பல்லினக் கலாச்சாரம் கொண்ட இலங்கைத் தீவில், இப்போதும் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இன்றும் பலர் இலங்கையில் மொழியையும், இனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். சிங்கள மொழியும், தமிழ் மொழியும் பல்வேறு பூர்வீக கலாச்சாரக் கூறுகளை கொண்ட மக்களை தன்னுள் உள்வாங்கியுள்ளன.

சரித்திர காலத்திற்கு முந்திய தீபெத்தோ-இந்திய இனத்தை சேர்ந்த நாகா மக்கள் பற்றி தகவல்கள் குறைவு. ஆனால் பண்டைய இராசதானிகளின் அரசியல் தொடர்புகளால், தமிழகத்தில் இருந்து சென்று தென்னிலங்கையில் குடியேறி, தற்போது சிங்களவர்களாகி விட்ட மக்களைப் பற்றிய சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய ஐரோப்பியர் வருகை இனவிகிதாசாரத்தை மேலும் பன்முகப்படுத்தியது எனலாம். இலங்கையை படை எடுத்து கைப்பற்றிய போர்த்துகேய கடற்படை வீரர்கள் ஆண்களாக இருந்ததால், உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து பறங்கியர் என்ற புதிய இனத்தை உருவாக்கினர். போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை தமது அமெரிக்க காலனிகளுக்கு கொண்டு சென்று குடியேற்றியது போல, இலங்கைக்கும் கொண்டு வந்தனர்.

இலங்கையின் மேற்குக் கரையில் புத்தளம் பகுதியில், விடுதலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளின் வம்சாவளியினர், இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் "காபிர்" என்று பெயரிடப்பட்ட இந்த ஆப்பிரிக்க இன மக்கள், போர்த்துகேய, ஆப்பிரிக்க மொழிச் சொற்கள் கலந்த கிரயோல் மொழி பேசுகின்றனர். மேலும் "பைலா" என்ற ஆப்பிரிக்க வேர்களைக் கொண்ட இசை நடனமும் அவர்களது கலாச்சார தனித்துவத்திற்கு சாட்சி.

அண்மையில் தன்னார்வ குழு ஒன்றின் அனுசரணையின் பேரில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் சிலர், தமது நாட்டின் ஆப்பிரிக்க வம்சாவளி பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த வீடியோவை இந்தப் பதிவில் இணைத்துள்ளேன். மேலதிக தகவல்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணை தொடுப்புகளை பார்வையிடலாம்.

KAFFIR COMMUNITY IN SRI LANKA