12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்

வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள் வந்துவிட்டன. தேவை இன்னமும் குறைந்தபாடில்லை.


1883ல் வெளிவந்த ஜெர்மானிய பதிப்பின் அட்டையில் காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவருடைய பெயரும் இருந்தன. அதன் முன்னுரையில் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தினர். உண்மையில் இது மார்க்சின் தனிப்பட்ட படைப்பு. அறிக்கையின் அடிப்படை சாரம் முழுக்க முழுக்க மார்க்சையே சாரும். தவிரவும், லண்டனில்

கம்யூனிசத்தை அப்போதைய உலகம் எப்படிப் பார்த்தது என்பதை அறிக்கையே வெளிப்படுத்துகிறது. கம்யூனிசம் என்னும் பூதம் ஐரோப்பா முழுவதையும் சுற்றிவருவதாக பீதி கிளம்பியிருக்கிறது. காவல் துறையினர், உளவாளிகள், அரசாங்கங்கள், மன்னர்கள் என்று அனைவரும் கம்யூனிசத்தைக் காட்டி மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? கம்யூனிசம் என்பது ஒரு சக்தி என்பதை ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிஸ்ட்களின் லட்சியம் என்ன? நோக்கம் என்ன? நம் பார்வை எப்படிப்பட்டது? அனைத்தையும் நாம் பட்டவர்த்தனமாக அறிவித்தாகவேண்டும். நம் நிலையை நாம் தெளிவுப்படுத்தியாகவேண்டும். ஆகவே, இந்தப் பிரகடனம்.

வசீகரிக்கும் சில முக்கிய லட்சியங்களை அறிக்கை அடுக்கியது. குழந்தைகள் அனைவருக்கும் இலவச கல்வி. குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஒருவரும் இருக்கமாட்டார்கள். நகரத்துக்கும் கிராமத்துக்குமான இடைவெளி குறைக்கப்படும். பிறகு, அழிக்கப்படும். நகரம், கிராமம் என்று பேதமில்லாமல் மக்கள் பரவலாக வசிப்பார்கள். தரிசாகக் கிடக்கும் நிலங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும். தகவல், போக்குவரத்து ஆகியவற்றை அரசாங்கம் நிர்வகிக்கும். வங்கிகள் தேசியமயமாக்கப்படும். தனிச்சொத்துரிமை கிடையாது.

கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யவேண்டும்? மக்களிடையே உண்மையை பரப்பவேண்டும். பணக்காரர்களும் ஏழைகளும் எப்படித் தோன்றுகிறார்கள் என்பதை புரியவைக்கவேண்டும். ஒரு வர்க்கமாக தொழிலாளர்கள் ஒன்றிணையவேண்டிய அவசியத்தை உணர்த்தவேண்டும். தற்போதைய அரசியல் அமைப்பை எதிர்த்து போராடுபவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் உதவிசெய்யவேண்டும்.

கம்யூனிசப் புரட்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கசெய்யவேண்டும். தொழிலாளர்கள் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர. பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

லாபம், மேலும் லாபம் என்று பணத்தைத் துரத்திக்கொண்டிருந்த முதலாளிகளை இந்த அறிக்கை இம்சித்தது. தொழிலாளர்கள் இந்த அறிக்கையை வாசித்து புதிய தெம்பையும் நம்பிக்கையையும் பெற்றார்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் புதிய வெளிச்சத்தை கண்டனர். இது நம் தலைவிதி, கடவுள் நமக்கு கொடுத்தது இவ்வளவுதான் என்று ஏழைமையை வேறு வழியின்றி சகித்துக்கொண்டிருந்தவர்கள், துணிந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை வீட்டுக்குப் போ என்று நினைத்த மாத்திரத்தில் கழுத்தைப் பிடித்து தள்ளும் நிலை மாறியது. ஏன் என்ன காரணம் என்று தொழிலாளி திருப்பிக் கேட்க ஆரம்பித்தார். வேலை நேரங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன. ஆண்களுக்குத் தனி பெண்களுக்குத் தனி என்றிருந்த ஊதிய முறை மாற்றிமைக்கப்பட்டது.

1917 அக்டோபரில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ரஷ்யப் புரட்சி, கொடுங்கோல் ஜார் ஆட்சியை வீழ்த்தியது. புதிய சோவியத் யூனியன் மலர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸ்ட் தேசங்களாக மாறின. 1949ல் சீனா கம்யூனிஸ்ட் நாடானது. 1959ல் க்யூபா. மிகச் சமீபத்தில், நேபாளம். இந்த தேசங்களில் சில உயிர்ப்புடன் கம்யூனிசத்தைப் பாதுகாக்கின்றன. சில தவறவிட்டுவிட்டன. ஆனால், கம்யூனிசம் உயிர்ப்புடன் இருக்கிறது.

பிபிசி சர்வே ஒன்றை நடத்தியது. உங்கள் பார்வையில் உலகத்தை மாற்றியமைத்த பெருமகனார் யார்? காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் என்று பலரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், மக்கள் முன்வைத்த பெயர் காரல் மார்க்ஸ். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், இலக்கியம், கலை என்று மார்க்சியம் செழுமைப்படுத்தியுள்ள துறைகள் ஏராளம்.

உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூதம், ஏகாதிபத்தியம். வால் மார்ட் சரிந்துகிடக்கிறது. விலைவாசி உச்சத்தில். லாபத்துக்காக தேசங்கள் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் என்னும் சிலந்தி வலைப்பின்னலில் பூச்சிகள் போல் ஏழைகள் சிக்கிக்கிடக்கிறார்கள். சிக்கலில் இருந்து விலகிக்கொள்ள மாத்திரமல்ல, சிலந்திகளைப் பற்றி விலாவரியாகத் தெரிந்துகொள்ளவும் இந்த அறிக்கை அவசியம்.

அறிக்கையின் முழுவடிவம் இங்கே.

http://marudhang.blogspot.com/2008/12/160.html

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்