பிரிட்டிஷ் ஆட்சியால் இந்திய சமூகம் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்பட்டது என்பதைப் பற்றி புள்ளி விவரங்களோடு துல்லியமான கணிப்புகளை மார்க்ஸ் வெளியிடுகிறார்.


இந்தியாவில் பிரிட்டன் தொடர்பு கொண்டிருந்த காலத்தை கிழக்கிந்தியக் கம்பெனியார் காலம் என்றும், ஆங்கில முதலாளித்துவ அரசாங்கம் நேரடியாக தலையிட்ட காலம் எனவும் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு காலங்களிலும் இந்தியச் சமூகம் எத்தகைய மாறுதல்களை சந்தித்தது என்று மார்க்ஸ் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் எழுதுகிறார்.

ஆங்கில முதலாளித்துவ அரசாங்கம் தலையிடு வருவதற்கு முன் இந்திய சமூகம்  குறித்த கணிப்பிற்க்கு கிராமத்தின் அமைப்பை ஆராய்வதில் தொடங்குகிறது மார்க்ஸீய சிந்தனை. "இந்தியாவின் சமூதாய அமைப்பைப் புரிந்து கொள்ள; கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது" என்கிறார் மார்க்ஸ். (தனது "மூலதனம்" என்ற நூலிலும் கிராமிய அமைப்பின் இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே மார்க்ஸீய சிந்தனை செல்கிறது.)

இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழிலகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேப் போல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உற்பத்தியாகும் பொருள்களின் ஒரு பகுதி வாரியாக அரசாங்கத்தின் இருப்பிடத்திற்கும், இதர பெரும் பகுதி உற்பத்தி செய்யும் மக்களின் தேவைக்கே செலவு செய்யப்பட்டுவிடுகிறது. மிகச் சிறிய பகுதிதான் சந்தைக்கு வருகிறது.

மேலும் சமூகங்களின் உள்ளமைப்பு பல இடங்களில் பலவிதங்களில் காணப்படுகிறது. சாதாரண அமைப்புள்ள இடங்களில் விவசாயம் பொதுவாகச் செய்யப்படுகிறது. ஆடைக்குத் தேவையான நூலையும் தாங்களே நெய்து கொள்கிறார்கள். சட்டி பானைகள் செய்து கொடுக்கும் குயவனும் இதர தொழில்களைச் செய்ய இயக்கும் நாவிதர், வண்ணான், தட்டார், தச்சர் மற்றும் சோதிடர், உபாத்தியாயர், பிராத்தனை நடத்தும் அந்தணர் இருக்கின்றனர். கிராம நிர்வாகத்தில் நாட்டாமைக்காரர் போன்ற அதிகாரிகள் இருக்கிறார்கள்.

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் இந்திய சமூக அமைப்பில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிடுவதன் முன் பெரிய அரசியல் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றிருந்த போதிலும், அன்னியப் படையெடுப்புகளும், ஆட்சிகளும் ஏற்பட்டிருந்த போதிலும், சமூதாயத்தின் மேல் மட்ட அளவிலேயே அரசாங்கத்தில் மட்டுமே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவே தவீர, சமூதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி இந்திய சமூகத்தின் உள் அமைப்பையே உடைத்தெறிந்திருக்கின்றது. பழைய அமைப்பை உடைத்தெறிந்த பிரிட்டிஷ் அரசு இந்திய சமூகத்திற்கு புதிய அமைப்பொன்றையும் ஏற்படுத்திக் கொடுக்கவுமில்லை. உள்ளதையும் இழந்து விட்டு, மாற்று நிவாரணமும் கிடைக்காமல் தவிக்கும் கொடிய நிலைக்கு ´இந்தியன்´ ஆளாக்கப்பட்டிருக்கின்றான் என்கிறார் மார்க்ஸ்.

1702- முதல் 1813- வரையில், கிழக்கிந்திய கம்பெனி இந்திய சமூகத்தை நேரடியாகக் கொள்ளையடித்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பவுன்களை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தது. மறுபுறம் பழைய சர்க்கார்கள் கவனித்து வந்த நீர்பாசன பராமரிப்பு வேலைகளை அறவே புறக்கணித்துவிட்டது. அதன் பாதிப்பாக விவசாயங்கள் அழிந்து போக நேர்ந்தது.

நிலத்தில் தனி உடைமையை நிலத்தை விற்பதற்கும், வாங்குவதற்கும் உரிமையை மற்றவர்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி அளித்தது. இங்கிலீஷ் நிலச்சட்டங்களும், குற்றச் சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்திய உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்பட முடியாமல் தடை விதிக்கப்பட்டது. அல்லது அதிக வரிகள் விதிக்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயத்திற்கும், கைத்தொழிலுக்கும் இருந்த பிணைப்பு உடைக்கப்பட்ட போது நூல் நூற்கும் ராட்டினம் அறவே காணாமல் போய்விட்டது. அதிக வரிகளால் விவசாயம் நலிவடைய ஆரம்பித்தது. அவை கிராம அமைப்பு முறையையே மாற்றியது. நலிந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

இங்கிலாந்தின் இயந்திர உற்பத்தியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு இணையான துன்பத்தைச் சரித்திரத்திலேயே காண முடியாது என்கிறார் மார்க்ஸ். "இந்திய நெசவாளிகளின் எலும்புகள் இந்தியச் சமவெளிகளை வெண்மையாக்கிக் கொண்டிருக்கின்றன" என்று 1834-1835 இல் கவர்னர் ஜெனரலின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட வாசகத்தை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார்.

இங்கிலாந்தின் "விக்" கட்சியினர் மூலமாக முதலாளித்துவம் பதவிக்கு வந்ததும், 1813- இல் தொழில் முதலாளிகள் படையெடுக்க ஆரம்பித்த பின் தான் இந்தியச் சமூகத்தில் கோரமான அழிவுகள் ஏற்பட ஆரம்பித்தன. அதன் தாக்கங்கள் கிராம மக்களின் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு புள்ளி விவரங்களோடு ´நியூயார்க் ட்ரிப்யூன்´ - இல் குறிப்பிடுகிறார். 1780- இல் இருந்து 1850- வரை பிரிட்டிஷ் ஏற்றுமதிகள் எப்படி அதிகரித்தன என்பதை பார்ப்போம்.

1850- இல் பிரிட்டன் ஏற்றுமதியில் 8- இல் ஒரு பாகம் இந்தியாவுக்கு சென்றது என்பதையும், துணி ஏற்றுமதியில் 4- இல் ஒரு பாகம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்பதையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். 1824-இல் 60- இலட்சம் கஜம் பிரிட்டிஷ் மஸ்லின் இந்தியாவுக்குப் போயிற்றென்றால் 1834- இல் 640- லட்சம் கஜம் இந்தியாவுக்கு ஏற்றுமதியாயிற்று என்பதையும், அதே சமயம் இந்திய ஜவுளி உற்பத்தி நகரமான டாக்கா நகரத்தின் ஜனத் தொகை 150- ஆயிரங்களிலிருந்து 20- ஆயிரங்களாகக் குறைந்தது என்பதையும் மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

கிழக்கிந்திய ஏகாதிபத்தியம் இந்திய கிராமங்கள் வரை ஏற்படுத்திய நாசங்களை மனித சமூதாய வளர்ச்சிக்கு எப்படி உதவியாக மாறியது என்பதையும் மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

"குறுகிய எல்லைக்குள் அடங்கி சிந்தனைக்கும் செயலுக்கும் எல்லாவற்றிற்குமே தேக்கம் ஏற்படுத்தி வளர்ச்சி அடையாத நிலையில்; சமூதாயத்தைக் கட்டி வைத்து, வெளியுலகிலும், அரசாங்கத்திலும் என்ன மாறுதல்கள் ஏற்படினும் அதை பகைவர்கள் தாக்கும் போது தற்காத்துக் கொள்ளும் திறனும் இல்லாமல், மூடத்தனமான மத நம்பிக்கைகளுக்கு பலியாகி இருந்த பிற்போக்கான இந்தியச் சமூதாய அமைப்பு" விழிப்படைந்து அறிவுத் துறையிலும், விஞ்ஞானத்துறையிலும், முன்னேற பிரிட்டிஷ் முதலாளித்துவம் நாச வேலைகளை நடத்திக் கொண்டிருக்கும் போதே, சில ஆக்க வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு ஏற்படத்தான் செய்கிறது.

இந்தியாவில் அதற்கு முன் இல்லாத ஒற்றுமையை மக்களிடம் உருவாக்க காரணமாகியது. ´சுதேசி இராணுவம்´ ஏற்படுத்தப்பட்டது முதன் முதலாக பத்திரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டு நிலவரங்களை அதன் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றது. நிர்வாக விஞ்ஞான அறிவுள்ள ஒரு படிப்பாளி வர்க்கம் தோன்றியது. நிலத்தில் தனிஉடைமை ஏற்பட்டது. நீராவிக் கப்பல்கள் மூலம் ஒரு நிலையான வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டது. மற்றும் இந்திய மூலப் பொருட்களைச் சுலபமாகக் கடத்திச் செல்வதற்காக இந்தியாவில் ரயில் பாதை முதல் முதலாக ஏற்படுத்தப்பட்டது.

முக்கியமாக ரயில் பாதை இந்தியாவில் ஏற்படுத்தியதை பற்றி மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

"இரும்புக் கனிகளும், நிலக்கரியும் உள்ள ஒரு நாட்டின் போக்குவரத்திற்கு இயந்திரச் சாதனங்களை உபயோகப்படுத்துவதானது இயந்திரத் தொழில் விஸ்தரிப்பதில் தான் கொண்டு விடும்."

இப்படியாக பிரிட்டிஷ் முதலாளித்துவம் சமூதாய வளர்ச்சிக்கான பௌதிகச் சூழ்நிலையை இந்தியாவில் உண்டாக்கி இருக்கின்றது. ஆனால், இந்திய மக்களின் முன்னேற்றத்தை இந்திய மக்களே சாதித்துக் கொள்ள வேண்டும். இந்திய மக்களின் புரட்சியாலோ, இங்கிலாந்தின் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதாலேதான் அது சாத்தியமாகும் என்கிறார் மார்க்ஸ்.


தமிழச்சி
14/12/2008