ஈழப்போர் தீவிரமடைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை நடத்தி வருகிறது, சிங்கள பாசிச அரசு. சிங்கள அரசின் பாசிச இனவெறிக்கும், அந்த அரசு பயங்கரவாதப் போரைத் தீவிரப்படுத்தி வருவதற்கும் முக்கிய காரணம்,

 இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். இருப்பினும், தெற்காசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவின் மேலாதிக்கத்தையும் சிங்கள இனவெறி அரசோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழர்களை ஒடுக்கும் இந்தியாவின் சதிச் செயலையும் எதிர்க்காமல், ஈழப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணுமாறு இந்திய அரசிடமே கெஞ்சி கேட்கும் அடையாளப் போராட்டங்களை நடத்துகின்றன, தமிழக ஓட்டுக்கட்சிகள். இவற்றின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியும் ஈழத்தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமின்றி, இந்திய அரசும்தான் எதிரி என்பதை விளக்கியும், ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் தமிழகமெங்கும் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் தொடர்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


 அண்மையில், மலேகானில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலே காரணம் என்று நிரூபணமாகி, காவியுடை தரித்த இந்துவெறி பெண் சன்னியாசி விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகள், சதிகள்,பயங்கரவாதப் படுகொலைகளை அம்பலப்படுத்தியும், இப்பார்ப்பன பயங்கரவாத கும்பலை வீழ்த்த அணிதிரளுமாறு உழைக்கும் மக்களை அறைகூவியும் இப்புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


 19.10.08 அன்று கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தினர், ""ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப்போரை ஆதரிப்போம்!'' எனும் முழக்கத்துடன் செங்கொடி ஏந்தி, ஜீப் நிலையம் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்பகுதியில், ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக எந்த ஓட்டுக்கட்சியும் குரலெழுப்பாத நிலையில், உணர்ச்சி மேலிட நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பகுதிவாழ் மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்தது. 13.11.08 அன்று அதிராம்பட்டினத்தில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராக வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


 19.11.08 அன்று கிருஷ்ணகிரியில் பு.ஜ.தொ.மு; வி.வி.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில், சிங்கள இனவெறி அரசோடு கள்ளக்கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் இந்திய அரசையும், அதன் தெற்காசிய மேலாதிக்கத்தையும் சாடி, பகுதிவாழ் மக்களின் ஊக்கமான பங்கேற்போடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.


 கடலூர் மாவட்டம்நெல்லிக்குப்பத்தில், வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைச் சாடியும், இந்துவெறி பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்த அறைகூவியும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. புதுச் சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்புரட்சிகர அமைப்புகள், 22.11.08 அன்று கோட்டக்குப்பத்தில் இதே முழக்கத்தின் கீழ் பொதுக்கூட்டத்தை நடத்தின. இப்பொதுக்கூட்டங்களும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் நெஞ்சில் புரட்சிகர அரசியலைப் பதியவைத்தன.


  பு.ஜ.செய்தியாளர்கள்