Language Selection

தமிழ்மக்கள் வினையை விதைத்து, விளைவித்த புலிகள் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி. அந்த தமிழ் மக்களுக்கு கூறுவதற்கு அவர்களிடம் பொய்யையும் புரட்டையும் தவிர, வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கினால் புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடுவார்கள்

என்று எப்படி புலிகளால் உத்தியோகபூர்வமாக கூறமுடிந்ததோ, அதேபோல் தான் உண்மைகளும் அவர்களை அரசியல் அனாதையாக்கிவிடும். இதனால் தமிழ் மக்களுக்கு புலிகள் வழங்கும் தகவல், அறிவு, செய்தி என அனைத்தும், உண்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுபவையல்ல. மாறாக வளர்ப்பு மந்தைகளுக்கு தீனி போடுவதுபோல், புலிகள் அவியல் போடுகின்றனர். தமது பொய் தகவல் தவிர்ந்த அனைத்து அறிவுகளையும், தமிழ் சமூகத்தில் இருந்தே அகற்றுவதற்காகக் கூட படுகொலைகளையே நம்பியிருக்கின்றனர். இதற்கு ஏற்ப ஆறறிவை இழந்து அங்கவீனமாகி, சிந்திக்க செயலாற்ற மறுக்கின்ற, ஒரு முட்டாள் சமூகத்தின் மேல் தான் புலிகளால் இலகுவாக குதிரை ஓடமுடிகின்றது. இது புலிகளின் இன்றைய வரலாற்றுக்கு முந்திய இயக்க வரலாற்றில், ஒரு அங்கமாகவே உயிர்தெழுந்தது.

1983, 1984 களில் தமிழீழம் பற்றிப் பல்வேறு இயக்கங்களால் வீங்கி வெம்பிய பிரமைகள் விதைக்கப்பட்டது. அன்றும் திகதி குறிப்பிட்டு, தமிழீழப் பிரகடனத்துக்கு ஆட்கள் பிடிக்கப்பட்டனர். எல்லாவிதமான சுயஅறிவையும் பகுத்தாய்வையும் இழந்தநிலையில், குறித்த திகதிக்குள்ளான தமிழீழம் என்னும் மண் குதிரையை நம்பி, அதில் ஏறி முட்டாள்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இந்த அழகான அப்பட்டமான பொய்யை கேள்வி கேட்டவர்களை, இந்த சாத்தியப்பாட்டை அறிவுபூர்வமாக அணுகியவர்களை எல்லாம், வீங்கிவெம்பிய வக்கிரத்தின் உச்சத்தில் நின்ற எள்ளிநகையாடினர். கொள்கை கோட்பாடியின்றி பயிற்சிக்கு யார் கேட்கின்றனரோ, யார் உடனடியாக இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லுகின்றனரோ, அதன் பின்னால் தெருநாய்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தனர். குறித்த திகதியில் தமிழீழம் கிடைத்துவிடும் என்று நம்பி, அதன் பின் வந்து படிக்க முடிவெடுத்து சென்ற அறிவாளிகளும் உண்டு. இப்படித்தான் தமிழ் பரப்பில் தேசியத்தின் பெயரில், முட்டாள்தனமான நம்பிக்கைகள் பிரமைகள் விதைக்கப்பட்டன. 'பெடியள்" பற்றி பெரியவர்களால் வீங்கி வெம்பிய வம்புகளே வினையாக தமிழீழத் பாசிச தேசியமாகியது. இந்த வம்பு நிலை இன்றுவரை மாறவில்லை.

தமிழீழம் என்ற பிரமை சார்ந்த தேசியம், இப்படித்தான் மலடாகி வீங்கிவெம்பியது. அன்று யார் அதிகளவில் இந்தியாவின் கைக்கூலிகளாக செயற்பட்டனரோ, அந்தக் கூலிக்கும்பலே அதிக பயிற்சி பெற முடிந்தது. இந்தியக் கைக்கூலித்தனத்தின் எடுபிடித்தனத்துக்கு ஏற்ப அதிக வள்ளங்களை பெற முடிந்தவர்கள், தமிழீழத்தின் பெயரில் அதிகம் பேரை இந்தியக் கூலிப்பட்டாளமாக ஏற்றியிறக்க முடிந்தது. இப்படி இந்தியக் கூலிப்பட்டாளமாக செயற்படுவதில் புலிகள், புளாட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் வரை விதிவிலக்கின்றி போட்டி போட்டனர். இதில் இந்தியா தனக்கு அதிக விசுவாசமாக எந்த நாய் அதிகம் வாலாட்டும் என்பதை பிரித்தறிந்து, அதிகமாகவும் சிறப்பாகவும் விசேட உணவு போட்டனர். இப்படித்தான் அன்று தமிழீழம் வீங்கி வெம்பிக் கொண்டிருந்தது. இந்தியா கொடுத்த பணம், ஆயுதம் மூலம் மக்களையே எதிரியாக்கி, தறிகெட்ட விசர் நாய்களாக ஊரார் பணத்தில் ஊதாரியாக ஊளையிட்டுத் திரிந்தனர். உதாரணமாக இந்தியா புலிக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து சிங்கள மக்களை கொல்லக் கோரியபோது, அநுராதபுரத்தில் 150க்கு மேற்பட்டவரை கொலை செய்து, தமது தமிழீழத் தாகமான தமிழீழ வெறியாட்டத்தையே நடத்தினர். இதேபோல் இந்திய கூலிப்பட்டாளமாக செயற்பட்ட ரெலோ, பஞ்சாப் சீக்கிய பொற்கோயிலில் தனது கொலை வெறியாட்டத்தையே, யுத்தப் பயிற்சியின் பெயரில் செய்தனர். இப்படி ஏராளம்.

இப்படி வீங்கி வெம்பிய நிலையிலும், இந்தியாவின் தனது நம்பிக்கைக்குரிய நாயாக புலிகளை கருதவில்லை. மாறாக தனது வீட்டு நாயாக, மற்றைய நாயுடன் சேர்த்துக் கருதியது. இது புலிக்கு பிடிக்கவில்லை. இதனால் புலிகள் வேறு வீடுகளிலும் வாலாட்டி, அவர்களின் வீட்டிலும் நக்கியதன் மூலம், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இப்படி அதிக சலுகையை பெற்றதன் மூலம், வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இந்த வகையில் இஸ்ரேலிடமும் கூட புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அன்று சோவியத் அமெரிக்க முரண்பாட்டின் அடிப்படையில், இந்தியா அல்லாத அன்னிய நாடுகளுக்கு விசுவாசமாக புலிகளால் வாலாட்டி கைக்கூலியாக முடிந்தது. பணமும், ஆயுதமும் தாராளமாக வழங்கப்பட்டது. இந்தியாவிடம் பயிற்சிபெற்ற கூலிக்குழுக்களை அழிக்க, இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் விருப்பம் புலிகள் என்ற பாசிச குழு மூலம் ப+ர்த்திசெய்யப்பட்டது. சி.ஜ.ஏ உளவாளியாக இருந்த எம்.ஐP.ஆர் மற்றும் மோகனதாஸ் மூலமாக, நிலைமையைப் பயன்படுத்தி பணத்தையும் ஆயுதத்தையும் பெருமளவில் புலிகளுக்கு வாரி வழங்கினர். மற்றைய இயக்க ஆயுதங்களும் பறித்து, அவை சூழ்ச்சிகள் மூலம் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி ஏகாதிபதிய சூழச்சிகளின் வழியே வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இப்படி எங்கும் எதிலும் புலிகள் அதிகளவில் வீங்கி வெம்பினர். போராட்டமே வீங்கி வெம்பியது. மக்களை கால்தூசுக்கு கூட மதிக்க மறுத்தவர்கள், அவர்களையே ஏறிமிதித்தனர்.

இப்படி கூலியாக ஆயுதப் பயிற்சியும் பணமும் பெற்றவர்கள், சமூகத்தின் மேலாண்மையை தமதாக்கி கொண்டனர். இதன் மேல் அறிவுத்தளம் தானாக வெம்பத் தொடங்கியது. இந்த சோரம் போன சமூக இருத்தலையே, சமூக பெருமையாக, வீரமாக, ராஜதந்திரமாக பறைசாற்றினர். பொய்மையும், புரட்டும் தகவலாகி அதுவும் வெம்பத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இராணுவத் தாக்குதலும், அது சார்ந்த புனைவுகளுமே பலம்பொருந்தி கருத்தாக மாறியது. யார் அதிக தாக்குதலை இராணுவம் மீது நடத்துகின்றனரோ, அவர்களை போற்றும் பக்தர்களின் கற்பனைகளில் அவர்கள் வீங்கி வெம்பத் தொடங்கினர். இப்படி சமூகம் இழிந்து நலிந்து சீரழிந்து வந்தது. இதன் மேல் தான் இன்றும், புலிகள் பொய்யான புரட்டான தகவல்கள் மூலம் சவாரிவிட முடிகின்றது. ஆனால் முன்பைப் போல் அல்லாது, அடிக்கடி கவிண்டு குப்புற மூஞ்சைபட விழ்கின்றனர். வீழ்ச்சியின் தொடக்கம் இப்படி தான் ஆரம்பமாகின்றது.

அன்று அவர்கள் எல்லோரும் கூறியது போல், குறித்த திகதியில் தமிழீழம் கிடைக்கவில்லை. முட்டாள் சமூகத்துக்கு இதைப்பற்றி அவர்கள் விளக்கமளிக்க வேண்டிய கவலையும் அவர்களுக்கு இருக்கவில்லை. சமூகம் மேலும் முட்டாளாகியது. அன்று குறித்த திகதியைக் கடந்து 20 வருடம் சென்றுவிட்டது. இப்போது அதே பிரமைகளுக்கு எந்தக் குறைவுமில்லை. இப்போது பிரபாகரனின் ஆயுளுக்குள் தமிழீழம் என்று முன்வைப்பதன் மூலம், அது கிடையாது என்பதை மறைமுகமாக புலித்தளபதிகள் நாசூக்காக அம்பலமாக்கி விடுகின்றனர். பிரபாகரனின் ஆயுள் நாளை முடிந்தால்! தமிழீழத்தின் கதி என்ன? இவர்கள் கூறுகின்றனர் சண்டை தொடங்கினால் ஒரு வருடத்தில் தமிழீழம் என்கின்றார்கள். இது இறுதிச் சண்டை என்கின்றனர். யாழ் குடாவை மீட்க ஐந்து நாள், போனல் பத்து நாட்கள் போதும் என்கின்றனர். இப்படி எத்தனையோ நம்பிக்கைகள் பிரமைகள் கடந்த 30 வருடமாக விதைக்கப்பட்டன, விதைக்கப்படுகின்றன.

மனிதசெயலை மறுத்த ஒரு எல்லையில் தான் இவை எல்லாம் புனையப்படுகின்றது. பொய்கள் மீண்டும் மீண்டும் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றது. அன்று ஒரு கூலிக் கும்பலாக பெருமளவு இளைஞர்கள் இணைக்கப்பட்டு, இந்தியாவின் கூலிகளாகவே பயிற்சிக்குள்ளாக்கப்பட்டனர். அன்று இதற்கு எதிராக நாம் போராடினோம். அப்போதும் எள்ளி நகையாடப்பட்டோம். இந்த ஆயுத பயிற்சி அலையில், எம்முடன் நின்ற சிலரும் காணாமல் போனார்கள். சிறிது காலத்தின் பின் அவர்களை இயக்கத் தளபதிகளாக, கொலைவெறியுடன் களத்தில் காணமுடிந்தது. இப்படி அலையலையாக வீங்கி வெம்பிக் கொண்டிருந்த போராட்டம், கண்மூடித்தனமான நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்தையும் நியாயப்படுத்தியது. தமிழ்மக்களையே கொத்திக்கிளறி, அவர்களை அவர்களின் பெயரில் பலியிட்டனர். இன்றும் அதே நிலைமை, ஆனால் அதைவிட மோசமான நிலைமை.

புலிகளின் பினாமித் தகவல்கள் வீங்கி வெம்புகின்றது தமிழ் மக்களுக்கு இன்று ஒரேயொரு தகவல் தளம் மட்டும்தான் உள்ளது. இதை கேள்வி கேட்க முடியாது. இதை மீறி தகவலை வழங்கல், பெறுதல் இரண்டும் மரணதண்டனைகுரிய ஒரு தேசிய குற்றம். மரணதண்டனையை வழங்குவதன் மூலம், தமிழ் மக்களின் சிந்தனைத் திறனை மலடாக்கி அதில் புலிகள் கொழுப்பாக வாழ்கின்றனர். இன்று புலிப்பினாமிகளின் தகவல்கள் தான், புலிகளின் உத்தியோகபூர்வமான தகவலாகிப் போனது.

புலிகளின் தளபதிகள் பலர் அடிக்கடி ஒன்றைக் கூறுவதை அவதானிக்க முடியும். அதில் அவர்கள் தலைவர் எல்லாம் செய்வார். அனைத்தும் தலைவருக்கு தெரியும். இப்படி ஏன் புலியின் முக்கிய முன்னணி தளபதிகள் கூறவேண்டிய நிலை உருவாகின்றது. பினாமிகளுக்கு வெளியில், புலித் தளபதிகள் இப்படி மட்டும் தான் பேசமுடியும்.

இது ஒரு அரசியல் உண்மையை, அப்பட்டமாக பளிச்சென்று அம்பலமாக்குகின்றது. அதாவது தளபதிகளிடம் நிகழ்காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சொல்லக் கூடிய எந்த அடிப்படையான தீர்வும், வழிமுறையும் கிடையாது என்பதைத்தான், அவர்கள் உரத்து உரைத்துச் சொல்லுகின்றனர். ஒரு அரசியல் வேலை திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியிலென்ற, எந்த வேலை திட்டமும் அவர்களிடம் கிடையாது. மாறாக தன்னிச்சையான தன்னியல்க்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். இதை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருப்பதில்லை, தெரிந்து கொள்வதுமில்லை. எல்லாம் தலைவருக்குள் சர்வமயமாகி அடங்கிப் போகின்றது.

உண்மையில் முன்னணி தளபதிகள் கூட ஒன்றையும் தெளிவாக சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட வேலைத்திட்டமாகிவிடும். இது தலைவருக்கு எதிரான சதியாக கருதப்பட்டு, துரோகியாக முத்திரை குத்தப்பட்டு, மண்டையில் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிடுகின்றது. இந்த நிலையில் எல்லாம்வல்ல இறைவனின் செயல் என்பதை அடிப்படையாக கொண்டு, எல்லாம் தலைவர் மீது கூறிவிடுவது தான் புலிகளின் உயர்ந்தபட்ச அரசியல் வேலைத்திட்டமாகவுள்ளது. புலிகளின் வேலைத்திட்டம் யாருக்கும் தெரியாத ஒன்றாகவும், தலைவரின் பெயரில் அனைத்தையும் கூறிவிடுவதும் தான். அதாவது அனைத்தையும் தலைவரின் பெயரில் கூறிவிடுவதன் மூலம், கேள்விகளை பிரச்சனைகளை தவிர்த்துக் கொண்டு, நல்ல விசுவாசமான நக்கும் தளபதிகளாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டனர். இதனால் பல கேள்விகளுக்கு பதில் தெரியாது போய்விடுகின்றது.

இதனால் தலைவர் கண்ணுக்குத் தெரியாதவராக, எல்லாம் வல்லவராக, சூக்குமமான நிலையில் வாழ்கின்றார். வருடத்துக்கு ஒருக்கால், எழுதப்பட்ட அறிக்கையை, யாரும் காணமுடியாத ஒரு இடத்தில் இருந்து, வாசிப்பதைத் தவிர எதையும் பகிரங்கமாக கூறுவது கூட கிடையாது. பின் அதற்கு கை கால் பூட்டி, தேராக்கி ஓட்டுவதே, பினாமிகளின் தொழிலாகவுள்ளது. இதற்காக அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. வானவேடிக்கைகள் முதல் எல்லாம் சாமபேதமின்றி உண்டு.

எல்லாம்வல்ல, எல்லாம் தெரிந்த தலைவர், மௌன விரதம் காரணமாக பல கேள்விகளுக்கு, பல தெளிவீனத்துக்கு பதில் அளிப்பதில்லை. சுனாமி ஊரைக் கூட்டி அள்ளிச் சென்றாலும், அதைக் கூட காணாத எல்லாம்வல்ல தனது அற்புதத்தின் விளைவாக கண்ணை மூடி இருப்பவர் தான் புலித் தலைவர். இவரை நம்பிப் பிழைக்கும் பினாமிகளும், கூலி எடுபிடிகளும், தமது தொழில் சார்ந்து நம்பிக்கைகளையும் பிரமைகளையும் கண்மூடிக் கொண்டு, நடுவாற்றில் விதைக்கின்றனர். தாம் விரும்பியவாறு உளறி, தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கி வெள்ளத்தின் போக்கில் ஒட வைத்துள்ளனர்.

இவர்களின் தலைவருக்கு தெரிந்தது என்ன? அவரிடம் ஒன்றுமேயில்லை. அதனால் தான், கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அவரின் பெயரில் குதறுகின்றனர். தமிழ் மக்களின் தலைவராக பினாமிகளால் மகுடம் சூட்டிய பின் (சூட்ட முன் அவர் தானே புலிக்கு தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர்), அவர் வழங்கிய ஒரேயொரு நேரடிப் பேட்டியும் அதன் பரிதாபமும், அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரே நேரடியாக உறுதிசெய்தவர். இது தான் புலிகளின் பரிதாபகரமான நிலைமை. இதனால் தான் தமிழ்மக்களின் பிரச்சனை பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்பதே உண்மை. இதை மூடிமறைக்க பொய்களையும், புரட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு கற்பனைப் பிம்மங்களையும் விதைக்கின்றனர்.

பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்துபவர்களை கொல்வதன் மூலம், தமது போலித்தனமான விம்பத்தை பாதுகாக்க முடிகின்றது. இனிமேலும் கொலைகளின்றி, புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக உயிர்வாழ முடியாத ஒரு அவலமான நிலை. இந்த புலியின் அவலத்தை பயன்படுத்தி, பினாமிகளும் ஓட்டுண்ணிகளும் அதனுடன் ஒட்டிக்கொண்டு நக்கிவாழத் தொடங்கினர்.

மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்டு பாசிச இயக்கத்தின் பின்னால் ஓட்டிக் கொண்டு வாழும் அற்ப மனிதர்கள், மக்களின் உழைப்பில் இழித்து வாழ்வதே மேன்மையானதாகவும் அதையே தேசியமாக காட்டத்தொடங்கினர். மற்றவர் உழைப்பில் நக்கி தின்னும் இவர்கள், தமது செழிப்பை பாதுகாக்கவே குலைக்கத் தொடங்கினர். சும்மா குலைக்க முடியாது என்பதால், தன்னைச் சுற்றி எதிரிகளைக் காட்டியும், எதார்த்ததையும் திரித்து குலைப்பதே இன்றைய புலித்தேசியத் தகவலாக மாறுகின்றது.

புலிகளின் தலைமைக்கு எதன் மீதும் ஒரு புலித்திட்டத்தின் அடிப்படையில் சொந்தக் கருத்து எதுவும் இல்லாததால், குலைப்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் தொடங்குகின்றது. புலிகளுக்காக குலைப்பவர்கள், புலியின் இயல்புக்கு ஏற்ப புனைவதும் திரிப்பதிலும் கைதேர்ந்த மோசடிக்காரராகி விடுகின்றனர். 2002 முன்பான யுத்தகாலத்தில், யுத்தகால செய்தியையே அடிப்படையாக கொண்டு செய்திகள் கூறமுடிந்தது. ஆனால் அமைதிக்காலத்தில் செய்திகளுக்கு வங்குரோத்து உருவானது. செய்திகளை புலி அரசியல் மீது உற்பத்தி செய்யமுடியாத அவமானநிலை.

தமிழ்மக்களை தொடர்ந்தும் கற்பனையான மாயையில் வைத்திருக்க, செய்திகளை தொடர்ந்தும் கற்பனையில் உருவாக்கி அதை பெரிப்பித்து காட்டுவதன் மூலம் செய்திகள் உற்பத்தி செய்யப்பட்டன. கற்பனை எதிரிகளை சதா கண்டுபிடிப்பது, அதை வியாபித்துக் காட்டி விடுவதே செய்தியாகியது. தகவல்கள், செய்திகள் புனையப்பட்டு, அவை கற்பனையான பிரமையில் பேய்களைப் போல் உலாவவிட்டனர். சமகாலத்தில் இணையத்தின் வருகையும் அதன் பயன்பாடும் அதிகரித்த நிலையில், இணையத்தின் ஊடாகவே செய்திகளை கட்டுப்படுத்தும் நிலைமையும், செய்தியின் புனைவை சமூகம் முழுவதும் ஒரேமாதிரி விதைக்கமுடிந்தது. தகவல்களை, செய்திகளை சேகரிப்பவர் சுயவறிவிழந்து மலடாகினர். கிளிப்பிள்ளை போல் பார்த்தும், ஓட்டியும் வாசிக்கும் நிலைமைக்கு தமிழ் தகவல்துறை சீரழிந்தது. இந்த இழிநிலையைப் பயன்படுத்தி, புதிதாக பல ஓட்டூண்ணிகள் ஒட்டிக் கொண்டும், இந்த பொய் செய்திகளை பரப்பியதுடன், அதையும் தமது கற்பனையில் உருவாக்கினார்கள்.

சொந்த இணையம் நடத்த விரும்பியவர்களும், தனது நோக்கத்தை விளம்பரம் செய்ய விரும்பிய எல்லாவிதமான பிழைப்புவாத ஐந்துகளும், இந்த ஊதிப்பெருக்கி செய்திகளை காவும் நச்சுக் காவிகளாகினர். தமது இணைய இணைப்பில் அல்லது அச் செய்திகளை செய்தியாக மறுபிரசுரம் செய்தனர். தமிழ் பரப்பு முழுக்க இந்த ஊதிப் பெருக்கிய வீங்கி செய்திகளே, ஒரேவிதமாக மீள மீள ஒப்புவிக்கப்படுகின்றது.

இதையொட்டி வானொலிகள், தொலைக்காட்சிகள் இந்த இணையச் செய்தியையே ஒப்புவிப்பதாக மாறியது. இதை மீறினால் துரோகி பட்டமும், அவதூறும் சும்மா இலவசமாக காத்துக்கிடந்தது, காத்துக்கிடக்கின்றது. சுயமான, சுயாதீனமான செய்தி சேகரிப்பு முறையே மறுதலிக்கப்பட்டது. சுயசிந்தனையுள்ள எந்த அறிவும், அது சார்ந்த செய்தியும் தமிழ் பரப்பில் முற்றாக நலமடிக்கப்பட்டது. இப்படி செய்திகள் புனையப்பட்ட போது, அது எதார்த்த சூழலுக்கு அன்னியமானதாக, உண்மைக்கு புறம்பானதாகவே அமைந்தது.

இந்த சூழலுக்கு தமிழ் சமூகம் பழக்கப்படுகின்றது. தமிழ்சமூகம் வில்லங்கமில்லாத ஜடங்களாகவும், சோம்Nபறிகளாகவும் மாறிவிடுகின்றனர். அப்படியே கண்ணை மூடிக்கொண்டு இவற்றை கேட்பதும், காவிகளாகி பரப்புவதும் பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. அதாவது வளர்க்கப்படும் மிருககாட்சிசாலை மிருகத்தின் நிலைக்கு தரம் தாழ்ந்து இழிந்து விடுகின்றனர். மணியடித்தால் துள்ளிக்குதிக்கும் நிலைக்கு, செய்திகளைக் கண்டு குதித்தெழுகின்றனர். சுயஅறிவு, சுயசிந்தனை அனைத்தையும் இழந்து, தம்மளவில் இழிந்து, ஆக்கமற்ற மலட்டுக் கூட்டமாக மாறிவிடுகின்றனர். புலம்பெயர் தமிழர் மத்தியில் இதுவே மிக மோசமாகி, ஆக்கமற்ற மனித ஜடமாகிவிட்டனர். பழக்கப்பட்ட செக்குமாடுகள் ஒரே வட்டத்தை, சவுக்கின் அசைப்புக்கு ஏற்ப எப்படி சுற்றி நடக்கின்றதோ, அதே அவலநிலை தான் புலம்பெயர் தமிழனின் வட்டநிலை. இந்த வட்டத்தை தவறவிடாது இருக்கவும், வேறு சிந்தனையில் திசைதிரும்பாது இருக்கவும், கண்கள் அக்கம் பக்கமாக மறைத்துக்கட்டிய நிலையில், முன்னால் காட்டும் உணவுக்கு ஏற்ப அலைபாய்கின்றனர். இது அவர்களின் சொகுசான வாழ்வியல் முறைக்கும், அதற்கு இசைவான சீரழிவு போக்குக்கும் இணங்கியசைகின்றது.

அனைத்து செய்திகளும், தகவல்களும் இப்படித் தான் அசைகின்றது. ஒரு பொய் எப்படி புனையப்படுகின்றது. இதற்கு ஒரு உதாரணம் தான் மாணவிகளின் மீதான குண்டுவீச்சு. இந்த உதாரணத்தை நாம் பாhப்போம்.

மாணவிகள் கொல்லப்பட்ட செய்தியில் உள்ள உண்மையும் பொய்யும் மாணவிகள் கொல்லப்பட்டது உண்மை. ஆனால் அவர்களை வெறும் மாணவிகளாக காட்டியது பொய். இந்த பொய்யை ஊதிப்பெருக்கிய வடிவங்கள் அனைத்தும் தலைகால் தெரியாது வீங்கி வெம்பின. இப்படி வீங்கி வெம்பிய தகவல் தான், பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் முன் கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லை வள்ளிபுனத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் எதுவுமறியாத அப்பாவிகள். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அப்பாவிகளாக இருந்தனரோ, அதேயளவுக்கு அவர்களின் சொந்தப் பிணங்களும் புணரப்பட்டன. பொய்யும் புரட்டுமாக புனையப்பட்டு, பிணத்தை வலிந்து வீங்க வைத்தனர். வீங்கிய அழுகிய இந்த பிணத்தை புலம்பெயர் தமிழரின் ஒருபகுதியினரின் தலையில் கிடத்தி, ஊர்வலம் விட்டனர். பிணத்துக்கு அரோகரா, பிணத்துக்கு அரோகரா என்று கொஞ்ச பிழைப்புவாதிகள் கூறிக் கொண்டு பின்னால் ஓடினர். அன்று சுனாமி பிணத்தை வைத்து நடத்திய வசூல் வேட்டையும், அந்த பணம் அந்த மக்களுக்கு எப்படிக் கிடைக்கவில்லையோ, அதே சோகக் கதை தான் இங்கும்.

வருமானத்தை தருகின்ற இந்த நாய்ப் பிழைப்புக்கு உதவிய மாணவர்கள் விடையத்தை, இணையங்கள் முதல் அனைத்துச் செய்திகளும் குதர்க்கமாக ஒன்றுக்கொன்று முரணாக ஓலமிட்டன. அவர்களே வெளியிட்ட தகவல்கள், செய்திகள் பல குழப்பகரமானவை மட்டுமின்றி நம்பகத்தன்மையற்றவை. ஆனால் இதன் பின்னால் மந்தைக் கூட்டத்தை, செக்குமாடுகளாக ஒரு கும்பலையே சாய்க்க முடிந்தது. இப்படி தமிழ் மக்களின் அவலமான நிலை பரிதாபகரமானது.

இந்த அவலத்தின் பின்னணியில்

1. அவர்கள் செஞ்சோலை குழந்தைகள் என்றார்கள்.

2. எதுவுமறியாத அப்பாவிகள் என்றார்கள்.

3. அநாதைகள் என்றார்கள்.

4. மாணவர்கள் என்றார்கள்.

5. சுனாமியில் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள்.

6. மருத்துவ முதல் உதவி சிகிச்சை பற்றிய பயிற்சிக்கு வந்தவர்கள் என்றார்கள்.

இப்படிப் பற்பல புனைவுகள். இதில் எது உண்மை? அல்லது வேறு ஒன்றா? இப்படி தமிழ் மக்கள் சார்பாக, நாங்கள் எல்லாமாகவும் நடித்தோம். எல்லாமாகவும் அழுதோம். எல்லாமாகவும் துயரத்தைப் பகிர்ந்தோம். எமது போலித்தனத்தின் மொத்த முகத்தை எல்லாவிதமாகவும் காட்டினோம். நாங்கள் போலிகள் அல்ல, நாங்கள் தான் அசல்கள் என்றும் நடித்தோம். முடிவின்றி நடித்துக் கொண்டு இருக்கின்றோம்.

சரி, அப்படியாயின் உண்மை என்ன? புலித் தலைவர்களே இதில் எது உண்மை என்று சொல்லமுடியாத, அரசியல் அனாதைகளாகிப் போனார்கள். இந்த அனாதையாகிப் போன துயரத்தை, பலரும் தாம் விரும்பியவாறு புணர்ந்து விபச்சாரம் செய்தனர். அவர்கள் விபச்சாரம் செய்தது மட்டுமல்ல, மற்றவர்களை விப்ச்சாரம் செய்யவும் தூண்டினர். முடிவு சுனாமி போல், ஏமாந்த தமிழனை வைத்து இலாபகரமான வியாபாரம் தான்.

நாங்கள் இப்படி இந்த போலித்தனத்தை அம்பலப்படுத்திய பின்பான உண்மை என்ன? இதை ஒட்டி சுய கேள்விகளை, சுய சிந்தனை இன்றி உண்மையைக் காணமுடியாது.

1. இது ஒரு செஞ்சோலை என்றால், யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கென புலிகளால் உருவாக்கப்பட்ட இடம். இப்படித்தான் புலிகளால் கடந்தகாலத்தில் கூறப்பட்டது. சரி கொல்லப்பட்ட செஞ்சோலை குழந்தைகள் எங்கே? எங்கே அந்த அனாதைக் குழந்தைப் பிணங்கள்? இங்கு எந்த சிறு குழந்தையும் கொல்வப்படவேயில்லை. ஒரு உண்மை அம்பலமாகின்றது, செஞ்சோலை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது தவறானதும், பொய்யானதும், திட்டமிட்டு உருவாக்கிய வீங்கி வெம்பிய செய்தியுமாகும்.

சரி இந்த மையம் முன்பு செஞ்சோலை இருந்து அது கைவிடப்பட்ட இடம் என்றால், அது செஞ்சோலையல்ல. அங்கு தலைவர் கூட தங்கியிருக்க முடியும். நாளை சிங்கள இராணுவம் கூட தங்கியிருக்க முடியும். அங்கு 17 முதல் 19 வயதானவர்கள் புலியின் நோக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்பதும், அங்கு வைத்துக் கொல்லப்பட்டனர் என்பதே உண்மை.

2. சுனாமியால் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள். அதுபோல் அவர்கள் அநாதைகள் என்றார்கள். அவர்கள் அநாதைகள் அல்ல என்பதும், தாய் தந்தை உள்ளனர் என்ற தகவல் பொய்யர்களை அம்பலமாக்கியுள்ளது. இந்த பொய் உலகம் முழுக்க பரப்பப்பட்டது. இதன் மூலம் இது பொய் என்ற உண்மை, உலகமறிய அம்பலமாகியுள்ளது.

3. அப்பாவி மாணவர்கள் என்றார்கள். இது ஒரு பகுதியே உண்மை. ஆனால் புலிச் செய்திகள் இந்த உண்மையைக் கூறவில்லை. பொய்யையும் புரட்டையும் அடிப்படையாக கொண்டு, இதை பூசி மெழுகினர்.

மாணவர்கள் தாங்களாகவே தாமே தெரிந்துகொண்டு இந்த இடத்தில் கூடவில்லை. அவர்களின் சொந்த விருப்பத்துக்கு புறம்பாக பலாத்காரமாக கொண்டு வரப்பட்டவர்கள். பெற்றோர்கள், பாடசாலை நிர்வாகம் முதல் அனைவரினதும் விருப்பங்களையும் மறுதலித்தே இந்த மாணவர்கள் கொண்டு வரப்பட்டவர்கள். அந்த வகையிலும் அவர்கள் அப்பாவிகள். தாங்களாகவே தோந்தெடுக்காத ஏதோவொரு கட்டாயப் பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அல்லது உள்ளாக்கப்படவிருந்தவர்கள். அதுவும் இந்தப் படுகொலை காலையில் நடந்தது என்பதால், அவர்கள் அங்கு முன்கூட்டியே தங்கவைக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள், அதிலும் கூடுதலாக புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்கள், தாமாக சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத அப்பாவிகள். இந்த நிலையில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்ற புலியின் வாதம் பொய்யாகின்றது. இந்த பொய் உண்மையை உணர்த்துகின்றது.

ஏதோவொரு பயிற்சிக்கு என அந்த மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றால், யாரால்? ஏன்? எதற்கு? அதுவும் பாடசாலையல்லாத இங்கு? இதற்கு யாரும் பதில் தரவில்லை. இந்த நிலையில், அரசியல் பிழைப்பு நடத்தப்படுகின்றது. அரசியல் கொள்கைகளை வைத்து அரசியல் செய்யத்தெரியாத பாசிட்டுகள், இப்படி மலிவு விலையில் கோமாளி வேஷம் போட்டு பிணத்தை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சொந்த தாய், தந்தை, உறவினர், பாடசாலைகள் என்று, இந்த மாணவிகளின் பின்னனி உள்ளது என்ற உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அரசியல் கோசிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி, இழிவான மலிவான கேடுகெட்ட அரசியல் விபச்சாரம் செய்யப்பட்டது.

4.பொய்யையும் புரட்டையும் நிறுவ, கண்காணிப்புக்குழு அறிக்கையிலும், யுனிசேவ் அறிக்கையிலும் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் இதை இராணுவ முகாமில்லை என்று எப்படி கூறினரோ, அதேபோல் புலிகள் கூறியது போல் இதை அனாதை முகாம் என்றும் கூறவில்லை. இதில் புனைவும் பொய்யும் அம்பலமாகிவிடுகின்றது.

இந்தளவுக்கு அந்த பெண்கள் இரவு உடையில் இருக்கவில்லை. சிலர் ஒரேவிதமான கறுப்பு உடுப்பில் இருந்துள்ளனர். சில உடல்களை மட்டுமே சர்வதேச அமைப்புகள் காணமுடிந்தது. அதுவும் இறந்த இடத்தில் அல்ல. இந்த நிலையில் முழுமையாக இறந்தவர்களின் படங்கள் வெளிவரவில்லை. இதைவிட பெற்றோர்களின் சொந்த அபிப்பிராயம், பாடசாலைகளின் அபிப்பிராயம் எதுவும் வெளிவரவில்லை. சில பினாமிகள் மட்டும் தான், இதன் மீது முழு அதிகாரம் பெற்று குலைத்துக் கொண்டிருந்தனர். இப்படித் தான் இன்று அனைத்து பொய்களும் தமிழ் மக்கள் சார்பாக புனையப்படுகின்றது.

இந்த விடையம் மீதான சில கேள்விகள், இதை மேலும் உங்களை தெளிவுபடுத்தும் என்பதால்

1. இதையொத்த வயதுடையவர்களை புலிகள் இராணுவ பயிற்சி வழங்கவில்லையா? அப்படியாயின் எது உண்மை?

2. இதையொத்த பலருக்கு மக்கள் என்ற பெயரில் புலிகள் கட்டாய பயிற்சி வழங்கவில்லையா? இப்படி படங்களை அவர்கள் வெளவிடவில்லையா? அப்படியாயின் எது உண்மை?

3. தாக்குதல் நடக்க முன், இந்த பயிற்சி பற்றி வழமைபோல் புதினம் இணையம் போட்ட படங்களுடன் கூடிய செய்தி உண்மை இல்லையா? அப்படியாயின் எது உண்மை?

4. கொல்லபட்டவர்களை முழுமையாக வெளி உலகத்துக்கு காட்டமறுத்தது ஏன்? முழுமையாக கொல்லப்பட்டவர்கள் பெயரை வெளியிடாமை ஏன்? அப்படியாயின் எது உண்மை?

5. தாக்குதல் நடந்த இடம் முழுமையாக காட்சிப்படுத்தாதது ஏன்? அப்படியாயின் எது உண்மை?

6. ஏதோ ஒரு இடம் என்றால், அதற்குரிய அடிப்படையான உள்ளடகம் இருந்தே இருக்கும். அது ஏன் காட்டப்படவில்லை? அப்படியாயின் எது உண்மை?

7. கண்காணிப்பு குழு இது பயன்பாடு அற்ற இடமாக இருந்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். புதிதாக ஒரு பயன்பாட்டை அது வெளிப்படுத்தியுள்ளது? அது என்ன? அப்படியாயின் எது உண்மை?

8. கொல்லப்பட்ட சிலர் ஒரேவிதமான ஒரு கறுப்பு சீருடையில் இருந்துள்ளனர்? அப்படியாயின் எது உண்மை?

9. கொல்லப்பட்டவர் எண்ணிக்கை குழப்பகரமானதாக உள்ளது ஏன்? குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டி கொல்லப்பட்டவர்கள் யார். இதை வழிநடத்தியவர்கள் கொல்லப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?

10. இதனுள் புலிகள் சம்பந்தப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?

இப்படி பல நூறு கேள்வி எழுப்ப முடியும். சுயஅறிவும் சுயசிந்தனையும் உள்ளவர்களுக்கு, இது போதுமானது. இப்படியான உண்மைகள் தமிழ் மக்களுக்கு உதவாது என்பது, புலிகளின் கொள்கையாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தை வழங்கமுடியாது என்று எப்படி புலிகள் கூறுகின்றரோ, அதேபோல் தான் தமிழ் மக்களுக்கு உண்மை செய்திகளை வழங்கக் கூடாது என்பதே புலிதேசியக் கொள்கையாகும்.

உண்மை என்பது மறுக்கப்பட்டு, கற்பனையான செய்திகளை வக்கிரமாக்கி தருகின்றனர். எல்லாம் வெற்றியாக வீங்கி வெம்பிப் போன தகவல், அடிக்கடி அவர்களையும் மீறி பொய்யாக்குகின்றது. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு செய்திகளும் தமது பங்குக்கு வீங்கி வெம்புகின்றன. செய்தியின் உண்மைத் தன்மையைத் தேடி, நீந்தித்தான் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இது உண்மையா? என்ற சந்தேகத்தை பலர் இன்று எழுப்புகின்றனர். முன்பைவிட செய்தி மீதான நம்பிக்கையை இழப்போர் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். எந்த நம்பிக்கையும், சந்தேகத்தைக் கடந்து உயிர் வாழவில்லை. அன்று வீங்கி வெம்பி வெடித்த இயக்கங்கள் போல், தகவல்களுக்கும் இந்தக் கதி நடக்கின்றது. ஒரு இனம் மண்ணோடு மண்ணாக சிதைந்து சின்னாபின்னமாகி அழிகின்றது.

அடுத்து வீங்கி வெம்பவைக்கும் தமிழீழக் கனவுபற்றி தனிக்கட்டுரையாக பார்ப்போம்.