சினிமா டயலாக் எழுத வேண்டும் என்பதற்காகவே மூச்சு முட்ட எழுதும் பல இலக்கிய ஆளுமைகள் பிழைப்பு தேடியலையும் தமிழகத்தில் இந்த மின்மினிப்பூச்சிகளில் ஒன்றாக அற்புத வானம்பாடியாக சிறகடித்து பறந்து திரியும் சாய்பாபா பக்தன் சாரு சினிமா மீது மிகுந்த அக்கறையும்,கோபமும் கொண்டு காலத்தால் அழியாத விமரிசனங்களை வழங்கி வருகிறார்.
சினிமா என்பது உயர் குடிகளின் பிரதிபலிப்பாக,அவர்கள் விமரிசனம் செய்யும் கலையாக மட்டும் இருந்த காலம் போய் இன்று அதன் தளம் விரிவடைந்துள்ளது நாம் அறிந்ததே இருந்த போதிலும் கலைக்காகவே வாழ்ந்த சு.ரா,வாழ்ந்து கொண்டிருக்கிற எஸ்.ரா,ஜெயமோகன் போன்ற இலக்கிய பேரெழுச்சிகளில் ஒரு அலையாகவுள்ள சாரு இன்று கலையின் ஒரு அங்கமாக மட்டுமே உள்ள திரைப்படத்தின் மீது மட்டும் தொடர்ச்சியாக முட்டி மோதுவதன் பின்னுள்ள சூன்ய வெளியை புரிந்து கொள்வது நண்பர்களுக்கும், அந்த இலக்கிய பெரெழுச்சிகளின் ரசிகக்குஞ்சுகளுக்கும் சற்று சிரமம் தான்.
ஜெயமோகனும்,சாருவும் சண்டைக்கோழிகளாக சதா கட்டிப்புரண்டு பிராண்டிக்கொள்வதற்கும் மேற்கூறியவற்றுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?
என்பதை மூன்றாவது ஆதீனமான எஸ்.ரா விடம் தான் கேட்டறிய வேண்டும்.
நேற்று வரை சிறுபத்திரிகைகளில் எழுதிக்கொண்டும், இலக்கிய வட்டாரம் எனும் வெட்டித்தின்னையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டும் காலம் போக்கிக்கொண்டிருந்த சாருவுக்கு தனது லட்சிய இலக்குகளை எட்ட முடியவில்லை, சீரோ டிகிரி,ராச லீலா என்று கரடி விட்டுப்பார்த்தும் காரியம் கைகூடாத சாரு,அதாவது கோடம்பாக்கத்தின் மசாலா சினிமாக்களில் கூட வாய்ப்பு கிட்டாத சாரு
[அப்படினா அதற்காகத்தான் அதையெல்லாம் எழுதினாரா என்று கேட்க கூடாது]பிறகு என்ன செய்தார்?
உள்ளூரில் சீந்த ஆள் இல்லாத நிலையில், தான் உலக இலக்கியம் படைக்க புறப்பட்டுவிட்டதாகவும்,தனது போட்டியாளர்கள் இங்கே யாரும் இல்லை
[எழுதுவதில் மட்டும் தான், மற்றவற்றுக்கு ஜெயமோகன், ஜெயஜெயமோகன்கள் இருக்கிறார்கள்] மொராக்கோவிலுள்ள தாஹர் ஜெலோன் என்கிற எழுத்தாளர் தான் தன்னுடைய போட்டியாளர் என்றும் துணிச்சலுடன் பிரகடணம் செய்தார் ஆனால் சோகம் என்னவெனில் அதை ஜெயமோகன் கூட கிண்டல் செய்யவில்லை என்பது தான்.
உலக இலக்கியம் புனைய கிளம்பினாலும் சாரு உள்ளூர் சினிமாக்களை சும்மா விடவில்லை. வாய்ப்பு கிட்டாத படங்களை தாக்கினார் என்றாலும் சில படங்களை உச்சிமுகர்ந்தும் கொண்டார். இதற்கிடையில் எழுத்து இயந்திரம் ஜெயமோகனுக்கு என்ன கோபமோ,என்ன புகைச்சலோ தான் ஜக்கி வாசுவின் பக்தன் என்பதையும், சாரு சாய்பாபா பக்தன் என்பதையும் மறந்து விட்டு சாருவை போட்டு சாத்து சாத்து என்று சாத்தத் தொடங்கி விட்டார். பதிலுக்கு நக்கலும்,கிண்டலும்,சீற்ற மும் கொண்டு சீறிய சாநியை எள்ளல்,அங்கத வாடையே அற்றிருந்த எழுத்து இயந்திரம் தன் அபார ஆற்றலால் ஒரே அடியில் வரட்டியாக்கி சுவற்றில் அப்பிவிட்டது. எனினும் பிய்த்துக்கொண்டு எழுந்து வந்த சாநி தன்னை புனைவென்று கதை கட்டிய எழுத்தாளனை ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’இதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால்
என்று பிரம்மாண்டமாக வருணித்து ஜெயமோகனுக்கு கூச்சம் எடுக்கும் அளவிற்கு கிள்ளி வைத்ததோடு மம்மி ரிட்டர்ன்ஸ் கதைகளில் இந்த சாய்பாபா பக்தன் மதவெறி எதிர்ப்பாளனாகி ஜெவினுடைய R.S.S டவுசரையும் கழற்றிவிட்டார். எனினும் எழுத்து பிசாசின் எறும்பு,யானை கதையால் ஒரு கட்டத்தில் அவரோடு ஈடு கொடுக்க முடியாமல் அயற்சியடைந்து விரக்தி நிலைக்கு போன சாரு இனி ஜெ.விடம் மோதுவதில்லை என்று நண்பனிடம் சத்தியம் செய்து சபதம் எடுத்துக்கொண்டார்.அதன் பிறகு சத்தியத்தை மீறினார் என்பது தனிக்கதை.பிறகு சிற்றின்பத்தை நுகர தனது மான அவமானங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பற்றற்ற பரதேசியாகி துணிச்சலுடன் வலைதளங்களில் பிச்சையெடுக்க துவங்கினார் ‘அம்மா’ தாயே என்கிற ஆடியோ பைல் மட்டும் தான் ஒலிக்கவில்லை மற்றபடி எல்லாவிதங்களிலும் வந்து யாசகம் வேண்டினார். இதில் சாருவின் பக்தர்களை தாண்டி யாரும் தட்டில் காசு போடவில்லை என்பது பின் குறிப்பு. என்றாலும் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’என்கிற தத்துவத்தின் படி ஒவ்வொரு மனக்கதவையும் நம்பிக்கை குலையாமல் தட்டித்தட்டி இறுதியில் சோர்ந்து போன சாரு கடமையை செய்து பலனை எதிர்பார்க்காமல் அயர்வுற்ற பின்னும் பிச்சையெடுப்பது ஒன்றே பிழைப்பு என்கிற நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் உச்சமாக நீங்கள் எனக்கு பிச்சையிட்டே ஆகவேண்டும் என்று அதிகாரம் பொங்க சமூகத்தை நோக்கி தனது வாய் வாளை சுழற்றிக்கொண்டு சீறினார். அதிகாரம் பெருத்து விட்ட சாருவிற்கு இறுதியில் காற்று பிடுங்கி விடப்பட்டது. பிறகு பெங்களூரு ரசிகக்கூட்டம் ( I.T Proffesionals ) மட்டும் சாருவின் ஒரே ஒரு இரவிற்கு ரூபாய் முப்பதாயிரத்தை வாரி வழங்கியதாக தகவல். இருக்கும் போது தானே கொடுக்க முடியும். இன்னும் பல மாதங்களிலோ சில ஆண்டுகளிலோ மொத்தமாய் I.T Pன் மதிப்பு மிக்க மூளைகள் எல்லாம் தெருவிற்கு வந்து விழப்போகிறதுகள் அப்போ சாருவின் கதி என்னவோ சாய்பாபா தான் அறிவார்.
இப்படி அழகு வடியும் சாரு நிவேதிதா இந்தியாவில் நடை பெறும் தொடர்குண்டுவைப்புகள் பற்றி பேசும் The Wednesday என்கிற ஆபத்தான படத்தை பற்றி உயிர்மை இதழில் திரைவிமரிசனம் எழுதியுள்ளார். இன்று ஊமையாய் உள்ள இந்திய நடுத்தர வர்க்கம் எப்படி சிந்திக்குமோ அப்படியே பேசும் அந்த படத்தோடு அமிழ்ந்து விமர்சனம் எழுதியிருப்பதோடு அதை உலக சினிமா என்றும் கொண்டாடுகிறார்.இன்று ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் தொடர்ந்து செய்யும் தீவிரவாதம் பற்றிய பிரச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உண்மையை மறைப்பதாகவும் இந்த படம் உள்ளது.இரண்டாவதாக சந்தோஷ் சிவன் இயக்கிய தஹான் என்கிற படத்தை பற்றியும் விமரிசனம் செய்துள்ளார். தஹான் என்கிற அந்த படம் காக்ஷ்மீர் வாழ்வை சொல்லுகிறதாம் ஆனால் இந்திய பயங்கரவாதப் படையின் வக்கிர வெறியாட்டங்கள் பற்றி ஏதேனும் வாய்திறந்ததாக கூட தனது விமர்சனத்தில் சாரு குறிப்பிடவில்லை ஆனால் அந்த படத்தை ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் படங்களோடு ஒப்பிட்டுள்ளார்.
இந்த இரு படங்களை பற்றியும் சாருவின் மொக்கை விமர்சனத்தை பற்றியும் ஒரு பதிவு போடத்தான் இவற்றை எழுதினேன் ஆனால் அதற்கிடையில் வேறு ஒரு முக்கிய பதிவினை எழுதவேண்டியதாகிவிட்டதால் அந்த திரைப்படங்களை குறித்து எழுத இருந்த பதிவை தவிர்த்துள்ளேன். எப்போதுமே சாருவின் பிரச்சனைகளில் குறுக்கிடும் ஜெயமோகன் தான் இந்த பிரச்சனைக்கும் காரணம். இரு நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் எனது இந்தியா என்று ஒரு பதிவிட்டுள்ளார்.
பதிவின் துவக்கத்திலிருந்து இறுதி வரை அத்வானி,அசோக் சிங்காலாக மாறி காக்ஷ்மீர் பற்றி கண்ணீர் வடித்துள்ளார். இந்து பயங்கரவாதத்தை கண்டிக்கும் முற்போக்காளர்களை வெறி கொண்டு தான் யார் என்பதையும் மறந்து கடித்து குதறியுள்ளார்.ஏற்கெனவே மனுக்ஷ்ய புத்திரனை நொண்டி. . . என்று திட்டிய ஜெயமோகன் தனக்கே உரிய மன நோயிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக எழுத்தாளர் அருந்ததிராயை குருவி மண்டை என்றும், முட்டாள் என்றும் கீழ்த்தரமாக வசைபாடி தனது வெறியை கக்கியுள்ளார்.
எனவே காக்ஷ்மீர் பற்றியும் அங்கே அட்டூழியம் செய்யும் இந்திய பயங்கரவாத படையை பற்றியும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ள ஜெயமோகனின் இந்தியாவை பற்றியும் விரிவாக அடுத்த பதிவுகளில்.- ஸ்டாலின்
காக்ஷ்மீரின் விடுதலை போர் - அருந்ததிராய், ஜெயமோகன் அத்வானி-அகண்ட பாரத கனவு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode