05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.

 

 

இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. அப்படி இருப்பதாக கூறுவது சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து விளக்கம் பெறாது. புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது.

 

ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிரொட்ஸ்கிய வாதிகளும் சரி, அனைத்து வகை பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன

 

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான், மற்றது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்தை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது.

 

ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் சுரண்டல் வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவமும், அதிலிருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றய வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது, மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.

 

மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.

 

ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது அதை எதிர்க்கும் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.


பி.இரயாகரன் - சமர்