Language Selection

தீண்டாமைக் கொடுமையைத் திமிரோடு  பறைசாற்றி வந்த உத்தப்புரம் சுவர் தகர்க்கப்பட்ட பின்னர்,  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆதிக்க சாதி வெறியர்களால்  தாக்கப்படுவது தமிழகத்தில்  தொடர் நிகழ்வாகியிருக்கிறது.   கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற இத்தகைய சம்பவங்களில் சில..


 · நவம்பர் 2ஆம் தேதியன்று உத்தப்புரம் சென்றுவிட்டுத்  திரும்பிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின்  காரை  எழுமலை எனும் கிராமத்தின் அருகே தேவர்சாதி வெறியர்கள் அடித்து நொறுக்கினர். எழுமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டுவிட்டதாக கூறியே இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.  இத்தாக்குதலைக் கண்டித்து நடந்த சாலைமறியல் போராட்டத்தின்போது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டார்.  


 · உத்தப்புரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வரும் அடுத்தடுத்த மோதல்களில் ஆதிக்க சாதியினர் மீது சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் கூட வழக்குப் பதிவு செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வெடிமருந்துச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்; போலீசார் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறதென்பதை அங்கு சென்று வந்த உண்மையைக் கண்டறியும் குழுவினர் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர் போலீசினுடைய ""அவுட்போஸ்ட்'' கூட கொடிக்கால் பிள்ளைமார்களின் வீடுகளிருக்கும் பகுதிகளில் அமைந்திருப்பதை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.


 · வேலூர் அருகே  இருக்கும் சோலையூர் ஊராட்சிக்குட்பட்ட பல்லாந்திட்டு கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் கம்பி வேலி ஒன்றை ஆதிக்க சாதியினர் அமைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மனித உரிமை அமைப்புகளும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.  இத்தீண்டாமை வேலியை அகற்றாவிட்டால் அக்டோபர் 22ஆம் தேதி தாங்களே வேலியை அகற்றும் போராட்டம் நடத்துவோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த பின்னர்தான்,  மாவட்ட நிர்வாகம் தலையிட்டது.   பின்னர் ஆதிக்க சாதியினரே வேலியை அகற்றி இருக்கின்றனர்.


 · செத்த மாட்டைத் தூக்க மறுத்ததற்காக விருதுநகர் மாவட்டம் தெற்கு ஆனைக்குட்டத்தைச் சேர்ந்த  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் மீது ஆயுதங்களால் சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாட்டில் அதே ஊரில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இறந்தபோது  ஆதிக்க சாதியினர் பிணத்தை எரிக்க அனுமதிக்க மறுத்ததால் 2 நாட்கள் வரை பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ முடியாமல் தாழ்த்தப்பட்டோர் அவதிப்பட்டுள்ளனர்.


 · அருப்புக்கோட்டையை அடுத்துள்ள கல்லூரணியில் அருந்ததியர் திருமணம் ஒன்றிற்கு டிஜிடல் பேனர் வைத்ததைப் பொறுக்காமல்,  அருந்ததியினர் கோவில் திருவிழாவின்போது  தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வருவதற்கு ஆதிக்க சாதியினர்  தடை விதித்தனர். போலீசு முன்னிலையில் சமரசக் கூட்டம் நடத்தப்பட்ட பின்னர், 30 பேர்கள் மட்டும் ஊர்வலம் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது.  திட்டமிட்டபடி அருந்ததியர் ஊர்வலம் வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர்  கூடி நின்று அருந்ததியினர் மீது கற்களால் தாக்கினர். 50 பேருக்கு மேல் காயமுற்றனர்.  போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதியவில்லை. சமரசக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் ஒருவரே தாக்குதலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவரைக் கைதும் செய்யவில்லை.


 · செஞ்சி அருகிலுள்ள சொரத்தூர் காலனியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், அங்கிருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடும் உரிமையை வன்னிய சாதியினர் பல ஆண்டுகளாக மறுத்து வந்திருக்கின்றனர். இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும் கூட, வன்னியர்கள் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. போலீசிடம் முறையிட்டும் எந்தப் பலனுமில்லாத காரணத்தால் ஆகஸ்டு ஆறாம் தேதி சொரத்தூர் காலனியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கலிட்டுச் சாமி கும்பிடுவதென்று முடிவெடுத்து, பொங்கல் வைத்தனர். போலீசோ, பொங்கல் வைத்த பெண்களைத் தடியடி நடத்தி விரட்டியடித்ததோடு, 28 பெண்கள் உட்பட 30 பேரை கைது செய்தது.
 · சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர், அதற்கெதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் விளைவாக அக்கோவில் ஒன்பது மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டது.  இதற்கெதிராக கோவிலில் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்டோர்   உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் அந்தக் கோவிலின் உள்ளே சென்று வழிபட அனைவருக்கும் உரிமை உண்டென உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் படி செப்டம்பர் 8ஆம் தேதியன்று கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதைத் தடுக்க முடியாத ஆதிக்க சாதியினர், திரௌபதி அம்மனையே ஒதுக்கி வைத்தனர்.  கோவிலில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வேறு கோவிலில் வழிபாடு நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.


 · திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டத்தில் இருக்கும் பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரை அவ்வூரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் வழிபட விடாமல் தேவர் சாதியினர் தடுத்து வருகின்றனர். இதற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் வழக்கு நடத்தி கோவிலில் வழிபடும் உரிமையைப் பெற்றார்கள். ஆனால், தேவர்களோ  நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்தனர். தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களை இழுத்தடித்து அலைக்கழித்து வந்தது. முடிவில் செப்டம்பர் 23ஆம் நாள் கோவிலுக்குள் நுழையலாம்  என அதிகார வர்க்கமும்,  ஆதிக்க சாதியினர் மற்றும் தலித் மக்கள் அடங்கிய சமாதான கமிட்டியும் முடிவு செய்தன.  ஆனால், அந்த நாளன்று  பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுக் காணாமல் போய்விட்டார். தொடர்ந்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டிய அரசு, கோவிலை ""சீல்'' வைத்துவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் கண்டு கொதித்தெழுந்த  எழுபது குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் குடும்ப அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அருகில் உள்ள மலைக்குச் சென்றுவிட்டனர். 


 · கோவை அருகே உள்ள ஊஞ்சம்பாளையத்தைச் சேர்ந்த அருந்ததியர் சாதி இளைஞர் சிற்றரசு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த கோமதி  என்ற கவுண்டர் சாதிப்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஜூலை ஐந்தாம் தேதி, வெளியூர் சென்று திரும்பிய சிற்றரசுவை கவுண்டர் சாதிவெறியர்கள் தலையை நசுக்கிக் கொன்றனர்.  இதனை போலீசார் விபத்தாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் சிற்றரசுவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதைக் கூடச் சகிக்க முடியாத  கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, ""தாழ்த்தப்பட்ட மக்களின் ஊர்வலத்தால் வன்முறை பெருகிவிட்டதென்றும், இத்தகைய ஊர்வலங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும்'' சோழனூர், சாமளாபுரம் பகுதிகளில் ஒருநாள் கடை யடைப்பை நடத்தியது.


 · சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், நாடார் சாதிப் பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் கொண்டார். ஜூன் மாதத்தில் நாடார் சாதியினர் அந்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.


 ஆளும் வர்க்கத்தாலும், ஆதிக்க சாதியினராலும் தலித்துகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை மூடி மறைப்பதில் ஊடகங்களின் பங்கும் முக்கியமானதாகும், ஈழவிடுதலையை ஆதரித்துப் பேசிய இயக்குநர்கள் அமீரும் சீமானும் கைது செய்யப்பட்ட போது, தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி தெளிவாக வகுப்பெடுத்த பத்திரிக்கைகள், ஆதிக்க சாதி வன்முறைகள் நிகழுகின்ற சமயங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி ஒருமுறை கூட எழுதியதில்லை.


 மறுபுறம்,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே அனைத்தும் சரியாகிவிடும் என்று தலித் விடுதலை பேசும் பல்வேறு இயக்கங்களும் கிளிப்பிள்ளையைப்போலச் சொல்லி வருகின்றன.
 ஆனால், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது யார்? ஆதிக்க வெறி கொண்ட போலீசு, அதிகார வர்க்கத்தைக் கொண்ட அரசு எந்திரம் தானே! சாதிவெறிக் கொடுமைகளை வழக்காகவே பதிய மறுத்தல், அல்லது சமரசமாகப் போகச் சொல்லிக் கட்டைப்பஞ்சாயத்து செய்தல், பல இடங்களில் ஆதிக்கசாதியுடன் சேர்ந்து கொண்டு தாக்குதல் ஆகியவற்றை செய்வதுதான் போலீசுத்துறை. அப்படியே வழக்கு பதிவானாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்ப்பெழுதுவதுதான்  நீதித்துறை.  சென்னகரம்பட்டி அம்மாசி படுகொலை, மேலவளவு முருகேசன் படுகொலை, தாழ்த்தப்பட்டோரின் வாய்களில் மலத்தைத் திணித்த திண்ணியம்  வழக்கு ஆகிய அனைத்து வழக்குகளிலும் வன்கொடுமை நிரூபிக்கப்படவில்லை என்றுதானே சாதிக்கறை படிந்த நீதித்துறை தீர்ப்பு எழுதியது?.  இவற்றை எல்லாம் தாண்டி தப்பித்தவறி தாழ்த்தப்பட்டோருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறது, சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கம். இந்தக் கேடுகெட்ட அரசியலமைப்பின் மூலம் சாதிவெறியை ஒழிக்க முடியாது; மாறாக, சாதிவெறி பிடித்த இன்றைய அரசியலமைப்பு முறையைத் தகர்ப்பதன் மூலமே விடுதலையை வென்றெடுக்க முடியும் எனும் திசையை நோக்கி இனி தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், புரட்சிகரஜனநாயக சக்திகளும் பயணிக்க வேண்டும்.


· கவி