''பொருளுற்பத்தி சாதனங்கள் மாறும்போது, பொருளாதார சக்திகள் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. அப்பொழுது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் வர்க்கப்போராட்டத்தில் வந்து முடிகின்றன. இதில் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறறாலொழிய மக்கள் அனைவருக்கும் சமத்துவ வாழும் உரிமை கிடைக்க முடியாது.

உண்ண உணவும், உடுக்க உடையும், தங்க இடமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பொருளாதார ´சமத்துவ யுகம்´ உதயமாவதற்கு எவ்வளவோ காலம் ஆகலாம். அதுவரை சமூதாயத்தில் பெரும்பான்மையினரான பாட்டாளி மக்கள் அரசைக் கைப்பற்றி சுரண்டும் வர்க்கத்தை பூண்டோடு அழித்து சர்வாதிகாரம் நடத்தியாக வேண்டும்!" இதுவே டிக்டேட்டர்ஷிப் ஆஃப் தி ப்ராலிடேரியட் (Dictatorship of the Proletariat)

 

அதிரடியான வார்த்தைகள். ஆழ்ந்த சிந்தனையில் சமூகத்தின் மீது சார்பற்ற கண்ணோட்டம். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" உலக பாட்டாளி மக்களை ஒன்றிணைக்க முதன்முதலாக ஒருகுரல் ஆளும் வர்க்கத்தினரின் தலையில் பேரிடியாய் விழுந்தது. மாற்று சிந்தனையால் ஆளும் வர்க்கத்தினரை ஆட்டங்காண வைத்தவர் கார்ல் மார்க்ஸ். பாட்டாளி மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக தம்முடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

 

கார்ல் மார்க்ஸ் செயல்பாட்டை அறியும் முன் அவரின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி கொஞ்சம்...

 

1818- இல் ஜெர்மனியில் ட்ரியர் (Trier) என்னும் நகரத்தில் பிறந்தவர். யூதர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கார்ல் மார்க்ஸின் முன்னோர்கள். ஆனால், பிற்காலத்தில் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிவிட்டனர். கார்ல் மார்க்ஸ் பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன், ஜெர்மன் - ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். தத்துவம், கணிதம், சட்டம் போன்ற துறைகளில் ஆழ்ந்த அறிவை பெற்றிருந்தார். கல்லூரியில் ஆசிரியர் வேலையில் இருந்தவர் கார்ல் மார்க்ஸ்.

 

சமூதாயத்தில் நடக்கும் அநீதிகளை தைரியமாக விமர்சிக்கும் கார்ல் மார்க்ஸ் பேச்சுடன் நின்றுவிடுவதில்லை. அநீதிக்கு சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக விமர்சித்து மானவாரியாக கேள்விகளைக் கேட்டு கட்டுரைகள் எழுதி பத்திரிக்கையில் வெளியிட்டுவிடுவார். "ரீய்னிஷ்ச் ஜீய்டுங்" என்ற பத்திரிக்கையில் பகுதி நேர பணியாளராக இருந்தார். "ரீய்னிஷ்ச் ஜீய்டுங்" கார்ல் மார்க்ஸ் கட்டுரைகளை அதிகமாக வெளியிடும். அவரின் எழுத்து நடை மக்களிடம் பெரும் கவர்ந்தது. பத்திரிக்கையும் செல்வாக்கடைய ஆரம்பித்தது. ஆளும் வர்க்கத்தினருக்கு கார்ல் மார்க்ஸ் சிந்தனை பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.

 

ரஷ்ய அரசு, ´ரீய்னிஷ்ச் ஜீய்டுங்´ பத்திரிக்கைக்கு எச்சரிக்கை செய்தது. அடக்குமுறையில் மாட்டிக் கொண்ட அப்பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் தணிக்கைக் கெடுபிடிகளை கார்ல் மார்க்ஸ் எழுத்தில் வைக்க முற்பட்டதால் அவர் ராஜினிமா செய்தார். அதே நேரம் தொடர்ந்து பாட்டாளி மக்களுக்கு ஆதரவான சிந்தனைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்ததால் கல்லூரியில் ஆசிரியர் வேலைக்கும் வேட்டு வைத்தது ஆளும் வர்க்கம்.

 

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸின் மனைவி ஜென்னி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் கார்ல் மார்க்ஸை திருமணம் செய்துக் கொண்டதில் இருந்து மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானார். குடும்பத்தில் பொருதார நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் கார்ல் மார்க்ஸ்க்கு ஆறுதல் சொல்லி அவரை வாழ்நாள் முழுவதும் புரட்சியாளனாக இருக்கவும் உறுதுணையாக இருந்தார்.

 

ஜெர்மன் அரசாங்கத்தினர் கார்ல் மார்க்ஸ் மீது அழுத்தம் கொடுத்த போது தன் குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார் மார்க்ஸ்.

 

பாரீசுக்கு மார்க்ஸ் வந்த நேரம்...

 

பாட்டாளி மக்களின் விடுதலைக்காக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே வன்முறைக் கொண்டு ஆளும் வர்க்கம் பாட்டாளி மக்களை அடக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. கார்ல் மார்க்ஸால் சும்மா இருக்க முடியவில்லை. எழுதிய கையும், பாடிய வாயும் சும்மா இருக்காதல்லவா? நீண்ட கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார். இன்னாரிடம் இருந்து கட்டுரை வருகிறது என்றாலே பத்திரிக்கை துறை கார்ல் மார்க்ஸின் எழுத்தைக் கண்டு ஓட்டம் எடுத்தது. ஓரிரு பத்திரிக்கைகள் பாட்டாளி மக்களுக்காக ஆதரவாக செயல்பட்டவைகள் கார்ல் மார்க்ஸின் கட்டுரைகளை பத்திரிக்கையில் வெளியிட ஆரம்பித்தன. பாட்டாளி மக்களின் போராட்டத்திற்கு கூர் தீட்டப்பட்ட கத்தியாக மக்களுக்கு ஓர் ஆயுதமாக சென்றடைந்தன கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள். மக்களிடம் இன்னும் ஆவேசமும் புதிய சிந்தனைகளில் ஏற்பட்ட ஆக்ரோஷமும் பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்துக்கு கலக்கத்தை கொடுத்தது.

 

ஜெர்மன் அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு தூபம் போட ஆரம்பித்தது. இருக்கிற பிரச்சனை போதாதென்று இவர்வேறா? யாருக்கும் தெரியாமல் தடாலடியான நடவடிக்கையை பிரான்ஸ் அரசாங்கம் எடுத்தது. கார்ல் மார்க்ஸ் குடுத்தினர் அனைவரையும் பெல்ஜிக் நாட்டிற்கு நாடு கடத்தியது. அப்போது கார்ல் மார்க்ஸ்க்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள் ஒன்று ஆண். வேலையில்லை. பொருளுதவி கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. புதிய புதிய சூழல்கள். இந்நிலையில் தான் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் பெல்ஜீயம் நாட்டிற்கு அனுப்பியது.

 

பெல்ஜீக் போலீசின் கண்காணிப்பில் இருந்தார் கார்ல் மார்க்ஸ். சரியான வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தினர் மிகுந்த வறுமைச் சூழ்நிலைக்கு ஆளாகி இருந்தனர். சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் போய்விட்டது. நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம் என்பார்கள். கார்ல் மார்க்ஸ்க்கு அந்த குறை இல்லை. ஏங்கல்ஸ் (Engels) என்னும் நெருங்கிய நண்பர் எல்லா கஷ்டங்களிலும் கார்ல் மார்க்ஸ்க்கு துணையாக இருந்தார்.

 

ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் இருந்தபோது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர் விஞ்ஞான சோஷியலிசம் என்னும் தத்துவத்தில் பேராசியர். புகழ்பெற்ற நூலான "கம்யூனிஸ்டு செயல் திட்ட அறிக்கை" (Communist Manifesto) இருவரும் இணைந்து எழுதிய நூல் தான்.


இந்த நண்பனே கார்ல் மார்க்ஸ்சுக்கு பணம் அனுப்பி உதவி வந்தார். (ஏங்கல்ஸ் பெரிய பணக்காரரோ, வசதிப்படைத்தவரோ இல்லை. மான்செஸ்டர் நகரத்தில் சாதாரண வேலை செய்துக் கொண்டிருந்தவர். ஆனால் நண்பனின் தேவைகளுக்காக சம்பளத்தில் ஒரு பகுதியைக் அனுப்பிக் கொண்டிருப்பார்)

 

அதே நேரம் பிரான்சில் புரட்சி கட்டுக்கடங்காமல் இருந்தது. ஒரு கட்டத்தில் ´லூயி பிலிப்´ மன்னர் அரசுரிமையை இழக்க நேரிட்டது. குடிஅரசு பிரகடனம் அறிவிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்தின் பாட்டாளிப் போராட்டத்தின் ´குடிஅரசு´ பிரகடனம் செய்தது மற்ற நாடுகளுக்கும் பரவியது. புரட்சித் தீயின் ஒற்றுமொத்த குரலாக, ´உலக தொழிளாளர்களே ஒன்று சேருங்கள்´ என்று பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி வாக்கியங்கள் எங்கும் ஒலித்தன. இங்கிலாந்தை தவீர, அநேக ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒலிக்கத் தொடங்கியது.

 

அதே நேரம் பெல்ஜீயத்தில் போலீஸ் கண்காணிப்பில் இருந்த கார்ல் மார்க்ஸ் மறைமுகமாக இப்போராட்டத்திற்கான உதவிகளை செய்கிறார் என்று குற்றச்சாட்டுமிருந்தது. திடீரென ஒருநாள் கார்ல் மார்க்ஸ்யையும், அவர் மனைவி ஜென்னியையும் பெல்ஜீய போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. கார்ல் மார்க்ஸ் வீட்டில் வேலை செய்த ஹெலன் என்பவர் அக்குடும்பத்தின் ஒருவராக கருதும் அளவுக்கு பழகிப் போய்விட்டார். அவர் கார்ல் மார்க்ஸ்சின் குழந்தைகளுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேறிடத்திற்கு கொண்டு போய்விட்டார். கார்ல் மார்க்ஸிம், அவர் மனைவியும் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த மக்கள் சிறையை முற்றுகையிட்டனர். கார்ல் மார்க்சை விடுதலை செய்யுங்கள் என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டவண்ணம் இருந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்கள் தீட்டிய திட்டம் அம்பலத்திற்கு வந்துவிட்டதால் போலீசார் கோர்டில் கார்ல் மார்க்சையும், ஜென்னியையும் ஆஜர் படுத்தினர். அங்கும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. விசாரணை, தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை விதித்து நம் நாட்டிலும் குழப்பம் வந்துவிடப் போகிறது என்று அஞ்சிய பெல்ஜிக் நாட்டு அரசாங்கம் 24- மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு குடும்பத்தினருடன் வெளியேறும்படி உத்தரவிட்டது. கார்ல் மார்க்ஸ்சின் சொந்த நாடான ஜெர்மனுக்குள்ளும் போக முடியாது. பிரான்சில் இருந்தும் ஏற்கனவே விரட்டப்பட்டவர் கார்ல் மார்க்ஸ். சிறுகுழந்தைகளுடன் எங்கு செல்வது என்ற குழப்பம். மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கே செல்ல கார்ல் மார்க்ஸ் முடிவெடுத்து வருகிறார்.

 

ரைன் நதிக்கரை அருகில் ´கொலோன்´ என்ற நகரத்திற்கு வருகிறார் கார்ல் மார்க்ஸ். ஏற்கனவே புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தினர் ´குடிஅரசு´ நாடாக அறிவித்திருந்ததையும், "புரட்சிகள் இன்னும் அதிகரித்து முழுவெற்றியை பாட்டாளி வர்க்கத்தினர் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது கார்ல் மார்க்சிடம்." பாட்டாளி மக்கள் போராட்டத்திற்கு எதிராக எதிர்ப்புப் போராட்ட சக்திகள் இன்னும் தீவிரமாக களம் இறங்கின. இராணுவ அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது. புரட்சியில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளானர்கள். அடக்குமுறை அதிகரிப்பால் துரதிஷ்ட வசமாக வர்க்கப் போராட்டத்தில் தேக்கம் ஏற்பட்டது.

 

அக்காலக்கட்டத்திலேயே ´கொலோன்´ நகரில் இருந்த கார்ல் மார்க்ஸ் காட்டிக் கொடுக்கப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்படுகிறார். இச்சம்பவம் மே 11- ந்தேதி நடந்தது. மீண்டும் பாரீசிற்கு வருகிறார். அங்கும் போலீஸ் அடக்குமுறை கார்ல் மார்க்ஸ் மீது கட்டவிழித்து விடப்படுகிறது. 24- மணிநேரத்திற்குள் நாட்டை விட்டுவெளியேறி விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதும், தன் மூன்று குழந்தைகளையும், மனைவியையும் பாரிசில் விட்டு விட்டு தனியாக லண்டன் செல்வது என்று தீர்மானிக்கிறார். வழக்கம் போல் நண்பர் ஏங்கல்ஸ் கொடுத்த சிறு தொகையை குடும்பத்திரினரிடம் செலவுக்கு கொடுத்துவிட்டு லண்டனுக்குச் சென்று பின் தன் குடும்பத்தினரை அழைப்பதாக ஏற்பாடு.

 

பாய்மரக் கப்பலில் லண்டனை நோக்கி பணத்தைக் தொடங்குகிறார் கார்ல் மார்க்ஸ். கடற்கரையோரத்தில் இருந்து பாய்மரக்கப்பல் செல்லும் வரையில் இராணுவம் பார்த்துக் கொண்டிப்பதை விரத்தியாக பார்த்த காட்சியை வேறொரு நூலில் அழகாக விவரித்தித்திருப்பார் கார்ல் மார்க்ஸ்.

 

கார்ல் மார்க்ஸிக்கு ஏன் இந்தளவு பலத்த எதிர்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து...?

 

கார்ல் மார்க்ஸ் ஆன்மீகம் போதித்த சமயத் தலைவரும் இல்லை! "சமயம் - மதம் என்பதெல்லாம் மக்களுடைய கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் அபின்" என்று சொன்னவர் தானே. சக மனிதர்களின் துன்பங்களுக்கும், அவர்களை ஆளும்வர்க்கம் அடக்கியாண்டு சுரண்டல் பழிப்பு காட்டியதற்காகத்தானே தீர்வு வேண்டும் என்றார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டமாகிப் போய்விட்டது.

 

லண்டன் மாநகரம் கார்ல் மார்க்ஸ் வருகையை எதிர்க்கவில்லை. மாறாக ஆதரவாகவும் இல்லை. ஆனால் ஒரு அகதிக்குரிய உரிமையை கார்ல் மார்க்ஸிக்கு கொடுத்திருந்தது லண்டன். சில காலங்களுக்கு பிறகே பிரான்சில் இருந்த தன் குடும்பத்தினரை கார்ல் மார்க்ஸால் லண்டனுக்கு வரவழிக்க முடிந்தது. அதன் பிறகு வறுமையின் கடைசி எல்லைவரை தள்ளப்பட்டார் கார்ல் மார்க்ஸ். அதிக மணிநேர உழைப்பிற்கு கிடைத்த சொற்ப வருமானம். வீட்டு வாடகை கட்ட முடியாததால் வீட்டைக் காலி செய்யும் அளவுக்கெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார் மார்க்ஸ். இச்சூழலில் கார்ல் மார்க்ஸ்சுக்கு நான்காவது குழந்தையும் பிறந்தது. கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை இங்கிலாந்தும், அமெரிக்காவும் மட்டுமே ஏற்றுக் கொண்டு சில பத்திரிக்கைகள் பிரசுரம் செய்தது. அதில் ஒரளவு கிடைத்த வருமானத்தை வைத்து ஜென்னி சமாளித்துக் கொண்டார்.

அகதியாக பல நாடுகள் சுற்றித் திரிந்த கார்ல் மார்க்ஸ் 33- ஆண்டுகள் லண்டனிலேயே இருந்தார்.

 

லண்டனில் இருந்த போதும் அந்நாட்டில் அக்கிரமித்திருந்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் விமர்சிக்கத் தவறவில்லை கார்ல் மார்க்ஸ். செல்லும் இடங்களெல்லாம் முதலாளித்துவத்தை எதிர்த்த விமர்சனங்களை என்றுமே சொல்ல தயங்கியதில்லை.

 

மிகவும் வறுமைச் சூழ்நிலையும், எதிர்ப்புகளும் கார்ல் மார்க்சை மாற்ற முயவில்லை. மாறாக நெஞ்சுறுதியையும், அதிகமாக செயல்படவும் தூண்டியது. பணி நேரம் போக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும் லட்சக்கணக்கான புத்தகங்களை வாசிப்பதில் செலவிட்டார். சிந்தனை, படிப்பு, விவாதம் என நான்கு ஆண்டுகளாக வைராக்கியமாக இருந்து எழுதிய நூல் ´டாஸ்காப்பிடல்´ (Das Kapital) இன்றைய பாட்டாளி வர்க்கத்தினரின் வேத நூல்.

 

ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ´மூலதன நூல்´ முதல் பாகம் 1867- இல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 1884- இல் வெளியிடப்பட்டது. மூன்றாம் பாகம் 1894- இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முதல் பாகம் வெளியிடப்படும் போது மட்டுமே கார்ரல் மார்க்ஸ் உயிருடன் இருந்தார். இரண்டாவது, மூன்றாவது பாகங்கள் வெளியிடப்படும் போது அவர் உயிருடன் இல்லை. மூன்று பாகங்களையும் கார்ல் மார்க்ஸ் உயிரோடிருக்கும் போதே அச்சுக்கு தயார் படுத்தும் நிலையிலேயே திருத்தங்கள் செய்து வைத்திருந்தார். நான்காவது பாகம் Surplus Value புரட்சிக்கரமான பொருளாதாரக் கொள்கைப் பற்றியது. அவை மட்டும் 20- ஆவது நூற்றாண்டில் பிரசுரிக்கப்பட்டது.

 

சோவியத் ரஷ்யாவில் லெனின் உருவாக்கிய பொதுவுடமை அரசுக்கு ஆதாரமாக அமைந்த நூல் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூல். கி.பி. 1867- இல் செப்டம்பர் 14- ஆம் நாள் "மூலதனம்" நூலின் முதல் தொகுதி ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் பிரசுரம் ஆகியது. அன்று பாட்டாளி மக்களிடம் விதைக்கப்பட்ட புரட்சிக்கர சிந்தனைக் கருத்துக்கள் 50- ஆண்டுகளுக்கு பிறகு 1917- ஆம் ஆண்டில் ரஷ்யப்புரட்சியாக வெடித்தது.

 

ஏங்கல்ஸ், கார்ல் மார்க்ஸ் இணைந்து எழுதிய மற்றொரு நூல் "ஜெர்மன் சித்தாந்தம்." எந்தப் பதிப்பகமும் அதை வெளியிட முன்வரவில்லை. நீண்ட காலமாகப் கேட்டபாரற்று போய்விட்டது. பழுப்புநிறமேறியும், செல்லறிக்கவும் தொடங்கியிருந்த தாள்களையும் கவலையுடன் பார்ப்பார் கார்ல் மார்க்ஸ். எப்போதாவது எப்படியாவது அச்சில் கொண்டு வரவேண்டும் என்ற வெறித்தனமான ஆவேசத்துடன் நெடுநேரங்கள் உழைத்து பொருள் சேர்த்தார். 1848- இல் கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்ட்டோ (Manifesto) லண்டனில் வெளிவந்தது.

 

கார்ல் மார்க்ஸ் என்ற புரட்சி சிந்தனையாளரின் கொள்கை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியவர் லெனில். ஒருவேளை லெனில் இல்லாமலிருந்தால் கார்ல் மார்க்ஸ் காணாமல் போயிருப்பார். இலட்சிய வேகமும் செயலாற்றும் மாமனிதர்களும் இல்லாவிட்டால் எந்த கொள்கையும் நடைமுறைக்கு வந்திருக்காது.

 

உழைப்பாளி வர்க்கத்தினரை சுரண்டி வாழ்கின்ற ஆளும் வர்க்கத்தினருக்கும் போராட்டங்களே ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் சரித்திரம், வரலாறுகள் ஆகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வெற்றிகளும், தோல்விகளும் கம்யூனிச சித்தாந்தம்.

 

வர்க்கப் போராட்டங்கள் மட்டுமே மனிதகுல வரலாற்றை மாற்றி அமைக்கின்றன. நாம் வாழும் தற்போதைய கால கட்டத்தில் மீண்டும் ஓர் வர்க்கப் போராட்டம் ஆயத்தமாகின்றது. பார்ப்பபோம் எங்கே சென்று முடியும் என்று....

 

மீண்டும் ஆங்காங்கே, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" கூப்பாடுகள் பல பெயர்வுகளாய்... தொலைக்காட்சியில்... கம்யூட்டரில்... செல்போனில்... விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

http://thamizachi.blogspot.com/2008/11/blog-post_29.html&type=P&itemid=82297