Language Selection

 திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதி மக்கள்  பொதுப்பயன்பாட்டிற்காகப்  பயன்படுத்திவரும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை, அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வளைத்துப் போட்டு, தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேநிலைப்பள்ளி என்ற பெயரில் புதிய "கடை' திறந்துள்ளான், முன்னாள் சாராய வியாபாரியும் இன்னாள் கல்வி வியாபாரியுமான தனலெட்சுமி சீனிவாசன்.


 இந்நிலையில், இப்பகுதியில் செயல்பட்டுவரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை பகுதி மக்கள் அணுகியதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்து  ""சோழராஜபுரம் மக்கள் பாதுகாப்பு கமிட்டி'' என்றொரு போராட்டக் கமிட்டி உருவாக்கப்பட்டது.  இப்பிரச்சினையையொட்டி 6 மாதங்களாக தொடர்பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட இவ்வமைப்பினர், கடந்த 01.06.08 அன்று பெருந்திரளாக பகுதி மக்களை  அணிதிரட்டி மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அப்பள்ளி ஆக்கிரமித்த நிலத்தை முள்வேலியிட்டு மீட்டனர்.


 நிலைமை விபரீதமாவதைக் கண்டு பதறிப்போன நிர்வாகமும் உடந்தையாகச் செயல்பட்ட அதிகாரிகளும் ஓடோடிவந்து "பேச்சுவார்த்தை' நாடகத்தை அரங்கேற்றினர். 01.06.08 அன்று நடந்த இப்பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் பயன்படுத்திவரும் புறம்போக்கு நிலத்தை பள்ளி நிர்வாகம் பயன்படுத்தக்கூடாது; மூன்று நாட்களுக்குள் மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு கட்டுப்பட்டு கையெழுத்திட்டது பள்ளி நிர்வாகம்.


 ஆனால், பள்ளி நிர்வாகம் இவ்வொப்பந்தத்தின்படி நடக்க  இதுநாள்வரை மறுத்து வருகிறது. எனவே போராட்டக் கமிட்டி, இவ்வொப்பந்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி 24.11.2008 அன்று உறையூர்  சாலை ரோடு அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்  போவதாக அறிவித்தது.


 கடந்த 6 மாத காலமாக செயலுக்கே வராத(!) பேச்சுவார்த்தை முடிவைக் காரணம் காட்டி, கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியை ரத்து செய்தது, போலீசு.


 அரசு, அதிகார வர்க்கத்தின் வர்க்கப் பாசத்தை நடைமுறையில் உணர்ந்து கொண்டுவிட்ட பகுதி மக்கள், அக்கல்விக் கொள்ளையனிடமிருந்து பொது நிலத்தை மீட்கும் அடுத்த கட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.


—  ம.க.இ.க., திருச்சி