Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லும்பனுக்கு நட்பார்ந்த வணக்கம்

முதலில் தூசணத்தால் பதிவிட்டது முதல் பலவிதமாக அணுகிய நீங்கள், இன்று சில கேள்விகளுடன் விவாதத்தளத்துக்கு வந்தமைக்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள். ஆனாலும் கூட கேள்விகள்,

 விவாதங்களுடன் குறிப்பாக "ஜனநாயகத்துக்கு" பதிலிட்ட போது அதில் இது இருக்கவில்லை. அவர்கள் எந்தவிதமான கருத்தை வைத்திருந்தாலும் கூட, நீங்கள் சரியென்று நம்பும் கருத்தை ஏற்க வைக்கும் அணுகுமுறை முதல் அவசியமானது. நீங்கள் உண்மை என்று நம்பும் கருத்தைக் கொண்டு, அவர்களையும் உங்கள் பக்கம் வென்று எடுக்கமுடியும்;. விவாதம் பரஸ்பரம் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதே.

 

தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகப் போராட்டம் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் உள்ளவரை, உண்மையே வெல்லும். உண்மைக்காக நீங்கள் நின்றால் உண்மைக்காக கருத்து தளத்தில் போராடுவது இலகுவானது. உண்மையின் பக்கம் நிற்பவர்களை மிகவும் நேர்மையாக அணுக முடியும்.


தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள், தமிழ் மக்களின் சமூக பொருளாதார கூறுகள் இதன் மீது போராடும் யாருடனும் நாம் இணங்கிச் செல்ல முடியும்;. நீங்கள் உண்மையாக ஏழை எளிய தமிழ் மக்களின் நலன்களின் அக்கறை இருந்தால், இந்தப் போராட்டத்தின் சரியான அம்சங்களையும் பிழையான அம்சங்களையும் இனம் கண்டு அணுகமுடியும். இல்லாத போது தான் தூசணமும், வன்முறை வார்த்தைகளையும் கொட்டிவிடுவது நிகழ்கின்றது.

 

அடுத்து நீங்கள் ஏன் உங்கள் சொந்த அடையாளத்துடன் அணுகாது, அநாமதேயமாக உள்ளீர்கள். அத்துடன் ஏன் தமிழில் விவாதிக்க மறுக்கின்றீர்கள்;. விவாதம் சொந்த அடையாளத்துடன் நேர்மையாக அணுகுவதும், தமிழில் விவாதிப்பதும் அவசியமானது. அது ஆரோக்கியமானதும் கூட.

 

தமிழ் மக்களுக்கு நீ என்ன செய்தாய் என்ற கேள்வி, கடந்த வரலாறு தெரியாததன் மொத்த வெளிப்பாடு. கடந்து வந்த வரலாறு 17000 உயிரை மட்டும் பலி கொள்ளவில்லை. 60000 மக்களையும், 10000 மேற்பட்ட சக போராளிகளையும் அழித்துள்ளது. இந்த வரலாற்றின் ஊடாகவே, நாங்களும் போராடி வந்துள்ளோம்;. இப்படி பலர் போராடினர். முதலில் சொந்த இயக்கத்தினுள் மக்கள் நலன்கள் என்ற அடிப்படையில் தொடங்கிய போராட்டத்தில், ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

 

தமிழ் மக்களின் நலனுக்காக போராடியமைக்காக 1985 இல் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும் உத்தரவை ரெலோ இட்டு இருந்தது. எனது வீடு சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கி குண்டுகளால் சன்னமிடப்பட்டது. இதே போன்றே என்னைக் கொல்ல பிளாட் முயன்றது. புலிகள் என்னைக் கொல்ல உரிமை கோராது கடத்தினர். கடத்தி வைத்து சித்திரவதை செய்த 80 வது நாளில், நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பியிருந்தேன்;.
நான் பல்கலைக்கழக மாணவ தலைவனாக இருந்தமையால், பல்கலைக்கழகத்தில் உயிருக்கு உத்தரவாதத்தை புலிகள் தந்தனர். இணையத்தில் இதை ஒட்டிய உரையுள்ளது. ஆனால் அதன் பின் பலதரம் என்னை கொல்ல முயன்றனர். இனம் தெரியாத கொலை, கடத்தல் போன்ற பல வழிகளையே அன்றாடம் செய்பவர்கள் புலிகள். எனது கைதை கூட தாம் கடத்தவில்லை என்றே, எனது குடும்பத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் கூட அறிவித்து இருந்தனர். இப்படித்தான் எனது வரலாறு 1979 1980 களில் தொடங்கியது.

 

பல்கலைகழக மாணவர் தலைவர்களில் நான் ஒருவனாக இருந்த காலத்தில், இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக பல போராட்டத்தை, இன்று போல் அல்ல சுயேட்சையாக தலைமைதாங்கி நடத்தியவன். அதேபோல் பல இயக்கத்துக்கு எதிராகவும் கூட போராட்டத்தை நடத்தியவன். மக்கள் நலனை முதன்மைப்படுத்திய போராட்டமே எனது போராட்டம்.

 

இன்று வரை அந்த போராட்டம் தான் எனது போராட்டம்;. இதை வெறுக்கும் இயக்கங்கள் என்னை எதிரியாக பார்த்தன. இந்த வகையில் புலியும் அடங்கும்;. யாழ்பாணத்தில் மாற்றுக் கருத்தை அங்கீகரிக்க மறுத்து, புலிகள் அனைவரையும் கொன்று போடும் நிலையில் அங்கு மனிதர்கள் வாழமுடியாது என்ற நிலை உருவானது. மந்தைகளும், அடிமைகளுமே வாழமுடியும்; என்ற நிலை. இது எதாhத்தம்.

 

நடைமுறையில் போராடுவது எனும்போது, இன்றைய போராட்டம் கூட நடைமுறை சார்ந்ததே. மக்கள் நலனை முன்னிறுத்தி, அவர்கள் மட்டும் தான் தமது சொந்த விடுதலைக்காக போராட முடியம் என்பதை தெளிவாக வலியுத்துவது இன்றைய நடைமுறை சார்ந்த வடிவங்களில் ஒன்று. இதை கைவிட்டு புலிகளிடம் போய் தற்கொலைக்கு ஒப்பாக, மக்களின் நலனை கைவிட்டு மடிவது கூட மக்களுக்குச் செய்யும் துரோகத்தனமாகும்.


நடைமுறையில் உண்மையை நேர்மையாக முன்வைப்பதால் தான், தூசணத்தால் இணையங்களில் பதிலளித்த நீங்கள் கூட, இன்று இதை படித்து கேள்வி கேட்கின்றீர்கள். இதற்கு காரணம் இன்றைய நிலை பற்றி மக்கள் நலன் சார்ந்த விமர்சனத்தை நான் முன்வைக்கின்றேன்.

 

வெறுமனே இலங்கை பிரச்சனை மட்டுமல்ல, சர்வதேச பிரசச்னைகள் மீது கூட நான் எழுதுகின்றென்;. புலியெதிர்ப்பு அணியைக் கூட அரசியல் ரீதியாக நான் விமர்சித்த அளவுக்கு, இலங்கையில் யாரும் விமர்சிக்கவில்லை. அதனால் தான் அவர்களும் என்னை தூற்றுகின்றனர். என்னை புலி என்கின்றனர். நீங்கள் துரோகி என்கின்றீர்கள். மக்கள் நலனை முன்னெடுக்காத அனைத்து தரப்பும் என்னை தூற்றுகின்றது.


பிரஞ்சு உள்துறை அமைச்சின் அரசியல் பிரிவு, என்னை அழைத்து எழுதுவதை நிறுத்தக் கோரி எச்சரிக்கின்றது. குறிப்பாக பிரஞ்சு அரசு பற்றியும், மற்றைய நாட்டு அரசு பற்றியும், இலங்கை அரசு பற்றியும் எழுதுவதை உத்தியோகப+ர்வமற்ற வகையில் நிறுத்தக் கோரியுள்ளது.

 

இவை எல்லாம் நான் சரியாக இருப்பதை தெளிவாக உறுதி செய்கின்றது. உலகில் உள்ள மக்களை அனைவரையும் நேசிக்கும் நான், மக்களை ஒடுக்கும் அனைவரையும் வெறுக்கின்றேன்.

 

மற்றய அரசியல் பேசுபவர்கள் போல் நான் வாழ முற்படவில்லை. நான் உடல் உழைப்பு சார்ந்த (மூளை உழைப்பு அல்ல) எட்டு மணி நேரம் வேலைக்கு சென்று, எனது குடும்பத்துக்காக உழைத்து வாழ்கின்றேன்;. மிகுதி நேரத்தில் சமூகத்துக்காக சிந்திக்கின்றேன்;. இன்றைய எனது நிலை இதுதான். மண்ணைவிட்டு, மக்களைவிட்டு வாழவேண்டிய துயரம். அங்கு சுயமாக சுதந்திரமான சிந்தனையுள்ள மனிதனாக வாழமுடியாத நிலையை புலிகள் ஏற்படுத்திய போது, எதி

ரியிடம் சரணடையாது சொந்தக் காலில் நிற்க புலம்பெயர்ந்தே வாழவேண்டிய அவலம் ஏற்பட்டது.

இது மட்டுமல்ல நீங்கள் மட்டும் தூற்றவில்லை, என்னை சுற்றியுள்ள பலதரப்பு புலம்பெயர் இலக்கிய வட்டமும் கூட தூற்றிவருகின்றது. இங்கு பாரிசில் நான் இறந்துவிட்டேன் என்ற, கல்வெட்டு அடித்து இரண்டு சிறு சஞ்சிகைகள் வெளியிட்டனர். எனக்கு மனநோய் என்ற துண்டுப்பிரசுரம் கூட வெளிவந்துள்ளது.


யாருடனும் சமரசம் செய்யாது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதால் இந்த வகையில் இழிவு படுத்தப்பட்டேன், இழிவுபடுத்தப்படுகின்றேன்;. உண்மையைக் கண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் கொதிப்படைகின்றனர்.

 

கருணாவின் கொலைகளை நான் விமர்சிக்கவில்லை என்ற கூற்று தவறானது. கருணா பிரிந்தவுடனேயே கருணாவின் புலி அரசியலை உடனடியாக விமர்சித்தவன். அவைகள் உள்ளடங்கிய கட்டுரைகள் தனி நூலாகக் கூட வெளிவந்துள்ளது. இவ் இணையத்திலும் அக்கட்டுரை உள்ளது. கருணாவின் கொலைக் கலாச்சாரத்தை நான் கண்டிக்கவில்லை என்பது தவறு. இது கண்டிக்க கூடிய ஒரு சிறுவிடையமல்ல. மாறாக இந்த மாதிரியான கொலைகளும், இந்த அரசியல் விளைவும் ஒரு சமூகத்தை அடிமைத்தனத்துக்குள் இட்டுச் செல்லுகின்றது. அதே புலி அரசியல். அதே புலி நடைமுறை.

 

இரண்டு சகோதரிகள் படுகொலை பற்றிய விடையம் பலவேறுபட்ட தரவுகள் இக் கொலை தொடர்பாக வெளிவருகின்றது. உண்மையை கண்டறிவது மிகவும் சிரமமான வகையில் உள்ளது. பரஸ்பரம் இரண்டு பகுதியுமே இதைச் செய்யும் அடிப்படையைக் கொண்டுள்ளது. குறிப்பாக கொலை நடக்க முன்பு சரணடைந்த இளைஞர்கள் என்று பலிகள் கூறும் நபர்கள் பற்றி, முதல் புலிகளின் இணையத்தில் வெளியிட்ட தகவலை திருத்தியது ஏன்?. தமது கட்டுப்பாட்டு பகுதியில் புகுந்து தாக்கிய போது கைதானதாக வெளிவந்த செய்தியை அவரசரமாக திருத்தியது ஏன் என்ற கேள்வி மர்மாகவுள்ளது. அன்று பி.பி.சிக்கு செவ்வி வழங்கிய கிழக்கு புலித் தளபதி ஒருவர் இது பற்றிய விடையத்தில் தடுமாறியது ஏன் என்ற கேள்வி எழும்புகின்றது. நேர்மையை இழந்த உண்மையைத் திரித்த எமது தேசிய வரலாற்றில் இப்படி பல கேள்விகள் மர்மாகவே உள்ளன.
போராட்டத்தில் இணையும் ஒவ்வொருவனும், ஒவ்வொருத்தியும் தியாக மனவுணர்வுடன் தான் இணைகின்றனர். அங்கு சுயநலம் இருப்பதில்லை. ஆனால் போராட்டத் தலைமைகள் அப்படி அல்ல. இதுவே புலிக்கும் பொருந்தும்;. தலைமைகள் சுயநலம் கொண்டவையாக இருப்பதால், அந்த இளைஞர்களின் அர்ப்பணிப்பை அர்த்தமற்றதாக சிதைத்து விடுகின்றது. இந்த விடுதலைப் போராட்டம் இப்படி சில பத்தாயிரம் இளைஞர்களினதும், யுவதிகளினதும் உயிரை அழித்து எதைச் சாதிக்க போகின்றது. எதுவும் இல்லை என்பதே உண்மை.



புலிகள் ஆண்டாலும் சரி அல்லது எந்தக் கொம்பன் ஆண்டாலும் சரி ஏழை பணக்காரனைக் கொண்ட அடிமை சமூகம் மட்டும் எஞ்சும். ஆண்டான் அடிமை உறவு சமூகத்தின் காணப்படும.; இதை நான் விடுதலையாக காணவில்லை. இது மட்டும் உண்மை.



என்னிடம் திட்டமென்ன என்ற கேள்வி அர்த்தமற்றது. நான் தனிமனிதன்;;. தனிமனிதனால் சமூகத்தை மாற்றமுடியாது. மக்கள் மட்டும் தான் சமூகத்தை மாற்றமுடியும்;. அந்த மக்களுக்கு இந்த சமூகத்தின் எதார்த்தத்தை எடுத்துக்கூறும் தனிமனிதப் பணியை மட்டும் நான் இன்று செய்கின்றேன்; நாளை என்பது என்னுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. நாளை நான் புலிகளால் பாரிஸ் வீதியில் கொல்லப்படலாம்!


தனிமனிதனான என்னை விடுங்கள், புலிகளிடமே நாளை என்பது சூனியமாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் எப்படி நாட்டை அமைக்க போகின்றார்கள் என்று எதுவும் தெரியாத நிலைலேயே உள்ளனர். பிரபாகரனுக்கு மட்டும் இது தெரியும் என்று நம்பும் நிலையில் இயக்கமே உள்ளது. தனிமனிதனான நான் எப்படி இதற்கு விடையளிப்பது?. ஆனால் சமூகத்தின் சரி பிழைகளையும், எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் பார்க்க என்னால் முடிகின்றது. அதை ஒரு சிறிய வட்டத்துக்கு, அதாவது உங்களைப் போன்றவர்களுக்கு இந்த இணையம் மூலம் இதைச் சொல்லமுடிகின்றது.

 

நட்புடன் ஜனநாயகம் அவர்களுக்கு

 

உங்கள் கருத்தைப் படித்தேன். அதற்குள் நான் முழுமையாக செல்ல முற்படவில்லை. ஆனால் சமூகத்தை புலிகளில் இருந்து மட்டும் பார்க்காதீர்கள். சமூகம் வெளியில் புலிக்கு முரண்பாடாகவே இயங்குகின்றது. அனைத்தையும் புலியின் ஊடாக பார்த்தல் என்பதே, இன்று எமது சமூகத்தின் சாபக்கேடாகும். இதுவே சமூக மீட்சிகான மிகப் பெரிய தடையாகும்.

 

மாறாக மக்களின்; நலனை முதன்மைப்படுத்துங்கள். மக்களுடன் முரண்படும் அனைத்து கூறுகளையும் இனம் கண்டு அதை அம்பலப்படுத்துங்கள். இதற்கு விளங்கப்படுத்தும் ஒரு முறையைக் கையாளுங்கள். புலிக்குள் இருக்கும் சில பத்தாயிரம் பேரும் சிந்திக்க கூடிய, ஒரு மனித இனத்தில் இருந்து வந்தவர்கள் தான். அதேபோல் தான் தமிழ் மக்களும். ஒரு சரியான விடையத்தை விளங்கப்படுத்த வேண்டிய சமூக சூழலில் எமது தலைமுறை வாழ்கின்றது. .இதைக் கவனத்தில் எடுங்கள். சின்னச்சின்ன விடையங்களாகத் தன்னும், அதை விளங்கப்படுத்த முனையுங்கள். விளங்கி ஏற்றல் என்ற அணுகுமுறை, மாற்றத்தின் முதல் படி. அது ஒரு தனிமனிதனாகக் கூட இருக்காலம்; தீட்டித் தீர்த்தல் என்பது, வென்று எடுக்கும் வழிமுறையல்ல. கருத்துகள் சரியானவை என்பதால், விளங்கப்படுதல் என்பது அவசியமானது. ஆரோக்கியமானது.



நல்ல உறவுகைளக் கூட ஏற்படுத்தும். எமது எதிரியாக நம்பும் ஒருவனைக் கூட நாம் எம்மை நோக்கி இழுக்க முடியும்.; அவர்கள் அப்படி அணுகா விட்டாலும் கூட, நாம் அதை நோக்கி முன்னேற வேண்டும். ஒரு கல்லைப் பிளப்பது போல், உண்மையை விளக்கி அறையும் போது அது பிளந்துவிடும்.

 

மிகத் தெளிவாக புலிகள் இல்லாத வெற்றிடத்தில் எதைப் படைக்கப் போகின்றோம்;. ஆனந்தசங்கரி, ஜெயதேவன் போன்றவர்களையா? உண்மையான விடுதலையை நேசிக்கும் மனிதர்களை நோக்கி நாம் போராடவேண்டும். இது சிரமமானது, ஆனால் இதுமட்டும் தான் எம்முன்னுள்ள ஒரேயொரு மாற்றுப் பாதை. இதை கவனத்தில் கொள்ளுங்கள். நான் உங்களை அறியேன். ஆனால் என்னை அறிந்திருப்பீர்கள்.

 

என்னைச் சொல்வார்கள் கடும் போக்கான அணுகுமுறைக்காரன் என்று. ஆம் மக்கள் விடையத்தில் மட்டும் தான். மற்றும்படி உண்மையாக சமூகத்தை நேசிப்பவனிடம் அப்படி அணுகுவது என்பது தவறு என்றே இங்கே உங்களிடமும் கூறுகின்றேன். கடுமையான முரண்பாடு உள்ளவனைக் கூட வென்று எடுக்கும் அணுகுமுறை அவசியம்;. இதைக் கவனத்தில் கொண்டு, உங்கள் அணுகுமுறை உண்மையின் பால், கேள்விகளை எழுப்பிய வண்ணம் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கவனம் எடுங்கள. நல்ல ஆரோக்கியமான முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள்;. வாழ்த்துக்கள்.

11.12.2005