பிரேமதாசாவின் அரசியல் அர்த்தமுள்ள கொலை நடந்துள்ள இவ்வேளையில் ராஜீவ்காந்தியின் கொலையையும், அதுபற்றி அவ்வேளையில் ஜரோப்பிய சஞ்சிகைகளும், சில அரசியல் பிரமுகர்களும், அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்களால் பழி தீர்த்துக்கொள்ளப்படும் போது, இவ்வதிகாரவர்க்க தரகு முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்கி மனிதநேசம் பேசியதை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
இந்நினைவிலிருந்து நமது கண்ணுக்கு தென்படும் அரசியல் பரிணாமம் யாதெனில் அநேகமான சஞ்சிகைகள் பிரேமதாசாவின் கொலையை வரவேற்றே எழுதியுள்ளனவாகும். ஆனால் பிரமுகர்கள் எப்படியோ யாமறியோம்.
பிரேமதாசா கொலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் நாளேடுகள் அவர் ஏழைகளின் தலைவனாகவும், மக்களுக்காக வாழ்ந்தவராகவும், அடிமட்டத்திலிருநது உயர்ந்த மாமனிதனாகவும் சித்தரித்து எழுதுவதை நோக்குமிடத்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் பத்திரிகை சுதந்திரத்தை ஒட்டு மொத்தமாகப் பறித்தெடுத்த பிரேமதாசாவை வளர்த்துவிட்டதும் விழுந்த மாட்டுக்குக் குறிசுடும் இப்பத்திரிகையாளர்கள் தான் என்பதை நாம் மறப்பதற்கில்லை.
இலங்கை அரசியல் வரலாற்றில் பல முக்கிய காலகட்டங்கள் கடந்துள்ளன. அதில் பிரேமதாசாவின் காட்டாட்சியை மக்கள் எப்போதும் மறபபதற்கில்லை. ஒருலட்சம் சிங்கள மக்களையும் பல்லாயிரம் தமிழ்மக்களையும் குறுகிய காலத்தில் கொன்று ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்ட இவர், தனது அரசியல் எதிரிகளையெல்லாம் ஒழித்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டி மக்கள் வாழ்வை ஒட்ட சுரண்ட, ஏகாதிபத்தியங்களுக்காக கதவுகளை அகல திறந்து அவர்களின் காவல்நாயாகவும் இருந்த இவரை தொழிலாளர் தினமான மே தினத்தை கழியாட்ட விழாவாக சித்தரித்து மக்களை மந்தைகளாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டது நல்ல சகுனமாகவே நாம் கருதலாம்.
அனைத்துப்பிரிவு மக்களும் இவர் மீது ஆத்திரம் கொண்டிருந்ததும் பலரும் இவரை கொல்ல முயல்வர் என இரகசியப் பொலிசாh எச்சரித்து பாதுகாப்பு மிகவும் பலமாக்கப்பட்டிருந்த போதிலும், தாக்குதலின் பாணியை வைத்து, புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவாலே கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
பிரேமாவினால் கொலை செய்யப்பட்ட ரஞ்சன் விஜேரத்ன, லலித், கொப்பபடுவ ........ போன்றவர்களை புலிகள் தாமே கொலை செய்ததாக உரிமை கோரி பிரேமாவைக் காப்பாற்ற முயன்றனர். தற்போது பிரேமாவை தாம் கொலை செய்யவில்லையென மறுத்துமுள்ளனர். இம் முரண்பாடு விசித்திரமானதில்லை. இது புலிகளின் தேசியத்தன்மையுமல்ல. இது புலிகளுக்கும், பிரேமாவுக்கும் இடையில் சுரண்டலில் ஏற்பட்ட பங்கு முரண்பாடேயாகும். ஏகாதிபத்திய சுரண்டலில் தமக்கிடையிலான பங்கு தொடர்பாகவே பிரேமா(சிங்கள தரகுக் கும்பல்) முழுதாகச் சுரண்டுவதை புலிகள் அங்கீகரிக்க தயாரில்லை. தமிழ் மக்களை அங்கீகரிக்கபட்ட அரசு ஸ்தாபன வடிவங்களினூடாக புலிகள் தாம் சுரண்டகோரும் உரிமையை, பிரோமா விட்டுக் கொடுக்கத் தயாரில்லாது யுத்தத்தைத் தொடர்ந்ததோடு சதுரங்கத்தில் சிறுபிள்ளைகளோடு விளையாடும் பெரிய மனிதன் போன்று காய்களை நகர்த்தியதாலும் புலிகள் சினம் கொண்டு எடுத்ததோர் நடவடிக்கையே இக்கொலை.
புதிய ஜனாதிபதி விஜயதுங்காவிடம் சுரண்டலில் பங்கு தொடர்பான விட்டுக்கொடுப்பை எதிர்பார்த்து, தமிழ்மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க புலிகள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை கோரிவருகின்றனர். புலிகளும், ஜ-தே-கயும் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவைபுரிய மக்களைச் ஒட்டசுரண்டவதில் எக்கருத்து வேறுபாடுமின்றியும் ஜக்கியப்பட்டபடி புலிகள் தனிநபர்களை அழித்து சுரண்டலில் பங்கு கோருகின்றனர். அதேவேளை பேரத்தை செழுமைப்படுத்த, தீவிரப்படுத்த, சிங்கள முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாகவும் அழிக்கின்றனர். பிரேமா, லலித், ரஞ்சன், கொப்பேகடுவா..... போன்றவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருந்த போதிலும், மக்கள் விரோதச்செயல்களில் போட்டி போட்டே நடைமுறைப்படுத்தினர். இவர்கள் ஒட்டுமொத்த சமூகவிரோதிகளே. இவர்கள் பழிவாங்கப்படவேண்டியவர்களும் கூட. ஜ-தே-க ஏனைய சிங்களக் கட்சியினரும் புலிகளுக்கு தமிழ்மக்களை சுரண்டும் உரிமையைக் கொடுக்காமல் இன்றைய சூழ்நிலையில் எதையும் சரியாக நடைமுறைபடுத்த முடியாது என்பதை அறிந்திருந்த போதிலும், அல்லது விரும்பினும் கையாலாகாதவர்களாகவே உள்ளனர். ஏனெனில் இவர்களே தான் சிங்கள மக்களை பேரினவாதத்துக்கு இழுத்துச் சென்று அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள், இவர்கள் அரசஸ்தாபான வடிவினூடாக கொடுக்க முயலும் எத்தகைய அமைப்பையும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. மாறாக இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள். தற்போது நீதியரசர்கள், இராணுவத்தளபதிகள், கல்விமான்கள் போன்றோர் மீண்டும் இந்திய இராணுவத்தை கோருமாறும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளதும், இம ;முரண்பாட்டிலிருந்து தங்களை விடுவித்து பதவியைக் காப்பாற்றவேண்டிய அவசியத்தின் வெளிப்பாடே. இந் நிலைமை சர்வதேச அரசியல் மாற்றங்கள் நடைபெறும் போது, அல்லது அழுத்தங்கள் ஏற்படும்போது தலைகீழாய் மாறுவது எதிர்பாராததாகவே நாம் கருதவேண்டும்.
பிரேமதாச பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்கயையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாவேண்டும். யந்திரிக வேள்விகளிலும், யாகங்களிலும் அதீத நம்பிக்கை கொண்ட பிரேமா தனது குண்டர்படை மூலம் தென்னிலங்கையில் பல சிறுவர்களை கடத்தி பலி கொடுத்ததாகவும், இவர் தாய்ப்பாலில் குளிப்பதற்காக பல இளம் தாய்மார்கள் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. (ஜொன் வின்சட் கோமே) என்னும் சர்வாதிகாரி எழுதவோ, படிக்கவோ, கையெழுத்திடவோ தெரியாதவனாய் இருந்த போதிலும் 27ஆண்டுகள் வெனிசுலாவை ( 1908-1935) ஆண்டான் என்பது வரலாறு. இவரது காலத்தில் பல போராட்டங்கள் நடந்ததால் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரது நேரடி கட்டளையில் சித்திரவதைக்குட்பட்டு கொல்லப்பட்டார்கள். இவரை கிட்லருக்கு சமமாகவே உலகு கணித்தது. நமது பிரேமா போன்றே யாகங்களிலும், யந்திரீகங்களிலும் மிகவும் நம்பிக்கை கொண்டு வேள்விகள் நடத்தி 27 ஆண்டுகள் வெனிசுலாவை ஆண்டான் எனபதை நினைவுபடுத்தும் போது பிரேமா (கோமேயை) பின்பற்றியுள்ளார்). என்பது நன்கு புலப்படுகின்றது.
பிரேமாவின் மரணத்திற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பத்திரிகையாளர்களே. றிச்சட் டீ சொய்சா, சரத்முத்தட்டுவேகம, உபதிஸ்ச கமநாயக்க, றோகண விஜவீரா, விஜகுமாரணதுங்கா, சனத்கறுபியக், லங்காபுற, தம்மிக்கித்துள்...... போன்ற சட்டத்தரணிகள், பத்திரிகையாளாகள், எதிர்கருத்துக்கொண்ட அரசியல்வாதிகள் போன்றோரையும் கொல்லப்பட்ட அப்பாவிமக்களையும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோரின் கொலையில் பிரேமாவுக்கு கணிசமான பங்கிருந்ததையும் நினைவுபடுத்திப் பாருங்கள் எனக் கோருகின்றோம். பிரேமதாசா தனது தம்பிமாராக குறிப்பிட்ட துரோகிகள் டக்ளஸ் தேவானந்தாவும், அஸ்ரப்பும் அண்ணனையிழந்து என்ன செய்வார்களோ..... யாம் அறியோம்.
லலித்
கடந்த பல வருடங்களாக இலங்கையில் அரசியல் படுகொலைகள் நடந்து வருபவை நமக்கு புதியனவல்ல. இக் கொலைதொடர்ச்சிகளில் ஒன்றாக முன்னை நாள் ஜ-தே-க அமைச்சர் லலித் கொலை நடந்தேறியுள்ளது. கொலைக்கலாச்சார அரசியல் நடத்தி பிழைத்தவர்கள் கொல்லப்படும் போது நாம் கூக்குரல் இடுவதைத் தவிர்த்துள்ளோம். கொலைகளே அரசியல் மரபாகிப் போய்விடாதிருக்கவும், இக் கொலை ஏன், எதற்காக யார் செய்கின்றனர், என்பதில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய அவசியம் எம்மெல்லோருக்கும் உண்டு.
இலங்கையில் சி-ல-சு-கயை ஆக்கிரமித்துள்ள குடும்ப மேலாதிக்கத்தைக் கவனத்தில் கொண்டு, டட்லி சேனநாயக்காவின் சகோதரரின் மகன் ருக்மன் சேனநாயக்காவின் குடும்ப அரசியல் ஆதிக்கத்தை ஜே-ஆர் -ஜ-தே-கயில் இருந்து உடைத்தெறிந்தார் என்பது உண்மையே. இருப்பினும் கண்டிய உயர்குல சிங்களவருக்கு முன்னுரிமை கொடுத்ததோடு மிகச்சிறிய வயதிலிருந்த காமினி திசநாயக்கா போன்றோரையும் தலைமை அந்தஸ்துக்கு உயர்த்தினார். தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பிலிருந்து உருவான நீண்டகால கட்சி உறுப்பினரும், இலக்கியவாதியும், நடுத்தரவர்க்கத்தையும் அடிமட்டத்திலுள்ளோரையும் கவரக்கூடிய சிறந்த பேச்சாளருமாகிய (எம்-ஜீ-ஆர் போல்) பிரேமதாசாவின் இயல்பான வளர்ச்சியினூடாக கட்சியின் சரி பாதி அங்கத்தவர்களின் மதிப்பையும் ஆதரவையும் பிரேமதாசா பெற்றிருந்ததை ஜே-ஆர் ஆலோ மற்றும் உயர் குல ஜ-தே-க- தலைவர்களாலோ எதுவும் செய்ய முடியாதிருந்தது. இதன் நிமித்தமே ஜே-ஆர் காலத்தில் பிரதமர் பதவியும், 88ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி வேட்பாளராகவும் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் பிரேமா வெற்றியீட்டி பாராளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்த பின்னர் லலித் அத்துலத் முதலி பிரதமராக நியமிக்கும்படி கட்சியில சிலரும் ஜே-ஆர் குழுவினரும் அழுத்தப்படுத்தியும் பிரேமா நிராகரித்தார். மக்களால் எவ்வித எதிர்பார்ப்புக்கும் உட்படாத விஜதுங்காவை எதிர்பாராத வண்ணம் பிரதமராக்கி லலித்தையும் ஜே-ஆர் குழுவையும் அவமானப்படுத்தினார் என்றால் மிகையில்லை.
இதனால் விரக்தியும் ஆத்திரமும் அடைந்த லலித்தும் காமினியும் நேரம் வரும் வரை கட்சியோடு ஒட்டிக்கொண்டு பொறுத்திருந்தனர்.
ராஜீவ்காந்தியின் மரணச் சடங்கிற்குச் சென்றிருந்த காமினி இந்தியாவிலேயே மிகவும் சுதந்திரமாக சி-சு-கயினரை சந்தித்துப் பேசி ஜனாதிபதி பிரேமா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர ஒழுங்கு செய்து இலங்கை வந்ததும் நடைமுறையில் துரிதப்படுத்தி செய்து முடிக்க முயற்சித்தனர். ஆனால் பிரேமா பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் பயமுறுத்தல் ஊடாகவும், பணம் கொடுத்து விலைக்கு வாங்கியும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்தார். இதன் பின்னர் இவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். இக் காலகட்டத்தின் பின்னரே இவர்கள் புதிய கட்சியை ஜனநாயக ஜக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்து ஜனநாயகவாதிகளாக முக மூடியணிந்து கொண்டனர். இதன் பின்னரே பிரேமதாசாவின் ரயர் கலாச்சாரம், புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தமை, இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்பு ஏற்படுத்தியமை, போன்ற விடயங்களை மக்கள் முன பேச முனைந்தார். ஜனநாயகத்தை உண்மையில் லலித் நேசித்தவராயிருந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கும் போதே இவ் விடயங்களைக் கூறியிருக்கவேண்டும். மாறாக இவர் ஜ-தே-க யில் இருந்த போதும் பிழைப்புவாதமே முன்னணியிலிருந்தது . அதற்காகவே புதிய கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருக்கும் ஒரு தனிமனிதனிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதை ஜே-ஆர் காலத்தில் ஏற்றுக்கொண்ட இவர் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக கட்சியில் முதன் முதல் பிரேரித்தவரும் இவரே.
பிரேமதாசா லலித்துக்கு பிரதமர் பதவி கொடுக்காமலும, அரசு இயந்திரத்தில் இவரது முக்கியத்துவம் நிராகரிக்கப்பட்ட பின்னருமே இவர் ஜனநாயக விசுவாசியாக மாறினார். தனிமனித சாகசங்களில் மயங்கும் மூன்றாவது மண்டல நாட்டு மக்களின் பண்புக்கு விதிவிலக்கில்லாமல் நமது நாட்டில் ஒரளவு செல்வாக்கு இருந்தது உண்மையே. சிங்கள மக்கள் மத்தியில் இச் செல்வாக்கிற்கு காரணம் கடந்த காலத்தில் இவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்து தமிழ்மக்கள் மீது குண்டு மழை பொழிந்ததேயாகும். வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இவரது பெயரை உச்சரிப்பதைக் கூட சிறுவர்கள் தொடக்கம் முதியோர் வரை வெறுப்பவர்களாகவே காணப்பட்டனர். நாட்டைச் சூறையாடும் திறந்த பொருளாதாரக் கொள்கையையே பிரேமதாசாவுக்கு நிகராகக் கடைப்பிடிப்பதாக அறிவித்தார். தேசிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வாக யுத்தத்தைக் கடைப்பிடிப்பது, தொடக்கம் பிரேமதாசாவின் அனைத்துக் கொள்கையிலும் உடன்பட்ட இவர் அதிகாரபீடம் தொடர்பாக மாத்திரமே முரண்பட்டிருந்தார். ஜ-தே-க பேரினவாதிகளுக்கு கால் கழுவி விடும் பாஸ்கரலிங்கத்தைக் (பிரேமதாசாவின் அந்தரங்க உளவாளி) குறித்து ஜனாதிபதி மாளிகையில் புலிகள் தான் தற்போது முக்கிய முடிவுகள் எடுக்கிறது என்று மேடையில் கூறி இனவாதத்தை மேலும் கிளறியவர். பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண்மையை ஒரு அரசியல் சித்தாந்தமாகவே இவர் கருதியவர். தேசிய பாதுகாப்பு அமைச்சராக இவர் இருந்தபோது தெலைக்காட்சியில் இவர் ஆற்றிய உரைகள் இதை மிகவும் துல்லியமாக எடுத்தியம்புகின்றன. பிரேமதாசாவின் அரசியல் கேடித்தனம் அவரது அதிகாரவரம்புக்குளேயே இருந்தது. இவர்களது ஆட்சிலும் மக்களுக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவர்களது மரணத்திலும் மக்களுக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவர்களது மரணத்திலும் மக்கள் நடுங்கிப்போயுள்ளனர். எதிர்காலமும் இதே நிலையை நோக்கி நகர்வதை மக்கள் கவனத்தில் கொள்கின்றனர்.
பிரேமதாசா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode