உங்கள் சமர் 5-6- வாசித்தேன். அதில் நீங்கள் புலிகள் மீது வைத்துள்ள கருத்துக்கள் நீங்கள் புலிகள் மீது கொண்டுள்ள தெளிவு புரிகின்றது. அவர்கள் பாசிச தலைமையே. அவர்கள் தேசிய விடுதலை அமைப்பு என்பது தவறானது. ஆனால் உங்கள் விமர்சனங்கள் யாவும் தேவையானதே. ஆனால் உங்கள் விமர்சனங்கள் கடும் போக்கை கொண்டவையாகவுள்ளது. குறிப்பாக தோழமை சஞ்சிகைகளான மனிதம், உயிர்ப்பு மீதான விமர்சனங்கள்.

விமர்சனம், சுயவிமர்சனம் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது முத்திரை குத்துவது போல் அமையக் கூடாது. திரிபுவாதிகள் என்ற நிலையில் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். இனியாவது முற்போக்குச் சக்திகள் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும். இல்லையேல் அது புலிகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

அடுத்து உங்கள் தோழர் நாவலன் மீது நீங்கள் வைத்துள்ள விமர்சனம் எந்த ஓர் சூழ்நிலையிலும் விமர்சனம் வைக்கப்பட வேண்டியதே. அது உட்கட்சிக்குள் உட்கட்சி விமர்சனமாய் அமைய வேண்டும். அதை விடுத்து உங்கள் சஞ்சிகையில் விமர்சிப்பது கடுமையான ஆபத்து. இன்று உங்கள் எதிரிகள் நிறைய இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந் நிலையில் அவரை விமர்சிப்பது என்பது அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையும். நீங்கள் எவரையும் வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சிகள் எடுக்காதிருப்பது நன்று.

மேலும், தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் மீது நீங்கள் விமர்சனம் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அவர்களின் மத்தியகுழு உறுப்பினர் மீது வைத்துள்ள தனிநபர் குண நலன்களை விமர்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விடயம். என்.எல்.எவ்.டி-யினர் புத்தகத்தைப் புரட்சியாக்க முனைந்தவர்கள் என்பது ஒரளவு உண்மை தான் ஆனாலும் அவர்கள் நாட்டில் மக்கள் மத்தியில் (கூலி விவசாயிகள், நகர சுத்திகரிப்பாளர்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் நசுக்கப்பட்ட மக்கள் மத்தியில்) இறங்கி அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனாலும் இவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் கவனத்தில் எடுத்து ஆராயப்பட வேண்டியதே. இவர்களது நகர்வும் மிகவும் இரகசியமாகவும் இறுக்கமாயும் இருந்தும் கூட எதிர்ப் புரட்சியாளர்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதை கண்டறிய வேண்டுமே தவிர தனிநபர்களை விமர்சிப்பது சரியான ஆபத்தான முயற்சியே என கவலைப்பட வேண்டியுள்ளது. முற்போக்கு அணியின் முகாமுக்குள் ஆராயப்பட வேண்டியதே ஒழிய நடு வீதியில் அல்ல.

87 களில் அழிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனையை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

லோகன்-சுவிஸ்

 

இதே போன்ற கருத்துப்பட்ட ஒரு கடிதம் இலங்கையிலிருந்து கிடைக்கப் பெற்றோம். அதற்கான விமர்சனத்தையும் உள்ளடக்கியதே கீழுள்ள பதில்.

 

ஆசிரியர்குழு

 

உங்கள் விமர்சனங்கள் பொதுப்படையாக இன்று ஜரோப்பாவிலும், நாட்டிலும் உள்ள முற்போக்குச் சக்திகள் மீதான எமது விமர்சனம் தொடர்பானதே. முற்போக்குச் சக்திகள் தொடர்பான எமது பார்வை உங்கள் பார்வையை விட மாறுபட்டது. இன்று முற்போக்குச் சக்திகள் என்பது புலிகளுக்கு எதிராகவுள்ள அனைவரையும் உள்ளடக்கியதே. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை ஆதரிப்பவர்கள் கூட இலைமறை காயாக மறைந்தே உள்ளனர். அவர்களை விடுத்து மிகுதியாகவுள்ள அனைவரும் ஓர் அணியாக நீங்கள் உட்பட சிலர் சுட்டிக்காட்டுகிறிர்கள். இந ;நிலைமை என்பது 1983 இல் இலங்கையரசுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் தம் மீதான விமர்சனங்களை நிராகரிக்கக் கோரியது போன்றதே. அதன் விளைவு இறுதியில் இன்று நாம் பாசிசத்திற்க்குள் பலியானதிற்கு இட:டுச் சென்றது. இக் கோரிக்கை 1ம் உலகயுத்த காலத்தில் 2ம் அகிலத்தைச் சேர்ந்தோர் தந்தை நாட்டை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிப் புரட்சியை கை விட்டது போன்றதே. இன்று வெறும் புலி எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் அணிதிரட்டப்படும் எந்த அமைப்பும் மீண்டும் ஒரு புலியை உருவாக்கும்.

 

இதற்கு எதிர்மறையாக ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு கருத்தும் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். நீங்கள் உடன்படலாம். இதை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்வது என்பதே இங்குள்ள பிரச்சனை. இன்று சமரோ அல்லது வேறு எந்த சஞ்சிகையோ தான் தமக்கிடையில் ஒரு கட்சியாக இல்லை. இவர்களுக்கிடையிலான விமர்சனம் என்பது ஒர் அமைப்பு வடிவம் இல்லாத நிலையில் பகிரங்கமாக வெளிவருவது அவசியமானது. மற்றும் இன்று எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செயற்பட முற்படும் ஒவ்வொரு நபரும் எதிர்காலத்தில் ஒரு கட்சியை கட்ட முனைகின்றனர். அந்த வகையில் அனைத்துக் கருத்துக்களும் எந்த விதிவிலக்கு இன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியும் வகையில் ஒளிவு மறைவின்றி இருக்கும் போது மட்டுமே எதிர்காலத்தில் உருவாகும் எந்த அமைப்பும் விமர்சனம், சுயவிமர்சனத்திற்குட்பட்டு உருவாகும். இந்த உருவாக்கத்தில் முன் நிற்கும் ஒவ்வொரு தனிநபருடைய கடந்த கால அரசியல் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சந்தர்ப்பவாதமும், திரிபுவாதமும் பின்னிருந்தே அமைப்பை அழிக்கும். இதை சோவியத் முதல் சீனா வரை உள்ளிருந்த கம்யூனிஸ்ட்கள் எனச் சொன்னோர் மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டதை அனுபவ ரீதியாக நாம் கண்டுள்ளோம். ஆகவே நாம் எந்த விதிவிலக்குமுன்றி ஒவ்வொரு தனிநபரையும், எல்லாக் கருத்துக்களையும் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்.


எமது விமர்சனம் தனிநபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற உங்கள் கருத்து தொடர்பாக ஆராயும் போது இன்று கடந்த கால அரசியலில் ஈடுபட்ட அனைவரும் எதிரிக்கு அம்பலப்பட்டே உள்ளனர். முற்போக்குச் சக்திகளுக்கு தெரிந்த விடயங்களை விட எதிரி கூடுதலாக தெரிந்தே வைத்துள்ளான். இந்த வகையில் என்.எல்.எவ்.டி., பி.எல்.எவ்.டி. தீப்பொறி.......மற்றும் தனிநபர்கள் யாரும் தப்பிக்கவில்லை. இதில் இவர்கள் மீதான விமர்சனங்கள் முன் வரும் போது விமர்சனத்தை எதிர்கொள்ள திராணியற்ற சிலர் பாதுகாப்பைக் காரணம் காட்டுகின்றனர். எமது விமர்சனம் இன்று எதிரியுடன் ஒரே தளத்தில் நின்று போராடும் யாரையும் காட்டிக்கொடுக்கும் வகையில் அமையவில்லை. எதிரியின் தளத்தை விட்டு விலகி பகிரங்கமாக அரசியல் நடத்துபவர்கள் மீதும் மற்றும் தம் மீதான சுயவிமர்சனத்தை முற்போக்கு சக்திகள் மத்தியில் செய்ய மறுத்து தொடரும் அரசியல் செயற்பாட்டின் பின்பே நாம் பகிரங்க விமர்சனத்தை முன் வைக்கிறோம்.


முத்திரை குத்தல் என்ற விடயம் தொடர்பாக நாம் மனிதம் மீது வைத்த விமர்சனம் முத்திரை குத்தல் அல்ல. அதை மனிதம் வேண்டும் என்று சொல்லி தமது திரிபைப் பாதுகாக்க முயலலாம். உண்மையில் கருத்துக்களை திரிப்பதை திரிபு என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது. வேண்டுமென்றால் முற்போக்கு கருத்துக்களில் இதுவும் ஒன்றெனச் சொல்வதா? முத்திரை குத்தல் என்பது, வைக்கப்படும் கருத்தின் மீது விமர்சனம் வைக்காது பொதுப்போக்காகச் சொல்வதே. அதாவது விமர்சனங்களிலிருந்து தப்ப, கருத்துப்பலமின்றி கருத்தைச் சொல்பவரும், கருத்தை எதிர் கொள்பவரும் கையாளும் வழிமுறைகளே. நாம் மனிதத்தின் கட்டுரையின் மீது (அதாவது கரிகாலன் கட்டுரை) வரிக்கு வரி எடுத்து எப்படி திரிக்கப்பட்டு திணிக்க முயல்கிறார்கள் எனச் சுட்டிக ;காட்டினோம். இதை மறுக்கும் உரிமை விமர்சகர்களுக்குண்டு. அதுவும் பொதுப்படையாகவல்லாமல் எப்படியென விளங்கப்படுத்துவதினூடாகவே.


மற்றும் என்.எல்.எவ்.டி.யின் வரலாறு தொடர்ச்சியாக வெளிவருகிறது. அதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் முன்வைக்கப்படும். மற்றும் என்.எல்.எவ்.டி.யின் மத்திய குழுவின் தனிநபர் மீதான விமர்சனம் அவசியமானது. என்.எல்.எவ்.டியின் வாழ்வில் அவை காத்திரமான பங்கு வகித்துள்ளது. இவை தொடரும் கட்டுரைகளில் புரியும். கட்டுரையை வாசிக்கும் அதேநேரம் மத்தியகுழு உறுப்பினர்களின் பாத்திரத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், எதிர்கால அமைப்பை உருவாக்க என்.எல்.எவ்.டி யின் கடந்தகால மத்தியகுழு உறுப்பினர்கள் செயற்பட முனையும் இன்றைய நிலையில் முற்போக்குச் சக்திகள் அவர்களிடம் அவர்கள் தொடர்பான விமர்சனத்தை கேட்டுக் கொள்ளவும் எதிர்காலத்தில் உருவாகும் அமைப்பில் அவர்களின் கடந்த கால தவறுகள் உருவாகாமல் விழிப்புடன் ஒவ்வொரு ஊழியருமிருக்க இவ் விமர்சனம் உதவும். புதிய ஒரு அனுபத்தின் பின் சில அழிவுகளின் பின் இதே விமர்சனத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? நாம் இன்று அனைத்தையும் பகிரங்கமாக எந்த விதிவிலக்குமின்றி விமர்சிக்க வேண்டும். விமர்சனத்தை எதிர்கொள்பவர்கள் நேர்மையானவராக இருந்தால் திறந்த மனத்துடன் எதற்கும் அஞ்சாது விமர்சனம், சுயவிமர்சனத்தை முன்வைக்க வேண்டும். இதுவே எதிpர்கால புரட்சிக்கான ஓர் அமைப்பின் உயிரோட்டமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல நம்பிக்கையுமாகும்.

 

ஆசிரியர்குழு