Language Selection

புலிகளின் அழிவும், பேரினவாதத்தின் உச்சக் கொக்கரிப்பும் இன்று அன்றாட செய்தியாகின்றது. இதில் இருந்து மீள்வதற்கான புலிகளின் முயற்சிகள் அனைத்தும், இன்று தோல்வியைத் தழுவுகின்றது. தாம் ஏன் தோற்றுப்போகின்றோம் என்பதைக் கூட அறிய முடியாத சூனியத்தில், அவர்கள் காய்களை நகர்த்துகின்றனர்.

கொழும்பில் ஒரு பாரிய தாக்குதலை நடத்த முயலும் புலிகள், அங்கு இதற்கான நபர்களை நிலைநிறுத்த முடிவதில்லை. அவர்கள் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர். மறுபக்கத்தில் பல யுத்த முனைகள். இங்கு கட்டாய பயிற்சி பெற்றவர்கள், யுத்தம் செய்ய விரும்பமின்றி தம்மைத்தாம் தோற்கடிக்கின்றனர்.

 

தோற்கடிக்க முடியாத யுத்தம்;, புலியின் அழிவிற்கான காலத்தை வேகமாக குறைத்து வருகின்றது. புலிகள் சிறிய வட்டத்துக்குள் சுருங்கி, சுருக்குக் கயிற்றை கொண்டு தற்கொலை செய்யும் வண்ணம் தம்மை தாம் தம் நடத்தைகளால் மேலும் பலவீனப்படுத்துகின்றனர். படிப்படியாக கடல் எல்லையை இழந்து, அந்த பலத்தையே விரைவில் இழந்து விடுகின்ற அபாயம். பலராலும் நம்பமுடியாத விடையங்கள், அன்றாடம்; நிகழ்கின்றது. அதுவே செய்தியாகின்றது.

 

தோல்வியை தடுக்க, புலியின் எதிர்த்தாக்குதலால் இனி முடியாது என்ற நிலை. எப்படியாவது யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி, ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, நிலைமையை மாற்றிவிடலாம் என்று புலிகள் கணக்குப் போடுகின்றனர்.

 

இந்த வகையில் புலியின் பினாமியான கூட்டமைப்பை இந்தியா வரை அனுப்பினர். அங்கு அவர்கள் தமிழ்மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று, அங்கும் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர். புலிகள் தம் தமிழ்நாட்டு பினாமிகள் மூலமும், இதே பாட்டை நடத்தினர். தமிழன் அழிக்கப்படுவதாக ஒரு அநாமதேய வீடியோ காட்சிப் படத்தை வெளியிட்டனர். தமிழன் அனுபவிக்கும் மனித அவலத்தை ஒரு பக்கமாக திரித்து, அதை அனைத்து தரப்பும் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்தனர்.

 

பேரினவாத இராணுவத்தளபதி சரியாகவே கூறியது போல், தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள் வில்லுப்பாட்டுக்கு ஏற்ப ஆமாப் போடும் பிழைப்புவாதத்தை அரசியலாக்கத் தொடங்கினர்.

 

ஒரு திடீர் தமிழக எழுச்சியை, பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மூலம் ஏற்படுத்தினர். உள்ளுர் அரசியல் முரண்பாடு, அதை முன்னுக்கு கொண்டு வந்தது. கோரிக்கைகள், கோசங்கள் என்று தொடங்கிய போது, இங்கும் புலிகள் மீளத் தோற்றுப் போகின்றனர். இவ்வளவு செய்த புலிகள், வழமை போல் இங்கும் இலக்கை கோட்டைவிட்டனர்.

 

எதிரியை தனிமைப்படுத்த தெரியாது, மீண்டும் கோட்டை விட்டனர். புலிகள் யுத்த நிறுத்தத்தைக் கோரினர். மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை என்றனர். இதைத்தான் தமிழ்நாட்டு பிழைப்புவாத கோமாளிகள் முன்வைத்தனர். இப்படி எந்த யுத்ததந்திரத்தையும் வழிநடத்த தெரியாத புலிகள், மீண்டும் இந்தக் கோரிக்கை ஊடாகவே தோற்கடிக்கப்பட்டனர்.

 

வெல்வதாயின் எதைக் கோரியிருக்க வேண்டும்

இலங்கை அரசு மறுக்க முடியாத வண்ணம், மறுத்தால் இந்திய இலங்கை முரண்பாட்டை உருவாக்கும் வண்ணம் கோரிக்கை அமைந்திருக்க வேண்டும்;. இதையா புலிகள் செய்தார்கள்? இதையா புலிப் பினாமிகள் செய்தார்கள்? தமிழ்நாட்டு பிழைப்புவாத அரசியல் கோமாளிகள் இதையா செய்தனர்? இல்லை.

 

செய்திருக்க வேண்டியது என்ன?
 
1.இலங்கை இந்திய ஒப்பந்தப்படி, தமிழருக்கான தீர்வை உடன் அமுல் செய்!


2.வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை மறுபடி ஏற்படுத்து!


3.இதனடிப்படையில் கூட்டமைப்புடன் குறைந்தபட்ச பேச்சுவார்த்தை நடத்து!

 

இன்று இலங்கை அரசு இதை முற்றாக மறுத்து நிற்கின்றது என்பதும், இதைக் கூட தமிழருக்கு தராது என்பதும் தெரிந்தபின், இதைக் கோருவது யுத்ததந்திர ரீதியாக மிகச்சரியானது. பேரினவாதம் எதையும் தராது என்கின்ற போது, அதை தனிமைப்படுத்த இந்தியாவுடன் அது செய்து கொண்ட ஓப்பந்தத்தை பயன்படுத்தியிருக்க முடியும்.

 

நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுக்கள் நெளிவு சுழிவாக எப்படி எதிரியை தனிமைப்படுத்தினரோ,அது போன்றது தான் இதுவும். மோட்டுப் புலியும், இதைக் கொண்டு நக்கும் பினாமிகளும், எதிரியை என்றும் தனிமைப்படுத்த முடிவதில்லை. அவர்கள் வரலாறு எங்கும் எதிரியை பலப்படுத்தியே வந்துள்ளனர். 

 

இலங்கை இந்திய ஆக்கிரமிப்பு ஓப்பந்தம் கூட, மாறிவிட்ட இன்றைய சூழலில் யுத்த தந்திரதீதியாக இலங்கை அரசை தனிமைப்படுத்த உதவும் அடிப்படையை கொண்டேயிருந்தது. இலங்கை இந்தியாவூடாக இலகுவாக இதை நிர்பந்திக்கும் வண்ணம், இந்திய மத்திய அரசை தனிமைப்படுத்தியிருக்க முடியும்.

 

இதைச் செய்யும் தலைமைத்துவ பண்பு புலிகளிடம் கிடையாது. அரசியல் பினாமிகள் மூலமும், அரசியல் கோமாளிகளைக் கொண்டும், தமக்குத் தாமே மண்ணை அள்ளிப் போட்டனர். தம் குறுகிய நோக்கில் சிந்திப்பதும், அதைச் சுற்றி தம்மைத் தாம் தனிமைப்படுத்திக் கொள்வதும் தான், புலிப் பாசிசத்தின் சொந்த அறிவாகிவிட்டது. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலைக்கு ஓப்பான, சொந்த சதிக்குள் புதைகின்றனர். இதுவே மோட்டுப் புலியின் வரலாறாக மாறிவருகின்றது.  

 

பி.இரயாகரன்
09.12.2008