அண்டார்டிகா, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் பயங்கரவாதிகள் இதுவரை நடத்திய அதி பயங்கர தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆளே இல்லாத நாட்டுல யாருக்குடா குண்டு வைக்கிறாய்ங்க என்று வியக்கும் நல்லுள்ளம் கொண்டோர்களுக்கான விளக்கம் வருமாறு.
நாசா என்கிற அமெரிக்க ஆய்வு கூடம் நடத்திய ஆய்வில் இதுவரை அண்டார்டிக, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் 2003லிருந்து 2 டிரில்லியன் டன் ஐஸ் கட்டி உருகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை குலோபல் வார்மிங் என்று சொல்கிறார்கள். நமக்கென்னவோ குலோபல் வார்னிங் என்றே காதில் விழுகிறது. 2 டிரில்லியன் டன் என்பது2 லட்சம் கோடியே ஆயிரம் கிலோ பனிக்கட்டி உருகியுள்ளது. இப்படி நடைபெறும் பணிக்கட்டி உருகல் குறித்து பல வருடங்களாகவே மிக கடுமையான எச்சரிக்கைகளை ஆய்வாளர்கள் அறிவித்து வந்துள்ளனர். இது குறித்து முன்னாள் அமெரிக்க குடியரசு பதவி போட்டியாளர் அல் கோர் எடுத்த ஆவணப் படமான 'குலோபல் வார்மிங் - தி இன்கண்வீனியண்ட் ட்ரூத்' பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. (The Hindu - Dec 17 2008 - Newscape - 2 Trillion tonnes of ice have melted since 2003: NASA) (Ice melting across globe at accelerating rate, NASA says - CNN)
குலோபல் வார்மிங் பிரச்சினையால்தான் மாலத்தீவு மூழ்கும் அபாயம் ஏற்பட்டு அந்த நாட்டு பிரஜைகள் உலகில் எங்கு வேண்டுமானலும் குடியேறும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 40 வருடம் கழித்து உருகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பனிப்பாறை ஒன்று இந்த வருட ஆரம்பத்திலேயே உருகி பீதியை கிளப்பியிருந்தது இங்கு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது.
மனித குலத்தையே பூண்டோடு அழிக்கும் திட்டத்துடன் இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை சர்வதேச முதலாளிகள் வரைமுறையற்ற தொழில்சாலை உற்பத்தி, லாப வெறி உள்ளிட்டவைகளின் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். இயற்கை வளங்களை நாசப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உற்பத்தியே இந்த பயங்கரவாதத்திற்க்கு காரணம். இதே பயங்கரவாதிகள்தான் தமது பயங்கரவாத செயல்களின் மூலம் ஈட்டிய பணத்தை பங்கு சந்தையில் வைத்து சூதாடி ஒட்டு மொத்த உலகையும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள பயங்கரவாத செயலுக்கும் காரணாமனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச பயங்கரவாதிகளை ஒழிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரச் சொல்லி எல்லாம் வல்ல அத்வானி அவர்களிடம் கோரிக்கை வைக்கும் யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது. பிறகு அவரும் அந்த கும்பலில் ஒருவர் என்பது தெரியவந்தவுடன் அந்த யோசனை கிடப்பில் போடப்பட்டது.
இப்பொழுது இந்த பயங்கரவாத அபாயத்திலிருந்து உலகை காப்பாற்ற என்ன செய்யலாம் என்று மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க.
சூரியன்