Thu07092020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)

மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)

  • PDF

"அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்" லண்டன் ஹைகேட்டில்,1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இது. அப்போது அங்கிருந்தவர்கள் பனிரெண்டு மனிதர்கள். அந்த உண்மை நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான குரல்களாக திரும்பிவந்து அதே லண்டனில் எதிரொலித்திருக்கிறது.


கி.பி இரண்டாயிரத்தை உலகம் முழுவதும் ஆரவாரத்தோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் இது நிகழ்ந்தது. லண்டனில் பிரபல பி.பி.சி நிறுவனம் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளர் யார் என உலகம் முழுவதும் தனது வாசக ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. பி.பி.சி நிறுவனத்தாரின் பிரத்யேக தேர்வாளர்களான எட்வர்ட் டி போனாவும், ரோஜர் ஸ்குருட்டனும் தங்களது அறிஞர்களாக வில்லியம்ஸ் ஜேம்ஸையும், தாமஸ் அக்கியுனாஸையும் அறிவித்திருந்தார்கள் தேர்வாளர்களின் முதல் பத்து சிந்தனையாளர்கள் கொண்ட பட்டியலில்கூட மார்க்ஸுக்கு இடம் இல்லை! ஆனால் உலகம் முழுவதும் இருந்த பி.பி.சியின் வாசகரசிக மக்கள் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து இருந்தார்கள். அதிக எண்ணிக்கையில் மார்க்ஸ் முதலில் இருந்தார்.

உலக முதலாளிகளுக்கும், கருத்துக் கணிப்பு நடத்திய பி.பி.சிக்குமே பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். 'மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது' என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள். பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள். மனிதர்களின் உணர்வுகளிலிருந்தும் சிந்தனை களிலிருந்தும் மார்க்ஸை அகற்றுவதற்கு சகல சாகசங்களையும் சதாநேரமும் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி யாகத்தான் இருந்திருக்கும்.

மார்க்ஸிற்கு அடுத்தபடியாக இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவதாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். அணுவிற்குள், அதன் மகாசக்தியை கண்டு பிடித்தவர். இருபதாம் நூற்றண்டின் தொழில் நுட்ப புரட்சிக்கு அவரது கண்டுபிடிப்புகள் ஆதாரமாகவும், ஆதர்சனமாகவும் இருந்திருக்கின்றன.
அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் சர்.ஐசக் நியுட்டன். புவி ஈர்ப்பு விசையையும், 'எந்த வினைக்கும் அதற்கு நேர் ஈடான, எதிரான வினை ஏற்படும்' என்னும் பிரசத்தி பெற்ற உண்மையான 'நியுட்டன் விதிகளை' உருவாக்கியவர். சமூக விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் கூட இந்த விதிகள் அடிப்படையாய் அமைந்தன.
"நீ எதற்கும் லாயக்கில்லை. பூனைகளை சுடவும், எலிகளை பிடிக்கவுமே பொருத்தமானவன்" என்று அவரது தந்தையால் சபிக்கப்பட்ட டார்வின் நான்காவது இடத்தில் இருந்தார். ஒருசெல் உயிர்களின் தோற்றம், அவைகளின் பரிணாமம் என மனித இன வளர்ச்சியை ஆராய்ந்து சொன்னவர். அதுவரை இருந்த அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான உண்மையாய் அவரது கண்டுபிடிப்பு இருந்தது.

தாமஸ் அக்கியுனாஸ், மேக்ஸ்வெல், டெகரட்டஸ், ஸ்டிபன் ஹாக்கிங், இம்மானுவேல் கான்ட் என்று நீண்ட இந்த 10 பேர் வரிசையில் கடைசியாக நீட்சே இருந்தார். மனிதனுக்குள்ளே புதைந்து கிடக்கும் பேராற்றல் குறித்து நீட்சே அற்புதமான இலக்கியச் செறிவோடு எழுதினார். இவரை முதல் எக்ஸிஸ் டென்ஸியலிஸ்ட்டாக சொல்கிறார்கள். இந்த உலகம் தாண்டிய ஒரு உலகம் இருப்பதாக சொல்லப் பட்டதை அவர் மறுத்தார்.
ஒன்றாவது, இரண்டாவது என்று இவர்களை நாற்காலிகள் போட்டு உட்கார வைப்பது என்பது அவர்களை களங்கப்படுத்துவதும், மனித குலத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை கேலி செய்வதும் ஆகிவிடும். பி.பி.சியின் நோக்கம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மனிதகுல வரலாற்றில் இவர்களுக்கென்று பிரத்யேகமான பங்கும் இடமும் உண்டு.

இவர்கள் எல்லோருமே அற்புதமான மேதைகள். ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள கொள்ள முடிந்திருக்கிறது.

மார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது
.
அண்டாகா கசம், அபுகா குகும் உச்சரிக்க, மாயா ஜாலமாய் பாறைக்கதவு திறந்துவிடும்... பொன்னுலகத்தை அடைந்துவிடலாம்.....என கற்பனையிலும், குருட்டு நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் பாறைக்கதவை திறந்து மூடுகிற அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய சிந்தித்தவர் மார்க்ஸ்.
தன் நிழலையும், வேர்களையும் நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட இராட்சசனாய் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிசாசு மரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பாய்ந்திட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர். சபிக்கப் பட்ட காலம் வேதாளமாகி அலைகிறது. வேதாளம் கேள்விகளாய் புதிர்களை போட்டது. மார்க்ஸ் ஒவ்வொன்றுக்கும் சரியான பதில் சொல்லி அடுத்த அடி எடுத்து வைத்தார்.

வாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.
http://mathavaraj.blogspot.com/2008/11/1.html

Last Updated on Sunday, 30 November 2008 13:42