இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!


மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் செயல்படும் இப்பகுதியில், சேவா பாரதி, தலித் இந்துக்கள் சபை, திராவிடர் பறையர் முன்னேற்றக் கழகம், பிரம்ம குமாரிகள் சங்கம் எனப் பல 'அவதாரம்' எடுத்துக் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் காலூன்ற முயன்று வந்தது. அப்போதெல்லாம் இப்பார்ப்பன பாசிஸ்டுகளின் தந்திரத்தை அம்பலப்படுத்தி, இந்த நச்சுப் பாம்புகளை சேத்துப்பட்டு பகுதியில் அண்டவிடாமல் விரட்டியடித்தனர் இவ்வமைப்பினர்.

இந்நிலையில், அடுத்தகட்ட படையெடுப்புக்கு முன்னறிவிப்பாய், அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ட ம.க.இ.க. மற்றும் பெரியார் தி.க.வினர், அச்சுவரொட்டிகளைக் கருப்பு மையிட்டு அழித்து, உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்பிரச்சினையில் ம.க.இ.க., பெரியார் தி.க.வினரை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இந்து வெறியர்கள், தோழர்களை தண்டிக்க போலீசிடம் தஞ்சம் புகுந்தனர்.

உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ம.க.இ.க., பெரியார் தி.க. தோழர்களை அழைத்து "போஸ்டர் ஒட்ட பி.ஜே.பி.க்கு இருக்கும் ஜனநாயகத்தை"ப் பற்றி வகுப்பெடுத்தனர்.

"அவுங்க கேஸ் கொடுத்திருக்காங்க, சமாதானமா போயிருங்க. மையிட்டு அழித்த சுவரொட்டிகளைக் கழுவிவிட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" - என்றதுதான் தாமதம், "நாண்டுகிட்டு செத்தாலும் சாவேனே தவிர, அழித்த சுவரொட்டியைக் கழுவமாட்டேன்" என முகத்திலறைந்து எதிர்வினையாற்றினார் போலீசு நிலையம் சென்றிருந்த தோழர்களில் ஒருவர்.

"சரி, நீங்கள் அழித்த சுவரொட்டிகள் மீது மீண்டும் அதே சுவரொட்டியையாவது ஒட்டிக் கொள்ளட்டுமே" - என்று போலீசு 'இறங்கி' வந்த போதும், "மீண்டும் ஒட்டினால் மீண்டும் அழிப்போம் சட்டப்படி என்ன செய்கிறீர்களோ செய்து கொள்ளுங்கள்" - என்று உறுதியாய் நின்றனர் தோழர்கள்.

மறுநாள் சுவரொட்டி அழிக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கியும், பா.ஜ.க. பார்ப்பன பாசிஸ்டுகளின் கோர முகத்தையும், இதற்கு துணை போகும் போலீசின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, ம.க.இ.க., பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சேத்துப்பட்டு பகுதி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி, இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்கெதிராக மக்களின் ஆதரவைத் திரட்டின.

இதனைக் கண்டு பாசிசக் கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. போலீசுக்கோ இது கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையானது. விளைவு, சுவரொட்டிகளை மையிட்டு அழித்தக் 'குற்றத்திற்காக' ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் வாசுதேவன், பெரியார் தி.க.வைச் சேர்ந்த தோழர் ராஜன் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது.

சுவரொட்டியில் இருந்த அத்வானியின் முகத்தை மையிட்டு அழித்ததற்கே கொலை முயற்சி வழக்கும் சிறை தண்டனையுமென்றால், குஜராத், மும்பை, பகல்பூர், கோவை எனப் பல இடங்களில் மதக் கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முசுலீம்களைப் படுகொலை செய்த, அரியானா மாநிலம் துலினாவில் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களை உயிருடன் அடித்துக் கொன்ற "கொலைகாரன்" அத்வானிக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இந்நேரம் அத்வானியின் கல்லறையில் மரமும் வளர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நாடறிந்த இந்த கொலைகாரனுக்கு சட்டமும் நீதிமன்றமும் என்ன தண்டனையை வழங்கியுள்ளது? இம்மத வெறி கலவரங்களுக்காக அத்வானி மீது ஒரு 'பெட்டி கேஸாவது' போட்டிருக்கிறதா?

இப்படிப்பட்ட கொலைகாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டக் கூடாது என்ற பொதுநோக்கத்தில்தான் அத்வானியின் பிறந்தநாள் சுவரொட்டி மீது ம.க.இ.க.வும், பெரியார் தி.க.வினரும் மையிட்டு அழித்தனரே தவிர, வேறெந்த 'உள்நோக்க'மும் அவர்களுக்குக் கிடையாது.

இப்பார்ப்பன-பாசிச கும்பல், தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களையெல்லாம் வன்முறையால் மட்டுமே எதிர்கொண்டு வருகிறது. ஆனால், மற்றவர்கள் மட்டும் இவர்களை எதிர்க்கும் போது "சட்டம் சொல்கிறபடி" நடந்து கொள்ளவேண்டும் என உபதேசம் செய்கிறது.




"சாதிக்கொரு நீதி" பேசும் பார்ப்பன-பாசிசக் கும்பலிடம், இப்பித்தலாட்டத்தைத் தவிர, வேறென்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ்.ஐயும்-பி.ஜே.பி.யையும் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் போல பார்க்க முடியாது. அடிப்படையிலேயே இவை இந்து மதவெறி பிடித்த, ஆதிக்க சாதிவெறி பிடித்த, ஆயுத பயிற்சி எடுத்துக் கொண்ட ஒரு பாசிச வன்முறைக் கும்பல். இவர்களை ஒழித்துக் கட்டாமல், சமூக அமைதியை பாதுகாக்க முடியாது. எனவே, இப்பாசிஸ்டுகளின் ஒவ்வொரு அசைவையும் - சுவரொட்டிகள் ஒட்டுவதில் தொடங்கி, விளக்கு பூஜை, ஷாகா நடத்துவது அனைத்தையும் கண்காணித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இப்பாசிஸ்டுகளுக்கெதிராக மக்களை அணி திரட்டியாக வேண்டும்.

தனது எதிரிவை வன்முறையால் மட்டுமே அணுகும் இக்கும்பலை, சட்டம், ஜனநாயகம் என்ற வரம்பிற்குள் மட்டுமே நின்று கொண்டு எதிர்கொள்ளவும் முடியாது. அவசியமான பொழுது சட்டத்தை மீறியும்தான் எதிர்கொண்டாக வேண்டும். அவாளின் "மொழியில்" சொன்னால்தானே "அவாளுக்குப் புரியும்"!

சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களை, ம.க.இ.க., பெரியார் தி.க., வி.சி. அமைப்புகளும், பகுதி மக்களும் பெருந்திரளாக அணி திரண்டு வரவேற்றனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாய்ச் சென்று, அருகிலுள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, "இப்பாசிஸ்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட"ச் சூளுரைத்தனர்.

பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை சேத்துப்பட்டு பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக அமைந்தது சிறை சென்று வந்த தோழர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி.

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ். கும்பலே ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!

ம.க.இ.க., சென்னை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008