உலகை வெல்லத் துடிக்கும் ''பேரரசுகள்'' தங்கள் கொடி பறக்க இந்தப் பூமிப் பந்தில் இடம் போதாமல் நிலவிலும், செவ்வாயிலும் துண்டு போட்டு இடம் பிடித்து வருகின்றன. இந்த வரிசையில் தன்னையும் ஒரு வல்லரசாகச் சேர்த்துக் கொள்ள இந்திய அரசு துடிக்கின்றது.
1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் செலுத்திய போது, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யர்கள் தங்களைத் தாக்குவர் எனும் வதந்தி அமெரிக்க மக்களிடையே பரப்பப்பட்டது. சோவியத்துக்குத் தாம் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்க அமெரிக்காவும் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. இவ்விரு நாடுகளும் தங்களது வலிமையை நிரூபிக்க அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை அனுப்பி, விண்வெளி யுத்தம் நோக்கிச் சென்றன. பனிப்போர் காலகட்டத்தில் நடந்த இந்தப் போட்டி தற்போது மீண்டும் வேறுதளத்தில் தலைதூக்கியுள்ளது.
சீனா விண்வெளிக்கு மனிதனை அனுப்பியதுடன், 2007இல் பயனற்ற செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா இதனைச் செய்திருந்தாலும், அமெரிக்காவும் தனது பலத்தை நினைவூட்ட மீண்டும் ஒரு செயற்கைக்கோளைத் தனது ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. ஜப்பானும் தன் பங்குக்கு அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது.
தனது இராணுவ வலிமையை நிரூபித்துக் கொள்ள நினைக்கும் எல்லா நாடுகளும், அணுஆயுதச் சோதனைக்கு அடுத்து குறி வைத்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியைத்தான். இந்தியா ஏற்கெனவே இரண்டு முறை அணுகுண்டுச் சோதனை செய்துவிட்டதால், இனி அடுத்தது விண்வெளியில் சாதனை படைப்பதுதான் பாக்கி. விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதெல்லாம் இப்போது யார் வேண்டுமானாலும் செய்துவிடுவதால், ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என யோசித்தவர்களின் மூளையில் உதித்ததுதான் "சந்திராயன்' எனும் நிலவுப் பயணத் திட்டம்.
தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் அணுகுண்டு வெடித்த பா.ஜ.க. அரசு, பதவிக்கால முடிவில் "இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆளனுப்பும் 380 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் 2020இல் நிலவுக்கு மனிதனை அனுப்புவதை இலக்காகக் கொண்டு, சந்திராயன் 1,2,3 என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாகத்தான் கடந்த நவம்பர் 14ந் தேதி, நேரு பிறந்த நாளன்று, இந்தியா, சில ஆராய்ச்சிக் கருவிகளையும் இந்தியக் கொடியையும் நிலவில் இறக்கியது.
அக்டோபர் 22ஆம் நாள் விண்கலம் புறப்பட்டதிலிருந்து நவம்பர் 14ஆம் நாளன்று நிலவில் தரையிறங்கியது வரை அனைத்துச் செய்திகளையும், துல்லியமான அறிவியல் தகவல்களுடன், தலைப்புச் செய்தியாகப் பதிவு செய்த பத்திரிக்கைகள், இந்தியா ஒரு பேரரசாக மாறிவரும் செய்தியை மிகக் குதூகலத்துடன் பதிவு செய்தன.
நிலவில் தடம் பதித்த ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளது என்றும், மற்ற நாடுகள் நிலவில் தடம் பதிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கையில் நாம் தான் அதில் ஆராய்ச்சி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்றும், நிலவின் நிரந்தர இருட்டுப் பகுதியான துருவப் பகுதிகளில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யப்போகிறோம் என்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக அறிவியலாளர்கள் கூறி வருகின்றனர்.
சந்திராயன் பற்றிப் பேட்டியளித்த முன்னாள் அரசவைக் கோமாளி கலாமோ "எதிர்காலத்தில் செவ்வாய்க்குச் செல்லும் திட்டத்திற்கு நிலவு சிறந்த தளமாக இருக்கும்' என்று கூறி இருக்கிறார். சந்திராயன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் உலக நாடுகளின் கூட்டு விண்வெளி ஆராய்ச்சியில் இடம் பெற இந்தியா தகுதி பெற்றுள்ளது என்றும், கோள்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகப்படுத்துவதற்கும், புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் இந்த வெற்றி பயன்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இதன்மூலம் அங்குள்ள கனிமவளங்களை நாம் இங்கு கொண்டுவந்து பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விண்வெளியிலோ, நிலவிலோ யாரும் இடங்களைக் கைப்பற்றவோ, அங்குள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்கவோ கூடாது என்பதற்கான சர்வதேச விண்வெளி ஒப்பந்தமும் (1967), நிலவு ஒப்பந்தமும்(1979) அனைத்து நாடுகளுக்கிடையே நடைமுறையில் உள்ளது. அதனையெல்லாம் மறந்துவிட்டு, நிலவில் குடியேற்றத்தை உருவாக்கிக் கனிம வளங்களைக் கொண்டு வரப்போவதாகக் கூறுகிறார் அப்துல் கலாம். இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான கனிமச் சுரங்கங்களை எல்லாம் அந்நியனுக்கு தாரை வார்த்துவிட்டு, நிலவிற்கு சென்று கனிமம் கொண்டு வருவோம் என்கிறார், இந்த அறிவாளி (!).
செவ்வாய்க் கோளுக்குச் செல்வதற்கான தளமாக நிலவைப் பயன்படுத்தும் திட்டம், அமெரிக்காவின் இராணுவதளமாக நிலவைப் பயன்படுத்தும் திட்டத்திற்குச் சிறிதும் குறைந்ததல்ல. பூமியில் நடத்த முடியாத படு பயங்கரமான ஆயுதச் சோதனைகளை நிலவில் நடத்திப் பார்த்துச் சோதிக்கவிருக்கும், அமெரிக்காவின் அடுத்த நிலவுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ள அதே 2020ல் தான், இந்தியாவும் தனது நிலவுப் பயணத்தின் கடைசிக் கட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்பதனை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் மாதவன் நாயர் சந்திராயனின் வெற்றி, விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். மற்ற நாட்டு செயற்கைக்கோள்களை நமது ஏவுதளத்திலிருந்து செலுத்துவதையும், விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்வதையும்தான் விண்வெளி வர்த்தகம் என்கின்றனர். இதுவரை நாட்டின் வளர்ச்சிக்காக, விண்வெளித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனக் கூறிவந்த இவர்கள் இப்போது இந்தக் கண்டுபிடிப்புகள் வியாபாரமாக்கப்பட்டு புதிய சந்தையைத் தோற்றுவித்துள்ளதை ஒப்புக் கொள்கின்றனர். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம், ஆன்ட்ரிக்ஸ் என்ற பெயரில் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதன் வேலையே இது போன்ற விண்வெளிவர்த்தகத்தில் ஈடுபடுவதுதான். இதுவரை இத்தாலி, இஸ்ரேல் போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் இந்திய ஏவுகலன்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ள இராணுவ பலத்தைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகவும் ஏகாதிபத்தியத்தின் நம்பத்தக்க அடியாளாகவும் இந்தியா மாறிவருகிறது.
மேலும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பங்காளிகளான தரகு முதலாளிகளின் வணிக விரிவாக்கமும், இந்திய துணை வல்லரசுக்கனவும் வேறு வேறல்ல. இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாக்கக் கனவுக்கு இசைவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் விண்வெளி வர்த்தகப் போட்டியில் ரிலையன்சு நிறுவனம் தன்னையும் ஒரு பங்காளியாக ''சந்திராயன் 2''இல் சேர்த்துக் கொள்ள இருக்கிறது . ஆளும் வர்க்கத்தின் பேராசை அத்துடன் முடிந்து விடுவதில்லை. தன்னை மாபெரும் வல்லரசாகக் காட்டிக்கொள்ள அதற்கு அணுகுண்டும் தேவை. விண்வெளி வித்தைகளும் தேவை. ஆனால் அதற்காகக் கொட்டி வீணடிக்கப்படுவதோ உழைக்கும் மக்களின் வரிப்பணம் என்பதுதான் வேதனை.
· அழகு