்பதாகவும் அல்லது புலியை ஆதரிப்பதாகவும் கூறி, அங்குமிங்குமாக தமிழ் மக்கள் மேல் பீச்சியடிக்கின்றனர்.
தமிழ் மக்கள் பேரினவாத அரசு மற்றும் புலிகளால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கின்ற துயரத்தையும், துன்பத்தையும், யார் தான் இன்று நேர்மையாக குறைந்தபட்சம் சொல்லுகின்றனர்.
இந்த மனித சோகத்தை பேசாத நேர்மை, உண்மை, மனித நேயம் என அனைத்தும் பொய்யானது. பித்தலாட்டம் கொண்ட அறிவு மூலம், முற்போக்கு இடதுசாரியம் மார்க்சியம் என்று வேஷம் கட்டி, தமிழ் இனத்தை தம் அழிவுக் கருத்துக்களால் நலமடிக்கின்றனர்.
இவையெல்லாம் இன்று புலிகளை வெல்லுதல் என்ற சிங்கள பேரினவாத போர்வெறி ஊடாக அரங்கேறுகின்றது. தமிழ் இனத்தின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும், சமூக அறிவையும் கூட அழி;த்தொழிக்கின்றது. நம்பமுடியாத தளங்களில், சமூக கருத்துவடிவங்களையும் கூட, அது துடைத்தெறிகின்றது. தமிழினமோ கருத்தற்ற அனாதையாக்கப்படுகின்றது. தமிழினம் மனித வாழ்வை இழந்துவிடுவதால், சமூக வாழ்வுக்கான சமூக மீட்சியை மறுதளித்துவிடுகின்றது.
எங்கும் எதிலும் பாசிச சிந்தனை. மந்தைகள் போல் அறிவுத்தளம், கருத்தற்றுப் போகின்றது. இதன் மேல் தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் துரோகங்கள் அரங்கேறுகின்றது. இதை பேரினவாதத்தின் வெற்றி உறுதிப்படுத்துகின்றது. தமிழ் மக்களுக்காக கதைத்தவர்கள் எல்லாம் இன்று, புலியின் பின் அல்லது பேரினவாதத்தின் பின்னால் சென்று காணாமல் போகின்றனர்.
தமிழ் மக்களின் அவலங்களையும், அதற்கான தீர்வையும் இவர்கள் வழிகாட்ட முடிவதில்லை. தமிழ் மக்களை ஒடுக்குகின்ற சிந்தனைத் தளத்தைத் தாண்டி, வாழ்வுக்கானதும் விடிவிற்கானதுமான ஒன்றை முன்வைப்பதை மறுப்பதே, இவர்களின் வழிகாட்டலாகிவிடுகின்றது.
கடந்தகாலத்தில் மிகக் கொடுமையான அடக்குமுறை இயந்திரங்களைத் தாண்டி, சிந்தனைத் தளத்தில் சமூக மீட்சிக்கான சமூக உணர்வுகள் துளிர்த்தவண்ணம் இருந்தது. அதையும் கூட இன்று, இந்த யுத்தம் சாகடித்து விடுகின்றது.
இன்று இதை ஓட்டி நாம் மட்டும் பேசுவது, மற்றவன் பார்வைக்கு பைத்தியக்கார செயலாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைக்கத் தெரியாதவர்களின், வெற்று அலட்டலாக உள்ளது. எங்கும் எதிலும் பாசிசம் குடிகொண்டுவிடும் போது, மனிதத்தன்மை என்பது இழிவான ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது. அதைப் பேசுவது தமிழினத்துக்கு எதிரான ஒன்றாக காட்டப்படுகின்றது.
தமிழினத்துக்காக போராடுவதாகவும், அதன் மீட்சிக்காக யுத்தம் செய்வதாக போடும் கூச்சல்கள், இன்று அந்த இனத்தையே அழிக்கின்றது. இவர்களால் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற சமூக அழிவை பேசுவது, பைத்தியக்கார செயலாக சித்தரிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பற்றிப் பேசாது, புலியை அல்லது பேரினவாதத்தை ஆதரிப்பதே சமூக வழிகாட்டலாக்கப்படுகின்றது.
இன்று இந்த போக்கினிடையே நாம் மேலும் தனிமைப்பட்டு உள்ளோம். மக்களின் வாழ்வின் மீது நாம் மட்டும் தனித்து போராடுவது என்பது, இன்று எமது சமூகத்தின் வரலாற்று நியதியாக உள்ளது.
பி.இரயாகரன்
20.12.2008