நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை

 

மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு
அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால்
பிழைத்துக் கொள்வார்கள்
வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று


விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே
நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள்
இருள் கவிந்துவிடுமாயின்
தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு


கடிப்பதற்குச் சயனைட்டும்
குடிப்பதற்கு ஆற்று நீரும்
உன்னைக் காத்திருக்கும்
நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும்


நெடிய வானம் உனக்கான தேசத்தை
தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு
தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு
தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை


கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து
வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம்
மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக
விழிகளால் பேசிவிடு


ஓ...நியாயமற்றவர்களே!
ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள்
உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்?
அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை


ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால்
எவருக்காவும் எதற்காகவும் நீ துப்பாக்கியைக் களையாதே
மரிப்பதற்குத் தயாராகி விடு
மரிப்பதனால் நீ விடுதலையைப் பெற்றுவிடுகிறாய்


தேச விடுதலை:

இன்று,உலகமே திரண்டு ஈழத்தமிழர்கள்மீது போரிடுகிறது.

 

மறைமுகமாக இயங்கியவர்களெல்லோரும் பகிரங்கமாகப் போர்ப் பவனி வருகிறார்கள்.வன்னியில் தமது நேரடிப் பார்வையோடும்,கட்டளைகளோடும் உலகமே திரண்டு தமிழர்களைக் கொல்கிறது.

 

இது, எதனால்-ஏன் நடைபெறுகிறது?

இதற்கான விடை இலகுவானதல்ல!

 

இன்றைய உலகத்தின் தெரிவில்,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டம் மழுங்கடிக்கப்படுவதற்கான முன் தயாரிப்புக்களைச் செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா,இன்றோ நேரடியாகக் களத்தில் சிங்கள இராணுவத்துக்கு வழிகாட்டித் தமிழர்கள்மீது போர் தொடுக்கின்றன.இத்தகைய பாரிய அழிப்புப்போர்ச் செல்நெறியை எதிர்கொள்ளும் ஆற்றல் எந்தவொரு குட்டிமுதலாளிய இயக்க அமைப்புக்கும் கிடையாது.மக்களின் பலத்தில் ஊன்றி நின்று, அமைப்பைக்கட்டிய விடுதலைப்படைகள் சாரம்சத்தில் மக்கள் விடுதலைப்படையாகப் பரணித்திருப்பவை.அத்தகைய மக்கள் இராணுவத்தை மக்கள் விரோதிகளால் இலகுவாக அழிக்கமுடியாது.இதற்கு வியாட்நாமியப் போர் பற்பல பதில்களைச் சொல்கிறது.

 

இன்று, நம்மீது தொடுக்கப்பட்ட உலக ஏகாதிபத்தியத்தின் அத்துமீறிய போர், சாரம்சத்தில் நமது மக்களின் மௌன அங்கீகாரத்தோடு நகர்த்தப்படுவதுபோன்றே இலங்கைச் சூழல் நிலவுகிறது.

 

இலங்கைத் தமிழ்பேசும் மக்களைப் பலவருடங்களாக மதத்தாலும்,சாதிகளாலும்,பிரதேசத்தாலும் பிளந்து பலவீனப்படுத்திய இந்திய-அமெரிக்க வியூகம் தற்போது எமது மக்கள்மீதான முழுமையான இராணுவத் தீர்வைத் திணித்து, நமது தேசபக்தப் போராளிகளை அழித்து வருகிறது.


இத்தகைய தருணத்தில் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத் தவறுகளால் சீரழிந்துபோன மக்கள் விடுதலைப்படையாகப் போராளிகள் மண்ணுக்காக மரித்துவருகிறார்கள்.மக்கள் போராட்டச் சூழலின் பாரதூரமான இந்தப் பின்னடைவு, புலிகள் அமைப்பின் தலைமைத்துவத் தவறுகளால் நிகழ்ந்திருப்பினும் அவ்வமைப்போடு நமது மக்களின் சுயநிர்ணயப்போராட்டம் பிணைந்திருப்பதால் அவ்வமைப்பின் அடிமட்டப் போராளிகளை எமது மக்கள் அம்போவென விட்டுவிட முடியாது.போர் புலிகள் இயக்கத்தை நோக்கி நகர்த்தப்படவில்லை.மாறாக, முற்றுமுழுதான தமிழ்பேசும் மக்களின் உரிமைகளின்மீதும் குறிவைத்துத் தாக்கப்படுகிறது.நமது மக்களின் எதிரிகள், பற்பல தேசத்துப் பூகோள நலன்களினதும்,பொருளாதார நோக்குகளினதும் நலன்களை மையப்படுத்திப் போராளிகளை வேட்டையாடுகிறார்கள்.

 

புலிகளாகச் சாவது நமது மக்களின் குழந்தைகளே!

 

இனியும் நமது மக்கள் மௌனித்திருக்க முடியாது.

 

நமது மக்களினது நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதென்பது நமது தேசபக்தப் போராளிகளைக் காத்தலோடும் சம்பந்தப்பட்டது.இதை மறுத்துவிட்டு மக்கள் நலன்பேசுவது கபடத்தனம்.

 

புலிகள் அமைப்பின் அழிவைக் குறித்து அரசியல் நோக்கு பற்பல வகைப்படும்.

 

எனினும்,அப்பாவிப் போராளிகளை உலகமே திரண்டு அழிப்பதற்கு எவரும் உடந்தையாக இருக்கமுடியாது!

 

இன்றைய சூழலில் நமது போராளிகளை எந்த நிபந்தனையுமின்றி நாம் ஆதரிக்கவேண்டியுள்ள வரலாற்றுக்கடமை நம் முன் நிற்கிறது.சிங்கள அரசுக்கெதிரான போராட்டமாகக் காட்டப்பட்ட இவ்யுத்தம் சாரம்சத்தில் உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமென்றும்,அது, புரட்சிகரமான பாத்திரத்தை எடுத்தாகவேண்டுமென்றும் அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஓயாது உரைத்து வந்துள்ளோம்.புலிகளின் தவறான பார்வைகள்மட்டுமல்ல அவர்களது வர்க்க நிலையும்,சார்வும் தமிழ்பேசும் மக்களை உலக வல்லரசுகளிடம் அடிமைப்படும் இன்றைய நிலைக்குத் தள்ளியுள்ள இந்தப் போர் தோல்வியில் முடியப்போகும் சூழலில் உலகத்து இராணுவத் தளபதிகள் எல்லோருமே நம்மை மேய்ப்பதற்கு வன்னியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

 

இதை முறியடித்து, மக்கள் தமது சுயநிர்ணயப் போராட்டத்தைத் தக்கவைத்து விடுதலையடைவதென்பது புலிகளின் அடிமட்டப்போராளிகளைக் காப்பதிலிருந்தே ஆரம்பமாகிறது.இது, எங்ஙனம் சாத்தியமென்பது களத்தில் போராடிமடியும் போராளியல்லத் தீர்மானிப்பது.மாறாக, மக்களே இவற்றைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.மக்கள் திரள் திரளாக எழுச்சியுற்று, வன்னியில் திரண்டிருக்கும் உலக வல்லரசுகளின் இராணவத் தளபதிகளுக்கெதிராகக் கலகஞ் செய்தாகவேண்டும்.இலங்கை பூராகவும் எழிச்சியடையவேண்டிய மக்களின் கலகம், உலகு தழுவிய முறையில் ஆர்பாட்டமாகவும் வெடித்தாகவேண்டும்.

 

முதலாளித்துவத் தேசங்களின் முகமூடிகளாக இருக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் முன் ஆர்;ப்பாட்டப் பேரணிகள்-ஊர்வலங்கள் சங்கிலித்தொடராக நிகழ்ந்தாகவேண்டும்.இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் இராணுவ ஆலோசனைகளும் வழங்கும் உலக நாடுகளை அம்பலப்படுத்தித் தமிழ்பேசும் மக்களை அநாதைகளாக்கும் இவர்களுக்கெதிரான ஜநாயகபூர்வமான போராட்டங்கள் இன்றி வன்னியில் நமது போராளிகளைக் காக்க முடியாது.

 

வன்னியில் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு,இலங்கை அரசு உடனடியாகத் தமிழ்பேசும் மக்களோடு பேச்சுவார்த்தையைச் செய்து, அவர்களது சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும்.இது, இலங்கை ஒற்றையாட்சிக்குள் ஒரு மாற்றான மேலான தீர்வைச் செய்யும் முன் நிபந்தனைகளில் ஒன்று.தமிழ்பேசும் மக்களுக்குப் "பொருளாதார அபிவிருத்தித்தான் சுபீட்சமான தீர்வைத்தரும்,அதுதான் பிரச்சனையின் முதற்காரணி"யெனப் பிளேட்டைத் திருப்பும் அமெரிக்கா கிழக்கில் தனது சதி வேலைகளைச் செய்தபடி... இப்போது, வன்னியிலும் மக்களை அழிப்பதற்கான ஆயுதங்களை- ஆலோசனையை இலங்கைக்கு வழங்கித் தனது சதியை மேலும் விருத்தியாக்கி வருகிறது.மறுபுறத்தில்,நியாயவான் வேஷம்போடும் துப்புக்கெட்ட இந்தியாவோ அனைத்துவகைக் குழறுபடிகளையுஞ் செய்து நமது மக்களைப் பூண்டோடு அழிக்கக் களத்தில் சிங்கள முகமூடியோடு போராடுகிறது!
பண்டுதொட்டு அந்நியத் தேசங்களை நம்பிய புலிகள் உயிர்ப்பிச்சைக்காக யுத்தஞ் செய்தபடி, கடந்தகாலவுறுகளை இனிமேலும் புதுப்பிக்கப் புலித் தலைமை ஆர்வங்கொண்டிருப்பினும் நாம் செய்யவேண்டிய பணி வேறானது!

 

நமது மக்கள் தமது பிரச்சனைகளை அந்நியத் தயவில் வென்றெடுக்கமுடியாதென்பதால் இன்றைய சூழலில் மக்கள் தமது பிள்ளைகளைக் காக்கும் முதற்படியாக அணியணியாகத் திரண்டு வன்னியில் இடம்பெறும் கொடூர யுத்தத்துக்கெதிராகக் கலகஞ் செய்தாகவேண்டும்.ஆனால்,இலங்கையின் இன்றைய சூழலோ மிகவும் கெடுதியானவொரு சூழலைத் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கியுள்ளது.


யாழ்ப்பாணம் இராணுவத்துக்குப் பின்னே,கிழக்கு மாகாணம் இராணுவத்துக்கு பின்னே சென்றுவிட்டபின் அங்கெல்லாம் மக்கள் உணவுக்கு-அதிமானுடத் தேவைகளுக்காக ஏங்கிக் கிடப்பதே முதன்மையான பணியாகக் கிடக்கிறது.

 

மக்கள் தமது பிரச்சனையை வெறும் உணவுப் பிரச்சனையாக உணரத்தக்கப்படி உலக வல்லரசுகள் நம்மையும்,நமது போராட்டத்தையும் திசை திருப்பிவிட்டார்கள்.இதுதாம் கடந்தகாலத்தில் புலிகள் செய்த பேச்சுவார்த்தைகளின்பலன்.

 

அந்நிய தேசங்களில் அவர்கள் பேசிய அரசியலின் தொடர்ச்சி இப்போது வன்னியில் சர்வதேச இராணுவங்களினது தளபதிகளின் கூட்டு ஆலோசனையாக மையங்கொண்டிருக்கிறது.இது,ஐ.நா.துருப்புகளாக மாற்றப்பட்டு, இலங்கை எங்கும் அந்நியத் துருப்புக்கள் வருவதற்கானவொரு முன் நிகழ்வாக இருக்கிறது.பெரும்பாலும் நமது மக்களின் விடுதலையைச் சிதைப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் புலிகளைக்கொண்டியக்கிய அந்நிய தேசங்கள் இப்போது தமது நேரடியான தலைமையின்கீழ் நமது போராளிகளை அழித்துத் தமது பங்காளியைக் காப்பதற்கெடுக்க்கும் முயற்சியைத் தோற்கடிப்பதற்கான முதற்தெரிவே வன்னியில் யுத்தத்துக்கு எதிரான பாரிய மக்கள் கலகமாக இருக்கவேண்டும்.

 

இதைச் செய்வதற்கு முடியாதவொரு இனம் வரலாற்றில் தனது உரிமைகளை அந்நிய தேசங்களிடம் பறிகொடுத்து வாழும் நிலைக்குள் தள்ளப்படும்.அது,பெரும்பாலும் ஈழ மக்களாகவே இருப்பார்கள்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
19.12.2008