06292022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன் வெறும் சடலம் தான்.

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து

 கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும். 

 

உதாரணத்துக்கு அண்மையில் தமிழ்மணம் விவாதத் தளம் ஒன்றில் பதிவாகிய கருத்தில்   "பெயரிலி, உங்களைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைமைதான் எனக்கும்! புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கும் இதே நிலைதான். குறிப்பாகப் பார்த்திபன், அம்மா மனோ, தூண்டில் பத்திரிகைக் கடலோடிகள், மனிதம் பத்திரிகைக் குழு, போன்றவர்களிடமும் இதே கேள்வியும் விரக்தியுமே எஞ்சியுள்ளது. இரயா மட்டுமே தன்னளவில் பலதை அம்பலப்படுத்துகிறார். அவர் தனிமனிதன். என்ன செய்ய? என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மக்களின் அமைதிக்காகவாவது (ஜனநாயகச் சூழல்) எழுதுகிறேன். எம்மால் எதுவும் முடியாது! ஆனால் அரச ஆயுதக் குழுக்களின் அராஜகத்துக்கெதிராகவாவது குரல் கொடுப்போமேவென ஏதோ எழுதுகிறேன். இதுவொன்றுமே சரிவராது. பிறகெதற்;கு எழுதி?." என்ற கருத்து பல தளத்தில் இன்று காணப்படுகின்றது.


தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புளுங்கிப் போகும் அவலம்;. இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, தமது சொந்த நிலையை தக்கவைக்கும் ஒரு தர்க்கமாக சிந்தனைச் சிதைவாக ஏற்படுகின்றது. சுதந்திரம் ஜனநாயகத்தின் பெயரில் வாழ்வையே மிக கேவலமாக வாழவைக்கும் இந்த சமூக அமைப்பில், தமது சொந்த வாழ்வையே இதற்குள் வாழ்கின்ற மனிதர்கள் கூட இப்படி புலம்பவது கிடையாது. கையால் மலம் அள்ளும் தொழிலாளி, பலக்காரமாக பாலியல் ரீதியாக அன்றாடம் சுரண்டப்படும் ஒரு பெண், அன்றாடம் வாழவழியின்றி கையேந்தி பிச்சை எடுக்கும் ஒருவன், அடுத்த நேரத்துக்கு உண்பதற்கு வழி தெரியாத மனிதர்கள், தன் குழந்தைக்கு பால் இன்றி விழிக்கும் தாய்மை என்று மனித இனத்தின் சகல அவலத்தை சந்திப்பவர்கள் யாரும், இப்படி அவநம்பிக்கையுடன் சமூகத்தை அணுகுவது கிடையாது. ஒவ்வொரு மனிதர்களும்; ஒவ்வொரு கணமும் போராடுகின்றான்;. இதில் இருந்து மாறுபட்டு, அவநம்பிக்கையுடன் சமூக தற்கொலையை ஊக்குவிக்கும் விதைகளை ஊன்றுகின்றோமே, அப்படியானல் நாம் யார்? நாம் எங்கே இருக்கின்றோம்? எமது சிந்தனை தான் என்ன? இப்படி வெளிப்படும் மனநிலை, அடிப்படையில் தனிமனித நலனை அடிப்படையாகக் கொண்ட பூர்சுவா குணாம்சத்தின் பிரதிபலிப்பு. இதில் இருந்து எமது சொந்த நிலையை தக்கவைக்க, அதை நியாயப்படுத்தி விடுகின்றோம்.இப்படிச் சமூகத்தின் முன்னோடிகள் அழுது புலம்பும் போது, மக்கள் என்னதான் செய்வார்கள்! தாம் அழுது புலம்புவதற்கு நியாயம் கற்பிக்க, மக்களின் கையாலாகாத்தனத்தை பற்றி கருத்துரைப்பது அன்றாடம் நிகழ்கின்றது. மக்களினால் தான் தமக்கு இந்தக் கதி என்று கூறிக்கொள்வது நிகழ்கின்றது. இந்த நிலைக்கு நீங்களே காரணம் என்பதை, அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மக்களின் இன்றைய அவலமான நிலைக்கு, நாங்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது கிடையாது. இந்த சமூகத்தின் அவல நிலைக்கான குற்றத்தை, எதிர்நிலைக்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் தமது சொந்த ப+ர்சுவா குணாம்சம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தக்கவைக்கின்றனர்.இவர்களை நம்பி காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுக்கு, பொறிக் கிடங்கை முன்னாள் காட்டுகின்றார்கள். இப்படி செய்யும் நீங்கள் யார்? அதை நீங்கள் ஒரு முறை திரும்பி பாருங்கள்! கண்ணாடி முன் நின்று உங்களைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்ய முனைகின்றீர்கள் என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.  நீங்கள் செய்வதில் திருப்தியில்லை என்றால், என்ன தவறு செய்கின்றீர்கள் என்று பாருங்கள். அதைவிடுத்து சமூகத்தை குற்றம் சாட்டுவது அபத்தம். ஒரு செயல்பற்றிய தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அது சமூகத்தில் என்ன விளைவை விளைவிக்கின்றது என்று பார்க்கவேண்டும். குடுகுடுப்பைக்காரன் போல் அவசரமாக உலகம் மாறிவிட வேண்டும் என்று நம்புவதும், கூறுவதும் பூர்சுவா குணவியல்பாகும்;. இதுவே கடந்தகால மற்றும் நிகழ்கால இயக்க அரசியலாகும்.

 

நீங்கள் குறிப்பிட்ட பார்த்திபனை எடுங்கள்;. எல்லாவிதமான நம்பிக்கையையும் இழந்த பார்த்திபன், எதைத்தான் தான் வாழ்வில் அதற்கு பதிலாக சாதித்தார். மற்றொரு நம்பிக்கையை பெற்றாரா. இல்லையே. என்? என்ன நடந்தது? கடந்த இலக்கிய அரசியல் எல்லாம் எதற்காக இவைகள் என்று புளுங்கிய பார்த்திபன், அதைக் கைவிட்ட பின் எதைச் சாதித்தார்? அப்போதும் ஒன்றுமில்லை? இங்கு என்ன நடந்ததென அவர் கூட அதை தேடியது கிடையாது? இன்றைய தமிழ் மக்களின் அவலமான நிலை, இப்படித் தான் உருவானது. குற்றவாளிகள் நாங்கள்! எதிரிகள் அல்ல! மக்களின் எதிரிகள் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் அவர்கள் இருக்கின்றார்கள்;. ஆனால் நாங்கள் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி மிக மோசமாக இருக்கின்றோம். இதன் மூலம் எதிரிக்கு அன்றாடம் துணை செய்கின்றோம்;. ஒரு பினாமியைப் போல், எம்மை அறியாமால் எதிரிக்கு கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்கின்றோம்;. மக்களின் எதிரி பல தளத்தில் உள்ளான்;. அது எமக்குள்ளும் கருத்தியல் தளத்தில் ஊடுருவுகின்றது. மக்களின் விடுதலை என்பது அமைதியும் சமாதானமும் நிறைந்த உணர்வுடன் மக்களின் எதிரிகள் அனைவரும் வழங்கிவிடமாட்டார்கள். மக்கள் போராடும் ஜனநாயகத்தை எதிரி தங்கத்தட்டில் வைத்து வழங்குவதில்லை. இப்படி நினைப்பது பூர்சுவா மனப்பாங்காகும். இதுவே பூர்சுவா உளவியலாகும். நெருக்கடிகள் பலதளத்தில் பலவடிவில் வரும். இதை எதிர் கொள்ள முடியாது அங்கலாய்ப்பதே, பூர்சுவாவின் அற்ப சிந்தனையாகின்றது. இதுவே நிலைமையையிட்டு புலம்பத் தொடங்குகின்றது. அதை எதிர்கொள்ள வக்கற்று பினாற்றத் தொடங்குகின்றனர். இன்றைய நிலைமைக்கு நாங்கள் தான் காரணம்; என்பதை, ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்தேயாகவேண்டும்;. செய்ய வேண்டிய, செய்யக் கூடிய நீண்டபணி உள்ளது. ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை. மாறாக நாம் ஒரு கோட்டைக் கீறி வைத்துக் கொண்டு அதற்குள் நின்று ஊளையிடவே முனைகின்றோம்.இப்படி கருத்தியல் ரீதியாக சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் போது என்ன தான் நடக்கின்றது. தன்னுடன் சிலரையும்  அழைத்துச்  செல்வது நிகழ்கின்றது. தற்கொலை செய்பவன்(ள்) என்ன மனநிலையில் என்ன மாதிரியான முடிவை எடுக்கின்றரோ, அதே முடிவைத்தான் இவர்களும் எடுக்கின்றனர். இங்கு இதற்கு இடையில் வேறுபாடு கிடையாது.நீங்கள் கூறிய பாhத்திபன் இலக்கிய உலகில் அவர் இயங்க முடிந்த ஒரு தளத்தில், அவர் உயிருடன் இருந்தாரே ஒழிய நடைப்பிணமாகவல்ல. அன்று உயிருள்ள ஒரு மனிதனாக வாழ்ந்தார். பார்த்திபன் இப்படி தன்னையே அழித்து உயிருள்ள சமூகத்தில் இருந்து ஒதுங்கி "தற்கொலை" செய்திருக்காவிட்டால், சமகாலத்தில் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளனாக இருந்திருப்பார்.

 

இன்று இலக்கியம் செய்வோரை விட சமூகத்தின் உயிரோட்டத்தை உணர்வதில் மிகவும் துல்லியமாக புரிந்து செயல்பட முனைந்தவர். அவரின் சமூகத் தேடுதல் மூலம் அதை செய்திருக்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால் என்ன நடந்தது. சொந்த ப+ர்சுவா மனநிலையில், அனைத்தையும் மீறி தனிமனித எல்லைக்குள் முடங்கி,  தனக்குத்தானே "கயிற்றை" மாட்டிக் கொண்டு தொங்குகின்றார். ஒருபுறம் பாசிசம், மறுபுறம் இலக்கிய சீரழிவும் அது விதைத்த கருத்தும் மெதுவாக ஊடுருவி, இந்த ப+ர்சுவா மனநிலைக்கு இசைவாகி சமூகத்தின் போக்குக்கு ஏற்ப "தற்கொலைக்கு" இட்டுச் சென்றது. என்னத்தை சொல்லி, என்னத்தை எழுதி, யாருக்கு இவை பிரயோசனப்படுகின்றது என்ற பூர்சுவா குணாம்சமே புலம்பத் தொடங்கும் போது, அதிருப்தி நம்பிக்கையீனங்கள் முதுகைப்பிராண்டி பின்னால் இழுத்து வீழ்த்துகின்றது.

 

சுற்றி இருந்த இலக்கிய வட்டத்தின் சமூகச் சீரழிவு, அவர்கள் தமது சொந்த சீரழிவுக்கு ஏற்ப விதைத்த கோட்பாடுகள், தனிமனித வக்கிரங்கள், அவர்களை நம்பிய முயற்சிகள் என்று பலவும் இதற்கு துணைபோனது என்பது உண்மைதான். புலிபாசிசம் எதை ஒரு தளத்தில் செய்ததோ, அதை மறுதளத்தில் இலக்கிய சீரழிவுக் கோஸ்டியும் அதையே செய்தது. இதற்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் தான், தமது சொந்த அவநம்பிக்கையை ஒரு கருத்தாக கூறமுனைகின்றனர். ஒரு தனிமனிதனாக, ஒரு படைப்பாளியாக, ஒரு சமூக விஞ்ஞானியாக இருப்பதைத் துறப்பதே ஒரு சமூகத் துரோகத்தனமாகும்;. இன்றும் பார்த்திபனுடன் நேரடியாக உறவை வைத்திருப்பதால், அவர் மீதான விமர்சனத்தை செய்வதன் மூலம், பலரின் இன்றைய நிலையை நான் நேரடியாக விமர்சிக்க முனைகின்றேன்.

 

ஒரு கலிலியோ இந்த சமூகத்தின் உண்மைக்காக தனிமனிதனாக போராடவில்லையா? ஒரு டார்வின் தனிமனிதனாக போராடவி;ல்லையா? இப்படி பலர் போராடவில்லையா? இந்த போராட்டத்தில் மரணிக்கவில்லையா? எவ்வளவு நெருக்கடிகள். தனிமனிதனான அவர்களைச் சுற்றி நடத்திய வன்மம் மிக்கத் தாக்குதல்கள். இப்படி வரலாற்றில் பதிவான பலரை நாம் காண்கின்றோம்;. ஆனால் நாம் மட்டும் அப்படி வாழமறுக்கின்றோம். ஏன் அப்படி பார்த்திபனால் போராடி வாழமுடியவில்லை.

 

எம்மைச் சுற்றியிருக்கும் சூழல் பாசிசமாக, இலக்கிய சீரழிவாக, பண்பாட்டுச் சிதைவாக,  பற்பலவாக இருந்தன, இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இதை எதிர்த்து குறைந்த பட்சம் தனிமனிதனும் போராடமுடியும். எதை நோக்கிப் போராடுவது? என்ற தெளிவை அடைவதில் இருந்து இது தொடங்குகின்றது. மார்க்ஸ் சாப்பிடவே உணவின்றி சொந்தக் குழந்தைகள் மரணித்த போதும் கூட, பட்டினியுடன் எதைப் படைக்க முனைந்தார்? அவரின் முன்னால் இந்த ப+ர்சுவா வாழ்வியல் முறையே சிறந்த வாழ்வு என்ற ஒன்றை காட்டிய போதும் கூட, அவர் சமூகத்தில் உள்ள துன்பங்களைச் சுமந்தபடி போராடினரே ஏன்? மனித சமூதாயத்தின் விடுதலைக்காக அவர் போராடினார். உண்மையான நேர்மையான மனிதனின் கடமை இப்படி போராடுவது தானே ஒழிய, கோழையைப் போல் ஒடி ஒழிவதல்ல.நாங்கள் சந்திக்கும் எமது நிலைமைகளை விட மோசமான கொடூரமான நிலைமைகள் ஊடாகவே, உலகில் பல ஆயிரம் மனிதர்கள் போராடினார்கள். நாங்கள் மட்டும் ஏன், இப்படி எமது பூர்சுவா மனநிலையை சமூக நிலையாக மாற்ற முனைகின்றோம்.

 

உங்கள் கருத்துகளைக் கண்டு யார் பயப்படுகின்றான்?

 

நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்ததுண்டா! மக்களின் எதிரியல்லவா பயந்து நடுங்குகின்றான்;. துப்பாக்கியும் கையுமாக அலையும் அந்த வெறிபிடித்த கும்பல் தான், உங்கள் கருத்தைக் கண்டு நடுங்குகின்றது. உங்கள் கருத்துகள் உண்மையாகும் போது, பொய்யர்கள் இப்படி வெறிபிடித்து அலைவார்கள்;.   எத்தனை திட்டல்கள், எத்தனை தூசணங்கள், எத்தனை முத்திரைகள் முதல் மரணதண்டனை வரை பரிசளிக்கும் இந்த அமைப்பில், நாங்கள் நாங்களாகவே அவனுக்கு பணிந்துவிடுவது ஏன்?; ஒரு பினாமியைப் போல், ஒரு கோழையைப் போல் நாங்கள் சிதைந்து போவது ஏன்? மக்கள் எதிரி எதைச் செய்ய விரும்புகின்றானோ, அதை நாங்களாகவே நிறுத்தி தற்கொலை செய்துகொள்வது ஏன்? குறைந்தபட்சம் உன் எல்லைக்குள் மக்களுக்காக போராடு! போராடி மடி. மக்கள் துன்பப்படும் போது, அதைக் கண்டுகொள்ளாது மலசலகூடத்தை நிரப்பும் வாழ்வை வாழ்ந்து என்ன தான் கிழிக்கின்றாய்? நாயைவிட கேவலமான இழிந்த வாழ்க்கை!

 

இன்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, அதைக் கண்டு கொதித்து பதிலளிக்கும் எதிரிகள் உண்மையில் யாரைக் கண்டு பயப்படுகின்றனர். கருத்தைச் சொல்பவனைக் கண்டு அல்ல,  மக்களைக் கண்டு தான் பயப்படுகின்றார்கள். மக்கள் தெரிந்த உண்மைகளை ஒரு அரசியலாக புரிவதை தடுப்பதற்காக கருத்துச் சொல்பவனை அழிக்கின்றனர். அமெரிக்கா ஜனாதிபதி புஸ் முதல், புலி பிரபாகரன் வரை இதுதான் இவர்களின் நிலை. மக்களுக்காக போராடுவனை அழிப்பது, மக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவே. எதிர்கட்சியில் உள்ளவனை அழிப்பது, தனிப்பட்ட சொந்த அதிகாரத்துக்காகவே .நாங்கள் எம்மை நிறுத்திக் கொள்வது எதற்காக! 

 

இங்கு தான் உனது போராட்டத்தின் சரியான தன்மை உறுதி செய்யப்படுகின்றது. நாம் மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்காக சொல்ல வருவதை தடுத்து நிறுத்த முனையும் போது, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை எதிரி தெளிவாக்குகின்றான். நாம் முன்னே கால்களை தூக்கி வைத்துள்ளோம் என்ற அரசியல் உண்மையை புரிந்து கொண்டு, செயல்பாட்டை மேலும் ஆழமாக்க வேண்டும்.

 

நாங்கள் ஒரு விடையத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்கள் தங்கள் சொந்த எதிரிகைளை, தமது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக தெளிவாக புரிந்துள்ளனர் என்பதை நாம் கண்டு கொள்வதில்லை. இது மிக முக்கிய தவறுக்கு எம்மை இட்டுச் செல்லுகின்றது. மக்கள் ஒவ்வொருவரும் யாரைக் கண்டு பீதியடைகின்றனர். யாரைக் கண்டு கதைக்க அஞ்சி நடுங்குகின்றனர். அதன் விளைவு எப்படிப்பட்டது என்பதை சொந்த வாழ்வில் புரிந்து செயலாற்றுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு மக்களும், யாரையெல்லாம் கண்டு அஞ்சுகின்றனர் என்பதையே. அவர்கள் தான் மக்களின் எதிரி. மக்கள்  பீதியினால் மனதுக்குள் புளுங்குகின்றனர். மக்களுக்குத் தெரியும் எதிரியின் ஒவ்வொரு கால்களையும்;. இதைப் பற்றி மக்களுக்கு நாங்கள் புதிதாக ஒன்றும் சொல்லவேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு எதிரிகள் பற்றி புரியவைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

 

அப்படியாயின் பிரச்சனை எங்கே உள்ளது. இங்கு மக்கள் அங்கும் இங்குமாக நம்பிக்கையுடன் வாக்களிக்கும் மனநிலையில் ஊசலாடுகின்றனர். தப்பிச் செல்ல வழி தேடுகின்றனர். இதற்கான பாதை தெரியாது தனிமைப்பட்டு நிற்கின்றனர். செய்ய வேண்டிய பணி என்ன? மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்துக் காட்டுவதன் மூலம், மக்களை வழிகாட்டும் வகையில் அவர்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்தும் வகையில் உதவுவது. அதாவது அவர்களின் ஒரு அங்கமாக நாம் மாறுவதைத் தான் செய்ய வேண்டியுள்ளது. இது தான் எமது வரலாற்றுப் பணி. 

 

மக்களை நாம் புரிந்து கொண்டு, நேசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்;. அவர்களின் உணர்ச்சிகளை, சிந்தனைகளை, விருப்பத்தை உயர்த்தி, அவர்களை ஒன்றுபடுத்தும் வகையில் நாம் நிகழ்ச்சியின் சாரத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்;. அந்த மக்களின் தேவை நோக்கம் ஒன்றாக இருக்கும் போது, நாம் அதற்கு வெளியில் நின்று மற்றொன்றை பற்றி வம்பளக்க முடியாது. எமக்கு, மக்கள் முன்னால் வழிகாட்டி நிற்கின்றனர். மக்களை பின்பற்றி முன்னேறிச் செல்லவேண்டும்;. இன்று சொந்த தேவைக்காக தேசியத்தை பயன்படுத்துவதை, மக்களை பயன்படுத்துவதையும் கண்டிப்பாக இனம் கண்டு, அதை மக்கள் முன் போட்டுடைக்க வேண்டும்.


மக்கள் அடைந்த துன்பமோ, எங்களை விட அதிகமானது. சொந்த இரத்தத்தைக் கொட்டி, சொந்த உயிரைக் கொட்டி, சொந்த தொப்புள் கொடியை பலியிட்டு, சொந்த உழைப்பை இழந்து அவர்கள் பெற்று இருப்பது ஒரு அடிமை விலங்கைத் தான். அவர்கள் கண்ணீர் துளிகள் வெளிவரமுடியாத அளவுக்கு வற்றிவிட்டது. அந்த மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் ஒரு பாசிசம், எம் மண்ணில் கொலுவீற்றுள்ளது. பேரினவாதம் ஒருபுறம், மறுபுறம் புலிப் பாசிட்டுகள். மறுபக்கம் மக்களின் மீட்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு மதபீடங்கள் தொடக்கம், கைக்கூலிகள், தன்னார்வக் குழுக்கள் இறுதியாக ஏகாதிபத்தியம் வரை மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்கின்றனர். நாங்கள் வாய்மூடி மௌனவிரதம் இருக்கின்றோம். இதில் சிலவற்றை மட்டும் பேசியே வம்பளக்கின்றோம். 

 

இவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தரப்போகிறார்கள். அடிமைத்தனத்தையும், ஆறு அடி சவப்பெட்டியில் மரணித்துப் போகும் அஸ்தமத்தையும் விரைவாக்குகின்றனர். மக்கள் தமக்கு நன்கு தெரிந்த எதிரியை எதிர்கொள்ளத் தெரியாது நிற்கும் நிலையில், அதை வழிகாட்டி அழைத்துச் செல்வதுதான் எம்முன்னுள்ள ஒரேயொரு பணியாகும். 

14.1.2006


பி.இரயாகரன் - சமர்