01282023
Last updateபு, 02 மார் 2022 7pm

'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை.

''முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. ஐரோப்பா முழுவதும் எழுந்த மக்கள் கிளர்ச்சிகள் கணநேரத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன. ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டு விட்டன. மலைப்பாம்பு போல பிசாசுமரம் எல்லாவற்றையும் விழுங்கி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாயா? மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. நம்பிக்கை இருக்கிறது?"

 

அவநம்பிக்கையோடு வேதாளம் கேட்கிறது. அதற்கு தாங்கவே முடியவில்லை.

 

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும், ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது.  பிரான்சில் லூயி பிலிப் மன்னனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அந்த வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், பெல்ஜியம்,ஆஸ்திரியா,ஜெர்மனி என்று சுற்றிலும் பரவியது. காலம் கனவுகள் கண்டது. மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மிகுந்த உற்சாகத்துடன் பங்காற்றினர். பிரான்சுக்கும், அங்கிருந்து ஜெர்மனிக்கும் சென்றனர். தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையை காண விரும்பினர். மீண்டும் நியுரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையை கொண்டு வந்தனர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதினர். ஆனால் நிலப்பிரபுத்துவத்திடமிருந்து முதலாளித்துவம் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டதில்தான் எல்லாம் முடிந்தது.

 

எதிர்க்கலகங்களை உருவாக்கி முதலாளித்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் எந்த அதிகாரமும் போகாமல் பார்த்துக்கொண்டது. குட்டி பூர்ஷ்வாக்களின் பங்கு இதில் முக்கியமானது. வீராவேசத்துடன் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டனர். மார்க்ஸும், ஏங்கெஸும்  சொந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. லண்டனுக்கு சென்று குடியேறினார்கள்.  அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாய் கொழுத்து வளர்ந்த  பிசாசு மரத்தை ஒருநாளில் வீழ்த்திட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர். அதற்கு அயராத வலிமை வேண்டும். ஈடு இணயற்ற நம்பிக்கை வேண்டும். அதுதான் இப்போது முக்கியமானது.

 

தங்களுக்கு முன் தோன்றிய சமூகசிந்தனைகளில் சிறந்தனவற்றை யெல்லாம் தங்களுக்குள் சுவீகரித்துக் கொண்டனர்.  தனது வாழ்க்கையின் மிக உயர்ந்த பணிக்கு மார்க்ஸ் தயாராகிவிட்டார். தனது வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என நம்பினார். தத்துவத்தில் வறுமையற்று வளமாக வாழ்ந்த அவரும், அவரது மொத்த குடும்பமுமே பொருளாதார வறுமையில் அலைக்கழிந்தது. மார்க்ஸின் குடும்பத்துக்காக மான்செஸ்டரில் எழுத்தர் வேலைக்குச் சென்றார் ஏங்கெல்ஸ். நியுயார்க் டெய்லி டிரிப்யூனுக்கு கட்டுரைகள் எழுதி அதில் எதோ சொற்ப வருமானத்தையும் மார்க்ஸ் பெற்றார். சர்வதேச கம்யூனிஸ்டுகள் சங்கத்திற்கு வழிகாட்டுவதிலும் அதன் கோட்பாடுகளை வரையறை செய்வதிலும் ஈடுபட வேண்டியிருந்தது. அயர் லாந்து விடுதலைப் போராட்டத்திலும், அமெரிக்காவில் நடந்த அடிமைகளின் விடுதலைப் போராட்டத்திலும் தனது கவனங்களைத் திருப்ப வேண்டியிருந்தது

 

பாரிஸ் கம்யூன் ஏற்பட்ட போது, அதை நடத்திய சர்வதேச கம்யூனிஸ்ட்களின் சங்கத் தலைவர்களுக்கு ஆலோசனைகள் தந்தார். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை தன் கண்களால் பார்த்து விட்டார். அந்த சந்தோஷமும் 72 நாட்களுக்குத்தான் இருந்தது. முதலாளித்துவம் வெறி கொண்டு அதை முறியடித்ததையும், பாட்டாளி வர்க்கம் இரத்தக் கறைகளோடு வெட்டி வீழ்த்தப்பட்டதையும் காண நேர்ந்தது.

 

ஒரே ஒரு மகன் எட்கரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் சரியான சிகிச்சை இல்லாமல் நோய்களுக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்துவிட்டு வெறித்து உட்கார்ந்து விடுவார். எத்தனையோ சோகங்களின் போதும் தாங்கிக்கொண்ட ஜென்னியின் மலர்ந்த முகம் மௌனமாக தவித்து இழந்து போவதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குழந்தைகள் ஓடி விளையாடி நினைவுகளை நிரப்பி வைத்திருந்த வீட்டில், அவர்களின் நடமாட்டம் இல்லாமல் மனிதர் என்ன செய்துவிட முடியும்.

 

மார்க்ஸ் வீட்டில் அந்த மேஜையின் மீது உட்கார்ந்து எழுதுவதும், பிரிட்டீஷ் மியூசியத்தின் நூலகத்தில் உட்கார்ந்து படிப்பதுமாக வருடக்கணக்கில் இருந்தார். முப்பத்து மூன்று வருடங்கள்! சொந்த வாழ்க்கையும், தன் கனவு மைந்தர்களான தொழிலாளர்களும் கண்முன்னே சித்திரவதை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். காலம் ஒரு போதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. அதற்கான பதிலில் மனித குலத்தின் விடுதலை இருக்கிறது. பிசாசு மரத்தின் அடியாழத்துக்கும் காலங்களின் புலன்கள் வழியாக சென்று ஆணி வேரை ஆராய்ந்தாக வேண்டும். விரக்தியில் கிடந்த தன் படைக்கு சஞ்சீவி பர்வதத்தை அங்கிருந்துதான் எடுத்து வர வேண்டியிருந்தது.

 

மார்க்ஸின் பிரதானமான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல. மூலதனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தியதுதான். உயிரோடு இருக்கும் போது மூன்று தொகுதிகளில் அதன் முதல் தொகுதி மட்டுமே வெளியானது. அவர் சோஷலிச உலகில் வாழ்ந்தவர் அல்ல. முதலாளித்துவஉலகின் ஆரம்பக்கட்டத்தில் அதனை அனுபவித்தவர். முதலாளித்துவம் எப்படியெல்லாம் கொடுமையானதாய் இருக்கும் என்று அறிய முடிந்திருந்தது. வரலாற்றையும் விஞ்ஞானமாக்கியதால் அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.

 

அடிமைச்சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என ஒவ்வொரு காலத்திலும் பரிணாமம் பெற்ற தனியுடமை என்னும் வெறி பிடித்த மரத்தின் கதை, கடவுளின் ஜென்மம் போல ஒரு புதிராகவே பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. அதன் அருவருப்பான, அழுகிப்போன முகத்தை உலகின் முகத்துக்கு தோலுரித்துக் காட்டினார் மார்க்ஸ். முதலாளித்துவ உலகினைத் தவிர வரலாற்றின் எந்தவொரு காலக்கட்டத்திலும் பாரம்பரிய மரபுகள் இப்படி சிதைக்கப்பட்டதில்லை.... முழுப் பிரதேசத்தின் வளங்களும் இப்படி சுரண்டப்பட்டதில்லை...  மக்களை இப்படி அதிகாரமற்றவர்களாய் எறிந்ததில்லை...  என்பதை உயிரின் வேதனையோடும், ஆற்றல் மிக்க எழுத்துக்களோடும் வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டியது என்பதை அறிவு பூர்வமாக உணரவைக்கிறார்.  அந்த நாள் ஒன்றும் தானாக வந்து விடாது எனவும் மார்க்ஸ் உணர்த்துகிறார். சமுதாயத்தில் இந்த பிரக்ஞையை உறுதிப்படுத்த, புரட்சிக்கான தருணத்தை எடுத்துச் சொல்ல, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் எழுதி வைக்கிறார். மார்க்ஸின் உயிர்மூச்சும் அதுவாகவே இருந்தது.

 

எழுதிக்கொண்டே இருக்கிறார். மூத்த மகள் ஜென்னி இறந்து போகிறாள். வாழ்வின் வேராக இருந்த பிரியமான தோழி ஜென்னி இறந்து போகிறாள். எல்லாச் சோகங்களுக்கும் மத்தியில் எழுதி கொண்டிருக்கிறார். 1883 மார்ச் 14ம் தேதி அவரது மூச்சு நின்றுவிட்டது. எப்போதும் எழுதுகிற அந்த நாற்காலியில்  மார்க்ஸ் எழுதாமல் உட்கார்ந்து இருந்தார். காலம் தனது கேள்விக்கான பதிலை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

ஏங்கெல்ஸ் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். மூலதனத்தின் இறுதிப் பகுதிக்கு மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன காற்றில்.

http://mathavaraj.blogspot.com/2008/12/blog-post_1466.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்