Language Selection

புதிய ஜனநாயகம் 2008

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

 

''கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மது பஷீர் என்ற அடிஃப் மற்றும் முகம்மது பக்ருதீன் என்ற சஜித் ஆகிய இருவரும் தில்லி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அடிஃப்தான் அந்த அமைப்பின் தளபதி; ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இவர்கள்தான் காரணம்'' என்று தில்லி போலீசு அறிவித்தது.


இந்த மோதல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சாகிப் நிஸார், ஷீஷன் உள்ளிட்ட பல முசுலீம் இளைஞர்கள் ஜாமியா நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். ''இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையை அழித்தொழித்து விட்டதாக'' அறிவித்தார், தில்லி போலீசின் இணை கமிசனர். இம்மோதலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தில்லி போலீசின் மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா மோதலின்பொழுது சுடப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.


இம்மோதல் பற்றிய ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி, அவுட்லுக், ஃபரெண்ட்லைன், எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி உள்ளிட்ட பல்வேறு முதலாளித்துவ பத்திரிகைகளும் இம்மோதலின் உண்மைத் தன்மை பற்றி எழுப்பி வரும் சந்தேகங்கள் முன்னணிக்கு வந்துள்ளன. மேலும், மோதலில் கொல்லப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட "தீவிரவாதிகள்' பற்றி தில்லி, உ.பி., மும்பை, ஜம்முகாசுமீர் போலீசார் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாக அமைந்து, தில்லி போலீசாரின் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றிவிட்டன


ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸில் ''எல்.18'' என்ற பிளாட்டில் ஐந்து தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தேடச் சென்றபொழுது நடந்த மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்; இருவர் தப்பியோடிவிட்டதாக "இந்த சண்டை படத்திற்கு'த் திரைக்கதை எழுதியிருக்கிறது, தில்லி போலீசு. ''அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழையவும், வெளியேறவும் ஒரேயொரு வழிதான் இருக்கும்பொழுது, அந்த வழியையும் போலீசார் சுற்றி வளைத்திருந்தபொழுது அந்த இரண்டு தீவிரவாதிகளும் ஆயுதந்தாங்கி நின்ற போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படித் தப்பியிருக்க முடியும்?'' என்று பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


இந்தக் கேள்விக்கு தில்லி போலீசார் எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை. ஆனால், அவர்களின் சார்பாக பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், ''போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா சுடப்பட்டவுடன் வாசலில் நின்ற போலீசார் தங்களது அதிகாரியின் உயிரைக் காப்பாற்றப் போய்விட்டதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இரண்டு தீவிரவாதிகளும் தப்பிவிட்டனர்'' என்று விளக்கமளித்துள்ளார். பாட்லா ஹவுஸிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு யாரும் நுழையமுடியாதபடி அரண் அமைத்து பெரும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் தப்பியிருக்கிறார்கள் என்றால், அவர்களின் "திறமையை' மெச்சுவதா? இல்லை, தில்லி போலீசின் "தூங்குமூஞ்சிதனத்தை' நொந்து கொள்வதா என்பதை அந்தப் பத்திரிகையாளரிடம்தான் கேட்க வேண்டும்.


"மோதலில்' கொல்லப்பட்ட அடிஃபை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் மூளையாகக் காட்ட வேண்டும் என்பதற்காக தில்லி போலீசார், ''உ.பி.யில் உள்ள அஸம்கர் ஊரில் அடிஃப் வைத்திருந்த வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் பணம் இருந்ததாக''க் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த வங்கி மேலாளரோ அடிஃப் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.1,400 மட்டுமே வைத்திருந்ததாகக் குட்டை உடைத்துவிட்டார்.


தில்லி குண்டு வெடிப்பை நடத்திய அடிஃப் பாட்லா ஹவுஸில் பதுங்கியிருந்ததாக தில்லி போலீசார் கூறி வருகின்றனர். ஆனால், அடிஃப் பாட்லா ஹவுஸில், எல்.18 என்ற பிளாட்டில் தங்கியிருக்கிறார் என்பதும், அவரது கைபேசி எண்ணும்கூட ஜாமியா நகர் போலீசாருக்கு "மோதலுக்கு' முன்பே தெரியும். தில்லியில் யாராவது புதிதாகக் குடியேறினால், அவர் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அப்பகுதி போலீசு நிலையத்தில் கூறிச் சான்று பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதன்படி அடிஃபும் நடந்துகொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார். பதுங்க வந்த தீவிரவாதி இப்படி பகிரங்கமாக நடந்து கொள்வானா?


"மோதலில்' அடிஃப் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர் தீவிரவாதியாக போலீசாரால் பட்டம் கட்டப்பட்ட அதே சமயம், பாட்லா ஹவுஸ் குடியிருப்பின் பராமரிப்பாளர், அடிஃப் ஜாமியா நகர் பாட்லா ஹவுஸில் குடியேறியிருப்பது தொடர்பாக ஜாமியா நகர் போலீசார் அளித்திருந்த சான்றிதழைப் பத்திரிகையாளர்கள் முன் காட்டினார். தனது குட்டு அம்பலப்பட்டுப் போனதைக் கண்ட தில்லி போலீசார், ''அந்த சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டதாக'' அறிக்கை விட்டனர்.


தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சாகிப் நிஸாருக்கும் அகமதாபாத் குண்டு வெடிப்புக்கும் தொடர்புண்டு என்பது தில்லி போலீசாரின் கண்டுபிடிப்பு. அகமதாபாத்தில் குண்டு வெடித்த அதே நாளில், சூரத் நகரில் கொத்துக்கொத்தாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே தினங்களில் "தீவிரவாதி' சாகிப் நிஸார் தில்லியில் முதுகலை வணிக மேலாண்மை தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார். அவரது விடைத் தாள்கள் உள்ளிட்டு, அவர் அத்தேர்வை எழுதியுள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும், யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றபடி பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ''குண்டு வெடித்த அன்று அவர் அகமதாபாத்தில் இல்லை என்பது உண்மை; ஆனால், அவர் அகமதாபாத்துக்குச் சென்று வந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக'' தில்லி போலீசார் சாகிப் நிஸார் மீது மொட்டையாகக் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.


ஷீஷன் என்ற முசுலீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்ட அடிஃபுடன் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருந்தார் என்பதை வைத்தே அவருக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக தில்லி போலீசார் கதை கட்டி வருகின்றனர். ஷீஷன் ஐ.ஐ.பி.எம். என்ற மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேருவதற்காக, அக்கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வை எழுதும் பொருட்டுதான் தில்லி வந்து பாட்லா ஹவுஸில் தங்கியிருந்தார். ஷீஷன் இப்போலி மோதலைப் பற்றி ''ஹெட்லைன்ஸ் டுடே'' என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் என்ற ஒரே காரணத்திற்காகதான், அவர் பேட்டியளித்துவிட்டு அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் படப்படிப்பு அரங்கத்திலிருந்து வெளியேறிய மறுநிமிடமே கைது செய்யப்பட்டார். ஷீஷன் அளித்த பேட்டியின் ஒளிபரப்பும் போலீசின் நெருக்குதல் காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாட்லா ஹவுஸின் பராமரிப்பாளரின் மகன் ஜியா வுர் ரஹ்மான், ஷகீல் ஆகிய முசுலீம் இளைஞர்களும் இப்போலி மோதலை அம்பலப்படுத்திக் கருத்துச் சொன்னதற்காகவே கைது செய்யப்பட்டுத் தீவிரவாதிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.


இம்மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட முகம்மது பக்ருதீன் என்ற சஜித் இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர் என்கிறது தில்லி போலீசின் அறிக்கை. ஆனால், சஜித் 18 வயதுகூட நிரம்பாத சிறுவன் என்றும், ஜாமியா நகரில் உள்ள பள்ளியொன்றில் +1 வகுப்பில் சேருவதற்காகவே அச்சிறுவன் தில்லி வந்ததாகவும் பிரெண்ட்லைன் ஆங்கில இதழ் குறிப்பிடுகிறது. (பிரெண்ட்லைன், அக்.24,2008, பக்.90)
பாட்லா ஹவுஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட அடிஃப்தான் காசியில் மார்ச் 7, 2006 அன்று நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பது தில்லி போலீசின் புலனாய்வு. போலீசு இணை கமிசனர் கர்னயில் சிங் காசியில் அடிஃபின் நண்பர்களுள் யார்யார் எங்கெங்கு குண்டு வைத்தார்கள் என்பது பற்றியெல்லாம் விலாவாரியாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அதேசமயம் உ.பி. போலீசோ காசி குண்டு வெடிப்புக்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹுஜி அமைப்புதான் காரணமென்றும் அக்குண்டு வெடிப்புக்குக் காரணமான முகம்மது ஜுபைரை கடந்த மே 9 அன்று சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; முகம்மது வாலியுல்லாவிற்கு 10 வருட தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டதாகவும்; மீதியுள்ள மூன்று குற்றவாளிகள் வங்க தேசத்திற்குத் தப்பிவிட்டதாகவும் அடித்துக் கூறி வருகிறது.


''அஸம்கர் குழு'' என்று அழைக்கப்படும் அடிஃப் கோஷ்டிதான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும் காரணம் என்பது தில்லி போலீசின் கண்டுபிடிப்பு. ஆனால், மைய அரசோ ஹுஜி அமைப்பைச் சேர்ந்த ஷஹித் பிலால்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறியிருப்பதோடு, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பிலாலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.


''அபு அல்காமாதான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தலைமை தாங்குவதோடு, லஷ்கர்இதாய்பா என்ற தீவிரவாத அமைப்பின் களத் தளபதியாகவும் செயல்படுவதாக''தில்லி போலீசார் இம்மோதலுக்குப் பின் அறிவித்தனர். ஆனால், ஜம்முகாசுமீர் போலீசோ, ''அல்காமா கடந்த ஏப்ரலிலேயே இறந்து விட்டதாகவும்; ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர், தில்லி குண்டு வெடிப்புகளுக்கும் ஜம்முகாசுமீரில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் எவ்வித் தொடர்பும் கிடையாது'' என்றும் அறிவித்திருக்கிறது.


தீவிரவாதிகள் சுட்டுதான் போலீசு ஆய்வாளர் மோகன் சர்மா இறந்து போனதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஜாமியா நகர் பகுதி மக்களோ, ''அந்த இளைஞர்கள் போலீசை நோக்கிச் சுட்ட ஓசை எங்களுக்குக் கேட்கவில்லை'' என்று கூறியுள்ளனர். அதே சமயம், மோதலுக்கு முன்பாக, ஏறத்தாழ ஒரு வாரமாக போலீசார் ஜாமியா நகர் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறுகின்றனர்.


ஜாமியா நகர் பாட்லா ஹவுஸில் தீவிரவாதிகளைத் தேடப் போவதாகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் செய்தி கொடுத்துவிட்டு மோகன் சர்மா தலைமையில் வந்த போலீசார், எல்18 பிளாட்டில் தங்கியிருந்த இளைஞர்களைக் கீழே இழுத்து வந்து அடித்ததாகவும், அப்பொழுது நடந்த கைகலப்பில் போலீசாரின் துப்பாக்கித் தவறுதலாக வெடித்து ஆய்வாளர் மோகன் சர்மாவைக் காயப்படுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த இரு இளைஞர்களையும் அதே இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பிரஃபுல் பித்வாய் என்ற பத்திரிகையாளர் பிரெண்ட்லைன் (அக். 24, 2008, பக். 97) ஏட்டில் குறிப்பிட்டுள்ளார். அவுட்லுக் என்ற ஆங்கில இதழும் மோகன் சர்மா போலீசார் தவறுதலாகச் சுட்டதனாலேயே இறந்து போனதாகக் குறிப்பட்டுள்ளது. (அவுட்லுக், அக். 6, 2008, பக்.30, 31)


இம்"மோதல்' பற்றிய இத்தணை சந்தேகங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் தில்லி போலீசார் எவ்வித நியாயமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. மாறாக, ''ஒரு போலீசு அதிகாரியை இழந்திருக்கிறோம்; அது பற்றி கவலைப்படாதவர்கள், தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக'' வழக்கமான தேசபக்தி ஒப்பாரிக்குள் புகுந்து கொண்டனர்.


''காங்கரசு கூட்டணி ஆட்சி பலவீனமான ஆட்சி'' என்று திரும்பத் திரும்பக் கூறிவரும் பா.ஜ.க. கும்பலின் வாயை அடைப்பதற்காகவே ஆளும் காங். கும்பல் இம்"மோதலை'த் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்று கூட மனித உரிமை அமைப்புகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. இல்லையென்றால், மைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலே இம்மோதலை ஏன் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்? மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சர்மா துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவச உடையை அணிந்து கொள்ளாமல் ஏன் தேடுதல் வேட்டைக்குக் கிளம்ப வேண்டும்? என்ற கேள்விகளை அவ்வமைப்புகள் எழுப்பியுள்ளன.


காங்கிரசு மீதான இக்குற்றச்சாட்டு ஒருபுறமிருக்கட்டும்; பல்வேறு சந்தேகங்களுக்கு உள்ளாகியிருக்கும் இம்மோதல் உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் கமிசன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முசுலீம் மக்கள் கோருவதைக்கூட மைய அரசு காதிலே வாங்கிக் கொள்ள மறுக்கிறது. அதே சமயம், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்யாசினி பிரக்ஞா சிங், தன்னை போலீசார் துன்புறுத்துவதாகப் புலம்பியவுடன், அது பற்றி அத்வானி ஊளையிட்டவுடன், தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் அத்வானியைச் சந்தித்து பிரக்ஞா சிங்கின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்.


எப்பேர்பட்ட மதச்சார்பற்ற நாடு! எப்பேர்பட்ட மதச்சார்பற்ற ஆட்சி!


·ரஹீம்